Sunday, February 03, 2002

 

இயலுக்கு எத்தனை அர்த்தம் சொல்ல இயலும்?


மனுஷ்யபுத்திரனின் 'சித்தீ' கட்டுரை பற்றிப் பலர் கேட்டார்கள். அது அம்பலம் இணைய இதழில் வெளிவந்தது. கம்ப்யூட்டர் இல்லாத வர்களுக்கு, அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி -

''சித்தி தமிழில் வெற்றிகர மான சினிமாக் கதைகள் பலவற்றின் ஒரு கலவை... இந்திய சமூகத்தில் கூட்டுக் குடும்பங்களில் நிகழும் முரண்பாடுகளுக்கும் அதன் தவிர்க்கவியலாத சிதைவுக் கும் ஒரு கற்பனையான வடிவத்தை அளிக்க முற்படுகிறது. நவீன சமூகத்தில் பெண் ஏற்கும் புதிய பாத்திரங்களை மறுத்து குடும்பப் பகையின் வெற்றி தோல்விகளுக்குள் அவரது நன்மை தீமைகளையும் பலம் பலவீனங்களையும் காண முற்படுகிறது. பெண் தலைமையேற்பவளாகவும் அதே சமயம் குடும்பத்துக் காகத் தனது எல்லாத் திறமைகளையும் விருப்பு வெறுப்புகளையும் அர்ப்பணிப்பவளாகவும் கட்டப்படும் கதையமைப்பு ஒரு சமூகத்தில் பெண்ணைப் பற்றிய அணுகுமுறைகளைப் பெருமளவு மறுஉற்பத்தி செய்யக்கூடியது...''

இவ்வகையில் சித்தி தொடரை ஒரு சமூகவியல் பார்வையில் அலசிய மற்`றாரு கட்டுரை மலேஷியாவின் 'பயனீட்டாளர் குரல்' பத்திரிகையில் வந்திருந்தது. இவையிரண்டையியும் தவிர, மொத்த தமிழ்நாடே ராதிகாவை சித்தீ என்று அழைத்துக் கொஞ்ச காலம் பைத்தியமடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் நடுராத்திரியில் சட்டென்று எழுந்து சித்தீ என்றனர். அந்த அளவுக்கு ஒரு மாநிலத்தின் மத்யமர் மனதை அது பாதித்தது.

சென்னை புத்தகச் சந்தைக்குக் கடைசி நாளன்றுதான் போக முடிந்தது. இந்த முறை நல்ல கூட்டம்! 'எல்லோருக்கும் நல்ல வியாபாரம்' என்று அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் சொன்னார். 'இன்டர்நெட் யுகத்திலும் புத்தக அடையாளம் போகாது' என்று போன வருட சந்தையிலேயே பேசியபோது சொன்னேன். இம்மாதிரி புத்தகச் சந்தைகள் மாதம் ஒன்று ஊர் ஊராக நடைபெற வேண்டும். ஒரு வருஷம் என்பது நீண்ட இடைவெளி. கோவையில் மட்டும்தான் விஜயா வேலாயுதம் வருடா வருடம் நடத்து கிறார். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், நெய்வேலி போன்ற நகரங்களில் தொடர்ந்து நடத்துகிறார்களா, தெரியவில்லை. சந்தையில் திருமகள் நிலையத்துக்காகக் கொஞ்சம் கையெழுத்துக்கள் போட்டுவிட்டு, 'ஏஷியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்' ஸ்டாலுக்குச் சென்றேன். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த பல சுவாரஸ்யமான புத்தகங்களை அப்படியே மறுபதிப்பு செய்கிறார்கள். விலை அதிகம் என்றாலும், சுவாரஸ்யமான புத்தகங்கள் கிடைக்கின்றன. என் வருடாரம்ப வைராக்கியத்தை மீறி நான்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்துவிட் டேன். அவற்றில், போப்பின் A Tamil Prose Reader சுவாரஸ்யமானது. பலவிதமான உரைநடைக்கு உதாரணங்கள் உள்ளன. தூய தமிழ், எளிய தமிழ், பஞ்சதந்திரத் தமிழ், மாஜிஸ்டிரேட் கச்சேரித் தமிழ், பெட்டிஷன்கள், அரசாங்கத் தமிழ் என்பதற்கு பல உதாரணங்கள் அபரிமிதமான குறிப்புகளுடன் கிடைக்கின்றன.

''தென்னார்க்காடு மாஜிஸ்டிரேட்டவராகிய (இன்ன) துரையவர்கள் சமூகத்துக்கு, கூடலூர் துனக்குடி (3)வது கிளாஸ் சபார்டிகேட்டு மாஜிஸ்டிரேட்டு கோவிந்தராவு எழுதிக் கொண்ட அர்ஜி இது:-

துனக்குடி மஜ்கூர் தாக்கல் ஆடுரூ குப்பம் கிராமத்தில் ராமசாமி நாயக்கன் (க) ராமலிங்க நாயக்கன் (உ) இவர்களது வீட்டில் நாளது மாசம் 2உ ராத்திரி சுமார் 29 பேர் தீவட்டித் திருடர்கள் பிரவேசித்து களவு நடக்கையில் மேற்படியூர் வில்லேஜ் மாஜிஸ்டிரேட் வகைரா சனங்கள் சேர்ந்து இரைச்சல் போட்டதன்பேரில், வீட்டுக்குள்ளிருந்த திருடர்கள் ரூபாய் 21*8 பெறுமான சொத்துக்களை களவு செய்து போனதாகவும் பின்தொடர்ந்து போனதில் திருடர்கள் அகப்படவில்லையென்றும் மேற்படி வில்லேஜ் மாஜிஸ்டிரேட் எழுதிய ரிப்போர்ட் நாளது தேதியில் காலமே வந்து சேர்ந்தது. அந்தச் சங்கதியை விசாரணை செய்ய உடனே மேற்படியூருக்குப் போகிறேன். விசாரித்துக் கிரமப்படி நடந்து கொள்கிறேன். சித்தம் அறியலாவதாய் மனுவு செய்து கொண்டேன்.

தங்கள் விதேயன்

1865-ல் எழுதிய இந்தக் கடிதம் வெள்ளைக்காரர்கள் கிராமத்துஅளவில் எவ்வாறு தமிழைச் சரளமாக நிர்வாகத்தில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு அத்தாட்சி. இன்று இம்மாதிரிக் கடிதம் எப்படி எழுதுகிறார்கள் என்பதை யாராவது கிராமாதிகாரி தெரிவிக்கலாம். தமிழ் உரைநடையில் ஒண்ணரை நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களை அறியவும் பயன்படும்.

முத்தமிழ்ப் பேரவையின் 26-வது ஆண்டுவிழாவில் இயல் தமிழுக்காக கலைஞரிடமிருந்து விருது வாங்கியபோது, 'இயல்' என்கிற வார்த்தையை யோசித்தேன். இயற்றமிழ் என்றால் இலக்கியத் தமிழ் என்கிறது பிங்கல நிகண்டு. இதற்கு அப்பாலும் இந்தச் சொல்லுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன. 'ஈண்டு செலன் மரபில் தன்னியல் வழா அது' என்று புறநானூறில் வரும்போது தன்மை என்று பொருள்பட வருகிறது. 'இயலன்று எனக்கிற்றிலை' என்று திருக்கோவையாரில் தகுதி என்ற பொருளில் வருகிறது. ஜன்மஜன்மங்களாக வந்த அன்பு என்று ஒரு அர்த்தம் உள்ளது. வேகம், தோற்றம், நூல், நூலின் பகுதி, அரசியல் என்று பல பொருள்களும் உள்ளன. திவ்யப்பிரபந்தத்தைக் கோஷ்டியாக நின்று சாற்றுவதை இயல் சாற்று என்பார்கள். அதில் பண்ணமைத்துப் பாட இயலாத பகுதியை இயற்பா என்று சொல்வர். இயல் என்றால் போட்டி, மாறுபாடு என்றும் சொல்லலாம்.

இயல்வது கரவேல் என்று ஆத்திசூடும்போது செய்ய முடிவது, நேர்வது நடத்தல், அணுகுதல் போன்ற அர்த்தங்கள் வருகின்றன. பொன்னியல் திருமேனி என்னும்போது பொன்னை ஒத்த என்கிற அர்த்தம் பெறுகிறது. எத்தனை இயல்கள், இயற்பியல், வேதியியல், அரசியல், பொறியியல், அறிவியல், கணினிவியல்.

இதில் ஒவ்வொரு இயலும் ஒரு சாகரம். இயல்பு சுபாவம், நல்ல குணம் என்றும் விரிகிறது. ஒரு சிறிய வார்த்தைக்குத்தான் எத்தனை சாத்தியங்கள்! இதில் ஏதேனும் ஒரு இயலுக்கு அல்லது சும்மா இயல்புக்கு, நல்ல குணத்துக்குக் கிடைத்த அங்கீகாரமே எனக்குப் போதும் என்று சொன்னேன்.

தமிழ்நாட்டின் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உங்கள் கவிதைகளின் ஜெராக்ஸ் பிரதிகளை கூரியரில் எனக்கு அனுப்பாதீர்கள். நான் புத்தக வெளியீட்டாளன் அல்ல. அவற்றைப் படித்துப் பதிலோ, அணிந்துரையோ எழுத எனக்கு அவகாசம் இல்லை. காசாவயல் கண்ணன், தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சிறு பத்திரிகைகள், நாளிதழ்கள், வாரமலர்களில் வெளிவந்த தன் அத்தனை கவிதைகளையும் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பியிருக் கிறார். இம்மாதிரி தினம் ஒரு கூரியர் வந்தால், நான் என்ன செய்வேன்..? சொல்லுங்கள்.

காசாவயல் கண்ணனின் கவிதைகளில், எனக்கு மூன்று நல்ல வரிகள் தென்பட்டன. இதை இவ்வார 'ஹைக்கூ'வாகத் தருகிறேன் -

'கூட்ட நெரிசலில்
காலியாகவே இருக்கிறது
டிரைவர் ஸீட்...'

கவிதைகள் என்னை நாடி வரக்கூடாது. நான் அவற்றை நாடிப் போகவே விரும்புகிறேன். நண்பர்களிடம் நல்ல கவிதைகள், கவிஞர்கள் பற்றிக் கேள்விப்பட்டு, இயல்பாகப் புத்தகக் கடைகளில் நானே தேடி, பட்டாம்பூச்சி பிடிப்பது போலத் துரத்திப் பிடிக்க விரும்புகிறேன்.

மகாதேவனின் 'ஆம் நண்பர்களே, அதுதான் நடந்தது' என்கிற தொகுப்பில் உள்ள -

'ஒருவனை
மூட்டை தூக்குபவனாக
ஆக்கவேண்டுமா
வெகு எளிது...'

என்று துவங்கும் கவிதை போல!<< Home

This page is powered by Blogger. Isn't yours?