Sunday, February 23, 2003

 

நீங்கள் 2003-ல் வாழ்பவரா?


நாம் கி.பி.2003-ல் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளங்கள் என்ன என்கிற ஒரு சங்கதி நெட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. இதை முதலில் துவக்கியவர் ஆண்ட்ரூ கிரஹாம் என்பவர். எனக்கு அனுப்பியது கலிஃபோர்னியாவில் இருக்கும் என் மைத்துனன் ரவி. நகரத் தமிழருக்காகத் திருத்திய வடிவம் இது -

நாம் 2003-ல் வாழ்கிறோம் என்பதற்கான இருபது அடையாளங்கள்...

1. யாரைச் சந்தித்தாலும் இ-மெயில் விலாசம் கேட்பீர்கள்.

2. உங்கள் ஆறாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு ஜேபெக் (jpeg) பற்றித் தெரிந்திருக்கும். ஃப்ளாப்பி போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். தானாகவே கணிப்பொறியை ஆன் செய்வார்கள். எட்டிப் பார்த்தால் சட்டென்று அணைத்துவிடுவார்கள்.

3. உங்கள் வீட்டில் குழந்தையையும் சேர்த்து மூன்று பேர். நாலு போன்.

4. வீட்டுவாசலிலிருந்தே வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று செல்போன் பேசு வீர்கள். நடக்கும்போது பேசவில்லையென்றால் ஜென்மம் சாபல்யம் அடையாது. போலீஸ் பிடிக்கும்வரை காரில், டூ-வீலரில் போகும்போது பேசுவீர்கள்.

5. எல்லா விளம்பரத்தின் கீழேயும் ஒரு www அட்ரஸ் இருக்கும் (பார்க்க - மதனின் விளம்பர கார்ட்டூன்!). கிராமத்தில் பஸ் ஏறுபவரிடம் விவசாயி - ''மாப்பிள்ளை! போய்ச் சேர்ந்ததும் இ-மெயில் போடுங்க... www பழனிசாமி டாட் காம்!''

6. கடைசியாக கம்ப்யூட்டர் வாங்கி ஆறு மாதத்தில் கீ-போர்டில் கை வைத்துப் பழகுமுன், அது பழசு என்று உங்கள் மகள் சொல்வாள்.

7. எங்கே சென்றாலும் கையில் செல்போன் இல்லையெனில் கையடிந்தாற்போல் இருக்கும் - கக்கூஸ், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் உட்பட. சினிமா பார்க்கும்போது அது ஒரு முறை சிணுங்கியே ஆகவேண்டும். தியேட்டரில் எல்லாருக்கும் ஸ்பஷ்டமாக் கேட்கும் படியாக, ''இன்னும் வாங்கலைம்மா... சைஸ் 36-ஆ... 38-ஆ? சந்தேகமா இருந்துச்சு!''

8. அதுபோல கிரெடிட் கார்டு இல்லையெனில் கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். காகித நோட்டுகள் போதாததால், கைவைத்த பனியனுக்கும் ஒரு ஜோடி சாக்ஸ#க்கும் கிரெடிட் கார்டு கொடுக்க விரும்புவீர்கள்.

9. ஏ.டி.எம். நம்பரை உங்கள் டி.வி. ரிமோட்டில் உள்ளிடுவீர்கள்.

10. தபாலில் போட்ட கடுதாசி, அடுத்த நாள் போய்ச் சேருவது உங்களுக்கு ரொம்ப லேட்! 'என்ன டிபார்ட்மெண்ட் நடத்தறாங்க கவர்ன்மெண்ட்ல...' என்று அலுத்துக்கொள்வீர்கள்.

11. உங்கள் வீட்டுச் சாப்பாட்டு மேஜைதான் அத்தனை காகிதங்களும், ஆவணங்களும், செக்புக்கும், சாவிக் கொத்தும், படிக்க மறந்த கடிதங்களும், மனைவி வாங்கிய காய்கறிகளும், மகனின் பீட்ஸா பாக்கியும், இன்றைய செய்தித்தாளும் வைக்கும் இடம்.

12. 'பேஸ்ட் இட்' என்னும் மஞ்சள் கடுதாசியில் எதையாவது எழுதி ஒட்டி வைத்தால்தான் உங்கள் வாழ்க்கை ஒழுங்காகும். அதற்குப்பின் அதை மறக்கலாம்.

13. நீங்கள் ஜோக் படிப்பதும் பத்திரிகை பார்ப்பதும் நெட்டில்தான்.

14. உங்களிடம் ஒரு போன் நம்பராவது உங்களுக்கே ஞாபகமிருக்காது. வங்கிச் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கையுடன் குழப்பம் வரும்.

15. இன்டர்நெட் வேலை செய்ய வில்லையெனில், உங்களுக்குக் கை- கால் நடுங்கும். ISP-யைக் கூப்பிட்டுத் திட்டுவீர்கள்.

16. அதிகாலை எழுந்து காபி குடிப்பதற்குமுன் நெட்டில் அலைவீர்கள்.

17. பாத்ரூம் போவதற்குமுன் இ-மெயில் பார்ப்பீர்கள். இல்லையேல் பாத்ரூம் வராது. போய் வந்ததும் பதில் வந்ததா என்று பார்ப்பீர்கள்.

18. புன்னகைப்பதற்குத் தலையைப் பக்கவாட்டில் சாய்த்துக்கொள்வீர்கள். :-) (எஸ்.எம்.எஸ்.)

19. இந்தப் பட்டியலை உங்கள் நண்பர்களுக்கு உடனே மெயில் அனுப்புவீர்கள்.

20. இதை முதலில் ஆரம்பித்தது ஆண்ட்ரூ கிரஹாம் அல்ல; நான்தான் என்று ஆசிரியருக்கு மெயில் அனுப்புவீர்கள்.

திரைக்கதை புத்தகம் முதல் பதிப்பு சென்னை புத்தகச் சந்தையிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது ஒரு சிறிய ரெக்கார்டு என்று சொன்னேன். திருவல்லிக்கேணியில் காட்டரிங் சர்வீஸ் வைத்திருக்கும் ஏ.என்.எஸ். மணியன், 1943-ல் பி.எஸ். ராமையா எழுதிய 'சினிமா' என்கிற புத்தகத்தை ஒளிநகல் செய்து அனுப்பியிருந்தார். அதைப் படித்து பிரமித்துப் போனேன். நான் 2003-ல் சொன்ன விஷயங்கள் சிலவற்றை ராமையா 1943-லேயே சொல்லியிருக்கிறார். பி.எஸ். ராமையா மணிக்கொடி பத்திரிகையின் இரண்டாவது அவதாரத்தில் சில சுவாரஸ்யமான சிறுகதைகள் எழுதியவர். அவருடைய 'போட்டிலிங்கம்' என்கிற கதை எனக்கு இன்னும் ஞாபக மிருக்கிறது. செல்வாக்காக இருந்த பழைய கோயிலுக்குக் பக்கத்தில் ஒரு பிளாட்பாரம் கோயில் தோன்றி, இதற்கு வருமானம் போய்விடுகிறது. பூசாரி ஒரு நாள் ராவோடு ராவாக ஒரு இடத்தில் ஒரு லிங்கத்தைப் புதைத்து வைத்துவிட்டு மறுநாள் ஆவேசம் வந்தவர்போல அமர்க்களம் பண்ணி உருண்டு உருண்டு அந்த ஸ்தலத்துக்குச் சென்று பள்ளம் தோண்டச் சொல்ல, லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டு செல்வாக்கு மீள்கிறது.

துமிலன் ஆசிரியராக இருந்து தினமணி கதிரின் சர்க்குலேஷனை ஒரு லட்சத்துக்குக் கொண்டு சென்ற காலத்தில், வாரா வாரம் ராமையா எழுதிய இம்மாதிரியான நடுப்பக்கக் கதைகள் என்னை மிகவும் வசீகரித்தன.

ராமையா சினிமாவில் வேலை செய்திருக்கிறார். ராமனாத், முருகதாஸ் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார் என்பது எனக்குச் செய்தி. அதைவிட ஆச்சரியமான செய்தி, திரைக்கதையைப் பற்றிய அவரது தெளிவான சிந்தனைகள்.

திரைக்கதையைப் 'படக்கதை' என்கிறார். நல்ல பிரயோகம்!

...கதையில் 'போராட்ட' விஷயம் வெகு சீக்கிரத்தில் ஸ்தாபிதமாகிவிட வேண்டும். படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் வரை எதிலும் ஒட்டாமல் பலர் வருவதும் போவதுமாக இருந்தால். கதையின் ருசி கெட்டுவிடும். படம் பார்ப்பவர்களுடைய மனதைக் கவரத் தவறிவிடும். படம் ஆரம்பித்து ஐந்து நிமிஷத்துக்குள்ளாவது (அதுவே அதிகம்) போராட்டம் ஆரம்பமாகிவிட வேண்டும். 'அப்புறம் என்ன நடக்கும்?' என்ற பதைப்பு அதனுடன் கூடவே பார்ப்பவர் மனதில் எழுந்துவிடும். உடனே படம் அவர் மனதைத் தன்னிடம் இழுத்துக்கொண்டுவிட்டது. அவர் தன்னை மறந்து படக்கதையில் லயித்துவிடுவார். கதை மேலே போகும்போது ஒரு வினாடிகூட அவர் அந்தப் பதையிலிருந்து விடுபட இடம் இருக்கக்கூடாது. ஆரம்பத்தில் கவர்ந் திழுத்த அவர் உள்ளத்தைப் படம் முடிந்து 'மங்களம்' என்று போடும் வரை கதாசிரியர் தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும் கதைப்போக்கு அவ்வளவு நிச்சயமாக, வேகமாக இருக்க வேண்டும்...

அறுபது ஆண்டு கழிந்தும் இதில் ஒரு அட்சரம்கூட மாற்றத் தேவையில்லை. சினிமாவின் எல்லா நடவடிக்கைகளையும் இவ்வகையிலான தெளிவான உரைநடையில் வர்ணிக்கும் இந்தப் புத்தகத்தை ஜோதி நிலையம், திருவல்லிக்கேணி வெளியிட்டுள்ளது. (பக்கம் 273, விலை 3-8-0) மறுபதிப்பு வந்ததா, தெரியவில்லை!

இரண்டு வாரம் முன்பு வந்த கட்டுரையில், மார்க்ஸ் Religion is the opium of the people என்று சொன்னதை எழுதியிருந்தது அந்தக் கடினமான கட்டுரையை முழுக்க வாசித்த பொறுமைசாலிகளுக்கு நினைவிருக்கலாம். வாழ்க! opium என்று மார்க்ஸ் சொல்லியிருக்க மாட்டார். opiate என்றுதான் சொல்லியிருப்பார்' எனத் தஞ்சாவூரிலிருந்து கே.என். ராமச்சந்திரன் அதிகாலையில் எஸ்.டீ.டி. போட்டுச் சொன்னார்.

மார்க்ஸ் சொன்ன அந்த வாக்கியத்தை முழுவதும் கொடுக்கிறேன்.

அவர் 1844-ல் எழுதிய A Contribution to the Critique of Hegel's Philosophy of Right என்கிற கட்டுரையில் வருகிறது. ''Religious suffering is at one and the same time the expression of real suffering and a protest against real suffering... Religion is the sigh of the oppressed creature, the heart of the heartless world and the soul of soulless conditions. It is the opium of the people."

'மதத்துக்காக வருத்திக்கொள்வது ஒரே சமயத்தில் நிஜமான வருத்தத்தின் வெளிப்பாடும் மறுப்பும் ஆகும். மதம் ஒடுக்கப்பட்ட ஜந்துவின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மா. அது மக்களின் போதைப்பொருள்.' ஒரு போதை யாகச் சொல்லாமல் வலியை மழுப்பும் போதைப் பொருளாக அதைச் சொல்கையில், மதத்தை அவர் குறை கூறவில்லை. மதத்துக்குத் தேவை ஏற்படுத்திய சமூகத்தைத்தான் விமரிசிக்கிறார். இருந்தும் கம்யூனிஸ்டுகளை நாத்திகர்கள் என்றும் சமூகஉணர்வுகளை மதிக்காதவர்கள் என்று குறை கூறுவதற்கு இந்தக் கூற்றுதான் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

வழக்கம்போல் ஹைக்கூ கொடுத்து உங்களைப்படுத்தாமல், பெர்சிவல் பாதிரியார் 1874-ல் வெளியிட்ட தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூலில் சில வழக்கொழிந்த பழமொழிகள் தருகிறேன். ஹைக்கூவைவிட உண்மையாக இருக்கின்றன.

காசுக்கு ஒரு புடவை
விற்றாலும் நாயின்
'...' அம்மணம்

கொக்கு இளங்குஞ்சும்
கோணாத தெங்கும்
கண்டதில்லை

தென்காசி ஆசாரம்
திருநெல்வேலி உபசாரம்
(இதன் அர்த்தம் என்ன)?

மானுக்கு ஒரு புள்ளி
ஏறி என்ன, குறைந்து என்ன?

வெட்கப்படுகிற வேசியும்
வெட்கம்கெட்ட சமுசாரியும்
உதவாதவர்கள்.

Sunday, February 16, 2003

 

இளம் நந்திதாதாஸ்!


Powerloom, quorum, legal tender, emporium, marine department, clip இவை எல்லாம் அரசின் ஆட்சிச் சொற்களின் அகராதியில் உள்ளன. இவற்றுக்கு தமிழில் என்ன? விடை கடைசியில்...

'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்' என்னும் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு ஒரு புது அடையாளம் கிடைத்திருக்கிறது. அபர்ணா சென் இந்தப் படத்தை இங்கிலீஷ் படமாகவோ, இந்திப் படமாகவோ, பெங்காலி, தமிழ்ப் படமாகவோ தனிப்பட்டு பார்க்காமல் இந்தியர்கள் அன்றாடம் இயல்பாக எப்படிப் பேசுவார்களோ அந்தக் கலப்பு மொழியில் பிடித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழ், கொஞ்சம் பெங்காலி, இந்தி. பெரும்பாலும் ஒரு முஸ்லிம் இளைஞனும் பிராமணப் பெண்ணும் பஸ் பயணத்தில் பேசிக்கொள்ளும்போது பயன்படுத்தும் அவரவர் உச்சரிப்பில் ஆங்கிலம் என்று மிக வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். கமல் 'ஹேராமி'ல் இந்த முறையைப் பயன்படுத்தியிருக்கிறார். இதன் மையக்கருத்தான மதக்கலவரம் பின்னணியில் இயங்குகிறது. அதன் ரத்தம், மூர்க்கம் எதையும் நேரடியாக காட்டாமல் ஓர் உடைந்த மூக்குக்கண்ணாடி, பல்செட், அலறும் அநாதைக் குழந்தை போன்ற காட்சிகளின் மூலம் முழுத் தீவிரத்தையும் உணர வைத்திருக்கிறார்.

அபர்ணாசென் சின்னப் பெண்ணாக சத்யஜித்ராயின் 'தீன்கொன்யா'வில் நடித்ததைப் பார்த்தபோது இவ்வளவு தேர்ந்த டைரக்டராக மலர்வார் என்று '36 சௌரிங்கிலேன்' சமயத்திலேயே வியந்தேன். அத்திப்பூத்தாற்போல இடையே ஷபானா ஆஸ்மியை வைத்து ஒரு படம் பண்ணியதாக ஞாபகம். அது பெரிசாகப் போகவில்லை. அபர்ணாவுக்கு மீரா நாயரைப்போல் இல்லாமல் உண்மையாக, அழுத்தமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது.

நகரங்களில் செல்வாக்கான மேல் நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆதரவு கிடைத்து சிறிய தியேட்டர்களின் அதிக விலை இருக்கைகளை நிரப்பும் கூட்டங்களை நோக்கும்போது இந்திய சினிமாவின் புதிய வடிவம் இவ்வகையான படங்களில் பிறந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. இந்தியோ, தெலுங்கோ, தமிழோ மலையாளமோ... இந்த யதார்த்த அளவில் சொன்னால் கதையின் மொழிப் பிரச்னை நீங்குகிறது. காரணம், சினிமா என்பது காட்சிக்கான ஊடகம். பேச்சுக்கானது அல்ல. இந்தப் படம் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பையில் நன்றாக ஓடுகிறதாம். கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் பெட்டியை அனுப்பிவிட்டார்களாம். அவர்கள் இன்னும் தயாராகவில்லை. தயார்படுத்த வேண்டும். லயன்ஸ், ரோட்டரி போன்றவர்கள் டிபன் சாப்பிட்டபின் film appreciation வகுப்புகள் நடத்தலாம்.

இந்தியாவுக்கு வெளியே ஒரு பெரிய மார்க்கெட் உருவாகி வருகிறது. ஏதாவது ஒரு திரைப்பட விழாவில் பரிசு கிடைத்துவிட்டால் இதன் பரிமாணம் மாறிவிடும். மணிரத்னத் தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' லாஸ் ஏஞ்சலீஸ் பாம் ஸ்ப்ரிங்ஸ் விழாவில் மிகவும் விரும்பப்பட்ட படங்களில் ஒன்று. சப்-டைட்டில், பாட்டுக்களுடனேயே காட்டியிருக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த இரான் தேசத்திலிருந்து 'காந்தஹார்' போன்ற அற்புதமான படங்கள் வெளிவரு கின்றன. நம் இள டைரக்டர்கள் 'ஐயரை'ப் பார்த்துவிட்டு இவ்வகைப் படங்கள் எடுத்தால் ஆதரவு கிடைக் கும் என்கிற தைரியம் பெறவேண்டும். இதுவரை இந்தியில் 'ஐயய்யோ' என்ற ஒரே ஒரு வசனம் கொண்ட மெஹமூத் வகை காமெடிக்கும், தமிழில் மாமி, கால் தெரியும் மடிசார் போன்ற விஷயங்களைக் கொச்சைப்படுத்தும் பாடல்களுக்கு மட்டும் பயன்பட்டு வந்த 'ஐயராத்துப் பெண்'ணை முதன் முதலாக கழுத்துச் சங்கிலியில் கனமான தாலி, வளையலில் ஊக்கு, நெற்றியில் சதா ஸ்டிக்கர் பொட்டு சகிதம் நிஜரூபத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. கொங்கனா சென் மூலம் மற்`றாரு இளம் நந்திதாதாஸ் கிடைத்திருக்கிறார்.

புத்தகச் சந்தையில் ஏஷியன் எஜுகேஷனல் சர்வீஸஸ் வெளியிட்ட சென்ற நூற்றாண்டுப் புத்தகங்களின் மறுபதிப்புகள் பலவற்றை வாங்கித் தள்ளினேன். மனுஷ்யபுத்திரன் என் 'திரைக்கதை எழுதுவது எப்படி?' முழு பதிப்பும் புத்தகச் சந்தையிலேயே விற்றுவிட்டதாகச் சொன்னார். அவர் எனக்கு 'காலச்சுவடு'க்காக பிரம்ம ராஜன் மிக அழகாகப் பதிப்பித்திருந்த ஆத்மாநாம் படைப்புகளையும் 'கொடுமுடி கோகிலம்' கே.பி. சுந்தராம்பாள் வரலாறு (சோழநாடான், ரிஷபம் பதிப்பகம்) புத்தகத்தையும் அன்பளித்தார். உமாமகேசுவரியின் கவிதைகளும் சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்தேன்.

'ஆத்மாநாம் படைப்புகள்'தான் இந்த வருடத்தின் சிறந்த புத்தகம் என்று சொல்வேன். உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த இந்தப் புத்தகத்தை அளித்த பிரம்மராஜனுக்கும் காலச்சுவடுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

மனச்சிதறலால் அகாலமாக தற்கொலை செய்துகொண்ட ஒரு கவிஞர் என்பதற்காக மட்டும் ஆத்மாநாமின் கவிதைகள் சிறப்பானவை என்று சொல்லக்கூடாது. Keatsian Despair சென்ற நூற்றாண்டில் மிகவும் பேசப்பட்டது. சில்வியா ப்ளாத்தின் கவிதைகளை அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்கிற பின்னணி தெரிந்து படிக்கும்போது உள்ளர்த்தங்கள் பல மிளிர்கின்றன என்பர். ஆத்மாநாமின் கவிதைகளுக்கு இவ்வகையிலான சுயஇரக்கத் தனிப் பரிமாணம் ஏதும் தேவையில்லை. வாழ்க்கையில் எதையாவது சாதிக்கவேண்டிய, நிரூபிக்கவேண்டிய, யாரையாவது திருப்திபடுத்தவேண்டிய தேவைகள் ஒரு பெருஞ்சுமை என்பது ஆத்மாநாமின் பல கவிதைகளையும் உருக்கமான வாழ்க்கைக் குறிப்பையும் படிக்கும்போது தெரிகிறது -

''மார்ச் 1984-லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜ$லை 1984) ஆத்மா நாம் தனக்கு வந்த கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ, பத்திரிகைகளையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்தது போல ஏறத்தாழ 120 தபால்கார்டுகளை வாங்கி வைத்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசிவரை திருத்தி வைக்கப்பட்டிருந்தன.'' அந்த கார்டுகளில் ஆத்மாநாம் என்ன எழுதியிருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது:

''உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்கிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்''

இதைத்தான் அவர் விரும்பினார்.

கே.பி. சுந்தராம்பாள் 1908-ல் பிறந்ததிலிருந்து 1980-ல் இறந்தபோது அவரது சடலத்தின் 'தலைமாட்டில் இருபுறமும் கத்தை கத்தையாக வைத்திருந்த' ஊதுவத்திகள் வரை இத்தனை விரிவாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் தமிழில் அரியவை. கதராடை, காங்கிரஸ், தேசபக்தி நாடகப்பாடல்களை ஆக்கிர மித்த கணீர் சொந்தக் குரல்களின் காலத்தை ஒரு பொற்காலமாகச் சொல்பவர் உண்டு. கே.பி.எஸ்., மணிமேகலை போல ஒளவையார் போல வயசானதும் சிறப்புகள் பல பெற்றிருக்கிறார். அவர் எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் வாழ்ந்த வாழ்க்கையும் பாடிய பாடல்களின் விவரங்களும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டப்பா என்கிற மேதையின் சோகமும் வெற்றியும் கலந்த சுருக்கமான வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டப்பாவுடன் பிரசவ சமயத்தில் மனஸ்தாபம் வந்து பிரிந்துபோன போது எழுதிய கடிதங்கள் மிக இயல்பாக உருக்கமாக இருக்கின்றன.

''தேவரீர் அவர்கள் சமூகத்துக்கு எழுதியது. தங்கள் லெட்டர் கிடைத்து சங்கதி தெரிந்தேன். தங்களுக்கு நான் எவ்வகையிலும் துரோகம் செய்த வளல்ல. மனதில் ஒன்று, வாக்கில் வே`றான்று வைத்துப் பேசக் கூடியவள் அல்ல... தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுதவேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்துக்கு &க்ஷமமாக இருப்பீர்கள்!''

தனிப்பட்ட அடையாளமும், தைரியமும், திறமையும் பெற்ற ஒரு பெண்மணி புகழ்பெற்ற கணவனுக்கு இரண்டாவது மனைவியாக தன்னைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டிய அவஸ்தை கோடிகாட்டினாற்போலத் தெரிகிறது. கல்கி 'நந்தனாரை' கடுமையாக விமரிசித்ததும் புதுமைப்பித்தன் 'ஒளவையார்' படத்துக்கு கதை எழுத ஏற்படுத்திக்கொண்ட சமரசங்கள் புத்தகத்தின் சுவாரஸ்யமான பகுதிகளில் சில. அரிய புகைப்படங்களும் உள்ளன.

விடை: பொறித்தறி, சிற்றெண், செலாவணி, வணிகசாலை, நாவாய்த்துறை, கவ்வி. 'க்ளிப்'புக்கு cute!

Sunday, February 09, 2003

 

அப்ப, இது தொல்லை பேசியா அங்கிள்?


என் டெலிபோனில் எஸ்.டீ.டி. வசதி இல்லை. ஒரு முறை சொத்தையே எழுதி வை என்று பில் வந்தபோது இந்த வசதியை வெட்டிவிட்டேன். சில வேளைகளில் அசௌகரியம்தான். ஆனால், இப்போதெல்லாம் ட்ரங்க்புக்கிங் மூலம் பதிவுசெய்து ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறது. ஓவர்சார்ஜ், யாரோ கம்பத்தில் ஏறி ஓசி கனெக்ஷன் அமெரிக்காவுக்குக் கொடுத்துப் பேசுகிறார்கள் போன்ற பயங்கள் இன்றி இப்போதெல்லாம் ட்ரங்க் புக்கிங்கை கணிப்பொறியிடம் ஒப்படைத்து ரொம்ப சௌகரியம் பண்ணிவிட்டார்கள்.

180 டயல் செய்தவுடன் முதலில் வரவேற்புச் செய்தி வருகிறது. 'இங்கிலீஷா, தமிழா.. எது வேணும்?' என்று கேட்கிறது. இங்கிலீஷ் என்றால் எண்ணிக்கை 1-யும் தமிழ் என்றால் ஏனோ 3-யும் அமுக்கச் சொல்கிறது.

அமுக்கி முடிந்ததும் 'ஆர்டினரியா, அர்ஜெண்டா, பிபியா, மின்னலா' கேட்கிறது... ஓட்டல்களில் சாதாவா, ஸ்பெஷல் நெய்ரோஸ்டா, ரவாவா என்பதுபோல். உடனே எண்ணை அழுத்தினால் தப்பு. கேள்வி முழுவதையும் கேட்டு முடித்த பின்தான், பீப் வந்தவுடனே அழுத்த வேண்டும். அதற்கு முன்னே பின்னே அழுத்தினால் ஓர் அதட்டல். 'நீங்கள் நேரத்தில் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டீர்கள்' என்று மறுபடி அதே கேள்வி! கொஞ்சம் டென்ஷனாகி 'அதான் முன்னாடியே சொல்லியாச்சே சனியனே' என்று கேட்பதில் ஒரு பலனும் இல்லை. கம்ப்யூட்டருக்குக் கோபம் கிடையாது. கேள்வி காலாவதி ஆகிவிடும். பீப்புக்குக் காத்திருந்து ஒருவாறு அதன் விநோதமும் நெளிவும் சுளிவும் தெரிந்துபோய் அரக்கப் பரக்க அழுத்தக் கற்றுக்கொண்ட பின் நீங்கள் தொடர்புகொள்ளப் போகும் ஊரின் எஸ்.டீ.டியை உள்ளிடச் சொல்கிறது. அதன்பின் நாம் கேட்ட டெலிபோன் எண்கள் எல்லாவற்றையும் திரும்பச் சொல்கிறது. ஒவ்வொரு எண்ணும் ஒரு குரலில் இருக்கிறதே என்று யோசிக்காமல் நம்பர் சரியில்லையென்றால் 1-ஐ அழுத்த வேண்டும். இல்லை 2 இப்படி. அழுத்தி அழுத்தி விரல் கன்னிப்போய் இளம்சிவப் பானதும் 'வை போனை' என்கிறது. கொஞ்ச நேரத்தில் அடிக்கிறது. 'நீங்கள் கேட்ட எண் இதுதானே.. சரி என்றால் 1-ஐ அழுத்தவும்.'

'நாசமாப் போச்சு... இன்னும் கால் உள்ளூரிலேயே இருக்கிறதா..?' என்றெல்லாம் கேட்பதில் பயனில்லை.

நகமும் சதையும் குரலுமுள்ள பெண்ணிடம் பேசுவதற்கும் சின்தட்டிக் மெஷினுடன் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மெள்ள இந்திய அலுவல கங்களில் மெஷின் குரல்கள் பரவி நாள் முழுவதும் எண்களை அமுக்கி அமுக்கி அலுக்கும் நிலை வரப்போகிறது. இது முன்னேற்றத்துக்குக் கொடுக்கும் விலை. அமெரிக்காவில் மனிதக் குரல்களைக் கேட்டால் அதிர்ஷ்ட தினம். நான் எப்போதும் அங்கே போன் பேசுமுன் 'am I speaking to a human being?' என்று கேட்பேன். குரல்கள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். காயின் பாக்ஸில் கால் சரியாகப் போகவில்லை என்றால் மெஷின்கள் நாம் போட்ட காசை 'ஸாரி' சொல்லித் திருப்பிக் கூடத்தரும். நமக்கு இது வருகிறதோ.. இல்லையோ.. எதிர்காலத்தில் இந்த வசதி நிச்சயம் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் ஆம் என்றால் ஒண்ணை அழுத்தவும், இல்லையென்றால் இரண்டை அழுத்தவும் என்ற கேள்விகளுடன், தலைமுடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டும் என்றால் மூன்றை அழுத்தவும். போனைப் போட்டு உடைக்க வேண்டும் என்றால் நான்கை அழுத்தவும்.

முன்பணம் கட்டி கார்டு வாங்கி எந்த டெலிபோனையும் எஸ்.டீ.டி-யாகப் பயன்படுத்தலாம். ஒரு 12 இலக்க எண்ணை ஞாபகப்படுத்திக்கொண்டு சரியாக உள்ளிட்டால் டயல் செய்யலாம். விரும்பும் பதினோரு இலக்கங்களையும் தொடர்ந்து சரியாக டயல வேண்டும். இல்லையேல் கொடுத்த ஐந்நூறு ரூபாய் ராங் நம்பரிலேயே கோவிந்தா. keep things simple but not simpler என்று ஐன்ஸ்டைன் சொன்னது இதற்குப் பொருத்தம்.

The Prisoner's Dilemma - கைதியின் குழப்பம் கேம் தியரியில் ஒரு பிரசித்தி பெற்ற உதாரணம் உண்டு.

இதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் கைதாகவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளலாம். நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரு பொய்க் கையெழுத்துப் போட்டு மோசடி வழக்கில் கைதாகிறீர்கள். யார் போட்டது, யார் திட்டமிட்டது என்பது சரியாக வெளிவரவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களைத் தனியாக விசாரிக்கும்போது, 'உங்கள் இருவரையும் ஒரு வருஷம் ஜெயிலுக்கு அனுப்பும் அளவுக்கு எங்களிடம் சாட்சியம் இருக்கிறது. ஆனால், நீ குற்றத்தை ஒப்புக்கொண்டு உன் கூட்டாளிக்கு எதிராக சாட்சி சொல்ல சம்மதித்தால் உனக்கு விடுதலை, அவனுக்கு மூன்று வருஷம் தண்டனை கிடைக்கும். ரெண்டு பேருமே குற்றத்தை ஒப்புக்கொண்டால் தலா இரண்டு வருஷம் தண்டனை கிடைக்கும். உன் கூட்டாளிக்கும் இதே சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்ன சொல்கிறாய்?' என்கிறார். என்ன செய்வீர்கள்?

மேம்போக்காகப் பார்த்தால் இருவரும் சும்மா இருப்பதுதான் சிறந்தது. என்று தோன்றும். ஆனால், உங்கள் கூட்டாளி சும்மா இருப்பான் என்பது என்ன நிச்சயம்? (அவனுடன் தொடர்புகொள்ள உங்களுக்கு வாய்ப்பில்லை.) அவன் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லத் தீர்மானித்தால் உங்களுக்கு மூணு வருஷமாகிவிடும். இவ்வகையில் வாழ்வில் சின்னச்சின்னக் குழப்பங்கள் பல உண்டு.. க்யூவில் நிற்பதா அல்லது நடுவே புகுந்து தடாலடி பண்ணுவதா? அலுவலகத்தில் ஓர் அநியாயம் நிகழும்போது பிடிவாதமாக இருப்பதா, விட்டுக் கொடுப் பதா? ஏன், கூட்ட இறுதியில் ஜனகணமன பாடும்போது மரியாதையுடன் எழுந்து நின்று கூடப்பாடுவதா, இல்லை நழுவுவதா? டிராஃபிக் போலீஸ்காரர் விசில் அடித்துக் கூப்பிட்டால் நிற்பதா, போவதா போன்ற பல தீர்மானங்கள் தினம் நம்மை எதிர்கொள்கின்றன.

இவற்றைத் தீர்த்து வைப்பதில் கேம் தியரி பயன்படுகிறது.

ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த விஞ்ஞானி ஜான்வான் நாய்மன் இந்தத் தியரியைக் கண்டுபிடித்தார். நாய்மன் (1903-1957) டிஜிட்டல் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர். அமெரிக்க அணுகுண்டுத் திட்டத்திலும் செயல்பட்டவர். சூதாட்டம் போன்ற ரிஸ்க் எடுக்கும் விளையாட்டுகளை அவர் விரும்பினார். அவற்றை விஞ்ஞான ரீதியில் அலசிப் பார்த்தார். இது பொதுவாழ்வில், அரசியல் - பொருளாதாரக் கொள்கையில் நாம் சந்திக்கும் வெவ்வேறு சூதாட்டங்களை அலசிப் பார்க்க உதவும் என்றார். The theory of Games and Economic Behaviour என்கிற அவர் புத்தகம் பிரசித்தமானது.

யோசித்தால் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இப்போதுள்ள ஆயுதப்போட்டி கேம் தியரிப்படி கைதியின் குழப்ப வகை பிரச்னை தான். நாம் அணு ஆயுதங்களையும் ஏவுகணை களையும் மேன்மேலும் அதிகரிக்க வேண்டுமா? ஒருவர் மேல் ஒருவர் பயன்படுத்தினால் அழிவுதான் என்பதைத் தெளிவாக அறிந்தும் இவற்றை நாம் உற்பத்தி செய்யவும் சேகரிக்கவும் வேண்டுமா?

இதில் உள்ள சாத்தியக்கூறுகளைப் பாருங்கள்.

1. இந்தியா, பாகிஸ்தான் இருவருமே இவ்வாறான ஆயுதங்களைச் சேகரிக்காமல் இருப்பது.

2. இந்தியா இவ்வாயுதங்களைச் சேர்த்து வைப்பது, பாகிஸ்தான் சும்மா இருப்பது. இப்படிச் செய்தால் நாம் பிரதேசத்தின் 'சூப்பர் பவர்' ஆவோம். ஆனால், நண்பர்களை இழப்போம்.

3. பாகிஸ்தான் சேகரிக்கிறது. நாம் புறா ஓட்டிக்கொண்டு சும்மா இருப்போம். இவ்வாறு செய்தால் பாகிஸ்தான் கிறுக்குத்தனமாக நம் நகரங்களை அழிக்கும் சக்தி பெற்றுவிடும்.

4. இருவருமே ஆயுதங் களைக் குவித்துக் கொண்டே இருப்பது. அணு ஆயுத ஏவுகணை ஓட்டப் பந்தயத்தில் இருவருக்கும் ஏராளமான பணச் செலவு, டென்ஷன், உலகில் ஓர் அணு ஆயுதப் போரின் பயம்.

இப்படி அலசிப் பார்த்தால், பாகிஸ்தான் என்ன செய்கிறதோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அதிகரித்துக் கொள்வதுதான் புத்திசாலித் தனம் என்று தோன்றுகிறது. ஆனால், இதையே பாகிஸ்தானும் தீர்மானிக்கலாம்.

அதுதான் இப்போது நடை பெற்று வருகிறது.

இருவரும் ஒத்துழைத்து பரஸ்பர நம்பிக்கை வந்து குறைப்பதுதான் விவேகம். நம்முடைய இந்துத்வாவும், பர்வேஸின் பிடிவாதமும் குறைவதற்கான சூழ்நிலை இப்போது உருவாகவில்லை. இதனால்தான் கோடிக் கணக்கில் செலவழித்துப் புதிய புதிய அக்னி வகை ஏவுகணைகளைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதாவது பயன்படுத்தாமல் இருக்க!

இருதரப்பிலும் நியூக்ளியர் பட்டன் மேல் விரல் வைத்தி ருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு வான் நாய்மனின் கேம் தியரி பற்றித் தெரிந்திருக்கும், தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வாரச் சிறுகவிதைகள். சொன்னாலும் கேட்காமல், சளைக்காமல் எனக்கு அனுப்பப்பட்ட 48 ஹைக்கூ தொகுதிகளில் ஓரளவுக்குத் தேறுபவை -

உடைந்த பொம்மை
அழாத குழந்தை
கவலையோடு அப்பா
- வண்ணை சிவா

இலவசமாக
நீந்திச் சென்ற நிலா.
மழை
- செல்லம்மாள் கண்ணன்

எளிய நினைவுச் சின்னம்.
என் தந்தை சாய்ந்த
தூண்
- மித்ரா

நாட்குறிப்பில்
முகவரிகள்
மறந்துபோன முகங்கள்
- டி. ராஜேந்திரன்

This page is powered by Blogger. Isn't yours?