Sunday, June 29, 2003

 

செல்போன் வந்ததாம்...சிட்டுக்குருவி போனதாம்!


விசுவின் 'அரட்டை அரங்க'த்தில் ஒரு பெண்மணி, நாம் தவறவிட்ட கனவாக ஒன்று சொன்னார். 'துளு நாடு' தமிழ்நாட்டுடன் சேர விரும்பியதாகவும் அந்த வாய்ப்பை நாம் தவறவிடாமல் இருந்தால், காவிரி நதியே நம்முடையதாகி இருக்கும் என்று போகிறபோக்கில் பேசிவிட்டு, பலத்த கைதட்டல் வாங்கினார்.

இந்த மாதிரி misinformation தொலைக்காட்சி சேனல்களில் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். இது மெள்ள மெள்ளப் பரவி விகாரமடைந்து, வடிவம் மாறி, 'காவிரி நதியே மேம்பாலம் வழி யாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. கர்நாடகாவில் ரூட் மாற்றிவிட்டார்கள்' என்கிற ரேஞ்சுக்குப் போய், தருகிற தண்ணீரையும் அவர்கள் நிறுத்தி விடுவார்கள்.

இதிலுள்ள misinformation என்ன?

துளு என்பது ஒரு மொழி. காவிரி புறப்படுவது தலைக்காவேரியில். அது இருப்பது, மெர்க்காரா வின் குடகு ஜில்லாவில். அங்கு பேசப்படும் மொழி கொடவா (கூர்கி) என்னும் மொழி.

சிறந்த வீரவம்சமும் அவர்களுக்கே உரிய உடைச் சிறப்பையும் கொண்ட கொடவா இனம், ஜெனரல் திம்மையா போன்ற சிறந்த ராணுவ வீரர்களை நாட்டுக்கு அளித்திருக்கிறது.

சிறிய மாவட்டம். பெண்களில் பலருக்கு காவேரி என்று பெயர் இருக்கும். மிக மிகச் சுதந்திரமானது. தனி மாநிலம் கோரும் அளவுக்குச் சுதந்திரமானது.

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய 'சிக்கவீர ராஜேந்திரா' நாவலில், அவர்களது அரசனை ஒரு ஸ்திரீலோலனாகக் காட்டினார் என்று மறியல் செய்தவர்கள், தமிழ் நாட்டுடன் சேர்ந்துகொள்ள அவர்கள் சம்மதித்து இருக்க மாட்டார்கள். மேலும், பூகோளத் தொடர்ச்சி இல்லாமல் மாவட்டத்தை மாநிலத்தில் சேர்ப்பது கஷ்டம்.

இன்று துளு பேசுபவர்கள் எண்ணிக்கை சுமார் இருபத்தைந்து லட்சம். பொதுவாகக் கடற்கரையோர கர்நாடகாவிலும் கேரள காஸர்கோடு ஜில்லாவிலும் வாழ்கிறார்கள். துளு வுக்கு ஒரு தனி வரிவடிவம் இருந்தது. இப்போது அது வழக்கில் இல்லை. மலையாளமும் கன்னடமும் கலந்தது. திராவிட மொழிகளில் ஒன்று அது.

கொடவா மொழி, கன்னட வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறது. கேட்பதற்குச் சிலவேளை தமிழ் போலிருக் கும். கொங்கணி, கோவனிஸ், துளு, கொடவா போன்ற மொழிகளும் இருக்கின்றன என்று நம் தமிழ் மக்களுக்குச் சொல்லவேண்டும்.

இதுபோல் மற்றதொரு misinformation மூத்த ஆங்கிலச் செய்தித்தாளில் வந்த கட்டுரையில் படித்தேன். 'நகரத்தில் சிட்டுக்குருவிகள் குறைந்துவிட்டன. இதற்கு செல்போன்களிலிருந்து வரும் ரேடியோ அலைகள் காரணம்' என்று காத்தாடி விட்டிருந்தார் கட்டுரையாளர்.

செல்போன்களிலிருந்து வெளிப்படும் ரேடியேஷனின் அளவு ஒரு வாட்டுக்குக் குறைவாக இருக்கும். அதுவும் சி.டி.எம்.ஏ. வகை செல் போன்களில் ரேடியேஷனின் அளவை, சிக்னலின் வலுவுக்குத் தகுந்தாற்போல் குறைக்கும் மிக நுட்பமான மென்பொருள் வசதிகள் உள்ளன.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணங்கள் - கூடு கட்ட இடம் இன்மையும் மரம் இன்மையும். ஜங்க் ஃபுட் யுகத்தில் சாப்பிட தானியம் இல்லாமல், மனிதர்களுக்கு அவற்றைக் கவனிக்க நேரமின்மையும் மிச்சமுள்ள குருவிகளைக் கவண்வில் வைத்து வீழ்த்தி விடுவதும்தான்!

ஜ$ன் 21, 1983 - காஞ்சி மகாவித்வான் பிரதிவாதிபயங்கரம் உ.வே. அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி திருநாடலங்கரித்த தினம். ஏறக்குறைய தொண்ணூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அவர் எழுதிப் பதிப்பித்த நூல்கள் 1,240-க்குமேல் இருக்கும் என்கிறார்கள் (சென்னை வானொலியின் ஏதோ ஒரு மூலையில் அவருடன் நிலையத்தார் செய்த அருமையான பேட்டி இருக்கிறது!).

'திவ்ய பிரபந்த திவ்யார்த்த தீபிகை' என்று அவர் ஆழ்வார் பாடல்களுக்கு எழுதிய உரை அவற்றில் தலையாயது. இதனுடன் ஸ்தோத்திரங்களின் உரைகள், ரகசிய கிரந்தங்களின் விளக்கங்கள். வேதவிசார நூல்கள் என்று சளைக்காமல் படைத்திருக் கிறார். தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கிறார். பல ஸ்தாபனங்களை உருவாக்கியவர். ராஷ்டிரபதி விருதிலிருந்து பல விருதுகள் பெற்றவர். உ.வே. சாமிநாத ஐயர், அவருடைய உபன்யாசங்களில் வந்து வீற்றிருப்பாராம். ஒரு முறை 'நான் பிறப்பால் உ.வே. (உத்தமதானபுரம் வேங்கடராமையர்)! நீர் அறிவால் உ.வே. (உபய வேதாந்தி)!' என்று பாராட்டியிருக்கிறாராம்.

அண்ணங்கராச்சாரியார் சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்றவர். 'பகவத்விஷயாதிகாரிகள் தமிழ் இலக்கண மரியாதைகளை நன்கு கற்றல் அவசியம்' என்று வற்புறுத்தி யிருக்கிறார். 'ஆழ்வார் பாடல்களில் உள்ள நுட்பமான விஷயங்களைச் சுட்டிக் காட்ட, சங்க நூல்களின் துணை தேவை' என்று நம்பினார். ஒரு முறை நாச்சியார் திருமொழியில் 'கஞ்சன் வலை வைத்தவன்று காரிருள் எல்லில் பிழைத்து' என்ற இடத்தில், 'எல்லில்' என்பதற்கு 'இரவில்' என்று அவர் பொருள் கூறியதை ஒருவர் மறுத்து, 'எல் என்பது பகலையே குறிக்கும். அல் என்பதுதான் இரவு. பாடத்தைத் திருத்த வேண்டும்' என்று எழுதினார். 'அல்லும் பகலும் என்று சொல்வதுதான் வழக்கு' என்றாராம். ஸ்வாமி 'எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்து' என்ற குறுந்தொகைப் பாடலையும் மலைபடுகாடாத்தில் 'எல்லினிர் புதினே' என்பதையும் சுட்டிக்காட்டி, 'நாச்சியார் வாக்கு சரிதான்' என்று நிலைநாட்டினார். 'தமிழின் நரம்பறிந்தவன்' என்று தன்னை ஒரு கட்டுரையில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சுவாமிகள் அளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்குத் தமிழ் தெரிந்ததால்தான் என்னால் இவ்வளவு ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது!

'பொதிகை' தொலைக்காட்சி சேனல், ஒரு தூங்கும் சிங்கம். அல்லது, தன் பலம் அறியாத அனுமார் என்று சொல்வேன். அதன் பரப்பு, எனக்கு ஒரு பெரிய வியப்பு.

சென்ற வாரம் இரவு பத்து மணிக்கு 'ஹலோ உங்களுடன்' நிகழ்ச்சியை ஜெயசீலன் ஏற்பாடு செய்திருந்தார். சுபாஷ் அதை ஒருங்கிணைத்தார். நல்ல காமிராக்கள், காதில் மாட்டிக்கொள்ள அல்ட்ராலைட் ஹெட்போன்கள், திறமையான இன்ஜினீயர்கள், டெக்னீஷியன்கள் என்று தூதன் வயசுக்கு வந்துவிட்டது! டெல்லி, ஜெய்ப்பூர், குன்னூர், மூணார், மும்பை என்று நாட்டின் எல்லாத் திசை களிலிருந்தும் டெலிபோன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. இன்னும் இரண்டு தொலைபேசி எண்கள் கொடுத்திருந்தால், மேலும் பலருக்குப் பதில் சொல்லியிருக்க முடியும்.

என்னை அழைத்தவர்கள், எல்லா வயதிலும் இருந்தது - குறிப்பாக, இளைஞர்கள் தமிழ் படிக்கிறார்கள் என்பதை அறிவது நிறைவாக இருந்தது.

ஒரு மும்பை இளைஞன், 'அம்மா படிச்சுக் காட்டுவாங்க. உங்க கதைன்னா ரொம்பப் பிடிக்கும்!' என்றார். 'அடுத்த முறை நீங்களே தமிழ் கத்துக்கிட்டுப் படிங்க' என்றேன். வாக்குறுதி தந்திருக்கிறார்.

முப்பது வருஷத்துக்கு முன் நான் எழுதிய கதைகள், சில சமயம் வரிகள் கூடச் சிலருக்கு நினைவிருப்பதுதான் எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஓர் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய அவார்டு இதுதான். இதனுடன் வாசகன், தன் கருத்தை என் கருத்தாக்கி, அதற்கு ப்ரமோஷன் கேட்பதும் அன்றிரவு அடிக்கடி நிகழ்ந்தது. லாங்ஃபெலோவின் 'The Arrow and the Song'-ல்

'I shot an arrow into the air
It fell to earth, I know not where...'

என்று துவங்கும் கவிதை நினைவுக்கு வந்தது. அதன் தமிழ் இது -

'வானில் ஓர் அம்பை எய்தேன்
பூமியில் எங்கு விழுந்ததோ
தெரியாது

கண்ணால் தொடர முடியாமல்
அத்தனை வேகமாய்ப் பறந்தது
வானில் ஒரு பாடலை
உச்சரித்தேன்
அது பூமியில் எங்கு விழுந்ததோ
தெரியாது
யாரிடம் அத்தனை வேகமான
நுட்பமான பார்வை உள்ளது
பறந்துபோன கானத்தைத் தொடர?

பல நாட்களுக்குப் பின்
ஒரு காட்டில் என் அம்பைக்
கண்டேன் உடையாமல்.

அந்த கானத்தையும்
முதலிலிருந்து கடைசிவரை
மறுபடி கண்டேன்
ஒரு நண்பனின் இதயத்தில்...'

நான் எய்ததெல்லாம் இவ்வாறான அம்புகள்தாம். சேர்ந்துச்சோ, சேரலையோ... தெரியாமல் அனுப்பியவை பல இடங்களில் சேர்ந்துச்சு என்பது தெரிந்தது.

Sunday, June 22, 2003

 

'சீக்கிரமா சமச்சித் தாரேன் சிடுசிடுன்னு பேசாதய்யா..!'


பெண் கவிஞர்கள் என்கிற பாகுபாடு தேவைதானா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. நல்ல கவிதைகளை, அவர்கள் பெண்கள் என்கிற சலுகை தேவையின்றி ரசிக்க முடிகிறது.

சில கவிதைகளை அவர்களால்தான் எழுத முடியும் என்றும் ஒரு வாதம் இருக்கிறது. அதனுடன் எனக்குச் சம்மதம் இல்லை (இதே வாதத்தை தலித் கவிஞர்களுக்கும் சொல்கிறார்கள்).

'நல்ல எழுத்தில் empathy and sympathy வேண்டும்' என்கிற பழைய பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவன் நான். எனக்குப் பெண் கவிஞர் - ஆண் கவிஞர், கவிதாயினி, பாடினி போன்ற பாகுபாடுகள் அவசியமில்லை.

மெள்ள மெள்ளத் தமிழ் மொழியிலேயே பெண்பால் விகுதிகளும் உயர்திணை - அஃறிணைக் குறிப்புகளும் நீங்கி, ஆங்கிலத்தில் போல் ஆகிவிடும் அல்லது மலையாளத்தில் போல் எல்லாமே அஃறிணையாகிவிடும்.

ஒரு மொழியின் வளர்ச்சியின் - முதிர்ச்சியின் கட்டாயம் இது. இப்போதே ஆண் - பெண் இருபாலாரையும் 'டா' போட்டுப் பேசுகிறோம் அல்லவா... அதுபோல்.

குட்டி ரேவதியின் 'முலைகள்' என்கிற கவிதையில் அந்த அவயவங்கள் 'துடைத்து அகற்ற முடியாது இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன' என்கிற metaphor பெண்மைக்கு அப்பாற்பட்டது.

அதுபோல் இளம்பிறையின் கவிதைகளை, அவர் பெண்பாற்புலவர் என்கிறதை மறந்தும் என்னால் ரசிக்க முடிகிறது.

ராஜமார்த்தாண்டன் தன் முன்னுரையில் சொல்வது போல், 'பெண் கவிஞர்கள் என்று பகுத்துப் பார்ப்பது ஒரு தெளிவுக்காகவும் சௌகரியத்துக்கும்தானேயல்லாமல் பிரிவினைப் படுத்தலாகாது.'

1993-ல் 'மௌனக்கூடு' என்கிற இவரது தொகுப்பு வந்தபோதே, 'அம்மா' என்கிற கவிதையைக் கவனித்து எழுதியிருந்ததாக ஞாபகம். இப்போது 'நிசப்தம்' என்கிற தொகுப்பின் அப்பாவைப் பற்றிய முதல் கவிதை என் அப்பாவை நினைவுபடுத் தியது.

பின்னுரையில், 'முதல் தொகுப்பைச் சொந்தக் காசைச் செலவழித்துப் பிரசுரித்துவிட்டு, விலை போகாமல் செல்லரிக்கும் நிலைக்கு வந்து, நண்பர்களுக்கெல்லாம் இலவசமாகப் பிரதிகளைக் கொடுத்துத் தீர்த்தேன்' என்று எழுதியுள்ளார்.

இன்று 2003-ல் 'ஸ்நேகா' வெளியிட்டிருக்கும் 'முதல் மனுசி' என்கிற இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் அமைப்பையும் சித்திரங்களையும் காகிதத்தின் தரத்தையும் அச்சு நேர்த்தியையும் நோக்கும்போது, கவிதைப் புத்தகங்களுக்கு அந்தஸ்து வந்திருப்பது தெரிகிறது.

ஆத்மாநாம், உமாமகேசுவரியின் தொகுப்புகள் முன்னுதாரணங்கள். இளம்பிறையின் கவிதைகளில் நான் மிகச் சிறந்த தாகக் கருதும் 'அறுவடைக் காலம்' என்கிற கவிதை தினமணிக்கு அனுப்பப்பட்டு, கவிஞர்கள் இன்குலாப், கனிமொழி, வண்ணதாசன் போன்றவர்கள் இருந்த தேர்வுக் குழுவினரால் கூடக் கவனிக்கப்படாமல் பிரசுரம் மறுக்கப்பட்டது என்ற செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'அல்லு பகல் உழைப்பவள்
அடிக்கக் கையை நீட்டாதய்யா
சீக்கிரமா சமச்சித் தாரேன்
சிடுசிடுன்னு பேசாதய்யா...

கழுத்தக் கட்டித் தூங்குற
கண்மணிக்கு ஆதரவா
துணிமூட்டத் தலையணைய
துணையாக சேத்து வச்சி

உங்களுக்கு முன்னெழுந்து
உழைப்பவள வய்யாதய்யா...'

- இவ்வாறான மிக உருக்க மான கவிதை அது.

இளம்பிறையின் 'நீ எழுத மறுக்கும் எனதழகு சில' என்பது உண்மையாக இருந்து சங்கடப்படுத்துகிறது.

'முதல் மனுசி' தொகுப்பில், கிராமத்தில் வளர்ந்த பெண்ணை நகர மத்தியில் நடுவதன் தவிப்பு 'புது மார்கழி'யில் தெரிகிறது.

'மாநகர் வந்து
மாதங்கள்
பல ஓடிவிட்டன
பொருட்களை
ஏற்றி வந்துவிட்டேன் அப்போதே,
வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்
இந்த மனசைத்தான்
எப்படிக் கொண்டு வருவதெனத்
தெரியவில்லை...'

தமிழினியும் ஸ்நேகாவும் அழகான புத்தகங்களை அச்சிட்டு வருவது வரவேற்கத்தக்க மாறுதல்.

அச்சு நேர்த்தி மட்டும் இருந்தால் எரிச்சல் வரும். உள்ளடக்கமும் நேர்த்தியாக இருந்துவிட்டால் சந்தோஷம் இருமடங்காகிறது. அவ்வாறான சந்தோஷம், பாஸ்கர் சக்தியின் 'பழுப்பு நிறப் புகைப்படம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் கிடைத்தது.

குறிப்பாக, 'வேலப்பர் மலை' என்கிற சிறுகதையைப் படிக்கும்போது, இதைவிட அழுத்தமான ஒரு சுற்றுச் சூழல் பிரகடனம் இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது.

பாஸ்கர் சக்தி 'நாடி தளர்ந்துபோய் அனுதினமும் பிறருக்குப் பாரமாக இருப்பதைப் பார்க்கிலும், ஆத்மஹத்தி ஒன்றும் பாபமில்லை' போன்ற விபரீதக் கருத்துகளைப் புறக்கணித்து விட்டு, நிறைய சிறுகதைகள் எழுதலாம்.

பதினொன்றாம் நூற்றாண்டின் மெசபடோமியாவில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் உமர்கய்யாமின் பிரசித்தி பெற்ற ரூபையாத்துக்குத் தமிழில் இதுவரை இரண்டு மொழிபெயர்ப்புகள் இருந்தன.

ஃபிட்ஸ்கெரால்டின் (1859) பிரசித்தி பெற்ற மொழிபெயர்ப்பைச் சார்ந்தவை. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும் ச.து.சு. யோகியும் விருத்த வடிவில் செய்திருக்கிறார்கள். இப்போது நாகூர் ரூமி, புதுக்கவிதை வடிவத்தில் 93 பாடல்களைச் செய்திருக்கிறார்.

கய்யாம் என்பதற்குக் கூடாரம் அடிப்பவன் என்று அர்த்தமாம். உமர்கய்யாமின் முழுப்பெயர் கியாத் அல்தின் அபுல் ஃபத் இப்ன் இப்ரஹிம் அல் நிசாபுரி அல்கய்யாமி. அவர் மிகச் சிறந்த கணிதமேதை, வானவியல் மேதை. அவர் அல்ஜிப்ரா புத்தகமே எழுதி இருக்கிறார்.

பூமி, வருஷத்தின் நாள் எண்ணிக் கையை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அறிவித்திருக்கிறார். ஆனால், உமர்கய்யாம் நினைவில் இருப்பது - அவருடைய ரூபையாத் என்னும் நான்கு வரிக் கவிதை களுக்காக! 600 பாடல்களைச் சொல் கிறார்கள். அதில் 120-தான் கய்யாம் எழுதிய ஒரிஜினல் என்கிறார்கள்.

கய்யாம் ஒரு பாடலில் -

'கய்யாம் விஞ்ஞானத்தின்
கூடாரத்தை அமைத்தான்
துன்பத் தீயில் விழுந்து சுடுபட்டான்
விதி கூடாரத்தின் கயிறுகளைக்
கத்தரித்துவிட்டது
நம்பிக்கை வியாபாரி அவனை
இலவசமாக விற்றுவிட்டான்...'

என்று எழுதியுள்ளார். கணித மேதையாகத்தான் அவர் உலகுக்கு அறிமுகமாக விரும்பினார். ஆனால், அவரது ரூபையாத்தான் காலம் கடந்தது, அல்ஜீப்ரா அல்ல.

ரூபையாத்தில் மிகப் பிரசித்திப் பெற்ற பாடல் -

'The moving finger writes and having writ
Moves on; nor all thy peity nor wit
Shall lure it back to cancel half a line
Nor all thy tears wash out a word of it...'

தேசிகவிநாயகம் பிள்ளை இதை 'எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும்' என்று அருமையாகச் செய்திருந்தார்.

நாகூர் ரூமி -

'நகரும் விரல் எழுதுகிறது எழுதி
எழுதிச் செல்கிறது
பக்தியாலோ, அறிவாலோ
திரும்பப் பெறமுடியாது பாதி வரியைக்கூட
உனது கண்ணீர் அத்தனையாலும்கூட
அழிக்க முடியாது
ஒரு சொல்லைக்கூட...'

பரவாயில்லை... 'அழிக்க' என்பதற்குப் பதில் 'கழுவ' என்று போட்டிருக்கலாம்.

குமரி அனந்தன் அவர்களைச் சமீபத்தில் சந்தித்தேன். 'காங்கிரஸ் தனியாகத் தமிழ்நாட்டில் போட்டி போட முடியுமா?' என்று கேட்டபோது, 'ஏகப்பட்ட தலைவர்களும் உபதலைவர்களும் ஆளாளுக்கு அதை இழுப்பதால் கொஞ்சம் கடினம்' என்றார். மேலும் 'தீர்மானம் கமல்நாத், சோனியா எடுப்பது' என்றார்.

யுனெஸ்கோவுக்கு எஸ்பராண்டோ போன்ற சர்வதேச மொழியை ஆதரிப்பதைப் பற்றி 1993-ல் அவர் எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலைக் காட்டினார். இதற்காக ஒரு வலைதளம் அமைக்கலாம் என்று சொன்னேன்.

Sunday, June 15, 2003

 

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் புரட்சி!


கமலும் நானும் அறிமுகமாகி இது 'சில்வர் ஜுபிளி' வருடம். அந்த நினைவுகளோடு ஆழ்வார்ப் பேட்டை வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ''இருபத்தஞ்சு வருஷம் ஓடிப்போச்சு!'' என்றதும்,

''ஆமாமா... 'அபூர்வ ராகங்கள்' காலத்திருந்தே... பெங்களூர்ல சந்திச்சோம். அந்த மீட்டிங்கை 'கணை யாழி'யில் எழுதியிருந்தீங்க'' - மீசையுடன் விரல் விளையாடச் சிரிக்கிறார் கமல். விநோதமான கிருதாவை, மீசையுடன் மயிர்ப்பாலம் போட்டுச் சேர்த்திருக்கிறார் 'சண்டியர்' கமல்!

கமல் தன் புதிய கம்ப்யூட்டரைக் காட்டுகிறார். நாய்க்குட்டி மாதிரி கூடவே இழுத்துப்போக வசதியான நடமாடும் கம்ப்யூட்டர். ''இதுல உட்கார்ந்து ஒரு ஸ்க்ரீன் ப்ளே எழுதினா நல்லா இருக்கும் போலிருக்கே'' என்றதும், ''அதான் சார் ஆசை ஆசையா அமெரிக்காவிலிருந்து வரவழைச்சேன்'' - சிரிக்கிறார் கமல்.

இந்திய சினிமா உலகத்தில் 'டிஜிட்டல் புரட்சி' எப்போது வரும் என்று அவரோடு சின்ன விவாதம்.

''கமல்... நீங்க ஹாலிவுட் போயிருக்கீங்க. இன்னிய தேதி டெக்னாலஜி என்னன்னு பார்த்துட்டே இருக்கீங்க. முக்கியமா,ஃபிலிமே இல்லாத டிஜிட்டல் சினிமா தமிழ்ல வர்றது எந்த அளவுல இருக்கு?''

''பி.சி. ஸ்ரீராமோட நீங்க பண்ற 'வானம் வசப்படும்'தான் தமிழின் முதல் டிஜிட்டல் படமா வரும்னு நினைக்கிறேன். 'சண்டியர்'கூட அப்படிப் பண்ணிடணும்னுதான் ஆசைப்பட்டேன். இங்கே நாடகம் போடறதுக்கு சபா இருக்கு. மெம்பர்ஸ் நிறைய இருக்காங்க. அவங்களுக்கான நாடகங்கள், கச்சேரிகள்னு நடத்தறாங்கள்ல. அது மாதிரி நிறைய 'சினிமா கிளப்'கள் உருவாகும். நல்ல நல்ல படங்கள் வரும். பாட்டு, ஃபைட்டு, சென்டிமெண்ட்னு ஓடற ஃபார்முலாக்களை உடைச்சிட்டு நல்ல நல்ல படங்கள் உருவாக்கற, ரசிக்கிற ரசனை வளரும். ஆனா, பழைய காலத்து சதர்ன் ரயில்வே மாதிரி தேவையில்லாத தாமதங்கள் இருக்கு. நானும் நீங்களும் பத்து வருஷமா டிஜிட்டல் சினிமா பத்திப் பேசிட்டே இருக்கோம். இந்நேரம் அது வந்திருக்கணும். அது பற்றிய தெளிவான பார்வை இன்னும் வராததாலதான் தாமதம்.

'சாட்டிலைட் டெலிவிஷன் வரக்கூடாது'னு இங்கே ஒரு ஊர்வலம் போனாங்க. அதுல நான் கலந்துக்கலைனு கோபப்பட்டாங்க. மாற்றங்கள் வந்துட்டேதான் இருக்கும். அப்போ நான் ஒரு பேட்டியே தந்தேன். தார் ரோடு வர்றப்போ மாட்டு வண்டி கொஞ்சம் ஒதுங்கித் தான் போகணும். தார் ரோடு போடப்பட்டதே கார்களுக்காகத்தான். அதுல மாட்டு வண்டி ஓடினா மாட்டுக்கும் கெடுதல், வண்டிக்கும் கெடுதல், ஏன் ரோட்டுக்குமே கெடுதல். முடிஞ்சா உங்க வண்டிக்கு ரப்பர் டயர் போட்டுங்கங்க'னு சொன்னேன்.

அப்படித்தான் டிஜிட்டல் சினிமாவும். புது தொழில்நுட்பம். இன்னும் சௌகரியமாப் படம் பார்க்கலாம்.''

''தமிழ்ல அதுக்கான நேரம் வந்துடுச்சா?''

''ஹாலிவுட்கூட ஒப்பிடும்போது அவங்க ஒருங்கிணைஞ்ச ரோமானியப் படை! நாம சின்ன ஸ்பார்டகஸ் ஆர்மி மாதிரி. ஒவ்வொரு கம்பெனியும் இங்கே தனி ராஜாங்கம். 'ராஜ்கமல்'ல நான் எடுக்கிறதுதான் முடிவு. வட்ட மேஜை கூட்டி உட்கார்ந்து பேச வேண்டியதில்லை. பாரதிராஜா, ஷங்கர் எல்லாம்கூட அப்படித்தான். நாம நினைச்சா இந்த மாற்றத்தை உடனே இங்கே கொண்டு வந்துட முடியும். ஆனா, கமல் பண்றார், மணிரத்னம் பண்றார்னு ஏதோ ஒருத்தர் ரெண்டு பேரோட முடிஞ்சு போயிடக்கூடாது. அது ஒரு இயக்கம் போல வளர வேண்டிய நேரம் வந்தாச்சு!''

''பின்னே என்ன சிக்கல்..?''

''தேவையில்லாத பதற்றம் நிறைய இருக்கு. 'டிஜிட்டல் படம் வந்துட்டா சினிமாவே அழிஞ்சு போயிடுமோ... தியேட்டர்களே இனி தேவைப்படாதோனு ஒரு பதற்றம்.

இந்த டெக்னாலஜி ஒரு வசதி. அவ்வளவு தான் எடுத்துக்கணும். 'ஸ்டெடி காம்'னு ஒரு காமிரா வந்தபோது அதைப் பயன்படுத்தக் கூட யாரும் முன்வர வில்லை. 'விக்ரம்'லதான் நாம பண்ணினோம். இப்போ 'ஸ்டெடிகாம்' பயன்படுத்தாம ஆக்ஷன் படங்கள் பண்றதே இல்லை. அதுமாதிரிதான் டிஜிட்டல் சினிமா. முதல் ஸ்டெப் யார் எடுத்து வைப்பது என்பதுதான் விஷயம். அப்புறம் தடதடனு வந்துடுவாங்கனு நம்பிக்கை இருக்கு!''

''அப்ப பழைய ஃபிலிம்களை எல்லாம் பீரோவுல மடிச்சு வெச்ச பட்டுப்புடவை மாதிரி ஆகிடுமா?''

''கரெக்ட்டா சொன்னீங்க. விழா, விசேஷம்னு நல்ல நாளுக்கு ஞாபகார்த்தமா கட்டிக்கிடற மாதிரி அதை வெச்சுக்கலாம். ஆனா, அதுக்காக டிஜிட்டல் சினிமா வந்தா இப்போ இருக்கிற தியேட்டர்கள் என்னாகும்னு யாரும் பயப்பட வேண்டியதில்லை.

வீட்டுக்கு வெள்ளையடிக்கிற மாதிரிதான் இந்த மாற்றம். சாதா தியேட்டர்களை ஏ.ஸி. பண்ணின மாதிரி, DTS, dolby னு புது சவுண்ட் சிஸ்டம் பண்ணினபோது ஆன செலவு மாதிரி கொஞ்சம் ஆகும். ஆனா, இந்த மாற்றம் மக்களை தியேட்டர்கள் நோக்கி திருவிழா மாதிரி இழுத்துட்டு வந்துரும். DTS வந்த புதுசுல 'ஐயோ இவ்வளவு செலவா?'னு பதற்றப்பட்டாங்க. ஆனா இப்போ சிட்டியில DTS, dolby இல்லாத தியேட்டர்களை விரல் விட்டு எண்ணிடலாம்.''

''திருட்டு வி.சி.டி. பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?''

''அரிசியை வேலைக்காரங்க திருடாம எப்படி விவசாயம் பார்க்கறது என்பது மாதிரிதான் இதுவும். திருட்டு வி.சி.டி-க்காரங்க கையில டெக்னாலஜி இருக்கு. மலேஷியாவுல தான் இது உற்பத்தியாகுதுனு சிலர் சொல்றாங்க. கிட்டத்தட்ட குடிசைத் தொழில் மாதிரி பண்ணிட்டாங்க.

சினிமாக்காரங்களோட உழைப்பு, வியர்வை, பணம் எல்லாம் யாரோ சாப்பிடறாங்க. இதைத் தடுக்கலேன்னா இனிமே சினிமாவுல இன்னொரு எம்.ஜி.ஆர்., சிவாஜி உருவாக முடியாது. ரஜினி மாதிரி என்னை மாதிரி ஆட்கள் தலையெடுக்க முடியாது. டிஜிட்டல் சினிமா வந்தா பைரசியும் குறைய வாய்ப்பிருக்கு. அதுவும் தவிர, டிஜிட்டல் சினிமா வர்றப்போ க்யூவில் அடிதடி போட்டு டிக்கெட் வாங்கற அவஸ்தை கிடையாது. சின்னச் சின்ன தியேட்டர்கள் நிறைய வரும்.

சிகரெட் வாங்கப் போறவனுக்கு 'அது மெடிக்கல் ஷாப்ல இருக்காது. பெட்டிக்கடையிலதான் கிடைக்கும்'னு தெளிவாத் தெரியும். ஆர்ட் ஃபிலிம் ஓடற தியேட்டருக்கு கமர்ஷியல் படம் பார்க்க ஆசைப்படற ரசிகர்கள் போகமாட்டாங்க. அதது தெளிவா நடக்கும்! தெருவோரமா டீக்கடையில வாங்கி குடிச்ச ஆட்கள் 'க்விக்கீஸ்' மாதிரி இடத்துக்குப் போய் காபி குடிக் கிறதையே ஒரு அனுபவமா ரசிக்கிற மாதிரி டிஜிட்டல் சினிமா புது ரசனையைத் தரும்... நிறைய பேரை தியேட்டருக்கு இழுக்கும்!'' என்கிறார் கமல்.

அவரிடம் கேட்கவேண்டிய இன்னொரு கேள்வி இருந்தது.

''ஒருத்தருக்கொருத்தர் நெருங்கி முத்தம் கொடுக்கிறப்போ கண்களை ஏன் மூடிக்கிறாங்கனு ஒரு கேள்வி வந்தது. அதுக்கு உங்க பதில் என்ன?''

சிரிக்கிறார் கமல்.

''முத்தம்னா கமல்தான்னு என்னை வாத்ஸ்யாயனர் மாதிரி ஆக்கிட் டாங்க'' என்றவர்,

''அது சிம்பிள் காரணம். அவ்ளோ க்ளோஸா இரண்டு முகங்கள் வரும்போது கண்ணுக்கு எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸாகிடும். அதான் தன்னாலயே கண்ணு மூடிக்குது.''

''சினிமா இருக்கட்டும். அருமையான கவிதைகள் எழுதியிருக்கீங்க. ஒரு தொகுப்பா கொண்டுவர்ற ஐடியா எதுவும் இல்லையா?''

''நிச்சயமா.. ஆனா ஒரு புத்தகமா மட்டுமே கொண்டு வராம, அதோட விஷ#வலா அதை ஒரு படம் போல செய்து சி.டி-யில கொண்டுவர ஆசைப்படறேன். என் கவிதைகளை நான் வாசிக்க வாசிக்க அதை அப்படியே காட்சிகளாப் பதிவு பண்ற ஐடியா... கொஞ்சம் நேரம் கிடைச்சதுனா போதும்.. அதைப் பண்ணிடுவேன்!'' என்றவர்.

''கேன்ஸ் திரைப்பட விழாவுக்குப் போகும்போதே 'மருதநாயகத்தையும் அவங்களுக்கு சின்ன டிரெய்லரா போட்டுக் காட்டினேன். அதைப் பார்க்கறீங்களா'' என்றபடி ரிமோட்டைக் கையிலெடுத்தார்.

திரை ஒளிர்ந்தது.

புழுக்களைப் போல விழுந்து நெளியும் கூட்டத்திலிருந்து சுய மரியாதைக்காகப் போராடப் புறப்பட்ட ஒருவன் திரையில்...

தோள் வரை புரளும் ஜடாமுடி, தாடி, கையில் குத்தீட்டி, எருது வாகனம் என்று அப்படியே சரித்திரத்துக்குள் இழுத்துப் போகிற படம்.

அத்தனை அபாரமான அருவியின் மேலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவன் குதிக்கும்போது சரக்சரக்கென இரண்டு அம்புகள் துளைக்க அடிபட்ட பறவை போல விழுகிறான்.

தண்ணீரின் வேகம் ஒரு பாறையின் மேல் அவனைத் தள்ளிவிட்டுப் போக நினைவிழந்து விழுந்து கிடக்கிறவனின் காயத்தை ஒரு கழுகு கொத்தித் தின்னுகிற காட்சி சிலிர்ப்பூட்டுகிறது.

புழு, பட்டாம்பூச்சி, கழுகு என்று முரட்டுக் கவிதையாக அவன் பரிமாணங்களெடுக்கிற ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருகிறது.

திரை அணைகிறது. புன்னகைக்கிறார் கமல்.

''இந்தியாவோட முதல் லகான் என்னோட படமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அமீர்கான் முந்திக் கிட்டார்!''

ஒரு கலைஞனின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள எனக்கு அந்த ஒருவரி போதும்!

பல காரணங்களுக்காக இந்தப் படம் இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுதான் இந்திய சினிமாவின் சோகம்!

Sunday, June 08, 2003

 

தூள்.. மச்சி.. லபக்குதாஸ்..எத்தனை நாளைக்கு?


உலகத் தமிழ் ஆராய்ச்சி மையமும், மைய அரசின் விக்யான் பிரசார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இலாகாவும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் தலைப்பு 'தென்னிந்திய மொழிகளில் அறிவியலைப் பிரபலப்படுத்துவது' பற்றி! இரண்டாம் தினத்தின் முற்பகல் அமர்வில் தலைமை வகித்துப் பேச வாய்ப்புக் கொடுத்தார்கள்.

அறிவியலை திராவிட மொழிகளில் பரப்புவதில் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள சிரமங்களைச் சொன்னார்கள். தமிழில் பல ஆண்டுகளாக வரும் அறிவியல் இதழான 'கலைக்கதி'ருக்கு கட்டுரை எழுத யாரும் முன் வருவதில்லை என்று வருந்திய பேராசிரியர் மணி, தானே முழு பத்திரிகையை வெவ்வேறு பெயரில், நடைகளில் எழுதுவதாகச் சொன்னார். மாறாக, 'துளிர்' பத்திரிகையில் இவ்வாறான சங்கடங்கள் இல்லை, நிறைய பேர் எழுதுகிறார்கள் என்று அதன் ஆசிரியர் குழுவிலிருந்து சொன்னார்கள்.

மலையாளத்தில் அறிவியல் பற்றிய புத்தகங்கள் இரண்டாயிரம் பிரதிகள் எளிதில் விற்றுவிடுகின்றனவாம். 'தமிழிலும் விற்கலாம்.. எழுதத்தான் அதிக ஆட்கள் இல்லை' என்றேன். அறிவியலை இந்திய மொழிகளில் கொடுப்பதில் மற்ற மொழிகளில் உள்ள சிக்கல்கள்தான் தமிழிலும் உள்ளன. வார்த்தைகள் இல்லை, எழுதுபவர்களின் அறிவியல் அறிவைவிட தமிழறிவு குறைவு, யாருக்காக எழுதுகிறோம் என்பதில் குழப்பம், அறிவியலை அதிகமாக எளிமைப்படுத்தி அற்பமாக்குதல் ('அணுகுண்டு செய்வது எப்படி' என்று ஒரே பாராவில் சொல்ல முயல்வது - 'கொஞ்சம் யுரேனியம் எடுத்துக் கொள்ளவும்') துணுக்கு மனப்பான்மை, ஜோசியம், வாஸ்து, ஆவி சமாசாரம் போன்ற Pseudoscience கட்டுரைகள்... இவை எல்லாம்தான் பிரச்னைகள்.

இவையெல்லாம் தவிர்த்து அறிவியல் எழுதுவதில் உள்ள சந்தோஷங்களும் பிடிவாதமாக சிலர் இதைத் தொடர்ந்து செய்வதும் குறிப்பிட வேண்டியவை. டாக்டர் மணி, மருத்துவக் கட்டுரைகள் எழுதும் டாக்டர் என். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். வார்த்தைகளுக்காக காத்திராமல் அறிவியலை எழுதத் தொடங்கிவிட்டால், வார்த்தைகள் தானே வரும். செமினாரின் வெற்றியை பொறுத்தமட்டில் மைய அரசில் விக்யான் பிரசாரில் புதுசாக பணி ஏற்றிருக்கும் டாக்டர் வெங்கடேசுவரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இதில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

அன்றைய செமினாரில் நாற்பது பேர்தான். இருந்தாலும் அனைவரும் விஷயம் தெரிந்த வர்களாக இருந்தது நிறைவாக இருந்தது. டாக்டர் தெய்வநாயகம் தமிழில் கிரந்த எழுத்துகள் இருபத்தேழு இருப்பதாகச் சொன்னார். டாக்டர் எஸ்.வி. சுப்ரமணியன் சங்க இலக்கியங்களில் ரிமோட் சென்சிங் இருப்பதாகவும் கூவல் என்கிற வார்த்தை தரையடித் தண்ணீரைக் குறிப்பிடுவதாகவும் சொன்னார். அடிக்கடி சங்க இலக்கியத்தில் கிணறு என்பதற்கு 'கூவல்' பயன்படுகிறது. கூவம் என்பதும் தமிழ் வார்த்தைதான் என்று சொன்னார். சென்னைக் கூவமா?

இன்டர்நெட்டில் google போன்ற தேடியந்திரங்களில் எப்படி புத்திசாலித்தனமாக தேடுவது என்பதைப் பற்றி டாக்டர் மணி சொன்ன கருத்துகள் சில புதிதாக இருந்தன. வார்த்தைகளை lower case-ல் மேற்கோள் குறிக்குள் கொடுக்கவும். கூட்டல் கழித்தல் குறிகளைப் பயன்படுத்தவும். உலகத்தில் உள்ள அத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கொஞ்சம் முயன்றால் இலவசமாகப் பெறமுடியும் என்றார்.

விக்யான் பிரசார் அறிவியல் விஷயங்களை இந்திய மொழிகளில் எழுதுபவர்களின் 'யார் எவர்' தயாரிக்க வேண்டும்.

தெலுங்கில் அறிவியல் பத்திரிகையின் பெயர் என்ன தெரியுமா சிக்கிமுக்கி! என்னுடைய செல்ல ப்ராஜெக்ட் - ஆம்னி, டிஸ்கவர் மாதிரி தமிழில் ஒரு அறிவியல் இதழ் ஆரம்பிப்பது. யார் குடுமியாவது அகப்படுமா பார்க்கிறேன்... சிக்கவில்லை!

சில ஆண்டுகளுக்குமுன் ஆல் இண்டியா ரேடியோ திருவேங்கடம் அவர்களின் அழைப்பில் மதுரை வானொலி நிலையம் துவங்குமுன் சென்றிருந்தேன். மதுரை ஜயபாஸ்கரனுடன் சிறந்த ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார் (அதன் டேப் காணாமற் போய்விட்டது. பேராசிரியர் ஞானசம்பந்தனுடன் செய்ததாவது பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்). அப்போது அங்கே வானொலியில் பணிபுரிபவர்களுடன் பேசுகையில் 'டெல்லி அரசு பி.இ.எல்-லில் செய்த ரோட் அண் ஷ்வார்ட்ஸ் கம்பெனியின் எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை வாங்கிப் போட்டிருக்கிறதே, என்ன செய்யப் போகிறார்கள்?' என்று கேட்டேன். 'இப்போதுதான் ஒவ்வொன்றாக அலாட் ஆகிக்கொண்டிருக்கிறது' என்றார்கள். எதிர்காலத்தில் எஃப்.எம்.தான் ரேடியோவுக்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறது என்று அமெரிக்க உதாரணத்துடன் அப்போதே ஹேஷ்யம் சொன்னேன். அது இப்போதுதான் பலித்திருக்கிறது.

நாங்கள் தந்த அந்த எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்கள் கொஞ்ச வருடங்கள் தூங்கின. தற்போது தனியார் ரேடியோக்களுக்கு கட்டணத்தின் பேரில் லைசென்ஸ் கொடுக்கப்பட்ட தும் எஃப்.எம்-முக்கு ராஜகுமார முத்தம் கிடைத்து, இப்போது இளைஞர்கள் கொஞ்சமாக கொஞ்சிப் பேசி நிறையப் பாட்டுக்கள் போட்டு எல்லா நகரங்களிலும் ரேடியோ கேட்க வைத்துவிட்டார்கள்.

சென்னையில் மிளகாயும் சூரியனும் தூள் கிளப்புகிறார்கள், வேர்க்குரு விளம்பரத்தை ரஹ்மான் ரேஞ்சுக்குப் பாடுகிறார்கள். இந்த அலை எத்தனை நாள் தாங்கும் என்பதை கொஞ்சம் ஆராயலாம். தொடர்ந்து அதற்குத் தனி அடையாளம் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிக்கலாம்.

இவர்கள் ஒலிபரப்புவதெல்லாம் பெரும்பாலும் சமீபத்திய சினிமா பாட்டுகள். ஒரு மணி நேரம் தொடர்ந்து கேட்டால் அவற்றில் உள்ள பொதுவான சந்தமும் உடுக்கையடியும் பறையலியும் காலி வார்த்தைகளும் தெளிவாகிவிடும்.

கொஞ்ச நாளில் (என் கணக்குப்படி மூணு மாசம்) தமிழ் சினிமாவின் அத்தனை பாட்டுக்களும் போட்டு முடிந்துவிடும். புதுசாக படங்கள் வந்தால்தான் உண்டு என்றாகிவிடும். எல்லா பாட்டுகளும் மக்களுக்கு நெட்டுருவாகிவிடும். கைக்குழந்தைகள் 'காதல் பிசாசே பருவாயில்லை' என்று பாடினால்தான் பால் சாப்பிடும். அதன்பின் இது Repetitive ஆகும்.

அப்போதுதான் கொஞ்சல் பாஷையும் மெட்ராஸ் பாஷையும் சோமாரி, கேப்மாரி, கலசல், கலாய்த்தல் போன்ற தூய தமிழ் வார்த்தைகளின் எட்டிமாலஜியை ஆராய்வதும். 'சரிதான், மேட்டர் என்ன?' என்று கேட்கத் துவங்கு வார்கள். 'இந்தப் படத்துக்கு போகாதீங்க. இது செம போர்' என்று எஃப்.எம்-காரர்களுக்கு வாழ்வளிக்கும் சினிமாவையே சாகடிப்பது நல்லதல்ல என்பதை மக்கள் உணர்வார்கள். ரேடியோவின் மற்ற பரிமாணங்களைத் தேடுவார்கள். அப்போது டாக்டர் சேயோன் போன்றவர்களுக்கு மறுபடி தேவை ஏற்படும்.

அமெரிக்காவின் எஃப்.எம். ரேடியோ பாணியை இவர்கள் ஓரளவுக்குத்தான் பின்பற்றுகிறார்கள். அங்கே ஒவ்வொரு பாட்டு வகைக்கும் தனி சேனல் இருக்கிறது - ராக், பாப், ரெக்கே, டெக்னோ, கிளாஸிக்கல், கண்ட்ரி, ஆர்அண்பி என்று. இதனுடன் வெறும் செய்திகளுக்கே சேனல் இருக்கிறது. குழந்தைகளுக்கு, இஸ்லாம் பற்றி அறிய விரும்புபவர் களுக்கு, பெண்களுக்கு, விடியும்வரை தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகளுடன் பேச விரும்பு பவர்களுக்கு இப்படி. ரேடியோ அறிவிப்பாளர்கள் திறமையானவர்கள், குரலிலேயே பரிவுள்ளவர்கள். இவர்கள் குறுக்கீடு தனிமையில் வாடும் பலருக்கு ஆறுதலாக இருக்கும். அந்த ரேஞ்சுக்கு வர இவர்களுக்கு மொழியில் ஆளுமை போதாது. வெறும் தூள், மச்சி, லபக்கு தாஸ் வைத்துக்கொண்டு அதிக நாள் காலம் தள்ள முடியாது. கொஞ்ச நாளில் எஃப்.எம். காரில் செல்லும்போது ஓர் உறுத்தாத பின்னணி லெவலுக்கு தள்ளப்படும். Radio gaga என்கிற எண்பதுக்களில் மிகப் பெரிய ஹிட்டான காலஞ்சென்ற க்வீன் என்பவரின் பாடலில் -

Dont become some background noise
A backdrop for the girls and boys
Who just dont know or just dont care
And just complain when you are not there
You had your time you had the power
You are yet to have your finest hour
All we hear now is radio gaga

எத்தனை உண்மை!

'ஹைக்கூ' கவிதை இதழின் இரண்டாவது ஆண்டு மலரில் தேடி எடுத்த ஹைக்கூக்கள் இவை. நிஜ ஹைக்கூ என்பதற்கு என் வரையறைகள் இவற்றிலிருந்து புரியும் என்று எண்ணுகிறேன்.

கதிர் அறுத்த வயலில்
தனியே நிற்கும்
காவல் பொம்மை
- மித்ரா

('தனியே' என்பது என் திருத்தம். ஒரிஜினலில் 'அனாதையாய்' என்றிருக்கிறது).

சந்திப் பிழையோடு எழுதியது
யாருக்குமே தெரிந்திருக்காது
தண்ணீர்
- இரா. பால்பாண்டி.

அறிவியல் ஆய்வுக்கூடம்
வெளியே தொங்கும்
திருஷ்டிப் பூசணி
- நா.கவிகுமார்

And the best:

மின் தடை வீதி
எங்கும் வெளிச்சம்
பௌர்ணமி
- தமிழ்ப்பித்தன்

Sunday, June 01, 2003

 

தூங்கும்போது உபயோகிக்கக் கூடாதது எது?


ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம் அவன் எழுதும் மொழியில் சமகால எழுத்தாளர்களின் கதைகளைப் படிப்பது. முடிந்தால் சந்திப்பது. உதாரணமாக - என்னால் கி.ராஜநாராயணன் போலவோ, மேலாண்மை. பொன்னுச்சாமி போலவோ எழுத முடியாது. என் பேட்டையே வேறு. இவ்வாறு திணை, துறை வேறுபாடுகள் இல்லாதபோது, மற்ற எழுத்தாளர்களை ஒரு வாசகனாக இருந்து படிக்க முடிகிறது. நடையிலும் உள்ளடக்கத்திலும் என்போல் எழுதுபவர்களைப் படிக்கும்போதுதான் எனக்குப் பிரச்னை. அடிக்கடி வாசக உடைகளைக் களைந்துவிட்டு, எழுத்தாள உடைகளுக்கு மாறவேண்டியிருக்கும்.

ஜி. நாகராஜனுக்குப் பிறகு என்னை முழுவதும் வசீகரித்து, வாசக நிலைக்கு அனுப்பிய எழுத்தாளர்களில் ஒருவர் கோபிகிருஷ்ணன். நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாகப் 'புதிய பார்வை'யில் (அந்தப் பத்திரிகை என்ன ஆயிற்று? 'சுபமங்களா'வுக்குப் பிறகு ஒரு middle magazine ஆக உருவெடுத்துக் கொண்டிருந்ததே!) அவர் எழுதிய குறுநாவல் ஒன்றை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுவேன்.

ஓர் அலுவலகத்தில் நிகழும் அத்தனை யதார்த்தங்களையும் நகைச்சுவையூடுருவிய நடையின் உற்சாகத்தோடு எந்த வார்த்தையிலும் அடுத்த வார்த்தையை எதிர்பார்க்க முடியாத ஆச்சரியத்துடன் எழுதியிருந்தார்.

'மானிட வாழ்வு தரும் ஆனந்தம்' என்கிற சிறுகதைத் தொகுப்பும் 'இடாகினி பேய்களும்' என்கிற குறுநாவலும் குறிப்பிடத்தக்கன. அவருடைய ஒரு ஆரம்பத்தைப் பாருங்கள்.

''அன்பான தமிழ் வாசகா, தமிழ் வாசகி கேள்... என்னை ஒரு தோழனாக ஏற்றுக்கொண்டு, மனதை வெற்றாக வைத்துக்கொண்டு கேள். தலைப்பைப் பார்த்து மிரளாதே. படிக்கப் படிக்க உனக்கே தெரியும். என்னால் முடிந்த அளவு செம்மையாக எழுதியிருக்கிறேன்!''

அவரது சிறுகதைகள் அனைத்தும் 'தமிழினி' சமீபத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். அவர் இறந்து விட்டார் என்கிற செய்தி கேட்டுத் தடுமாறிப் போய்விட்டேன். அவரை நான் சந்தித்திருக்க வேண்டும். தப்பவிட்ட சந்தர்ப்பம் அது.

இறந்துபோனவரின் உடலை எடுத்துப்போய் அடக்கம் செய்யக் கூடப் பணமில்லையாம். நண்பர்களும் அன்பர்களும்தான் கடைசிக் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

வறுமையில் வாடும் அவரது குடும்பத்துக்கு உதவும்பொருட்டு எழுத்தாள நண்பர்கள் நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். முகவரி: 'வெளி ரங்கராஜன், 1415, இரண்டாவது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை-78.'

இண்டெல் சார்பாக கமல் ஹாலிவுட் போகுமுன் என்னிடம் பேசினார். டி.எல்.பி. சிப், டிஜிட்டல் சினிமா பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார்.

டிஜிட்டல் சினிமாவை தற்போதைய செல்லுலாய்டு சினிமாவுக்கு எதிரியாகக் கொள்ளவேண்டாம். மெள்ள மெள்ள டிஜிட்டல் புராஜெக்டர்கள் விலை குறைந்து எண்ணிக்கையில் அதிகரிக்க அதிகரிக்க, அந்த வகைத் திரைப்படங்களும் அதிகரிக்கும்.

இதில் விஷயம் தெரிந்தவர்களான பெண்டாமீடியா சந்திரசேகர், சாய்பிரசாத், ரியல் இமேஜ் செந்தில் போன்றவர்கள் ஒத்துழைத்து, சுமார் ஐம்பத்திரண்டு தியேட்டர்கள் மாறினால் முதல் கட்டத்துக்குப் போதும் என்றார் ளதற்போது பி.சி. ஸ்ரீராமின் 'வானம் வசப்படும்' (கதை அடியேன்) திரைப்படமும் அனிதா சந்திரசேகரின் knock knock I am getting married-ம் முழு டிஜிட்டலில் தயாராகின்றனன.

டி.எல்.பி. என்பது டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தயாரிக்கும் சில்லு. அதில் நுட்பமான பல லட்சக்கணக்கான கண்ணாடிகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் புரொஜக்டரில் படச்சுருள் இல்லாம லேயே கம்ப்யூட்டரிலிருந்து வரும் தொடர் செய்திகள் மூலம் இந்தக் கண்ணாடிகளை செகண்டுக்கு ஐம்பதாயிரம் தடவை ஏற்றி அணைத்துப் படம் காட்டலாம்.

இதைப் பயன்படுத்தினால் திருட்டு விடியோ டி.வி.டி. குறையும். எத்தனை முறை காட்டினாலும் அப்பழுக்கில்லாமல் தெரியும். சினிமாவின் எதிர்காலம் இதுதான் என்கிறார்கள். ஆனால், உலகெங்கிலும் எழுபத்தை யாயிரம் திரையரங்குகளில் அறுபது திரையங்குகளில்தான் டிஜிட்டல் புராஜெக்டர் வைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மூவாயி ரத்து ஐந்நூறு திரையரங்குகளில் பத்து விழுக்காடு டிஜிட்டலுக்குப் போக லாமா என்று யோசிக்கின்றன. காரணம், டிஜிட்டல் புராஜெக்டர் ஃபிலிம் காட்டுவதைவிட ஐந்து மடங்கு அதிக விலை, படங்களும் இல்லை. ஜார்ஜ் லூகாஸ் ஒருவர்தான் பிடிவாதமாக, 'ஸ்டார்வார்ஸ் அட்டாக் ஆஃப் தி கேளான்ஸ்' என்ற படம் எடுத்தார்.

கமல் சென்ற வாரம் விகடனில் வெளிவந்திருந்த frustable-யும் (முத்தமிடும்போது ஏன் கண்ணை மூடிக் கொள்கிறார்கள்?) அதனுடன் இருந்த கார்ட்டூனையும் பார்த்ததாகச் சொன்னார். ஹாலிவுட் போய் வந்ததும் விவரமாக விளக்கம் தருகிறேன் என்றார்.

இப்போதைக்கு பாங்காக் சுகன் எழுதியிருந்த விளக்கம் எனக்குப் போதும் - 'முத்தமிடும்போது அத்தனை கிட்டத்தில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொள்ள விரும்பவில்லையோ என்னவோ!'

ஹாங்காங் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் பல frustables அனுப்பியிருந்தார். அவற்றில் சில:

1. டாக்டர்கள் தம் தொழிலை ஏன் 'பிராக்டீஸ்' என்கிறார்கள்?

2. மரண தண்டனைக்கு விஷ ஊசி செலுத்தும் முன்பு அதை ஏன் ஸ்டெரிலைஸ் பண்ணுகிறார்கள்?

3. ஆடு நனையும் போது ஏன் உடலைச் சுருக்கு வதில்லை?

இவற்றைவிட சில அமெரிக்க வியாபாரப் பொருட்களின்மேல் பொறித்திருக்கும் முட்டாள்தனமான வாசகங்களும் எச்சரிக்கைகளும் சுவாரஸ்யமாக இருந்தன.

1. தூங்கும்போது உபயோகிக்கக் கூடாது (ஹேர் டிரையர்!).

2. வாங்கத் தேவையில்லை. இலவசப் பரிசுகள் காத்திருக்கின்றன. விவரம் பாக்கெட்டுக்கு உள்ளே (உருளைக்கிழங்கு வறுவல்!) வாங்காமல் எப்படி விவரம் அறிவதாம்? திருடியா?

3. வழக்கம்போல சோப்பைப் போல் பயன்படுத்தவும் (பாமாலிவ் சோப்பின் ராப்பரில்). வேறுவிதம் இருக்கிறதா என்ன?

4. உடம்பில் அணிந்திருக்கும் உடைகள்மேல் பயன்படுத்தாதீர்கள் (இஸ்திரிப் பெட்டியின் பாக்ஸில்!). அவ்வளவு அவசரத்தில் இல்லை நான்.

5. இதை உட் கொண்டபின் கார் ஓட்டவோ, இயந்திரங்களை இயக்கவோ கூடாது. (குட்டிக் குழந்தைகளுக் கான பூட்ஸ் இருமல் மருந்து பாட்டில்மேல்!)

6. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தலாம் (கிறிஸ்துமஸ் விளக்குகளின் பாக்கெட்மேல்). வேற பயன்பாடு இருக்கிறதா என்ன?

7. இதை அணிந்துகொண்டால் பறக்க முடியாது (குழந்தைகளுக்கான சூப்பர்மேன் உடைக்கான அட்டைப் பெட்டியின்மேல்!).

8. தலைகீழாக்காதீர்கள் (ஒரு பாட்டிலின் அடிப்பாகத்தில்).

This page is powered by Blogger. Isn't yours?