Sunday, March 30, 2003

 

கணிப்பொறியை இயக்க ஆங்கில அறிவு தேவையா?


'தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்' என்கிற பழமொழி பற்றி பல கடிதங்கள் வந்தன. திருநெல்வேலியில் யார் வீட்டுக்காவது போனால் 'சாப்டறீங்களா? சாப்ட்டுட்டுத்தானே வந்திருப்பீங்க... நீங்க நம்ம வீட்ல எல்லாம் சாப்பிடுவீங்களா?' என்பார்களாம். இதுதான் திருநெல்வேலி உபசாரம் என்றும், தென்காசியில் வீட்டுக்கு விலக்காக இருந்தாலும் பெண்களைத் தனிப்படுத்த மாட்டார்கள். இதுதான் தென்காசி ஆசாரம் என்றும் பலர் எழுதியிருந்தனர். இரண்டுமே தப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆர்.எம்.கே.வி., கலாப்ரியா போன்று எனக்குத் தெரிந்த திருநெல்வேலிக்காரர்கள், நான் சென்றபோது செய்த உபசாரங்கள் இதற்கு நேர்மாறாக இருந்தன. கல்தோசையும் அல்வாவும் பூப்போன்ற இட்லியும் குறிப்பாக சைவப்பிள்ளைமார் வீடுகளும் போத்தி ஓட்டல்களும் வெஜிட்டேரியனுக்குச் சொர்க்கம். நினைத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது!

தென்காசி ஆசாரம் என்பதும் இன்றைய கேர்ஃப்ரீ தினங்களில் உலகெங்கிலும் இருக்கும் ஆசாரம் என்பதால், அதைத் தனிப்பட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

பழைய 'மஞ்சரி' இதழிலிருந்து அ.ச.ஞா-வுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை ஓர் அன்பர் கிழித்து அனுப்பியிருந்தார். அ.ச.ஞா. திருநெல்வேலியில் ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

'உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்' என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம்.

பல வாரங்களுக்கு முன் பில்கேட்ஸ் விஜயத்தைப் பற்றி ஜ$.வி-யில் எழுதி நூற்றுக்கணக்கான கடிதங்களும் மின்அஞ்சல்களும் வந்தன. மைக்ரோசாஃப்ட் விசுவாசிகள் என்னை மண்ணை வாரி இறைத்து, 'எப்போது நாசமாய்ப் போவே?' என்று கேட்டிருந்தார்கள்.

சன், ஆரக்கிள்காரர்கள் 'நீ தேவதை. உனக்குப் பட்டுப் பீதாம்பரம் தைக்க வேண்டும்' என்று அளவு கேட்டு எழுதியிருந்தார்கள். பொதுவாக என்னை விமரிசித்தவர்கள், 'நீ என்ன செய்திருக்கிறாய்?' என்றுதான் கேட்டிருந்தார்கள்.

இப்போதுகூட அந்தக் கட்டுரையைப் புதிதாகத் தூங்கி எழுந்தவர்கள் பார்த்ததும், இத்தனை வாரம் கழித்தும் மெயில் அனுப்பத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு அந்தக் கட்டுரை, மென்பொருள் தமிழர்களின் உலகத்தைக் கலக்கியது.

அதில் Open Source இயக்கம் பற்றியும் 'தமிழில் லினக்ஸ் சார்ந்த ஒரு மேசைச் சூழல் அமைக்கலாம்' என்றும் எழுதியிருந்தேன். அதாவது, ஆங்கிலமே தெரியாத ஒரு மளிகைக்கடைக்காரர் கணிப்பொறியைத் திறந்தால் ஒரு சொல் தொகுப்பு, ஒரு விரிபட்டியல், இணைய வசதி, பட வசதி, ஒரு தகவல் தளம் போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் என்று எழுதியிருந்தேன்.

எழுதிவிட்டுச் சும்மாயிருக்க விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலைக்குத் தேவையான சுமார் ஒன்பதாயிரம் சொற்களுக்கு எளிய தமிழில் புரியும்படியான சொற்களை முதலில் பட்டியலிட்டுள்ளோம். இந்தச் சொற்கள் பொதுச் சொத்து. காப்பிரைட் கிடையாது. காசு கிடையாது.

இவற்றைக் கல்லூரி மாணவர்களை வைத்துக் கொண்டு சில ஆர்வலர்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மெள்ள மெள்ள லினக்ஸ் சூழலுக்குள் கொண்டு வருகிறோம். இந்தப் பணி முடிந்ததும் help மெனுவில் இருக்கும் ஆங்கில விளக்கங்களை மெள்ள மெள்ளத் தமிழுக்கு மாற்றப் போகிறோம்.

அதன்பின், கணிப்பொறியை வியாபாரத்துக்கும் செய்தித் தொடர்புக்கும் மின்கடிதங்களுக்கும் இலக்கியத்துக்கும் படம் போடவும் புத்தகம் அமைக்கவும் பயன்படுத்த ஆங்கில அறிவே தேவையிருக்காது. இதை மற்றவர் செய்யவில்லையா என்று கேட்க லாம். செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஓப்பன் சோர்ஸில் அதுதான் சௌகரியம். எல்லோருக்கும் இடம் இருக்கிறது. வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்ப்பதைவிட, அவற்றின் பயன்பாட்டையும் புரிதலையும் மனதில் வைத்துக்கொண்டு புதிய வார்த்தைகள் கொடுத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் அமைத்த கணிப்பொறிக் கலைச்சொல் அகராதியின் வார்த்தைகளையும் எளிதாக இருந்தால் பயன்படுத்தியுள்ளோம்.

இந்த இயக்கத்தில் சேர ஒரு கணிப்பொறி அணுகலும் டி-ஷர்ட்டும் போதும். வர விரும்புபவர்கள், உலகில் எங்கிருந்தாலும் நல்வரவு.

மதமாற்றம் என்பது இன்று நேற்றிலிருந்து ஏற்பட்டதல்ல. நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் நிலவி வருவதே. சைவ, வைணவ பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமணமும் பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தன.

ஐந்தாம் நூற்றாண்டளவில் சோழ நாட்டில் ஆட்சி செய்த அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மன்னன் பௌத்தன். அந்தக் காலத்து புத்ததத்தர் என்பவர் எழுதிய நூல் காவிரிப் பூம்பட்டினத்தின் பௌத்த விகாரங்களைப் பற்றிப் பேசுகிறது.

மணிமேகலையும் அப்போதுதான் எழுந்தது. பல்லவ மன்னர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்திருந்தார்கள். மணிமேகலையில் சமயவாதம் பௌத்தத்தின் உயர்வைப் பேசுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் சமணம் தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்தது. நாவுக்கரசர் காலத்தவனான முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600-630) சமணனாக இருந்தான். சம்பந்தரால் சைவத்துக்கு மாற்றப்பட்ட கூன்பாண்டியன் முதலில் சமணனாக வாழ்ந்தவன்.

அதிகார ஆதரவுடன் திகழ்ந்த மதங் களை மாற்றவேண்டிய கட்டாயம் அக்கால சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இருந்தது. அரசனை மதம் மாற்றிவிட்டால் மக்களும் மாறிவிடுவர்.

இப்போது கிறிஸ்தவமும் இஸ்லாமும் சமண, பௌத்தத்தை இடம்பெயர்த்துவிட்டன. அரசர்களுக்குப் பதில் பதவியில், ஆட்சியில் இருப்பவர்கள் சலுகைகளைத்தான் நாடுகிறார்கள்.

பெரும்பான்மை பலம் இருக்கும் வரை, சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் இருந்து, தங்கள் உரிமைகளில் சின்னச் சின்னக் குறுக்கிடல் களுக்கெல்லாம் சீறிக் கடற்கரையில் கூட்டம் கூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அன்றைய காரணம் முக்கியமாக அரசாதரவு. இன்றைய காரணம் முக்கியமாக ஏழ்மை.

நான் திருச்சி செயின்ட்ஜோசப் (புனித வளனார்) கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தீவிர வைணவத்தலமான ஸ்ரீரங்கத்திலிருந்து தினம் கல்லூரிக்குச் செல்வேன். அப்போது ஏழைப் பிராமணர்களை எல்லாம் கிறிஸ்தவர்களாக்கிவிடுகிறார்கள் என்கிற வதந்தி பரவியிருந்தது.

அம்மா மண்டபம் ரோட்டில் ஒரு ஆசிரமத்தில்தான் அது நிகழ்கிறது என்று நாங்களெல்லாம் சாயங்காலம் இருட்டினதும் அந்த வழியே கோட்டைக்குப் போக மாட்டோம். திருவானைக்காவல் வழியாகச் சுற்றிக் கொண்டுதான் செல்வோம்.

கல்லூரியில் மாணவர் திறமைகளின் கண்காட்சி வைத்தார்கள். சில கார்ட்டூன்கள் வரைந்தேன். அதைப் பார்த்து ஃபாதர் செக்வைரா, 'நன்றாக வரைகிறாய். என்னை ஃபாதர்ஸ் லாட்ஜில் சாயங்காலம் வந்து பார். மேற்கொண்டு சித்திரப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்' என்றார். இதை நான் பெருமையுடன் பாட்டியிடம் சொன்னபோது, 'நீ மட்டும் அங்கே போனே, விறகுக்கட்டையாலேயே வீறிடுவேன்' என்றாள்.

'ஏன் பாட்டி, என் திறமையைச் சிலாகித்து ஒருவர் அழைக்கிறபோது போனால் என்ன?' என்று கேட்டதற்கு, 'பைத்தியக்காரா... உன் படத்தைப் பத்திப் பேசறதுக்குக் கூப்பிடலை. உன்னைக் கிறிஸ்தவனா மாத்தறதுக்குத் தான் கூப்பிடறா' என்றாள். அவளுடைய எளிய லாஜிக்கில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார், அய்யங்கார் பையனை அழைத்தால் மதமாற்றம்தான்.

விறகுக் கட்டைக்குப் பயந்து நான் போகவில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு சித்திரக்காரனை இழந்தது.

இரண்டு சிறுகவிதைகள் (ஒன்று சற்றே திருத்தப்பட்டது)...

பெண்ணின் திருமண வயது 21
அழகான பெண்ணுக்கு
மட்டும்.

புதிய வீடு
சினேக தூதன்
குழந்தை

- வானவன்

Sunday, March 23, 2003

 

எப்படி வந்தது இத்தனை வெறுப்பு?


இந்தப் பகுதியில் வரும் விஷயங்களைப் பாராட்டி எழுதுகிறார்களோ இல்லையோ ஏதாவது தவறு, அச்சுப்பிழை நிகழ்ந்துவிட்டால் உடனே அதிகாலையில் என்னை எப்படியாவது இல்லிலோ, செல்லிலோ பிடித்து சுட்டிக்காட்ட அன்பர்கள் தவறுவதில்லை. இதில் என்ன சுகம் என்றால், மற்ற சமயங்களில் எழுதவே எழுதாத அறிஞர்களும் புரொபசர்களும் என்னுடன் தொடர்புகொள்வது இந்தத் தருணங்களில்தான். அவர்கள் எல்லாம் இந்தப் பகுதியை குற்றம்கண்டுபிடிக்கவாவது படித்து வருகிறார்கள் என்பது எனக்குப் பெருமையே.

உதாரணமாக 9.3.2003 இதழில் big bang பற்றி மாய்ந்து மாய்ந்து விவரித்திருந்தேன். அதை யாரும் கவனிக்கவில்லை. அதில் cosmic constant என்பதற்குப் பதில் cosmetic constant என்று தப்பாக வந்திருந்தது இதழ் வெளிவந்த உடனே போன் கால்கள்!

மெரீனாவில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச். மெகா மகா டி.வி. திரைமுன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி டெண்டுல் கரின் ஒவ்வொரு ரன்னையும் கை தட்டி வரவேற்ற போது கடற்காற்றில் மின்சாரம் பரவியிருப்பதை உணர முடிந்தது. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் கிரிக்கெட் ஆட்டமில்லை... யுத்தம். நம் அணி வோர்ல்டு கப் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை... பாகிஸ்தானை ஜெயித்துவிட் டோம். வாஜ்பாய் வாழ்த்து அனுப்புகிறார். ஜெனரல் விஜ் தந்தி அடிக்கிறார்!

எப்படி வந்தது இத்தனை வெறுப்பு? பொதுவாகவே நம் நாட்டில் தற்போது நிலவும் ஹிந்துத்வ அலையும் ஒரு காரணமா, கார்கில் ஒரு காரணமா, தீவிரவாதம் ஒரு காரணமா? பாகிஸ்தானை ஏன் இந்த அளவுக்கு வெறுக்கத் துவங்கிவிட் டோம்? அந்த வெறுப்புக்கு ஒரு முக்கிய காரணத்தை நாம் எல்லோரும் மறக்கிறோம். காஷ்மீர் பற்றி நமக்கு இருக்கும் லேசான குற்ற உணர்ச்சி என்று சொல்ல வேண்டும். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள 1947-க்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் தெரிய வேண்டும். வல்லபாய் படேல், கையாலாகாத இந்து ராஜா, முஸ்லிம் பிரஜைகள், அவசரப் போர் போன்ற சரித்திர நிகழ்வு களை உணர்ச்சிவசப் படாமல் பார்க்கவேண்டும். அதற்குக் காலம் கடந்துவிட்டது. வோர்ல்டு கப்பில் சூப்பர் சிக்ஸில் வந்துவிட் டோம். தொடர்ந்து கென்யாவையும் ஸ்ரீலங்காவையும் ஜெயித்து செமி ஃபைனல் சுற்றிலும் நுழைந்து விட்டோம். செமி ஃபைனல் ஆட்டம் பைத்தியக்கார ஆட்டமாகிவிடும். தென் ஆப்ரிக்காவில் இரவு பகல் மேட்ச்சில் துரத்துவது மிகமிக கடினம். டாஸ் ஜெயிக்கவும் இறுதி ஆட்டத்தில் நுழையவும் இந்த முறை கோ-ஆபரேட்டிவ் பாங்க் அனுமாருக்கும் மந்த்ரா பேடிக்கும் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

''எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் பதினைந்து நிமிஷம் உலகப் புகழ் பெறுவார்கள்'' என்று ஆண்டி வார்ஹோல் Andy Warhol சொன்னது நம் எல்லோருக்கும் பொருந்தும். 'பதினைந்து நிமிஷம்' புகழின் வெளிச்சத்தில் இருந்ததும் மறக்கப்படு கிறவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துப் பாருங்கள். ஹர்ஷத் மேத்தா என்று ஒருவர் இந்திய தேசத்தையே கலக்கினாரே.. பல பெரிய மனிதர்கள் பதவி இழக்கவும் ராஜினாமா கொடுக்கவும் ஜெயிலுக்குப் போகவும் காரணமாக இருந்து அவரும் ஜெயிலுக்குப் போனாரே, அவர் என்ன ஆனார்?

பாப் பாடகர்கள், சினிமா, அரசியல் நட்சத்திரங்கள், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் பதினைந்து நிமிஷம்தான். அதற்குள் அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு, பாட வேண்டியதைப் பாடிவிட்டு, ஆட வேண்டியதை ஆடிவிட்டு ஓட வேண்டும். போ போ... இடத்தைக் காலி பண்ணு. இன்னும் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்! பதினைந்து நிமிஷம்தான் புகழ்!

இந்த மறக்க முடியாத பொன்மொழி யைச் சொன்ன ஆண்டி வார்ஹோல் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பிட்ஸ்பர்க்கில் பிறந்தவர். சின்ன வயசில் பல அதிர்ச்சிகளுக்கு உள்ளானாலும் அவருடைய சித்திரத் திறமை கவனிக்கப்பட்டது. கார்னிஜி பல்கலைக்கழகத்தில் நுண்கலை பயின்றார். நியூயார்க் நகரத்தில் 'க்ளேமர்' என்னும் பத்திரிகையில் சித்திரக்காரராகச் சேர்ந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகச்சிறந்த விளம்பரச் சித்திரக்கார ராகத் திகழ்ந்தார். நிறைய சம்பாதித்தார். நிறைய பேசுவார். பலசமயம் அவருடைய புத்திசாலித்தனமே அவரது முன்னேற்றத்துக்கு குறுக்கே நின்றதாகக் கருதுவார்கள். தன் திறமையின் சிறையில் அடைபடாமல் இயல்பாக சித்திரங்கள் படைக்கவே விரும்பினார். பாப் ஆர்ட் என்னும் புதிய சித்திரக்கலையின் தந்தை அவர். தினவாழ்வில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்ட 32 காம்பெல் சூப் டின்களையும் கோகோ கோலா பாட்டில்களையும் வைத்து சித்திரங்கள் வரைந்தார். செ குவேரா, எலிசபெத் டெய்லர், மர்லின் மன்றோ போன்றவர்களின் சித்திரங்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு வண்ணங்களில் வரைந்தார். முதலில் இதை ஏதோ வீம்புக்காக செய்கிறார் என்று நினைத்த விமரிசகர்கள் இவருடைய சித்திரங்களில் புதுப்புது உள் அர்த்தங்களைக் கண்டுபிடிக்கத் துவங்க... அவருடைய சாதாரணப் பொருள்களின் அசாதாரண சித்திரங்கள் பல கண்காட்சிகளில் இடம்பெற்றன. Image overload என்கிற சங்கதியை அவை வலியுறுத்துகின்றன. 'தினவாழ்க்கையில் நம்மேல் தொலைக்காட்சியாலும் பத்திரிகைகளாலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் பிம்பங்களை நம்பாதீர்கள்' என்று அவர் சுட்டிக்காட்ட விரும்பினார்.

அதோடு அவர் நிற்கவில்லை. அடுத்த கட்டமாக கார் விபத்து, விமான விபத்து, மரண தண்டனை தரும் மின்சார நாற்காலி இவற்றை உண்மையாகப் படம் பிடித்து 'வரைய' ஆரம்பித்தார். இவையும் பிரசித்தி பெற்றன. நாளடைவில் அவர் தும்மி னாலும் அந்தச் சிதறலைச் சித்திமாகக் கொள்ள விமரிசிகர்கள் தயாரானார் கள். எல்லோரையும் ஏமாற்று கிறாரோ என்று அவர்கள் யோசிக்க வில்லை. 'இவ்வாறு ஏமாறுவதே நவீன வாழ்வின் அங்கம்... அதைத் தான் சித்திரிக்கிறார்' என்று சொன்னார்கள். அவரது ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையும் அன்றாட அற்பமான பொருள்களைச் சித்திரங் களாக வரைவதும் கலை உலகில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தன. 'நான் இந்த மாதிரி வரைவதற்குக் காரணம் நான் ஒரு மெஷினாக இருக்க விரும்புவதே' என்றார் வார்ஹோல். அதன்பின் ஒரு மாதிரியான திரைப்படங்கள் எடுத்தார். அதில் நடித்த ஒரு சூப்பர் ஸ்டாரால் துப்பாக்கி சுடப்பட்டு மரணத்துக்கு அருகே சென்று அதையும் பார்த்தார். அந்தக் காயத்தை அழகாக போட்டோ எடுக்கச் சொல்லி ஃப்ரேம் போட்டு விற்றார். Exploding Plastic Invisible என்று ஒரு நைட்கிளப் துவங்கினார். அதில் வாசித்த 'காலக்ஸி' என்னும் சங்கீதக்குழு ராக் உலகத்தில் மிகப் பிரபலமாயிற்று.

வார்ஹோல் தன் கால சமூகத்தின் போக்கையே மாற்றி அமைத்தார். குழந்தைகளுக்கு ஹீலியம் பலூன் களிலிருந்து ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி அணியும் 'ஜெண்டர் பெண்டர்' வகை ஆடைகளை எல்லாம் அவர் பிரபலப்படுத்தினார் வருஷா வருஷம் தலைமயிரின் நிறத்தை, நீளத்தை மாற்றி னார். தோற்றத்தை மாற்றிக் கொண்டார் நாளடைவில் அவரைப் புரிந்துகொள்வதே கஷ்டமாகியது ஒருவிதமான கிறுக்குத்தனமும் எதிர்பாராத்தன்மையும் அவரிடம் இருந்தன.

அவர் காலத்தில் கலை உலகிலும் ஃபேஷன் உலகிலும் மிக முக்கியமான சித்திரக்காரர் என்று அவரைச் சொல்ல லாம்.

'என் சித்திரங்களும் திரைப்படங்களும் போதும் உங்களுக்கு. அதன் பின்னால் நான் என்று எதுவுமே கிடையாது' என்றார். இந்த நூற்றாண்டில் நம்மை வந்து தாக்கும் ஆயிரக்கணக்கான பிம்பங்களின் மத்தியில் பைத்தியம் பிடிக்காமல் இருக்க வார்ஹோலின் சித்திரங்கள் உதவும்.

நிச்சயமாகப் பதினைந்து நிமிடத்துக்குமேல் புகழுடன் தொடர்ந்து வசித்து தன் ஐம்பத்தெட்டு வயதில் 1987-ல் இறந்துபோனார் வார்ஹோல்.

இவ்வார சிறு கவிதை;

கழுதைக்குத் தெரியுமா
கற்பூர வாசனை என்று கேட்கிறார்கள்

கழுதைக்குத் தேவைதானா
கற்பூர வாசனை?

- ஜெயபாஸ்கரன்

Sunday, March 16, 2003

 

விளிம்பு மனிதர்கள்!


'Dead Man Walking' திரைப்படத்தை டி.வி-யிலும் கீஸ்லாவ்ஸ்கியின் 'டெக்கலாக்' கதைகளில் 'Thou shalt not kill' என்பதை (திருட்டு அல்லாத) சி.டி-யிலும் சமீபத்தில் பார்த்தேன். இரண்டும் மரண தண்டனைக்கு எதிரான மிக வலுவான திரைச்சித்திரங்கள். உயிருக்கு உயிர் வாங்குவது காட்டுமிராண்டிக் குணங்களின் மிச்சம் என்று தற்போது தயக்கத்துடன் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மிக மோசமான கொலையாளிக்குக்கூட வளர்ப்பிலும் வாழ்விலும் ஏற்பட்ட ஏதோ அநியாயம்தான் காரணம் என்கிறார்கள். பல நாட்களாக எனக்கு இம்மாதிரியான விளிம்பு மனிதர் களைச் சந்தித்து, அவர்கள் நியாயத்தை எழுத வேண்டும் என்று ஓர் ஆசை இருந்தது.

ஒருமுறை ஜெயப்ரகாஷ், மற்`றாரு முறை ஆட்டோ சங்கர் போன்றவர்களைப் பேட்டி காணவும் ஏற்பாடு செய்துவிட்டேன். யோசித்துப் பார்த்ததில் இந்தச் செயலில் நேர்மை எனக்குப் போதவில்லை. ஒருவிதமான பரபரப் புக்காகத்தான் இதை நான் விரும்புகிறேனோ என்று தோன்றிவிட்டதால், அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

பெங்களூரில் வசித்து வந்தபோது, 'சி.பி.ஐ.' கார்த்திகேயன் என்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு அழைத்துச் சென்று சூபரின் டெண்டெண்டைச் சந்தித்துப் பேசவும், கைதிகளைப் பேட்டி காணவும் ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருக்கும் பண்டமாற்றுகளும் கைதிகளுக்கும் வார்டர்களுக்கும் உள்ள விநோத நட்பும் சமன்பாடுகளும் தான் என் கண்ணில் பட்டன.

அழகான மலர்ச்செடிகள், சுத்தமான வளாகச் சூழல் என்று கிரண் பேடிக்கு முன்னாலேயே, நிறைய விஷயங்களை அந்த சூபரின் டெண்டெண்ட் ஓசைப்படாமல் சாதித்திருந்தார். அறையில் டீ கொண்டு கொடுத்தவன், ஒரு சுதந்திரத் தியாகி போலத் தோற்றமளித்தான். அவன் ஓர் ஆயுள் கைதி. அவனை அழைத்து முதுகில் தட்டி, 'எத்தனை கொலைடா செய்திருக்கே?' என்று கேட்டார். அவன் சற்று வெட்கத்துடன், 'ஐது புத்தி (அஞ்சு அய்யா); ஒருத்தன் தப்பிச்சுட்டான்' என்றான். நான் நாற்காலியை சூபரின்டெண்டெண்ட் அருகில் சற்று நகர்த்திப்போட்டு உட்கார்ந்தேன்.

அந்தச் சிறை அனுபவம் எனக்குப் பலவிதத்தில் கண் திறப்பாக இருந்தது. ஜெயிலில் இருந்து கைதிகள் தப்பிப்பது பற்றிக் கேட்டேன். சூபரின்டெண்டெண்ட் (அவர் ஒரு சிந்திக்காரர்) 'சினிமா, நாவல்களில் வருவதுபோல் ஜெயிலில் இருந்து தப்பிப்பது ஏதும் பரபரப்பான விஷயமல்ல. கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது கவனக்குறைவாக இருந்தால் தப்பி ஓடிவிடுவார்கள்!'

'அவர்களை எப்படிப் பிடிப்பீர்கள்?'

'சுலபம்... அவன் எங்கே போவான்? சொந்த ஊருக்கு... மனைவியையோ, குழந்தைகளையோ பார்க்கத்தான் போவான். இல்லை... ஏதாவது சிநேகிதியை, சிநேகிதனைச் சந்திக்கச் செல்வான். அங்கே முன்பே சென்று காத்திருந்து அமுக்கிப் போடுவோம்' என்றார். 'குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதில் deterrant effect எதுவுமே இல்லை' என்றார். 'இதனால் குற்றங்கள் அதிகமாகின்றனவே தவிர குறைவதில்லை, குற்றவாளிகள் அனைவரும் வெளியில் இருக்கிறார்கள்' என்றார்.

அந்தக் கருத்தை வைத்துக் கொண்டு 'இருள் வரும் நேரம்' என்கிற நாவல் எழுத முடிந்தது. அதனால் விளிம்பு மனிதர்களைப் பேட்டி கண்டு எழுதவேண்டியது எழுத்தாளனல்ல, நல்ல நிருபர் என்று நினைக்கிறேன். 'In Cold Blood' என்ற நாவலில் ஓர் இளம்பெண்ணைக் கொன்றவனை, அவனுடனே தொடர்ந்து ஒட்டிக் கொண்டு சென்று பார்த்ததுபோல எழுதியிருந்தார் எழுத்தாளர் Truman Capote. அதில் எழுத்தாளரின் சாமர்த்தியம்தான் தெரிந்தது. மாறாக, சார்லி மேன்சனைப் பற்றிய Helter Skelter என்கிற நிருபர் புத்தகம், நிஜமாகவே நெஞ்சைக் கலக்கியது.

மரணத்துக்கு மரணம் சரியான தண்டனை இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஓர் ஆளைத் தூக்கில் போடுவதாலோ, மின்சாரம் கொடுத்துச் சாகடிப்பதாலோ விஷஊசி போடுவதாலோ அவன் நிமிஷத்தில் இறந்து போய்விடுகிறான். ஆயுள்தண்டனை பெற்று, வருஷக்கணக்காக அவன் தன் குற்றத்தை எண்ணி மருகுவதுதான் பெரிய தண்டனை என்பேன். 1996-ல் இறந்துபோன டோனி பார்க்கர் என்கிற பிரிட்டிஷ் பத்திரிகையாளர், இதுபோன்ற மனிதர்களைப் பேட்டி கண்டு அவர்கள் சரித்திரத்தைப் பல புத்தகங்களில் பதிவு செய்தார். எந்த விதத்திலும் குற்றங்களை நியாயப்படுத்தவில்லை. பெரும்பாலானவர்கள் சிறையில் இருக்கவேண்டியவர்கள் தான் என்று சொன்னார். 'கிரிமினா லிட்டி என்னும் குற்றத்தன்மை அழியவே அழியாது. அதுமனித இயற்கைகளில் ஒன்று!' என்றார்.

ராபர்ட் ஆலெர்ரான் என்கிற, எவ்விதத்திலும் திருந்தாத, திருட்டுக் கொள்ளைக்காரனைப் பேட்டி கண்ட போது, 'என் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதியை ஜெயிலில் கழிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மற்ற இரண்டு பகுதியை என் போக்கில் திருட விட்டுவிட்டால் போதும்' என்றானாம். பார்க்கரின் புத்தகங்களில் அவர் எந்த வாதத்தையும் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதவில்லை. குற்றவாளிகள் சொன்னதை அப்படியே படம்பிடித்துக் காட்டத்தான் விரும்பினார். அரிதான சமயங்களில் கொஞ்சம் பாரபட்சம் தெரிந்தது. மைக்கல் டேவிஸ் என்பவன் தூக்குத் தண்டனைக்கு எதிராக அப்பீல் போட்டுக் காத்திருந்த 95 நாட்களில் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒத்திப்போடப்பட்ட கொடுமையை விவரிக்கும்போது, 'இது தூக்கிலிடுவதைவிடப் பெரிய தண்டனை' என்கிறார் பார்க்கர்.

பெரும்பாலான குற்றங்கள் ஒரு கணத்தில் ஏற்படும் மூர்க்கத்தினால் தான் நிகழ்கின்றன என்பது பார்க்கரின் புத்தகங்களில் தெரிகிறது.

'மனோதத்துவ முயற்சிகளிலாவது கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம். மதத்தினால் எந்தப் பயனும் இல்லை' என்றார் பார்க்கர். 'எனக்கு இந்த உலகத்தையே இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை அடுத்த உலகத்தைப் பற்றி நான் எப்படிக் கவலைப் படமுடியும்?'

வீரமாமுனிவரின் 'பரமார்த்த குரு கதை'யை மீண்டும் படித்தபோது சில புது விஷயங்கள் தெரிந்தன. வீரமா முனிவர் என்ற பெயர் எடுத்துக் கொண்ட இத்தாலிய ஜெசுவிட் பாதிரி யார் பெஸ்கி, 1700-ல் போப்பாண்டவரால் நியமிக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்துக்கு முதலில் கோவாவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திருச்சியில் ஆவூருக்கு வந்தார். முதல் காரியமாகத் தமிழ் பயின்றார். உடன் தெலுங்கு, சம்ஸ்கிருதம், இந்துஸ்தானி, பெர்ஷியன் போன்ற மொழிகளும் பயின்றார். திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பின் நம்பிக்கைக்குரிய திவானாக இருந்தார். அரியலூர் வடுகப்பேட்டைக்குத் திருக்காவலூர் என்று பெயர் வைத்து, அங்கே ஒரு சர்ச் நிறுவினார். திருக்காவலூர் கலம்பகம், அன்னை அந்தாதி, அடைக்கலமாலை போன்ற சிறுநூல்கள் செய்தார், 'வேதியர் ஒழுக்கம்' 'வேத விளக்கம்' போன்ற உரைநடை நூல்கள் எழுதினார். தமிழ்- பிரெஞ்சு, தமிழ்-போர்த்துகீசிய, தமிழ்- லத்தீன் அகராதிகளுடன் தமிழ்- தமிழில் சதுரகராதியும் செய்தார். இந்தியா வந்ததிலிருந்து சைவ உணவைக் கடைப்பிடித்தார். தமிழில் அவரது தேம்பாவணியும் சதுரகராதி யும் முக்கியமான நூல்கள். தேம்பா வணி 3615 விருத்தப்பாக்கள்கொண் டது. மேரி, ஜோசப், குழந்தை இயேசுவைப் போற்றும் காவியத்தன்மை பெற்ற நூல் அது.

பெஸ்கி பாதிரியார் மதமாற்றத் திலும் அதிகத் திறமை படைத்தவராக இருந்தார். இந்துக் கருத்துக்களை ஆழமாகப் படித்து, அவற்றில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டுவதில் வல்லமை படைத்திருந்தார். அவர் மாற்றாகக் கொடுத்த நம்பிக்கைகளிலும் அபத்தங்கள் இருந்தன. ஆனால், வீரமாமுனிவர், மதமாற்றத்தின் வெற்றிக்கு ஆதார விதிகளை அமைத்தவர் என்று சொல்லலாம். அது - இந்து மதத்தை முழுவதும் அறிந்துகொள்வது, உள்ளூர் மொழியை - பேச்சு மொழியை, இலக்கிய மொழியையும் முழுமையாகக் கற்பது, குறைபாடுகளை மிகையாக எடுத்துச் சொல்வது, விவாதங்களில் எளிமையாக வெல்வது.

வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதையை நீங்கள் படித்திருக்கலாம். பரமார்த்த குருவும் அவருடைய ஆறு முட்டாள் சீடர்களும் செய்யும் வேடிக்கையான காரியங்களில் வீரமா முனிவர் இந்து மடாதிபதிகளை மறைமுகமாகச் கேலிசெய்தார். குருவும் சிஷ்யர்களும் ஆற்றைக் கடந்த கதையை இன்றைய வாசிப்பில் ஒரு ஜென் கதையாகக்கூடப் பார்க்க முடியும். ஆற்றில் ஒரு சிஷ்யன் எரியும் கொள்ளிக் கட்டையை முக்கிப் பார்த்து அது சீறுவதைக் கேட்டு, 'ஆறு இன்னமும் கோபத்தில் இருக்கிறது' என்று சொல்வதும், அதன்பின் அந்த நனைந்த கொள்ளியையே மறுபடி வைத்துப் பார்த்துக் 'கோபம் தணிந்து விட்டது' என்று கூறுவதும் இன்றைய வாசிப்பில் Magic Realism என்பதில் சேர்க்கலாம். ஆற்றைக் கடந்தபின் சிஷ்யர்கள் எல்லாரும் பத்திரமாக வந்துவிட்டோமா என்று எண்ணிப் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் தன்னை விட்டுவிட்டு எண்ணுவதால், ஒரு ஆள் குறைகிறான் என்று பீதியடையும் கதையை வீரமாமுனிவர் The Merry Tales of Ten Wise Men of Gotham என்பதிலிருந்து தட்டியிருக்கிறார்.

இந்த வாரக் கவிதை (எப்போதும் ஆழ்வார் பாடல்களையே உதாரணம் காட்டுகிறீர்களே... வேறு தெரியாதா என்று கேட்டவருக்காக):

கங்கை ஆடில்என் காவிரி ஆடில்என்
கொங்குதண் குமரித்துறை ஆடில்என்
ஒங்குமாகடல் ஓதநீர் ஆடில்என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு
இல்லையே...

- திருநாவுக்கரசர்

Sunday, March 09, 2003

 

ஒரு மகா வெடிப்பு!


செய்தித்தாளைக் காலை வேளையில் மேம்போக்காகத்தான் மேய்வேன். எனக்கென் னவோ எல்லா நாளும் ஒரே செய்தித்தாளைத்தான் படிப்பதாகத் தோன்றுகிறது. 'ஹிந்து'வில் தினம் மாறும் செய்திகள் ஸ்போர்ட்ஸ் பக்க ஓரத்தில் ஆபிச்சுவரியில் நீத்தார் பெயர்களும், திடீர் என்று அதிர்ச்சி தரும் கல்பனா சாவ்லா - கொலம்பியா விபத்துகளும்தான். மற்றபடி பி.ஜே.பி-யின் இந்துத்வா பிரகடனங்களும், இந்தியா உலகக் கோப்பையில் மோசமாக ஆடுவதும், அத்வானியின் வீட்டில் கரப்பான்பூச்சிக்குகூட பாகிஸ்தானைக் குற்றம்சாட்டுவதும், ஜெய முதல்வரின் அரசு சாதனைப் பேச்சுகளும், மேற்கு மாம்பலத்தில் மாத்வாச்சாரியார் பற்றிய உபன்யாசங்களும் நேற்றும் இன்றும் நாளையும் மாற்றமின்றித் தோற்றமளித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் பிப்ரவரி 13-ம் தேதியில் ஒரு முழுப்பக்க விளம்பரமும், செய்தியும் கவனத்தை ஈர்த்து முழுவதும் படிக்கத் தூண்டின.

அவை தல்ச்சேர் - கோலாருக்கு இடையேயான 500 கிலோ வோல்ட் டி.சி. மின்சார இணைப்பு பற்றிய சர்க்கார் விளம்பரமும், Map Confirms Big Bang Theory என்கிற செய்தியும்தான்.

டி.சி. நேர்மின்சார உற்பத்தி ரொம்ப வருஷங்களுக்கு முன் கைவிடப்பட்ட கேஸ். சாதாரணமாக நெடுந்தூரம் கொண்டு செல்வதற்கு ஏ.சி. மின்சாரத்தைத்தான் பயன்படுத்துவார்கள். டி.சி-யாக அதை மாற்றி அனுப்பி போய்ச் சேருமிடத்தில் மறுபடி ஏ.சி-யாக மாற்றுவது நவீன வழக்கு. இதில் கடத்தல் நஷ்டங்கள் ஒரு நாலு சதவிகிதம் குறையும். 2000 மெகாவாட்டை எடுத்துக் கொண்டால் இது பெரிசு. டி.சி-யாக மாற்றி அனுப்பும் செலவை நியாயப்படுத்துகிறது.

மேலும் வழியில் ஒரு நதியின் குறுக்கே கடக்க அமைத்த டிரான்ஸ்மிஷன் டவர் குதுப்மினாரை விட உயரம் என்பதும் ஒரிஸ்ஸாவில் உற்பத்தியாகும் மின்சாரம் தென் மாநிலங்கள் அனைத்திலும் விநியோகமாகும் என்பதும் தேசிய அளவில் முக்கியமான விஷயம்.

இரண்டாவது செய்தியின் முக்கியத்துவத்தை அறிய bigbang பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

விஞ்ஞானிகள், பிரபஞ்சம் ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ ஒரு கடல்மந்தனத்திலோ படைக்கப்பட்டது என்னும் மத நம்பிக்கைகளை நிராகரிக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரபஞ்சத்தின் துவக்கத்தைப் பற்றிச் சொல்வது ஓர் அற்புதச் செயல் போலத்தான் தோன்றுகிறது. ஒரு கணத்தில் உருவானது என்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ள நம் சம்பிரதாயச் சிந்தனை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிக்பாங் - BigBang என்னும் இந்தப் பெயர் Fred Hoyle தமாஷாக வைத்தது நிலைத்து விட்டது. இந்த சித்தாந்தத்தின்படி இன்றைக்கு சற்றேறக்குறைய 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் (20 கோடி முன்னே பின்னே இருக்கலாம்) முழுப் பிரபஞ்சமே ஒரு கணத்தில் அதன் அத்தனை சக்திகளும் அடங்கிய பரிமாணமற்ற புள்ளியாக இருந்தது. அளவிலா சக்தி, அளவிலா உஷ்ணம், பரிமாணமற்ற புள்ளியிலும் புள்ளி. இதை நீங்கள் புரிந்து கொண்டுவிட் டால் மற்றவையாவும் நலமே.

அந்தக் கணத்துக்கு முன் என்ன என்று கேட்கக்கூடாது. தப்பாட்டம். எதுவுமே இல்லை. இல்லையும் இல்லை. காலம் இல்லை, தூரமில்லை ஒன்று மில்லையிலிருந்து எல்லாம் இருக்கும் நிலைக்கு ஒரு கணத்தில் ஒரு மகாமகா வெடிப்பாகப் புறப்பட்டது. அதன்பின் நடந்த நிகழ்ச்சி நிரலை இன்று வரை துல்லியமாகச் சொல்கிறார்கள். அந்த ஒருமித்த கணத்தின் வெடிப்புக்குப் பிறகுதான் காலமும் தூரமும் உண்டாயின. ஒரு செகண்டில் மெள்ள மெள்ள விரிந்து விரிந்து உஷ்ணம் குறைந்து துகள்கள், தனிமங்கள், பொருள்கள் என்று படிப்படியாக உருவாயின.

இந்த சித்தாந்தத்தை நம்புவதற்கான ஆதார சாட்சியங்கள் எவை? யாராவது அந்த முதல் கணத்தைப் பார்த்தார்களா? இல்லை. பிரபஞ்சம் அம்பது வயசான மனிதன் என்றால், அவன் சின்னக் குழந்தையாக இருந்தபோது, பிறந்த பன்னிரண்டு மணி நேரத்தில் அவனது எடை என்ன என்று கண்டு பிடித்ததற்கு ஈடான சாட்சியம் தான் இப்போதைய கண்டுபிடிப்பு வில்கின்சன் மைக்ரோவேவ் அன்ஐஸோட்ராப்பி ப்ரோப் (Wilkinson Microwave Anisotropy Probe) என்பதன் மூலம் கண்டுள்ளார்கள். பயப்படாதீர்கள். பதம் பிரித்துச் சொல்கிறேன். வில்கின்சன் என்பது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரபஞ்ச வியலாளர் காஸ்மாலாஜிஸ்ட்டின் பெயர். அவர் இந்தப் பரிசோதனையின் காரணகர்த்தா. சென்ற செப்டம்பர் மாதம் இறந்து போனார். அவருக்கு மரியாதையாக நாசா அனுப்பிய பரிசோதனை மேடைக்கு wmap என்று பெயரிட்டார்கள்.

மைக்ரோவேவ் எங்கிருந்து வருகிறது - பிரபஞ்சத்தின் முதல் கண வெடிப்புக்குப் பின் நடந்தது இதுதான். மெள்ள மெள்ள அதன் உஷ்ணம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. ஆரம்பித்த கணத்தின் ஒன்றின்கீழ் பத்து கோடி கோடி கோடி கோடி கோடி கோடி (ஆறு முறை) பிரிவில் முதல் துகள்கள் உண்டாயின. இவை ஃபோட்டான், க்வார்க் போன்ற லேசான துகள்கள். இதன்பின் பிரபஞ்சத்துக்கு ஒரு செகண்டு வயசாகும்போது அதன் உஷ்ணம் ஆயிரம் கோடி டிகிரியாக 'குளிர்ந்து'விட்டது. ந்யுட்ரினோ, ப்ரொட்டான்கள் ந்யுட்ரான் போன்ற கனமான துகள்கள் உண்டாயின. ட்யுட்டிரியம், ஹீலியம், லித்தியம், பெரிலியம் போன்ற தனிமங்கள் உண்டாயின. பின்னர் பத்து லட்சம் ஆண்டுகள் கழித்து மற்ற தனிமங்கள் உண்டாயின. அதன் பிறகு நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கிரகங்கள், நீங்கள், நாங்கள்...

என்னதான் கணக்கிட்டாலும் பிரபஞ்சத்தின் நாலு சதவிகிதம்தான் பருப்பொருள். மற்றது 23 சதவிகிதம். 73 சதவிகிதம் கரிய சக்தியாக பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கிறது. இதைப் பற்றிய அறிவு கொஞ்சமே. அவற்றின் தேடலில், முதல் செகண்டில் தோன்றியிருக்க வேண்டிய ந்யுட்ரினோக்களும் அவற்றின் எதிர்துகள்களும் என்ன ஆச்சு என்று கணக்கு வரவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவை இன்றைய தேதிக்கு மிகக் குளிர்ந்து சுமார் 2.7 டிகிரி கெல்வின் உஷ்ணமாக பிரபஞ்சத்தில் எங்கு நோக்கினாலும் பரவியிருக்க வேண்டும் என்று தெரிந்தது. 1965-ல் பெல் டெலிபோன் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் வில்சன் இருவரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கும்போது இந்தப் பரவலான உஷ்ணம் எங்கும் விரவி மைக்ரோவேவ் அலை வரிசையில் இருப்பதைத் தற்செயலாகக் கண்டறிந்தார்கள். இதுதான் 'பிக்பாங்' சித்தாந்தத் துக்கு நேரடியாகக் கிடைத்த ஆதாரம். அவ்விருவருக்கும் நோபல் பரிசு கிடைத்து, அவர் கள் தொடங்கியதை படிப்படியாக துல்லியமாக்கி வருகிறார்கள். அந்த முயற்சியில் அனுப்பி வைத்த பரிசோதனை மேடை தான் WMAP. அன்ஐஸோட் ராப்பி ப்ரோப் என்றால் சமச்சீர் வித்தியாசங்களை அளக்கும் கருவி. ஜ$ன் 2001-ல் அனுப்பி வைத்து பூமியிலிருந்து பத்து லட்சம் மைல் தூரத்தில் வட்டமாகச் சுற்றி வரும் இந்த ஆராய்ச்சி மேடைக்கு நாலரைக் கோடி டாலர் செலவழித்திருக் கிறார்கள். பிரபஞ்சத்தில் விரவிய மைக்ரோ வேவ் அளவை முன்னைவிட 36 மடங்கு நுட்ப மாக அளந்து பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையை ஒரு வரை படமாகக் காட்டியிருக்கிறது . இது தான் பிரபஞ்சத்தின் குழந்தை. போட்டோ அப்படி ஒன்றும் சிம்ரன் போல இல்லைதான்.

ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் ரெட்ஷிஃப்ட் (Red shift) என்னும் டாப்ளர் தத்துவமும் ஹபிளின் (Hubble) விதியும் இவ்வாறு உண்டானதற்கு கூடுதல் சாட்சியங்கள். இவை எதும் மறுக்கப்படாமல் திரும்பத் திரும்ப ஊர்ஜிதமாகியிருக்கின்றன.

ஆகவே மதவாதிகளை நம்பு வதைவிட விஞ்ஞானிகளை நம்பலாம் என்று தோன்றுகிறது. இதற்கெல்லாம் காரணகர்த்தா ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது சார்பியல் தத்துவம்தான். அதன்படி பிரபஞ்சம் சுருங்க வேண்டும் அல்லது விரிய வேண்டும். மாறாமல் சமச்சீராக இருக்க முடியாது. இந்த முடிவு முதலில் ஐன்ஸ்டைனுக்கே தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் அவர் தன் கணக்குகளில் cosmetic constant என்று ஒரு சங்கதியைச் சேர்த்துச் சரிக்கட்ட முயன்றார். பிற்பாடு அது தப்பு என்று அவரே ஒப்புக்கொண்டார். இப்போது Big Bang நிலைபெற்றுவிட்டது.

''ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னோடு
தேவருலகோடு உயிர்படைத்தான்''

என்று நம்மாழ்வார் இதைத் தான் சொன்னாரோ?'

Sunday, March 02, 2003

 

புயல் ராத்திரியில் உங்கள் கனவுக் கன்னி!


நெட்டில் என் மின்னஞ்சல் விலாசத்தை மாற்றியதும் குப்பை குறைந்திருக்கிறது. இருந்தும் அவ்வப்போது Wetpussy என்று கெட்ட காரிய பொம்மைகளுடன் வந்து, கிரெடிட் கார்டு கேட்டுத் திருட்டுத்தனமாக நுழைந்துவிடுகின்றனர். உடனே உடனே அவற்றை அழித்து, Hotmail-க்கும் அறிவித்துவிடுகிறேன்.

சில சுவாரஸ்யமான - சாமர்த்தியமான கடிதங்களும் வருவதுண்டு. இது, எஸ்.ஏ. உதயகுமார் 'think outside the box' என்கிற தலைப்பில் அனுப்பியது.

ஒரு நாள் புயல் ராத்திரியில் காரில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள். ஒரு பேருந்து நிறுத்தத்தில் மூன்று பேரைப் பார்க்கிறீர்கள்.

1. சாகும்தறுவாயில் இருப்பது போன்ற ஒரு மூதாட்டி.

2. உங்களை ஒரு முறை உயிர்காத்த பழைய நண்பன்.

3. நீங்கள் கனவு கண்டுகொண்டிருந்த ஆதர்சப் பெண் (அல்லது ஆண்).

யாருக்கு நீங்கள் லிஃப்ட் கொடுப்பீர்கள்? ஒருவருக்குத்தான் காரில் இடம் இருக்கிறது.

இதை ஒரு முறை வேலைக்கு இன்டர்வியூவில் கேட்டார்களாம். யோசித்துப் பாருங்கள். மூதாட்டியை ஏற்றிக்கொண்டால் உங்கள் நண்பனுக்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள். மேலும் உங்கள் கனவுக்கன்னியையோ கன்னனையோ இனி பார்க்கும் வாய்ப்பையும் இழக்கலாம்.

இருநூறு பேரில் ஒருவருக்குத்தான் வேலை கிடைத்தது. அவர் என்ன பதில் தந்தார்? (விடை கடைசியில்).

தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து எனக்குப் புத்தகங்கள் அனுப்புவதை நிறுத்து மாறு நாற்பத்தைந்தாவது முறையாகக் கேட்டுக் கொள்கிறேன். புத்தகங்களை நான் நாடிப் போகவேண்டும். அவை என்னை நாடக் கூடாது என்பதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். எல்லாப் புத்தகங்களிலும் அவற்றின் ஆசிரியர்களின் மெனக்கிடல் இருக்கிறது. இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர எனக்கு அனுப்புவதில் அர்த்தமே இல்லை. என் தேர்ந்தெடுப்புகள் விநோதமானவை. உங்கள் புத்தகங்களை நான் பார்க்க வேண்டும் எனில் அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகளாவது வர அவற்றை பத்திரிகைகளின் புத்தக விமரிசனத்துக்கு அனுப்புங்கள். விமரிசனங்களையோ அல்லது சுருக்கங்களையோ பார்த்துவிட்டு, அது என் ஆர்வத்தைக் கவர்ந்தால் பதிப்பாளர்களுக்கு எழுதி, விகடன் அல்லது அம்பலம் மூலம் அதை நான் பெற்றுக்கொள்ள முடியும். 'கற்றதும் பெற்றதும்'மில் எல்லாப் புத்தகங்களுக்கும் இடம் இல்லை. சிலபேர் டெலிபோன் செய்து கேட்கும்போது 'அனுப்பாதே' என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்ல முடியவில்லை. சென்ற ஒரு வாரத்தில் எனக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தால், என் சங்கடமும் தலைசுற்றலும் உங்களுக்குப் புரியும்.

குளத்தில் மிதக்கும் தீபங்கள், பண்டைய பாரதத்தின் அற்புத ஞானத்துளிகள், உனக்கான செய்தி ஒன்று, தெய்வ வாழ்வுக்கு சில வழிகள், மரங்களுக்காகவும் சில வீடுகள், வள்ளலாரின் மூலிகை மருத்துவம், உலக விளையாட்டரங்கில் தமிழக வீரர்களின் சாதனைகள், குரல்களின் பதிவுகள், என் இனிய கணிப்பொறியே, இந்தியப் பெருநாடே தேடு உன்னுள்ளே, அனுமதி இலவசம், ஒற்றைக்கல் சிற்பம், இக்கரையில், கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், குழந்தைகள் ஊருக்குப் போய்விட் டன, கெட்டிமேளம் கெட்டிமேளம், ஆதியில் சொற்கள் இருந்தன, அறுவடை நாளின் மழை, அம்மாவின் கைரேகை, நில் கேள் வெல், முற்றுப்பெறாத மனு, மகாத்மா காந்தி படைப்புகள் ஒரு சிறப்புத் தொகுப்பு - 5 பாகங்கள் (ஒவ்வொரு பாகமும் ஐந்நூற்று சொச்சம் பக்கங் கள்.)

ஒரு வாரத்தில் இவ்வளவு! நீங்களே யோசனை சொல்லுங்கள். முறையிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய?

பட்டியலில் இல்லாதது இந்த வாரம் நான் விரும்பிப் படித்த ஒரே ஒரு புத்தகம். ஈழத்துக் கவிஞர் சோ. பத்மநாபன் அவர்கள் மொழி பெயர்த்து தொகுத்து, அருமையான முன்னுரையுடன் அளித்திருக்கும் 'ஆப்பிரிக்கக் கவிதை' நூல் சோ.ப-வவே - தெகு ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத கவிஞர், பேச்சாளர், விமரிசகர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை கொக்குவில்லில் ஓய்வுபெற்று வசிப்பவர். நவீன தமிழ் இலக்கியத்தில் இவர் பங்கு கணிசமானது.

தமக்கென்று ஒரு சமூக அமைப்பும் அரசியலும், பொருளாதாரமும், நீதியும், சமய அனுஷ்டானங்களும், மற்றும் சிற்பம், சித்திரம், இசைக்கூத்து எனத் திகழ்ந்த ஆப்பிரிக்க அரசுகள், மேனாட்டார் வருகையால் நிலை குலைந்து விழுந்தன. இயற்கை சார்ந்த கனிமச்செல்வங்களே அவர்களின் சாபக்கேடுகளாயின. சிறுபான்மை வெள்ளையர்களான பெல்ஜியமும் பிரான்ஸ#ம் இங்கிலாந்தும் போர்ச்சுகலும் கூறுபோட... ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் அடையாளங்களை இழந்து விழுந்தன. அவற்றைத் தேடும் முனைப்புகள், இந்தக் கவிதை களில் இழையோடுகின்றன.

''நான் நீயல்ல
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை''

என்கிறார் லைபீரியக் கவிஞர்.

''முந்தைய இரவுகளில் நிலவில் முழங்கி வந்த
தந்தையர் தம் முரசங்கள்தாம் அடங்கிப்
போயினவே
ஓங்கி எரி தணலில் ஒளியில் விடுதலையில்
நாங்கள் களித்தாடும் நடனம் எங்குப்
போனதுவோ''

என்கிறார் செனகால் கவிஞர்.

Translations like women can either be beautiful or faithful என்று மொழிபெயர்ப்பை எச்சரிக் கையுடன் அணுகும் சோ.ப. சில சமயம் மரபுக் கவிதையிலும் மொழிபெயர்த்திருப்பது அவருடைய புலமையையும் திறமையையும் காட்டுகிறது. கீன்யாவைச் சார்ந்த ஆசிய வம்சாவளிக்காரரான ஜக்ஜித்சிங்கின் சங்கடம் வேறு விதமானது -

றெயில் பாதையை அமைக்கச் சிந்திய
வியர்வை உலர்ந்துவிட்டது
பசுமையாய்க் கிடந்த சதுப்புநிலம்
இந்தியக் கடைத்தெருவாய் மலர்ந்ததை
கறுப்புக் குருதி மறந்துவிட்டது
மண் நிற யூதனை
வணிகத்துறையில் உழலுமாறு
சபித்துவிட்டது
அவர்கள் பகைமையோடு
முகஞ்சுளித்தபோது
நாம் சிரித்து மழுப்ப வேண்டியதாயிற்று.

இந்த வார ஹைக்கூ. டைரக்டர் லிங்குசாமி சொன்னது -

'இஸ்திரி போடுபவனின் வயிற்றில் மட்டும் சுருக்கம்.'

விடை: என் பழைய நண்பனிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு, மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லச் சொல்வேன். அழகான பெண்ணுடன் பஸ் வரக் காத்திருப்பேன்.

This page is powered by Blogger. Isn't yours?