Sunday, June 08, 2003

 

தூள்.. மச்சி.. லபக்குதாஸ்..எத்தனை நாளைக்கு?


உலகத் தமிழ் ஆராய்ச்சி மையமும், மைய அரசின் விக்யான் பிரசார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இலாகாவும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் தலைப்பு 'தென்னிந்திய மொழிகளில் அறிவியலைப் பிரபலப்படுத்துவது' பற்றி! இரண்டாம் தினத்தின் முற்பகல் அமர்வில் தலைமை வகித்துப் பேச வாய்ப்புக் கொடுத்தார்கள்.

அறிவியலை திராவிட மொழிகளில் பரப்புவதில் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள சிரமங்களைச் சொன்னார்கள். தமிழில் பல ஆண்டுகளாக வரும் அறிவியல் இதழான 'கலைக்கதி'ருக்கு கட்டுரை எழுத யாரும் முன் வருவதில்லை என்று வருந்திய பேராசிரியர் மணி, தானே முழு பத்திரிகையை வெவ்வேறு பெயரில், நடைகளில் எழுதுவதாகச் சொன்னார். மாறாக, 'துளிர்' பத்திரிகையில் இவ்வாறான சங்கடங்கள் இல்லை, நிறைய பேர் எழுதுகிறார்கள் என்று அதன் ஆசிரியர் குழுவிலிருந்து சொன்னார்கள்.

மலையாளத்தில் அறிவியல் பற்றிய புத்தகங்கள் இரண்டாயிரம் பிரதிகள் எளிதில் விற்றுவிடுகின்றனவாம். 'தமிழிலும் விற்கலாம்.. எழுதத்தான் அதிக ஆட்கள் இல்லை' என்றேன். அறிவியலை இந்திய மொழிகளில் கொடுப்பதில் மற்ற மொழிகளில் உள்ள சிக்கல்கள்தான் தமிழிலும் உள்ளன. வார்த்தைகள் இல்லை, எழுதுபவர்களின் அறிவியல் அறிவைவிட தமிழறிவு குறைவு, யாருக்காக எழுதுகிறோம் என்பதில் குழப்பம், அறிவியலை அதிகமாக எளிமைப்படுத்தி அற்பமாக்குதல் ('அணுகுண்டு செய்வது எப்படி' என்று ஒரே பாராவில் சொல்ல முயல்வது - 'கொஞ்சம் யுரேனியம் எடுத்துக் கொள்ளவும்') துணுக்கு மனப்பான்மை, ஜோசியம், வாஸ்து, ஆவி சமாசாரம் போன்ற Pseudoscience கட்டுரைகள்... இவை எல்லாம்தான் பிரச்னைகள்.

இவையெல்லாம் தவிர்த்து அறிவியல் எழுதுவதில் உள்ள சந்தோஷங்களும் பிடிவாதமாக சிலர் இதைத் தொடர்ந்து செய்வதும் குறிப்பிட வேண்டியவை. டாக்டர் மணி, மருத்துவக் கட்டுரைகள் எழுதும் டாக்டர் என். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். வார்த்தைகளுக்காக காத்திராமல் அறிவியலை எழுதத் தொடங்கிவிட்டால், வார்த்தைகள் தானே வரும். செமினாரின் வெற்றியை பொறுத்தமட்டில் மைய அரசில் விக்யான் பிரசாரில் புதுசாக பணி ஏற்றிருக்கும் டாக்டர் வெங்கடேசுவரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இதில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

அன்றைய செமினாரில் நாற்பது பேர்தான். இருந்தாலும் அனைவரும் விஷயம் தெரிந்த வர்களாக இருந்தது நிறைவாக இருந்தது. டாக்டர் தெய்வநாயகம் தமிழில் கிரந்த எழுத்துகள் இருபத்தேழு இருப்பதாகச் சொன்னார். டாக்டர் எஸ்.வி. சுப்ரமணியன் சங்க இலக்கியங்களில் ரிமோட் சென்சிங் இருப்பதாகவும் கூவல் என்கிற வார்த்தை தரையடித் தண்ணீரைக் குறிப்பிடுவதாகவும் சொன்னார். அடிக்கடி சங்க இலக்கியத்தில் கிணறு என்பதற்கு 'கூவல்' பயன்படுகிறது. கூவம் என்பதும் தமிழ் வார்த்தைதான் என்று சொன்னார். சென்னைக் கூவமா?

இன்டர்நெட்டில் google போன்ற தேடியந்திரங்களில் எப்படி புத்திசாலித்தனமாக தேடுவது என்பதைப் பற்றி டாக்டர் மணி சொன்ன கருத்துகள் சில புதிதாக இருந்தன. வார்த்தைகளை lower case-ல் மேற்கோள் குறிக்குள் கொடுக்கவும். கூட்டல் கழித்தல் குறிகளைப் பயன்படுத்தவும். உலகத்தில் உள்ள அத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கொஞ்சம் முயன்றால் இலவசமாகப் பெறமுடியும் என்றார்.

விக்யான் பிரசார் அறிவியல் விஷயங்களை இந்திய மொழிகளில் எழுதுபவர்களின் 'யார் எவர்' தயாரிக்க வேண்டும்.

தெலுங்கில் அறிவியல் பத்திரிகையின் பெயர் என்ன தெரியுமா சிக்கிமுக்கி! என்னுடைய செல்ல ப்ராஜெக்ட் - ஆம்னி, டிஸ்கவர் மாதிரி தமிழில் ஒரு அறிவியல் இதழ் ஆரம்பிப்பது. யார் குடுமியாவது அகப்படுமா பார்க்கிறேன்... சிக்கவில்லை!

சில ஆண்டுகளுக்குமுன் ஆல் இண்டியா ரேடியோ திருவேங்கடம் அவர்களின் அழைப்பில் மதுரை வானொலி நிலையம் துவங்குமுன் சென்றிருந்தேன். மதுரை ஜயபாஸ்கரனுடன் சிறந்த ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார் (அதன் டேப் காணாமற் போய்விட்டது. பேராசிரியர் ஞானசம்பந்தனுடன் செய்ததாவது பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்). அப்போது அங்கே வானொலியில் பணிபுரிபவர்களுடன் பேசுகையில் 'டெல்லி அரசு பி.இ.எல்-லில் செய்த ரோட் அண் ஷ்வார்ட்ஸ் கம்பெனியின் எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை வாங்கிப் போட்டிருக்கிறதே, என்ன செய்யப் போகிறார்கள்?' என்று கேட்டேன். 'இப்போதுதான் ஒவ்வொன்றாக அலாட் ஆகிக்கொண்டிருக்கிறது' என்றார்கள். எதிர்காலத்தில் எஃப்.எம்.தான் ரேடியோவுக்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறது என்று அமெரிக்க உதாரணத்துடன் அப்போதே ஹேஷ்யம் சொன்னேன். அது இப்போதுதான் பலித்திருக்கிறது.

நாங்கள் தந்த அந்த எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்கள் கொஞ்ச வருடங்கள் தூங்கின. தற்போது தனியார் ரேடியோக்களுக்கு கட்டணத்தின் பேரில் லைசென்ஸ் கொடுக்கப்பட்ட தும் எஃப்.எம்-முக்கு ராஜகுமார முத்தம் கிடைத்து, இப்போது இளைஞர்கள் கொஞ்சமாக கொஞ்சிப் பேசி நிறையப் பாட்டுக்கள் போட்டு எல்லா நகரங்களிலும் ரேடியோ கேட்க வைத்துவிட்டார்கள்.

சென்னையில் மிளகாயும் சூரியனும் தூள் கிளப்புகிறார்கள், வேர்க்குரு விளம்பரத்தை ரஹ்மான் ரேஞ்சுக்குப் பாடுகிறார்கள். இந்த அலை எத்தனை நாள் தாங்கும் என்பதை கொஞ்சம் ஆராயலாம். தொடர்ந்து அதற்குத் தனி அடையாளம் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிக்கலாம்.

இவர்கள் ஒலிபரப்புவதெல்லாம் பெரும்பாலும் சமீபத்திய சினிமா பாட்டுகள். ஒரு மணி நேரம் தொடர்ந்து கேட்டால் அவற்றில் உள்ள பொதுவான சந்தமும் உடுக்கையடியும் பறையலியும் காலி வார்த்தைகளும் தெளிவாகிவிடும்.

கொஞ்ச நாளில் (என் கணக்குப்படி மூணு மாசம்) தமிழ் சினிமாவின் அத்தனை பாட்டுக்களும் போட்டு முடிந்துவிடும். புதுசாக படங்கள் வந்தால்தான் உண்டு என்றாகிவிடும். எல்லா பாட்டுகளும் மக்களுக்கு நெட்டுருவாகிவிடும். கைக்குழந்தைகள் 'காதல் பிசாசே பருவாயில்லை' என்று பாடினால்தான் பால் சாப்பிடும். அதன்பின் இது Repetitive ஆகும்.

அப்போதுதான் கொஞ்சல் பாஷையும் மெட்ராஸ் பாஷையும் சோமாரி, கேப்மாரி, கலசல், கலாய்த்தல் போன்ற தூய தமிழ் வார்த்தைகளின் எட்டிமாலஜியை ஆராய்வதும். 'சரிதான், மேட்டர் என்ன?' என்று கேட்கத் துவங்கு வார்கள். 'இந்தப் படத்துக்கு போகாதீங்க. இது செம போர்' என்று எஃப்.எம்-காரர்களுக்கு வாழ்வளிக்கும் சினிமாவையே சாகடிப்பது நல்லதல்ல என்பதை மக்கள் உணர்வார்கள். ரேடியோவின் மற்ற பரிமாணங்களைத் தேடுவார்கள். அப்போது டாக்டர் சேயோன் போன்றவர்களுக்கு மறுபடி தேவை ஏற்படும்.

அமெரிக்காவின் எஃப்.எம். ரேடியோ பாணியை இவர்கள் ஓரளவுக்குத்தான் பின்பற்றுகிறார்கள். அங்கே ஒவ்வொரு பாட்டு வகைக்கும் தனி சேனல் இருக்கிறது - ராக், பாப், ரெக்கே, டெக்னோ, கிளாஸிக்கல், கண்ட்ரி, ஆர்அண்பி என்று. இதனுடன் வெறும் செய்திகளுக்கே சேனல் இருக்கிறது. குழந்தைகளுக்கு, இஸ்லாம் பற்றி அறிய விரும்புபவர் களுக்கு, பெண்களுக்கு, விடியும்வரை தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகளுடன் பேச விரும்பு பவர்களுக்கு இப்படி. ரேடியோ அறிவிப்பாளர்கள் திறமையானவர்கள், குரலிலேயே பரிவுள்ளவர்கள். இவர்கள் குறுக்கீடு தனிமையில் வாடும் பலருக்கு ஆறுதலாக இருக்கும். அந்த ரேஞ்சுக்கு வர இவர்களுக்கு மொழியில் ஆளுமை போதாது. வெறும் தூள், மச்சி, லபக்கு தாஸ் வைத்துக்கொண்டு அதிக நாள் காலம் தள்ள முடியாது. கொஞ்ச நாளில் எஃப்.எம். காரில் செல்லும்போது ஓர் உறுத்தாத பின்னணி லெவலுக்கு தள்ளப்படும். Radio gaga என்கிற எண்பதுக்களில் மிகப் பெரிய ஹிட்டான காலஞ்சென்ற க்வீன் என்பவரின் பாடலில் -

Dont become some background noise
A backdrop for the girls and boys
Who just dont know or just dont care
And just complain when you are not there
You had your time you had the power
You are yet to have your finest hour
All we hear now is radio gaga

எத்தனை உண்மை!

'ஹைக்கூ' கவிதை இதழின் இரண்டாவது ஆண்டு மலரில் தேடி எடுத்த ஹைக்கூக்கள் இவை. நிஜ ஹைக்கூ என்பதற்கு என் வரையறைகள் இவற்றிலிருந்து புரியும் என்று எண்ணுகிறேன்.

கதிர் அறுத்த வயலில்
தனியே நிற்கும்
காவல் பொம்மை
- மித்ரா

('தனியே' என்பது என் திருத்தம். ஒரிஜினலில் 'அனாதையாய்' என்றிருக்கிறது).

சந்திப் பிழையோடு எழுதியது
யாருக்குமே தெரிந்திருக்காது
தண்ணீர்
- இரா. பால்பாண்டி.

அறிவியல் ஆய்வுக்கூடம்
வெளியே தொங்கும்
திருஷ்டிப் பூசணி
- நா.கவிகுமார்

And the best:

மின் தடை வீதி
எங்கும் வெளிச்சம்
பௌர்ணமி
- தமிழ்ப்பித்தன்<< Home

This page is powered by Blogger. Isn't yours?