Sunday, January 27, 2002

 

இருக்கிறது இருபது விஷயம்!


பீகாரின் ஒரு சிறிய நகரத்தில் வசித்தபடி விகடன் இதழை சந்தாவில் வரவழைத்துப் படிக்கும் கனரா வங்கி அதிகாரி எனக்கு எழுதிய கடிதத்தில் ‘‘ ‘பிரிவோம் சந்திப்போம்’ போல ஒரு அருமையான தொடர் எழுதுங்களேன்’’ என்று கேட்டுவிட்டு ‘‘நீங்கள் எழுதும் அதே விகடனில் பாருங்கள்... சுவாமி மித்ரானந்தா எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதுகிறார்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதைப் போல் எழுதுங்கள் என்று யோசனை சொல்கிறாரா, அல்லது மற்றொரு ‘பிரிவோம் சந்திப்போம்’ கேட்கிறாரா தெரியவில்லை. குறிப்பிட்ட மித்ரானந்தா போல என்னால் நிச்சயமாக எழுத முடியாது. மற்றொரு ‘பிரிவோம் சந்திப்போம்’ எழுதினால் எப்போதும் பழசுடன் ஒப்பிட்டு அதைப் போல இல்லை என்பார்கள்.

பல வருஷங்களாக எழுதும் எழுத்தாளர்களிடம் இவ்வாறு முரண்பட்ட கோரிக்கைகள் வருவதன் காரணம் வாசகர்களுக்கும் வயசாகிவிடுவதே!

பீகார் அன்பர் ‘பிரிவோம் சந்திப்போம்’ படித்த காலத்துக்கு ஏங்குகிறார். ஆனால், நடு வயது வந்து மித்ரானந்தா போன்ற விஷயங்கள் அவரை வசீகரிக்கத் துவங்கிவிட்டன. ‘நான் மாறிவிட்டேன்.. ஏன் சுஜாதாவும் என்னைப் போல் மாறவில்லை’ என்பதே இவர் விருப்பத்தின் அடிப்படை. பி.ஜி. உட்ஹவுஸ் தொண்ணூறு வயதிலும் பெர்ட்டி வூஸ்டர், ஜீவ்ஸ் கதைகள்தான் எழுதினார். வாசகனின் மாற்றமும் எழுத்தாளனின் மாற்றமும் ஒத்துப்போவது கொஞ்சம் கஷ்டம். என் படிப்பு, என் புத்தகங்கள் எல்லாமே வேறு. என் எழுத்தை விரும்பிப் படிக்க ஒவ்வொரு தலைமுறையிலும் புது வாசகர்கள் இருக்கும்வரை என்னால் தொடர்ந்து எழுத முடிகிறது. அப்படி இல்லையெனில் நா&ன நிறுத்திக்கொள்வேன்.

‘‘நீங்க ஏன் சார் முன்னைப் போல எழுதறதில்லை?’’ என்று புகார் செய்யும் ஒரு சிறுபான்மையினர் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களிடம் ‘நான் அப்படியேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் மாறிவிட்டீர்கள்’ என்று சொன்னால் கோபம் வருகிறது. அதனால் சிரித்து மழுப்பி விடுகிறேன்.

விகடன் 13.1.02 இதழில் நான் கொடுத்திருந்த ‘சிறந்த’ பட்டியல் பல பேரால் பாராட்டப்பட்டது. பலர் தொலைபேசி நன்றி தெரிவித்தார்கள். மலர்க் கொத்தும் இனிப்புகளும் கடிதங்களும் அனுப்பினார்கள். ‘எப்படி உங்களுக்கு இத்தனை விஷயங்களில் ஞானம் இருக்கிறது?’ என்று வியந்தார்கள். இது ஞானம் இல்லை.. ஞாபகம்.

நாம் எல்லோரும் விதிவிலக்கில்லாமல் அந்தப் பட்டியலில் கொடுத்த அத்தனை விஷயங்களையும் கவனிக்கிறோம். அதைத் தக்க சமயத்தில் நினைவிலிருந்து கொண்டு வருவதில்லை. எழுதும்போது எனக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிடுகிறது. அவ்வளவுதான். குறிப்பெடுத்துக்கொள்வதெல்லாம் மனசில்தான். உதாரணமாக, அண்மையில் ‘அரிகிரி அசெம்பிளி’யில் குரு வி.கிருஷ்ண மூர்த்தியின் பேட்டி மிகுந்த கலகலப்பும் நகைச்சுவையும் கொண்டிருந்தது. அது எனக்கு மறக்காது. அதுபோல் கேரளா சென்றிருந்தபோது ஒரு மாறுதலுக்காக ஏசியாநெட் குளோபல் மலையாளத் தொலைக்காட்சி சேனலைப் பார்த்தேன். அந்த டாகுமெண்டரி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்துடன் விளையாடும் இரண்டு பிரிவினரையும் விரிவாகப் பேட்டி கண்டுவிட்டு இறுதியில் கல்லூரியிலிருந்து வெளியே நடந்து வரும் இளம் மாணவமாணவிகளின் விஷ§வலின் மேல் ‘யார் பக்கம் நியாயமிருந்தாலும் உண்மையில் கஷ்டப்படப் போவது இவர்கள்தான்’ என்று முடித்திருந்தார்கள்.

மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத் தின் டைரக்டராக ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பணி புரிந்ததில் ஐந்து படங்கள் எடுப்பதில் பங்கு கொண்ட எனக்குக் கிடைத்த அனுபவங்களின் சாரம் இந்த இருபது விஷயங்கள் தமிழ் சினிமா உலகுக்குப் பயன்படும் என்று நம்புகிறேன்.

1. குறித்த நேரத்தில் பட்ஜெட் போட்டு அதற்குள் முடிக்கப்படும் படங்கள் தோல்வியடைவதில்லை பெரும்பாலும்.

2. ‘ஸ்டார் சிஸ்டம்’ இருந்தும் கறுப்புப் பணத்தின் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால், முழுவதும் குறைக்க முடியாது.

3. ஒரு நல்ல நடிகர் இருந்தால் படம் பூஜையின்போதே வியாபாரமாகிறது. அதாவது உத்தரவாதங்கள் தரப்படுகின்றன. ஆனால், பாதி பட்ஜெட் ஸ்டாருக்குப் போய்விடுகிறது.

4. சில வங்கிகளும் வென்ச்சர் நிறுவனங்களும் சினிமாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த உதவி சுலபமாகக் கிடைக்கும்.

5. பட விநியோகம் படம் எடுப்பதைவிட பத்திரமானது. அதுபோல் டி.வி. சீரியலிலும் எடுப்பதைவிட விற்பது ரிஸ்க் குறைவானது.

6. டி.ஆர்.பி. ரேட்டிங் என்பது உட்டாலக்கடி.

7. நல்ல டைரக்டர், நடிகர்கள், இசையமைப்பாளர் இருந்தாலும் நல்ல கதையிருந்தால்தான் படம் வெற்றி பெறுகிறது. சிக்கல் என்னவென்றால், நல்ல கதை எது என்பதை லேசில் சொல்ல முடிவதில்லை. சில சமயம் அற்ப காரணங்களுக்காக நன்றாக எடுக்கப்பட்ட படம் நிராகரிக்கப்படுகிறது. சில சமயம் ஒரு பாட்டுக்காகப் படம் ஓடுகிறது.

8. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பலவீனம் கதையும் முப்பத்தாறு சதவிகித வட்டியும்தான்.

9. தொலைக்காட்சியை சினிமாவின் சோகைக்குக் காரணம் கூறுவதில் அர்த்தமில்லை.

10. அமெரிக்காவில் இருப்பது போல் விடுமுறைகளில் அதிக ரேட்டும் சாதாரண தினங்களில் கம்மி ரேட்டும் வசூலிக்க தியேட்டர்களுக்கு அனுமதித்தால் அரசுக்கு வருமானம் அதிகமாகும்.

11. இப்படிச் செய்தால்தான் ‘டாப்டென் மூவீஸ்’ பற்றிய உண்மை வெளிப்படும். இல்லையேல் தியேட்டரை விட்டு எப்போதோ ஓடிப்போன படங்களெல்லாம் டாப் டென் பட்டியலில் வெத்தாக வீற்றிருக்கும். காரணம் அவர்கள் அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பார்கள்.

12. முதல் வருடத்துக்கு டிரெய்லர் மட்டும்தான் காட்ட வேண்டும். ‘பீட்டா’வைக் கொடுத்து விடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக முழு சினிமாவையே தவணை முறையில் காட்டிவிடுகிறார்கள். இது சினிமாவை மிகவும் பாதிக்கிறது. இதை அறியாமல் சாட்டிலைட் உரிமைக்காகப் படத்தை தாரை வார்த்துவிடுகிறார்கள்.

13. ஸ்லைடிங் ரேட்ஸ் சிஸ்டம் வந்தால் ஒரு படத்தின் தினப்படி வசூலை துல்லியமாகக் கணிக்க முடியும். ஹாலிவுட் படங்கள் போல இதற்கென்று யாராவது பாரபட்சமற்ற வலைமனை துவங்கலாம்.

14. சினிமாவில் திறமையுள்ள கலைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு சம்பளம் போதாது. தயாரிப்பாளர்களுக்கு மா&னஜ் மெண்ட் பயிற்சி போதாது. ஒவ்வொரு தயாரிப்பு கம்பெனியிலும் எம்.பி.ஏ. படித்த ஆசாமி ஒருத்தர் அவசியம் வேண்டும்.

15. படம் எடுப்பது சுலபம் போல இருக்கும் மிக மிகக் கடினமான வேலை.

16. ஒரு படம் தோற்பதற்கு எனக்குத் தெரிந்தவரை 132 காரணங்கள் உள்ளன. ஜெயிக்க நான்கே காரணம்தான்.

17. ஒரு டைரக்டருக்கு ஒரு நல்ல படம் செய்த பிறகு அடுத்து ஒரு மோசமான படம் வரை திரையுலகு மன்னிக்கிறது. அதன்பின் அவர் மறுபடி க்யூவில் கடைசியிலிருந்து வரவேண்டும்.

18. திரைப்படக் கல்லூரிகளில் தரும் பயிற்சி போதாது. குறிப்பாக திரைக் கதை அமைப்பதில் பயிற்சி. திரைப்படத் தயாரிப்பில் தனிப்பட்ட டிப்ளமா படிப்பு துவக்கவேண்டும்.

19. டிஜிட்டல் சினிமா டி.வி. மூவிஸ் மூலம் இருபது, முப்பது லட்சத்துக்குள் படம் எடுக்க முடியும்.

20. இந்த ஆண்டு இந்தத் துறை ஒற்றுமை காட்டவில்லை என்றால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு ஸ்னோபோலிங், கோகார்ட், இன்டர்நெட் கபே, மசாஜ் பார்லர் மற்றும் கல்யாண மண்டபங்களாக மாறும் அபாயம் உள்ளது. நெருப்புக் கோழியை மண்ணிலிருந்து தலையை எடுக்க வைக்கவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாள் ‘பெருமாள் சேவிக்கப்’ போயிருந்தேன். பழைய நண்பர்கள் என்.எஸ்.கிருஷ்ண மாச்சாரி, திருமஞ்சனம் சுந்தரராஜன், கேவி போன்றோர்களுடனும் என் சகோதரன் ராஜகோபாலனுடனும் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபத்தின் அருகில் எல்லாம் உட்கார்ந்துகொண்டு பல விஷயங்களை அளவளாவிக்கொண்டு ஒரு nostalgia பயணம்.

இந்த முறை குறிப்பாக இரண்டு விஷயங்கள் கவனித்தேன். திருகொட்டாரத்தில் கோசாலையின் ஒரு வாசற்படியில் அழிந்தும் அழியாததுமாக இருக்கும் மிகப் பழமையான கல்வெட்டு முதலாம் பராந்தகனின் காலத்தது (கி.பி. 907). அவ்வரசன் திருவரங்கர் கோயிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கும் அதற்குக் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்குவது உட்பட அதைப் போற்றிப் பாதுகாப்பதற்கு 51 பொற்காசுகள் வழங்கியதை அறிவிக்கும் கல்வெட்டு. மாட்டுக் கொட்டகையில் சரித்திரம்!

சேஷராயர் மண்டபத்தில் இதுநாள் வரை நான் கவனிக்காமல் விட்ட தசாவதாரச் சிற்பங்கள் சிற்பக்கலையின் அற்புத உதாரணங்கள்.

பழையரங்கம் என்கிற பெயர் மாற்றத்திலிருந்து நல்லவேளை தப்பிவிட்ட திருவரங்கத்தில் மாறாத பகுதிகளும் மாறிவிட்ட பகுதிகளும் உடன் வாழ்கின்றன. ஏ.டி.எம்., இன்டர்நெட், டி.வி.டி. (DVD), மினரல் வாட்டர் போன்றவற்றின் நவீனத்தைக் கடந்து ஐம்பதடி உள்ளே போனால் ஹொய்சாலர் காலத்து சிற்பங்கள் (கி.பி. 1234-1262) அமைந்த கிருஷ்ணன் சந்நிதி. வெள்ளை கோபுரத்தை நிஜமாகவே வெள்ளையடித்து ஒரு அல்பைனோ போல் பண்ணிவிட்டார்கள். மற்ற கோபுரங்களுக்கு பல வண்ணங்கள் கொடுத்து சிற்பக்குமரிகள் சர்க்கஸ் குமரிகள்போல ஜொலிக்கிறார்கள். பொதுவாகவே சம்ரோக்ஷணத்துக்குப் பிறகு கோயில் சற்று சுத்தமாகியிருக்கிறது என்னவோ நிஜம்.

மாலை சமயபுரத்துக்குச் சென் றிருந்தேன். சின்ன வயசில் சைக்கிளில் போனது. ஐம்பத்தைந்து வருடங்களுக்குப் பின் இந்தக் கோயிலின் அளவும் கேள்வி கேட்காத பக்தியும் திகைக்க வைக்கிறது. சமயபுரம் raw faith ன் வடிவம். ஒருபுறம் ‘ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலனைந்தும் தாம்வாட வாடத் தவம் செய்ய வேண்டாம்’ என்னும் ஆழ்வார்களின் பக்திநிலை திருவரங்கத்தில். மறுபுறம் இதற்கு நேர் எதிரான அங்கப்பிரதட்சண உருளல் களும் முழங்கால் கண் போன்றவற்றின் வெள்ளி வடிவக் காணிக்கைகளும் தீச்சட்டிகளும் வேப்பிலையடியும் சமயபுரத்தில். இந்து மதத்தின் இரண்டு விளிம்புகளும் இருபது கிலோ மீட்டரில்!

Sunday, January 20, 2002

 

எட்டாவது படியில் சந்திர மண்டலம்!


அத்தனை பேரும் கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், சிறுபத்திரிகை வாசகர்கள் அதில் தீவிரமான விஷயங்களைப் பற்றிக் கடிதம் எழுதுபவர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் என்று தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகளாக புக்பாயிண்ட் அரங்கத்தை நிரப்பியிருந்தார்கள்.

காலச்சுவடு பதிப்பகத்தின் பத்து புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி. அதில் மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். அதற்குமுன் ப்ரேவுரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தினர் பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அடர்தகடு வடிவத்தில் (சிடி) வெளியிட்டார்கள். பாரதியின் 105 ஆத்திசூடிகளும் இதில் வாசிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் க்ளிக்கினால் ஒரு நீதிக் கதைக்கு ஹைப்பர்லிங்க் கிடைத்துப் படித்துக் காட்டப்படுகிறது. ‘புதியன விரும்பு’ என்று சொன்ன பாரதி, சொர்க்கத்தில் சந்தோஷப்பட்டிருப் பார்.

ஈ-புக்ஸ் என்கிற புதிய முறையில் மின் புத்தகங்கள் இணையத்திலும் தகட்டிலும் மௌ¢ள மௌ¢ளக் கிடைக்கத் துவங்கி யுள்ளன. எந்த அளவுக்குத் தமிழ்மக்கள் கணித்திரையில் புத்தகம் படிக்க விரும்புவார்கள் என்பது டாக்டர் பிரகாஷ் போன்றோரின் கவனக் கலைப்பின் மத்தியில் கேள்விக்குறியே. அவர்களைச் சம்பிரதாய புத்தகங்களை வாங்க வைப்பதும் பெரிய காரியமாக இருக்கிறது. ஒரு பதிப்பு விற்றுத் தீர சராசரி ஐந்து வருஷமாகிறது. கவிதைத் தொகுப்புகள் பரவாயில்லை என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையிலும் ‘புதிய எழுத்து’, ‘புனைகளம்’ போன்ற பத்திரிகைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வில்லுப்பாட்டுக் கலைஞர் முத்துசாமிப் புலவரிலிருந்து பெல்ஜியம் நாட்டு ஜூலியோ கொர்த்தஸார் வரை உரையாடல்களைப் பதிப்பிக்கிறார்கள். ஒரு நோயாளி நாலரை மணி நேரம் சொன்ன வெளிப்பாடுகளை அப்படியே கொடுக்கிறார் கோபிகிருஷ்ணன். இது தனி உலகம்.

மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது’ தொகுப்பின் அறிமுகத்தில் கவிதை பற்றிய என் பொதுவான வரையறை நல்ல கவிதைகளை அடையாளம் கண்டுகொள்ள உதவுவதைச் சொன்&னன் >

‘‘கவிதை என்பது ஒரு மொழியின் ஓசைகளையும் சொற்களையும் படிமங்களையும் பயன்படுத்தி ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம். அதில் சில சமயம் சந்தமும் அளவும் இருக்கலாம்.’’

ஒரு முத்தத்தை இட்டு முடிப்பதற்குள்
ஒரு கரம்பற்றுதலின் வெம்மையை உணர்வதற்குள்
ஒரு சரியான பிரிவுச் சொல்லைத்
தேர்ந்தெடுப்பதற்குள் நேரமாகிவிடுகிறது

போன்ற மென்மையான கவிதைகள் நூறுக்கு மேல் இருக்கும் இந்தத் தொகுப்பு 2002'ல் தமிழ்க் கவிதைக்கு நல்ல காலத்தை அறிவிக்கிறது.

டிம் ராபின்சன் எழுதிய The Fineness of Things என்கிற கட்டுரையை இந்த வாரம் ரசித்துப் படித்தேன். மிகப் பெரியதிலிருந்து மிகச் சிறியது வரை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது ஒரு பாக்டீரியா, வைரஸ் ஏன்.. ஒரு எலெக்ட்ரான் க்வார்க் அதைவிட சிறிதான ப்ளாங்க் தூரம் (Planck distance) வரை சிறிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. மறுபக்கத்தில் பிரபஞ்சத்தையும் பல்லாயிரம் கோடி ஒளி வருஷ துரத்தின் பிரமாண்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வீச்சின் இடையில் நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ராபின்சன் ஓர் எளிய வழிமுறை சொல்கிறார்.

பத்து மடங்கு... பத்துப் பத்து மடங்காக பெரிசையோ சிறிசையோ எண்ணிப் பார்த்தால் சிருஷ்டி அனைத்தும் முப்பத்திரண்டு தப்படியில் மனசுக்குள் அடங்கிவிடும் என்கிறார். படிப்படியாக யோசிக்கலாம்.

நாம் நடுவில் இருக்கிறோம்... படிகளில் மேலே ஏறலாம், இறங்கலாம். ஒவ்வொரு படியும் முந்தின படியைவிட பத்து மடங்கு பெரிசு அல்லது சிறிசைக் குறிக்கும். ஒரு படி மேலே போனால் ஒரு பெரிய வீட்டின் உயரம், அடுத்தபடி குன்று. அதைவிடப் பத்து மடங்கு மலை. இது மூன்றாவது படி. நான்காவதில் ஒரு நகரத்தின் அகலம். ஆறாவது ஒரு தேசம்.. ஏழு பூமி.

மாறாக படிகளில் இறங்கிப் பார்த்தால் முதலில் வருவது எலி. இரண்டாவது விட்டில்பூச்சி. மூன்றாவது அதன் முட்டை. நான்காவது அதன் சிறகின் ஒரு தீற்றல். ஐந்தாவது ஒரு ஒற்றை செல்.

இதற்குமேல் பெரிசாகவோ சிறிசாகவோ பார்ப்பதற்கு நமக்குக் கருவிகள் தேவைப்படும். ஒரு மைக்ராஸ்கோப் வழியாக ஒரு குளத்தின் தண்ணீரைப் பார்த்தால் நீச்சலடிக்கும், உருளும், புரளும், மோதும் ஜந்துக்களின் ஒரு மைக்ரோ உலகமே தெரியும்.

மேல் பக்கம் எட்டாவது படியில் நாம் சந்திரமண்டலத்தின் பாதிவழி வரை போய்விடுவோம். பதினொன்றாவதில் நம் கிரகங்களின் சுழற்சி தூரங்கள். அதன் பின் மனிதனைக் காட்டிலும் இருபத்தோராவது படியில் நம் பால்வீதி கேலக்ஸி > முப்பது கோடி ஒளி வருஷ அகலம். இருபத்திரண்டில் ஆயிரத்து ஐந்நூறு கோடி ஒளிவருஷம் நம்மால் பார்க்க முடியும். பிரபஞ்சத்தில் அதற்கு மேல் ஏதாவது இருந்தால் அது நம்மை வந்துசேர பிரபஞ்சத்தின் வயசை விட அதிக சமயம் ஆகுமாம். எனவே, சிருஷ்டி முழுவதும் பற்றிச் சிந்திக்க முப்பத்திரண்டு படிகள் ஏறி இறங்கினால் போதும்.

கலைமகள் ஜனவரி இதழில் புதுமைப்பித்தன் எழுதிய ‘நானும் என் எழுத்தும்’ என்கிற பழைய கட்டுரையை மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். சிற்பியின் நரகம் (நகம் அல்ல) போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள் பத்திரிகை அவசரத்தில் எழுதியவை. ‘ ‘ப்ளாக்’ இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் ஒரு கதை எழுதிக் கொடு’ என்று கேட்டு எழுதியவை சில. டைட்டில் கொடுத்து கெடு முடிந்து ஆசிரியர் ஆளை அனுப்பிக் காத்திருந்த நேரத்தில் எழுதியவை சில.

‘‘இப்போது அவற்றைப் படித்துப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கின்றன’’ என்று மிதப்பலில்லாமல் யதார்த்தமாக அந்தப் புத்தகத்தில் சொல்கிறார் புதுமைப்பித்தன். ஹ்யூகோ பால்ஸாக், தூமா, சார்லஸ் டிக்கென்ஸ் போன்றவர்களுக்கு இதே அனுபவம் ஏற்பட்டிருக்கிறது ‘பாஸ்’ என்பவர் வரைந்த ஏதோ ஒரு படத்துக்குக் கதை எழுதச் சொல்லி ஆரம்பித்தது தான் ‘பிக்விக் பேப்பர்ஸ்’ என்னும் ஆங்கில இலக்கியத்தின் மகத்தான நகைச்சுவை நாவல். கல்கி, தேவன் போன்றோரும் இந்த வகையில் எழுதியிருக்கிறார்கள். ஒரு கால கட்டத்தில் ஒரே சமயம் மூன்று தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவளி மலர் கெடு முடிந்து, இனிமேல் காத்திருக்க முடியாது என்று போன் வந்தபின் எழுதின கதைகள் பல (உதாரணம்:- குதிரை, அரங்கேற்றம், தேனிலவு). இவற்றையெல்லாம் இப்போது படித்துப்பார்க்கையில் சரியாகத்தான் தெரிகின்றன. ‘குதிரை’ பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. எந்தப் படைப்புக்கும் அவசரமும் காலக்கெடுவும் தேவையோ என்று தோன்றுகிறது. நான் கெடுவில்லாமல் எழுதிய புத்தகம் 1990-ல் ‘ஹைக்கூ ஓர் புதிய அறிமுகம்’, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’.

நெட்டில் கிடைத்த ஹைக்கூ (அகுதகாவா ரையுனோஸ§கெ 1892-1927)

பச்சைத் தவளையே
உன் உடம்பும்
புதிதாக வண்ணம் பூசியதோ

மோசமான ஹைக்கூ பற்றி அடிக்கடி புலம்புவதற்கு பதில் சில வாரங்களுக்கு நல்ல ஹைக்கூவுக்கு உதாரணங்கள் கொடுக்கத் தீர்மானித்துவிட்டேன். மேலே குறிப்பிட்டதில் உடம்பும் என்பதில் உள்ள ‘உம்’ விகுதிதான் விசேஷம்.

சென்ற இதழில் வந்த சிறந்த பட்டியலைப் பற்றி நிறைய தொலைபேசிகள் வந்தன. குறிப்பாக, ‘பாண்டவர் பூமி’யையும் அதில் ‘அவரவர் வாழ்க்கையில்...’ என்ற பாடலையும் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தார்கள். அதற்கு முக்கியமான காரணம், அந்தப் படத்தைத் தயாரித்ததில் என் பங்கும் இருந்ததால் அவையடக்கம் காரணமாக குறிப்பிடாமல் விட்டேன். சேரனுக்கும் பரத்வாஜ்க்கும் என்னுடைய தனிப்பட்ட பாராட்டுகள்.

Sunday, January 13, 2002

 

இது என் சாய்ஸ்!


எல்லாப் பத்திரிகைகளும் இதுபற்றிக் கிண்டலடித்துக் கொண்டிருக்கையில், 2001-ம் ஆண்டில் நிஜமாகவே சிறந்தவர்களின்/வற்றின் லிஸ்ட் இதோ...


இலக்கியம்

சிறந்த கவிஞர் - மகுடேசுவரன் (விகடனில் வந்த கவிதை).

சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை - பதிலடி. தெலுங்குக் கவிதை - காதிர்பாபு. மொழிபெயர்ப்பு - விஜயராகவன் (கணையாழி).

சிறந்த கட்டுரை - சித்தீதீதீ - மனுஷ்யபுத்திரன் (அம்பலம்).

சிறந்த சிறுபத்திரிகை - நவீன விருட்சம்.

சிறந்த புத்தகம் - தேடலின் குரல்கள் - இந்திரன், தமிழக ஓவிய சிற்ப இயக்கம்.

சிறந்த கவிதைத் தொகுப்புகள் - மரணத்துள் வாழ்வோம் (நான் பார்த்தது சென்ற ஆண்டில்தான்). சேரன் தொகுத்த ஈழத்துக் கவிதைகள். நிலா பார்த்தல் - கல்யாண்ஜி.

ஒரே விஷயத்தைப் பற்றிய சிறந்த கவிதைத் தொகுப்பு - கரும்பலகையில் எழுதாதவை - பழ. புகழேந்தி.

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - பெருமரங்கள் சாய்கிறபோது (மலையாளம் - என்.எஸ். மாதவன் - சுந்தர ராமசாமி).

சிறந்த தீபாவளி மலர் - தினமணி - மனோஜ்குமார்.

சிறந்த இலக்கணப் புத்தகம் - தமிழ்நடைக் கையேடு - 'மொழி' வெளியீடு.

சிறந்த புத்தகக் கட்டமைப்புகள் - கிறுக்கல்கள் - பார்த்திபன். காதல் மனப்பாடப் பகுதி - வைகைச்செல்வன் ('எல்லோரிடத்திலும்/என் காதலைச் சொல்லிவிட்டேன்/ உன்னைத் தவிர').

சிறந்த சித்திரம் - கொடியில் தொங்கும் கொடி போல - பெரியகுளம் ரவி (ஆனந்த விகடன்).

சிறந்த தமிழ்ப் பத்திரிகை லே-அவுட் - கிருஹ ஷோபா, அவள் விகடன்.

சிறந்த இணைய மென்பொருள் - டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் தமிழ் ஓஸிஆர்.

சிறந்த ஆய்வுநூல் - ஈழத் தமிழர் யார் - வித்வான் சு.ந. வேலன், லண்டன்.

சிறந்த ஆங்கிலக் கட்டுரை - Brain Cell Memories. Spencer Nadler, Harper's Magazine.சினிமா

சிறந்த நடிகர்: விக்ரம்.

சிறந்த நடிகை: லைலா.

சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக் (மின்னலே).

சிறந்த இசையமைப்பாளர்: யுவன்ஷங்கர் ராஜா.

சிறந்த திரைக்கதை: பாலா (நந்தா).

சிறந்த ஒளிப்பதிவாளர்: திரு (ஆளவந்தான்).

சிறந்த படம்: மின்னலே (கௌதம்).

சிறந்த டைரக்டர்: வினயன் (காசி).

சிறந்த திரைப்படப் பாடல்கள்: உன் சமையலறையில் - வித்யாசாகர், மஞ்சக்காட்டு மைனா - யுவன்சங்கர் ராஜா.

மச்சினியே - ஏ.ஆர். ரஹ்மான்.

சிறந்த லிரிக்: காதல் வந்ததும் - 'பூவெல்லாம் உன் வாசம்' - வைரமுத்து.

சிறந்த இந்திப் படங்கள்: மான்சூன் வெட்டிங், லகான்.

சிறந்த ஹாலிவுட் படம்: Traffic - சோடர்பர்க்.


விளையாட்டு

சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்: வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங்.

சிறந்த 'கம்பேக்': தன்ராஜ் பிள்ளை - ஹாக்கி. பயஸ், பூபதி - டென்னிஸ்.


சங்கீதம்

சிறந்த பாடகர்: மதுரை சுந்தர்,

சிறந்த வயலினிஸ்ட்: அக்கரை சுப்புலட்சுமி.

சிறந்த பாடகி: மதுமிதா.

சிறந்த மேல்நாட்டுப் பாடகி: ஜெனிபர் லோபெஸ். தொலைக்காட்சி

சிறந்த நிகழ்ச்சி - மார்கழி மாதக் கச்சேரிகள் - ஜெயா.

சிறந்த தொடர்கள்: சித்தி (சன்), இரண்டாம் சாணக்கியன் - ராஜ் (முடிவுதான் சொதப்பல்!).

சிறந்த நிருபர்கள்: பர்கா தத், ஸ்ரீனிவாசன் ஜெயின் (ஸ்டார் டி.வி.).

சிறந்த பேட்டியாளர்: டிம் செபாஸ்டியன் (பி.பி.சி.)

தமிழில்: ரபி பெர்னார்டு - ஜெயா.

சிறந்த தமிழ் டாக் ஷோ: யூகி சேது - விஜய்.

புதுமையான ஷோக்கள்: ஊர்வம்பு - ராஜ் டி.வி., சப்தஸ்வரங்கள் - ஏ.வி. ரமணன், சன், குல்ஜா சிம்சிம் - ஸ்டார்.

நம்பிக்கையளிக்கும் புதிய டி.வி. சேனல்: ஸ்ப்ளாஷ்.

சிறந்த டாகுமெண்டரிகள்: பி.பி.சி. ஒரிஸ்ஸாவில் ஒரு தொழு நோயாளியைப் பற்றியது. ஏசியா நெட் க்ளோபல் - காலிகட் பல்கலைக்கழகத்தை மார்க்சியமாக்குதல் பற்றிய டாகுமெண்டரி - மலையாளம்.

சிறந்த செய்தித் தொகுப்பு: செப்டம்பர் 11 - சி.என்.என்.

சிறந்த விளம்பரங்கள்: ஃபெவி சீல் (மரணப்படுக்கையில் இருப்பவரிடம் கையெழுத்து வாங்குவது). பெப்சி ('என்னை என்ன முட்டாள்னு நினைச்சீங்களா..?') ப்ரூ ('சு சு சுகர்').


ரேடியோ

சிறந்த நிகழ்ச்சிகள்: சென்னை வானொலி காலை மலர், பண்பலையில் வண்ணமணிமாலை. சிறந்த தமிழ் உச்சரிப்பு: சென்னை வானொலியில் சில பெண் அறிவிப்பாளர்கள்.

உபரி விஷயங்கள் (சொந்தத் தேர்ந்தெடுப்புகள்)...

சிறந்த டைரி: ஈகிள் கோல்ட். சிறந்த இந்திய பியர்: கிங் ஃபிஷர். சிறந்த பால்பாயிண்ட் பேனா: ஏட் ஜெல்.சிறந்த டிபன்: சரவணா ட்ரைஃப்ரூட் ரவா, தென்காசியில் ஒரு சிறிய ஓட்டலில் அடை. சிறந்த இனிப்பு: மைசூர்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சிறந்த தியேட்டர்கள்: ஸ்ரீ, மாயா ஜால். சிறந்த அரசு நிறுவனம்: ஆவின், சென்னை.


சிறந்த ஹைக்கூ:

நெல்வயல் பெண்களே
சேறுபடியாமல் இருப்பவை
உங்கள் கானங்கள் மட்டும்தான்.

- ரைசான் (ஜப்பானிய ஹைக்கூ)

அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

Sunday, January 06, 2002

 

'தலை சிறந்த' புத்தகங்களை தூக்கிப் போடுங்க!


மில்லெனியத்தின் முதல் ஆண்டு உலகுக்கு அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. யோசித்துப் பார்த்தால், இதைவிட மோசமான ஆண்டு இருக்குமா தெரியவில்லை.

முதலில் ஐடி ஸ்டாக்குகளின் வீழ்ச்சியில் துவங்கியது. செப்டம்பர் 11 சம்பவம் விமான கம்பெனிகளை மஞ்சள் கடுதாசி கொடுக்க வைத்தது. ஏரோப்ளேனிலிருந்து மெரீனாவில் மல்லிகைப்பூ விற்பனை வரை உலகின் வியாபாரத்தை பாதித்தது. இந்தியாவில் உலகப் பொருளாதாரம் வாங்கிய அடிகள் அனைத்தையும் நாமும் வாங்கிக்கொண்டோம்.

நம் என்.ஆர்.ஐ. அமெரிக்க மாப்பிள்ளைகள் வேலை இழந்தார்கள். ஹைடெக் நகரங்கள் காலியாகி, மானிட்டர் திரைகளில் தூசிபடிந்தன. இந்திய பார்லிமெண்டில் பட்டப்பகலில் தீவிரவாதிகள் புகுந்து ஹாலிவுட் படம் போல் சுட்டார்கள் ('உள்ளே போய் ஒண்ணு ரெண்டு பேரை போட்டுத் தள்ளிருக்கணும் சார், இவங்க டயம் வேஸ்ட் பண்றதுக்கு' என்றார் பெயர் சொல்ல விரும்பாத நண்பர்). வாஜ்பாய் அரைக்கண்ணை மூடிக் கொண்டு, 'எங்கள் பொறுமை எல்லையற்றதல்ல' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே தவிர, குண்டுவீச்சு என்ன... ஒரு குண்டூசியைக்கூட அந்தண்டை நகர்த்தவில்லை.

சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தது. அதன்பின் இப்போது வெள்ளம். கண்ணகி சிலை அகற்றப்பட்டதால்தான் மழை என்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் நாள் முழுவதும் அரைத் தூக்கத்தில் இருக்கிறார்கள். சினிமாக்கள் இரண்டாவது தினமே 'வெற்றி.. வெற்றி! 'பதினைந்தாவது தினம்' என்று பொய் சொல்லி, போஸ்டர் அடித்துக் கொண்டாடுகின்றன.

இந்தப் பின்னணியில் வரும் ஆண்டில் நடக்கக்கூடிய விஷயங்கள் இவை:-

இந்தியா - பாகிஸ்தான் போர் வரும். சரியாக ஒரு மாதம் சண்டை புரிந்துவிட்டுப் போர் நிறுத்தம் வரும். சில தினங்கள் கர்ஃப்யு வரும். நிறைய மெழுகு வத்தியும் டிரான்சிஸ்டருக்கு பேட்டரியும் வாங்கி வைத்துக் கொள்ளவும்.

தமிழ்நாட்டு அரசியலில் மாறுதல் வராது. அரிசி விலையில் வரும். வட மாநிலங்களில் காங்கிரஸ் வலுப்பெறும்.

ஆண்டின் இறுதியில் தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் இருப்பது ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல்தான்... அதற்கு 'சன்ஜெயராஜவிஜயபாரதி' என்று பெயர் என்பதை உணர்ந்து கொள்வார்கள். 'சித்தி' போன்ற மற்`றாரு மெகா தொடர் வெற்றி பெறும் அபாயம் இருக்காது. சினிமா அல்லாத விஷயங்கள் காலை ஐந்து மணிக்கு காட்டப்படும்.

ஐடி, கம்ப்யூட்டர் படிப்பு மவுசு இழக்கும். ஹைகோர்ட்டில் பல கேஸ்கள் வாபஸ் வாங்கப்படும். இருநூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக குடைகீழ் கொண்டுவரும் காரியம் ஹைகோர்ட்டில் வாதாடப்படும். காப்பிட்டேஷன் தொகை குறைந்து, இலவச இணைப்புகளாக கலர் டி.வி. தருவார்கள். மாணவர்கள் மறுபடியும் பி.காம்., மாணவிகள் ஹோம்சயின்ஸ் போன்ற சம்பிரதாய படிப்புக்குத் திரும்புவார்கள். தொலைக்காட்சிகளில் தமிழ் உச்சரிப்பு இன்னும் மோசமாகி எண்ணிப் பார்ப்பதற்கு பதிலாக என்னிப்பார்ப்பார்கள்.

நியுமராலாஜி, வாஸ்து சாஸ்திரம் போன்ற ஜல்லியடி தெரிந்தவர்கள் பணம் பண்ணுவார்கள். ஓஸாமா பின் லேடன், வீரப்பன் இருவரும் பிடிபடுவர்... வீரப்பன் உயிருடன்! ஓஸாமா காஷ்மீர் மார்க்கமாக சொர்க்கத்துக்குப் போன பின் ஆப்கானில் அமைதி ஆறு மாதம் நிலவும்.

பாலஸ்தீனிய பிரச்னை தீராது. பழகிவிடும். நியூஸில் சொல்வதைக்கூட நிறுத்திவிடுவார்கள். தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து ஏழுக்கு உயரும். வருடக் கடைசியில் நாற்பது பெண்கள் இல்லாத பாடல் காட்சியுடன் ஒரு படம் எடுக்கப்பட்டு தோல்வி அடையும்.

தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய கவிஞர் தோன்றி உடனே சினிமாப் பாட்டு எழுதத் துவங்கி அதையே இலக்கியம் என்றும் சொல்லிக் கொள்வார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் சர்க்குலேஷன் குறையாது. அதிகமும் ஆகாது. சில பத்திரிகைகள் இலவச இணைப்பாக பூஜைமணி, எவர்சில்வர் ஸ்பூன், பெட்ஜார், காண்டம், ஷாம்பு, தலைவலி மாத்திரை போன்றவை கொடுப்பார்கள்.

லாட்டரிச் சீட்டுகள் விற்பனை குறையும். தமிழகமெங்கும் தோண்டிப் போடப்பட்டிருக்கும் கலர் கலர் பிளாஸ்டிக் குழாய்களில் ஒன்றிரண்டில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் செருகப்படும்.

புத்தாண்டில் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய சில எளிமையான தீர்மானங்களுக்கான யோசனைகள் இவை:-

தினம் இரண்டு மணி நேரமாவது டி.வி-யை அணைத்துவிடுங்கள். அதில்லாத மௌனத்தை சுவாசித்துப் பாருங்கள்.

தினம் யாராவது ஒருவரைப் பற்றி கஷ்டப்பட்டு யோசித்து, நல்லது நினையுங்கள். வெறுப்பு என்பது நமக்குள் அட்ரினலின் பித்தநீர் போன்றவற்றை அதிகமாக்கி ஆயுளைக் குறைக்கிறது. அது கஷ்டம்தான்... யோசித்தால் யாராவது ஒரு நல்ல ஆத்மா அகப்படுவார் - டி.பி. ராஜலக்ஷ்மி, டாஸ்டாயெவ்ஸ்கி.. யாராவது. உதாரணத்துக்கு டாஸ்டாயெவ்ஸ்கியைப் பற்றி நினைத்துப் பாருங்கள். 'உலகில் நடக்கும் எல்லா கெடுதல்களுக்கும் நான் ஒருவிதத்தில் பொறுப்பாக உணர்கிறேன்' என்றார். எத்தனை உயர்வான கருத்து! தினம் ஒரு சின்னக் குழந்தையின் கண்களை உற்றுப் பாருங்கள்.

இந்த எளிய தீர்மானங்களுடன் நான் எடுத்துக் கொண்ட தீர்மானம் - இந்த வருஷமாவது ஒரு புத்தகத்தை படித்து முடித்ததும்தான் அடுத்த புத்தகம் வாங்குவது என்பது.

படித்து முடித்த புத்தகத்தை தூக்கி எறிவதோ அல்லது தானம் கொடுப்பதோ ஒரு கலை. புத்தகங்களைப் புறக்கணிப்பதற்கு ஆண்டி ரூனி (Andy Rooney) சில நல்ல யோசனைகள் சொல்கிறார் அவை இவை:-

நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்து அது பிடித்திருந்தால் மட்டும் போதாது. அதிலிருந்து எதாவது உங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்தான் புத்தகத்தைத் தூக்கிப் போடாமல் வைத்திருக்க வேண்டும்.

போடக்கூடிய புத்தகங்கள் எவை எவை..

பெஸ்ட் ஸெல்லர் நாவல்கள்: எந்த முட்டாளும் இந்த நாவல்களை இரண்டு முறை படிக்கமாட்டான். துப்பறியும் நாவல்கள், குடும்ப நாவல்கள், பெரிய அளவில் கலர் படம் எல்லாம் போட்டு ஷெல்ஃபில் வைக்க முடியாத, முழுக்க பிரித்துப் பார்த்திராத புத்தகங்கள் சில இருக்கும். அவற்றை உங்களுக்குக் கொடுத்த பாவாத்மா தெரிந்தால் திருப்பி கொடுத்துவிடவும்... இல்லையேல், கொஞ்சம் கல்மனதுடன் கடாசிவிடவும். அதுபோல், 'எப்போதாவது படிக்கலாம்' என்று வாங்கிவைத்து கடந்த ஒரு வருடத்தில் பத்து பக்கத்துக்கு மேல் படிக்கவில்லை என்றால் out it goes! அல்லது எதாவது லைப்ரரிக்கு கொடுத்துவிடலாம். 'பணம் பண்ணுவது எப்படி?', 'எடை குறைப்பது எப்படி?', 'இல்வாழ்க்கைக்கு சில நல்ல யோசனைகள்' போன்ற 'எப்படி' புத்தகங்களை உடனே தூக்கிப் போடவும். புத்தகம் படித்து யாரும் கற்றுக்கொள்ள முடியாது. பின்னட்டையிலோ முன்னட்டையிலோ 'தலைசிறந்த' என்ற அடைமொழி இருக்கும் புத்தகங்களை உடனே நீக்கவும்.

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் அதில் வரும் ஒரு விஷயமோ ஒரு பாத்திரத்தின் பெயரோ உங்களுக்கு ஞாபகம் வரவில்லை என்றால் அதையும் நீக்கிவிடலாம். வருட ஜோதிடம், இயர் புக், இவற்றையெல்லாம் விசிறிக் கடாசவும். இதன்பின் உங்களிடம் இருக்கும் புத்தகங்கள் முக்கால்வாசி போய்விடும். இனிமேல், இந்த விதிப்படி வாங்குங்கள் - 'ஒரு புத்தகத்தைப் படித்தபின்தான் மறுபுத்தகம்.'

எனக்கு வாங்கும் புத்தகங்களில் மட்டும் பிரச்னை இல்லை. தினம் கூரியரில் வரும் புத்தகங்களும்தான். எதாவது நல்லது இருந்தால் குறிப்பிடுவேன் என்கிற நம்பிக்கையில் எனக்கு அனுப்பப்படும் இந்த அழையாத விருந்தாளிகளை என்ன செய்வது என்பது இன்னும் தீர்மானிக்காத விஷயம். இப்போது இவற்றை நண்பர்களிடம் ஸ்க்ரீன் பண்ணக் கொடுக்கிறேன். இதில் ஒரே ஒரு அபாயம்... இதற்கு பயந்துகொண்டு சில நண்பர்கள் வீட்டுக்கு வருவதைக் குறைக்கிறார்கள். இருந்தாலும் நல்ல புத்தகங்களை இனம் கண்டு கொள்வதில் எனக்கு அதிக கஷ்டம் இல்லைதான். ஓரிரண்டு பக்கங்களை மாதிரி பார்த்தாலே தெரிந்துவிடும். நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவனுக்கு இந்த மோப்ப சக்தி இருந்தே தீரவேண்டும். என் சங்கடம் புத்தகங்களைப் படிப்பதில் அல்ல... படித்த புத்தகத்தை துறப்பதில்தான். இந்த வருஷம் வீடுமாற்றும்போது மனைவியிடம் பாதி புத்தகங்களையாவது குறைத்துவிடுகிறேன் என்று சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்... நண்பர்களே உஷார்!

பின்குறிப்பு: இதில் ஒரு வினோதம் நான் எழுதும் புத்தகங்கள் பல என்னிடம் காப்பி இல்லை. நண்பர்கள் அரவிந்தனையோ, தேசிகனையோ கேட்க வேண்டியிருக்கிறது.

This page is powered by Blogger. Isn't yours?