Sunday, July 27, 2003

 

'இப்பல்லாம் நீங்க எழுதறதில்லையா?'


முதலில் இரண்டு கடிதங்கள். உமர்கய்யாமுக்கு மற்`றாரு மொழி பெயர்ப்பு உள்ளது. சாமி சிதம்பரனாரின் 105 எழு சீர் விருத்தங்களை ஓர் அன்பர் ஜெராக்ஸ் அனுப்பியிருந்தார்.

உதாரணம் -

'இரவுபகல் கோடுள்ள சதுரங்க உலகத்தே எள்ளளவும் சக்தியில்லா சிறு தாயக் கட்டைகளால் விளையாடல் சில பண்ணி அலைகின்றான் இங்கும் அங்கும்'

இதோடு ரூபாயத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் ஐந்தாகிறது.

விசுவின் 'அரட்டை அரங்க'த்தில் துளு நாடு பற்றிப் பேசிய பெண்மணி கடிதம் எழுதியிருந்தார். 'நான் நல்ல பேச்சாளியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் மற்ற அறிஞர்கள் சொன்ன கருத்துக்களையே பயன்படுத்தினேன். தப்பாக இருந்தால் அவர்கள்தான் காரணம்‘ என்று எழுதியிருந்தார். 'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற குறளைத்தான் இந்தப் பெண்ணுக்கு சிபாரிசு செய்கிறேன். துளு மொழியைப் பற்றியும் அந்த ஜனங்களைப் பற்றியும் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாவிட்டாலும் எந்த 'இயர் புக்'கில் பார்த்தாலும் மெய்ப்பொருள் தெரிந்திருக்கும்.

'தேஜஸ்வினி' என்ற சிறுகதையை எழுதி ஏறக்குறைய ஒரு வருஷமாகி விட்டது. இடையே 'கற்றதும் பெற்றதும்‘, 'ஏன் எதற்கு எப்படி‘ போன்ற விஷயங்களை எழுதி வந்திருக்கிறேன். புறநானூறுக்கு ஓர் எளிய அறிமுகம், திரைக்கதை எழுதிய என் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு புத்தகம், என் சகோதரர் ராஜ கோபாலனுடன் சேர்ந்து பிரம்ம சூத்ரத்துக்கு விளக்கமும் எழுதி வருகிறேன். இவ்வளவு எழுதியும் என்னை தற்செயலாக சந்திக்கிறவர்கள், 'இப்பல்லாம் நீங்க எழுதறதில்லையா' என்கிறார்கள்... அல்லது 'இப்ப எதுல எழுதிட்டிருக்கீங்க' என்கிறார்கள்.

இரண்டு கேள்விகளும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பரிச்சயமாக இருக்கும். கேட்பவர்களிடம் 'நீங்க விகடன் படிக்கிறீங்களோ? ஜ$.வி. பாக்கறீங்களோ? பக்தி பார்ப்பீங்களோ..?‘ என்று கேட்டு இத்தனாம் பக்கத்தில் நான் எழுதியது வந்திருக்கிறது என்று சொல்லி மூதரித்தாலும் 'இப்பல்லாம் கதை எழுதறதில்லையான்னுதான் கேட்டேன்' என்பார்கள்.

உண்மைதான். என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்து தான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்.

சில நாட்களுக்கு முன் இந்த பயத்தில் ராத்திரி விழித்துக்கொண்டு விட்டேன். உடனே சிறுகதை எழுதத் துவங்கினேன். தொடர்ந்து, பத்திரிகைகளுக்கு காலக்கெடுவுக்குள் அனுப்ப வேண்டிய கட்டாயம் எதுவும் இன்றி நிறுத்தி நிதானமாக ஒரு பத்துப் பன்னிரண்டு சிறுகதைகள் எழுதிப் பார்க்கத் தீர்மானித்தேன். மாதக் கணக்கில் மெள்ள மெள்ள அவற்றை எழுதலானேன் நான். ஆரம்ப எழுத்தாளனாக இருந்த அதே சுதந்திர நிலையில் எழுதினேன்... எல்லாமே ஸ்ரீரங்கத்துக் கதைகள்!

விகடனில் வந்த என் முதல் சிறுகதை 'சில வித்தியாசங்கள்'. கதை வந்து சேர்ந்ததற்கு முதலில் டைப் அடித்த கடிதம் வரும். அதன்பின் கதை அங்கீகரிக்கப்பட்டதும் ஒரு கடிதம் வரும். அதன்பின்தான் கதை வெளிவரும்.

ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு ஒரு முறை எழுதிவந்தவன் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குமுன் 'சாவி' இதழில் தொடர்ந்து எழுதிய கதைகள் ஸ்ரீரங்கத்து தேவதைகள்'. இவற்றுக்கும் இப்போது வரப்போகும் ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கிறேன். அந்தப் பழைய வியப்பும் ஒரு wide eyed wonderம் இதில் கொண்டுவர முயன்றால் அது செயற்கையாகிவிடும்.

இடைப்பட்ட காலத்தில் நானும் என் எழுத்தும் எவ்வளவோ மாறியிருக்கிறோம். பெற்றோரை இழந்திருக்கிறேன். கைவிட்டகேஸாக ஆஸ்பத்திரியில் மூச்சுத் திணறியிருக்கிறேன். 'வில்‘ எழுதச் சொல் தேடியிருக்கிறேன். நடு நாட்களில் இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். மேல் நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். நிறைய நிறையவே மற்றவர் கதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். சிறு குழந்தையின் சிரிப்பிலிருந்து பெரியவர்களின் கயமை வரை உணர்ச்சிகளின் முழு நிற மாலையையும் அனுபவித்திருக்கிறேன். சிறந்த சினிமா டைரக்டர்கள், பேச்சாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், சிறந்த மனிதர்கள், பானங்கள், மலை வாசஸ்தலங்கள், ஆறுகள், ஏரிகள், குற்றமற்ற சுகவாழ் வின் அத்தனை சந்தோஷங்களையும் பார்த்திருக்கிறேன். மெள்ள மெள்ள வாழ்வின் கடைசி அர்த்தத்தை வியந்திருக்கிறேன். துரோகத்துடனும் நிஜ நட்புடனும் பொறாமையுடனும் பரிச்சயம் பெற்றிருக்கிறேன்.

இத்தனை பார்த்தும் அடித்தளத்தில் ஸ்ரீரங்கம் என்னும் கலாசார அடையாளம் என்னை விட்டு விலகாமல் இருந்திருக்கிறது. அதை மறுபடி உயிர்ப்பிக்க எனக்கு எப்பவுமே முடிகிறது. ஆனால், இருநூறுக்கு மேற்பட்ட கதைகளால் எத்தனையோ மனங்களை எத்தனையோ விதங்களில் பாதித்துவிட்டதால், இன்று நான் எழுதும் கதைகள் ஆரவாரமில்லாமல் சொல்லப்படுகின்றன. நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன. வானவில் கனவுகள் நிறமிழந்துவிட்டது தெரிகிறது. யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது குறைகளும் மேம்பாடுகளும் நான் முந்தி நீ முந்தி என்று கதையில் இடம்பிடிக்கத் தவிக்கின்றன. இவற்றைக் கலந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வாழ்வெனும் போராட்டத்தில் பல சங்கதிகள் உள்ளன. don't give up on life and rectitude என்பதுதான் என் கதைகளின் அடிநாதமாக வருகின்றன. இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லோரும் ஸ்ரீரங்கத்துக்காரர்கள்தாம். ஆனால், இன்னாரைப் பற்றி எழுதியிருக்கிறான் என்று சொல்ல முடியாதபடி இவர் கொஞ்சம், அவர் கொஞ்சம், இவள் கொஞ்சம், அவள் கொஞ்சம், இது கொஞ்சம், அது கொஞ்சம் என்று என் சொந்தச் சமையலறைக் குறிப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கதைகள். அதனால் கதாபாத்திரங்கள் யாரைப் போலவும் இருக்காது. எல்லோரையும் போலவும் இருக்கும். இந்த வித்தை ஓர் எழுத்தாளனின் தொழில் ரகசியங்களில் ஒன்று. மற்றது எழுத்து நடை.

அண்மையில் மாணவர் திட்டத்துக்காக புதிய செட் இளைஞர்களை விகடன் ஆசிரியர் தேர்வு செய்த போது, எல்லோரும் விகடனில் முதலில் படிப்பது 'கற்றதும் பெற்றதும்'தான் என்று சொன்னார்களாம். அதை ஆசிரியர் அவர்கள் போனில் சொன்னபோது, நான் ''ரொம்ப சந்தோஷம் சார். கொஞ்ச காலத்துக்கு அதற்கு இடைவெளி கொடுக்க விரும்புகிறேன்'' என்றேன்.

''ஏன்?'' என்றார் வியப்புடன்.

''ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஏறத்தாழ பதின்மூன்று கதைகள் எழுதி விட்டேன். அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் தொடர்ந்து பிரசுரித்து விட்டு பிறகு 'கற்றதும் பெற்றதும்' தொடரலாம்'' என்றேன். ஆசிரியர் யோசித்துச் சொல்கிறேன் என்றார். மறுதினம் ''செய்யுங்கள் அதுவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், 'கற்றதும்‘ அதன்பின் தொடர வேண்டும்'' என்றார்.

இம்மாதிரியான ஆசிரியரை நண்பராகப் பெற்றது என் வாழ்வின் பாக்கியங்களில் ஒன்று. சிலர் இரண்டையுமே எழுதுங்களேன் என்று கேட்கலாம். அது கூடாது! திகட்டிப் போய்விடும். மேலும் விகடனில் இடம் பெறுவதற்கு எத்தனையோ ஆர்வமுள்ள திறமையுள்ள இளம் எழுத்தாளர்கள் காத்திருக்கும்போது ஒருவரே நிறைய எழுதுவது தகாத செயல்.

எனவே என்னருமை வாசகர்களே, 'கற்றதும் பெற்றதும்' பகுதிக்கு அழகான தற்காலிகமான முடிவுரையாக கே. சாரதியின் கவிதை.

பெரும்பாலும் புதுக் கவிதைகளில் அகத்துறைப் பாடல்கள் போல பெயர்கள் வாரா. பழமலய்தான் முதன் முதலாக புதுக்கவிதையில் பெயர்களை குறிப்பிட்டவர் (சனங்களின் கதை)

கவிஞர் கே. சாரதி, மகாலக்ஷ்மி, வளர்மதி, ஷகில் என்று பெயர்களை குறிப்பிடுகிறார். அவர்கள் கோவித்துக் கொள்ளாமலிருக்க 'பார்த்து பயன்படுத்தியுள்ளதாக'ச் சொல்கிறார்.

இந்த என் அறைக்குள் நிரம்பும்
சகல சப்தங்களும்
அர்த்தம் பொதிந்தவை.
இருப்பை வெளிப்படுத்துபவை.
இயக்கங்களை அடையாளம்
காட்டுபவை.
சூட்கேஸ#டன் வளர்மதி
வந்திறங்கப் போவதில்லை
என்றாலும்,
என்னை ரொம்பவும்
பரபரப்பாக்குகிறது
ஆட்டோ நிற்கிற சப்தம்.
இரண்டாவதாக
தபால்காரரின் சைக்கிள் சப்தம்

இந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள 'முதல் செமஸ்டர்' என்பதை ஒரு நல்ல சிறுகதையாகத்தான் பார்க்கிறேன் (உனக்கான செய்தி ஒன்று - ரோஜா பதிப்பகம், கும்பகோணம் - 612 001).

அதேபோல நெல்லை கண்ணன் அனுப்பி வைத்த 'குறுக்குத்துறை ரகசியங்க'ளும் நல்ல சிறுகதைகளே - 'நடைச் சித்திரங்கள்' மட்டுமல்ல...

திருநெல்வேலித் தமிழின் உண்மையான வடிவத்தை இந்த 'அண்ணாச்சி - ராவன்னா' கதைகளில் பார்க்க முடிகிறது (வேலுக் கண்ணன் பதிப்பகம் திருநெல்வேலி-627 006.)

Sunday, July 20, 2003

 

லஞ்சம் வாங்குகிறவன் தலையை யானையின் காலால்...


லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக 'கையூட்டு' என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் 'சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்' என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் 'The Cholas'ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்... அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் 'இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து இருக் கிறதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங் கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் 'சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு' என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.

லஞ்சம் - தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. 'வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்' என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்... எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.

மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு - லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்`றாரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்`றாருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு 'ஸாஷே' அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் - இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், 'நமக்கேன் வம்பு' என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் - பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.

கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் - தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.

முதல் வகையான 'பெட்டி கரப்ஷன்' என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் - ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். 'ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன் மெண்ட்' என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. 'தெஹல்கா' போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி - ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக - 91 வயதில்!

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!

Sunday, July 13, 2003

 

வரம்புகளுக்குள் ஒரு சுவையான கதை!


இரண்டு வாரங்களுக்கு முன் நாகூர் ரூமியின் உமர் கய்யாம் மொழி பெயர்ப்பைப் பற்றி எழுதியிருந்தேன். ரூபயாத்தின் 190 கவிதைகளை அ.மா. ஜெகதீசன் என்பவரும் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறாராம். இது நான்காவது மொழிபெயர்ப் பாகிறது. வேறு யாராவது செய்திருந்தால் எனக்கு ஒரு சாம்பிளுடன் தெரிவிக்கலாம்.

அதேபோல் சென்ற வாரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பேட்டியின் டேப் நான் எழுதியது போல் ஆல் இந்தியா ரேடியோவில் 'ஏதோ ஒரு மூலையில்' இல்லை... நடுவிலேயே அவர்களின் ஆர்க்கைவ்ஸ் கருவூலத்தில் இருக்கிறது என்றும் அந்தப் பேட்டி அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது என்றும் அதன் டி.டி.ஜி. திரு. பி.ஆர். குமார் கடிதம் எழுதியிருக்கிறார்.

'விசில்' படம் இந்த வாரம் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவின் தேவைகள், அடையாளங்கள் என்று சில சமாசாரங்கள் உள்ளன. அஞ்சு பாட்டு, இடுப்பு டான்ஸ், ஃபைட், விவேக் காமெடி என்ற இந்த வரம்புகளுக்குள் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்ல முயன்றிருக்கிறோம்.

கி. ராஜநாராயணனின் நாட்டுப்புறப் பாலியல் கதைகளில் வெற்றிலை பற்றிய கதையையும் டாக்டர் சண்முக சுந்தரம் (காவ்யா) தொகுத்த புத்தகத்தி லிருந்து 'பாலம்மாள் கதை'யையும் படத்தில் உறுத்தாமல் நுழைத்திருக்கிறோம். இப்படிக் கலந்து கொடுத்தால்தான் பார்க்கிறார்கள். 'விசில்' ஒரு திரில்லர். திரில்லரில் ஒரே ஒரு பிரச்னை... முடிவு தெரிந்துவிட்டால் 'ரிப்பீட் ஆடியன்ஸ்' இருக்காது என்று சிலர் சொல்கிறார்கள். இது ஒரு சப்பைக்கட்டு. ரிப்பீட் ஆடியன்ஸை நம்புவதை தமிழ் சினிமா எப்போதோ கைவிட்டுவிட்டது. இப்போது அப்பீட் ஆடியன்ஸை தியேட்டருக்கு அகத்திக்கீரை காட்டி அழைத்து வருவதுதான் முதல் சவாலாக இருக்கிறது!

நன்றாக விளம்பரப்படுத்தப்பட்டு நல்ல டைரக்டர், ஸ்டார் வேல்யூ இருந்தால் படத்தை முதல் வாரத்தில் பார்க்க மகாகனம் பொருந்திய பொதுஜனம் பெரியமனது பண்ணுகிறார். பார்த்து படம் நன்றாக இருந்தால் தன் நண்பரான உபபொதுஜனத் திடமும், ஜனியிடமும் சொல்கிறார். வாய்மொழிப் பரவலில் படத்துக்கு ஆதரவு பெருகுகிறது. போட்ட பணம் வந்தால் முதலாளிகள் சந்தோஷப்பட்டு அடுத்த படத்தை அறிவிக்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். டிஸ்ட்ரிபியூட்டர்கள் அட்வான்ஸ் கொடுக்கத் தயங்குகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் வெற்றிப்படம் என்பது ஒரு அரிய பறவையாக இருப்பதும் மகாலிங்கபுரம் முழுக்க அல்பாயுசுப் படங்கள் தகரப் பெட்டிகளில் உறங்குவதும்தான்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற சினிமாப் பழக்கம் மெள்ள மாறி வருகிறது. சின்ன தியேட்டர்களில் சௌகரியமான இருக்கைகளில் ஏ.ஸி. சுகத்தில் டிக்கெட் வாங்க தொந்தரவு இல்லாதிருந்தால், முடிந்தால் வீட்டில் வந்து டிக்கெட் கொடுத்தால் ஜனங்கள் படம் பார்க்க வருகிறார்கள். இல்லையேல் வீட்டில் டி.வி.டி-யிலும், வி.சி.டி-யிலும் ப்ரிண்ட் மழையாக இருந்தாலும் போதும் என்று பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் அதுகூட பிரச்னை இல்லை. திருட்டு வி.சி.டி. அச்சுக்கொட்டினாற்போல் தெரிகிறது. அவ்வளவு தொழில்நுட்பம். ஹோம் தியேட்டர்களின் திரையளவும் ஒலி நுட்பமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலை மாற்றத்துக்கு ஆதார காரணம் சென்னை போன்ற நகரத்தில் வெளியே வருவது, செல்வது, பஸ் பிடிப்பது, வாகனம் ஓட்டுவது, நடக்க இடமே இல்லாத தெருக்களில் உயிரைப் பிடித்துக்கொண்டு குறுக்கே கடப்பது எல்லாம் பெரும்பாடு. எதற்காக இந்த அல்லல் என்று சொல்லத் தோன்றுவது நியாயமே.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு சின்ன டிஜிட்டல் தியேட்டர் மட்டும் இருக்கும். ஹோம் விடியோ மார்க்கெட் ஒழுங்குபடுத்தப்படும். குடும்பத்துடன் பிக்னிக் போல விடுமுறை நாளைக் கழித்துவிட்டு வர விரும்புபவர்கள் மட்டும், அமெரிக்கா போல, ஊருக்கு வெளியே உள்ள நல்ல தியேட்டர்களுக்கோ மால்களுக்கோ போய் சாப்பிட்டுவிட்டு, விளையாடிவிட்டு, படம் பார்த்துவிட்டு வருவார்கள். குறைந்த செலவில் எடுக்கப்படும் நல்ல படங்களுக்குப் புது மதிப்பு வரும். வரவேண்டும்!

பிரம்ம சூத்திரத்தைப் பற்றி கட்டுரைத் தொடர் எழுதுவதால் ஒரு நடை ஸ்ரீபெரும்புதூர் செல்லுமுன் வடுக நம்பி இயற்றிய 'யதிராஜ வைபவ'த்துக்கு ஸ#தர்சனரின் பொழிப்புரையை ஒரு முறை படித்துக்கொண்டேன். ராமானுஜரின் அவதார ஸ்தலம். (அவரே அங்கீகரித்த) அழகிய விக்கிரகம். ஞாயிற்றுக் கிழமையாதலாலும், சென்னைக்கு 47 கிலோமீட்டர்தான் என்ப தாலும் பக்தர்கூட்டம் இருந்தது. அழகாக அமைக்கப்பட்ட கோயில் முகப்பில் திருவல்லிக்கேணி கோயிலைப் போல நிழல்தரும் மண்டபம். பிராகாரம் முழுவதும் சுவர்களில் ராமானுஜரின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தஞ்சாவூர் வகை சித்திரங்களாக அமைத்து தெலுங்கில் விளக்கம் எழுதியிருக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூருக்கு இந்த நாட்களில் கூடுதலாக இரண்டு முக்கியத்துவங்கள் ஏற்பட்டுள்ளன. ராஜீவ்காந்தியின் நினைவிடம், ஹ$ண்டாய் போன்ற கார் உற்பத்தியின் மையஸ்தலம். ஊருக்கு வெளியே ஏக்கர் கணக்கில் பரவிக்கிடக்கும் தொழிற்சாலை வாசலில் ஏற்றுமதி-இறக்குமதிக்காக காத்திருக் கும் மெகா கண்டெய்னர்கள் பார்த்தாலே மகாநடுக்கமாக இருக்கிறது. ராஜீவின் நினைவிடத்தைப் பார்க்கும் போது கலக்கமாக இருக்கிறது. ராமானுஜரின் ஜன்ம ஸ்தலத்தில் உயிரிழந்த அவர் மரணத்தின் பல ஏன்கள் இன்னும் விடையில்லாமல் அந்தர வெளியில் பளபளப்பில் ஒளிர்ந்தன.

எம்பெருமானார் என்று அழைக் கப்படும் ராமானுஜர் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஜீனியஸ். பிரம்ம சூத்திரத்தின் வியாக்கியானங் களாக ஸ்ரீ பாஷ்யம், கீதையின் வியாக்கியானமான கீதா பாஷ்யம் போன்றவை அவரது முக்கியமான நூல்கள். ஆதிஅந்தமற்ற வேதவாக்கியங்களுக்கு முரண்படாத பொருளை விளக்கினவர். விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நிறுத்தியவர். ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் எனக்கு மிகவும் வியப்பளிக்கும் விஷயம், அவர் யாதவப் பிரகாசர் என்கிற முதல் குருவிடமிருந்து தப்பித்ததுதான். குரு சொன்ன விளக்கங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி மாயா வாதத்திலிருந்து மீண்டு, குரு பொறாமையால் தன்னைக் கொல்ல முயற்சித்ததிலிருந்து தப்பித்து பின்பு அவரையே தன் சிஷ்யராக ஆக்கியதுதான் ராமானுஜர் வாழ்வின் பெரிய சாதனை. ஆனால், இதற்காகவெல்லாம் மக்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவதாகத் தெரிய வில்லை. ஒவ்வொரு மாதமும் அவர் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரையில் வந்து சேவித்தால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறுமாம். சித்திரை மாதம் இன்னும் விசேஷமாம்!

எல்லா குடும்பங்களிலும் குறைந்தபட்சம் ஒரு தடைபட்ட திருமணமாவது இருப்பதால் எப்படியோ கோயிலுக்கு வருமானம் வந்தால் சரி.

'இலக்கிய வீதி'யின் வெள்ளிவிழா நிறைவாக சொல்கேளான் (ஏ.வி. கிரி) கவிதைகள் நூல் வெளியீட்டின் அழைப்பிதழ் வந்தது. வரவேற்பில் இனிப்பு மிட்டாய்க்கு பதில் இஞ்சி மிட்டாய், அரங்கில் தேநீருக்கு பதில் சுக்குக்காபி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கேக்களுக்கு பதிலாக புதினாக் கீரைக்கட்டு, முதல் நூல் பெற பார்வையற்ற சகோதரி சுப்புலட்சுமி போன்ற புதுமைகள் இருப்பதாகத் தெரிந்தது.

சொல்கேளான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்த கவிதைகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது.

அழகான நெற்றியில்
கலையாத சந்தனப் பொட்டு
சட்டைப்பையில்
நான்காக மடித்த காகிதத்தில்
விபூதி குங்குமம்...
கையிலும் கழுத்திலும்
இடுப்பிலும்
வளம் தரவும் நலம்பெறவும்
மகான்கள் மந்திரித்துத் தந்த
கயிறுகள்... தாயத்துகள்
முகவரி மட்டும் இல்லை
பொது மருத்துவமனையில்
சவக்கிடங்கில்
அநாதையாக

இந்தக் கவிதையின் எட்டாவது ஒன்பதாவது வரிகளை நீக்கிப் படித்துப் பார்த்தால் சிறப்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் ஓ போடுங்கள்!

Sunday, July 06, 2003

 

ஹாலிவுட்டலாச்சார்யா!


பெங்களூரில் நீண்ட நாள் முன் பரிச்சயமாகியிருந்த நிருபமா ரூபா தொரே தற்போது லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறார். அவர் மகள் ஷாலினி தொரே, பிரசித்த Variety இதழில் அசிஸ்டண்ட் மானேஜிங் எடிட்டராக இருக்கிறார். கான் விழாவின் பாலிவுட் சிறப்பிதழை அனுப்பியிருந்தார்.

பாலிவுட் திரைப்படங்கள் பலவற்றுக்கு ஆரவாரமான விளம்பரங்கள் அதில் இருந்தன. சென்ற ஐந்து ஆண்டுகளில் மிக அதிகம் வசூலில் சாதனை செய்த படங்கள் மூன்று. 'கதர் ஏக் ப்ரேம் கஹானி' - 60 மிலியன் டாலர், 'கபி குஷி கபி கம்' - 48, 'லகான்' - 40.

அதே இதழில் 'மேட்ரிக்ஸ் ரீலோடட்' பற்றிய ஒரு புள்ளிவிவரம் வியக்க வைத்தது. உலகெங்கிலும் 3603 தியேட்டர் களில் ஒரே சமயத்தில் இது ரிலீஸ் செய்யப்பட்டதாம். இந்தப் படத்தைப் பார்த்தீர்களோ? 'மரணப்பிடி' என்று தமிழ் டப்பிங்கிலும் வந்திருக்கிறது. கதாநாயகனும் அவன் அவ்வப்போது முத்தம் கொடுக்கும் கதாநாயகியும், கறுப்பர்கள் சிலரும் தான் நிஜமனிதர்கள். மற்ற அனைவரும் அடிக்கடி மார்ஃப் ஆகும் மனிதரூப மெஷின்கள். அவற்றின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க எல்லாத் திறமைகளும் அபரிமிதமாகக் கொண்ட கதாநாயகன் கியானு ரீவ்ஸ் மேட்ரிக்ஸைச் செலுத்தும் மூலத்தைத் தேடிச் செல்ல... ஒரு சீனக்கிழவனிடமிருந்து சாவி செய்து கதவைத் திறக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு திரிகிறது கதை.

கியானு ரீவ்ஸ#டன் வில்லன் சண்டை போடும்போது தோற்கப்போகிற வேளையில் 'இன்னும் கொஞ்சம் நான் வேணும்' என்கிறான் வில்லன். பத்துப் பேர்... நூறு பேர்... ஐந்நூறு பேர் தாக்க வருகிறார்கள். எல்லாரும் ஒரே சாயலில். இதில் நிஜவில்லன் யார் என்று எப்படி கண்டுபிடித்துச் சாகடிப்பது? இதையே நாம் செய்தால் விட்டலாச்சார்யா படம். ஹாலிவுட் செய்தால் கிராபிக்ஸ் கலக்கல்!

மரணப்பிடி என்பதற்கு பதில் 'தலை சுற்றல்' என்று பெயர் வைத்திருக்கலாம். எல்லாருமே மறைமுகக் கம்பிகட்டி வானில் பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள்.

ஆசிரியர் அடித்ததற்காக ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி சென்ற வாரம் நெஞ்சங்களைக் கலக்கியது. அடித்துச் சொல்லித் தருவதின் தீமைகளை விலாவாரியாக சமூகத்தில் பல நிலையில் உள்ளவர்கள் ஆராய்ந்தார்கள். 'அந்தப் பள்ளியின் மேல் மனித உரிமை மீறல் வழக்குப் போடவேண்டும். அதை இழுத்து மூடி விடவேண்டும்' என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

எங்கள் மாணவப் பருவத்தில் வாத்தியார் அடிப்பது என்பது பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், வீட்டுப் பாடம், கால்வருட - அரை வருடப் பரீட்சை, மழையில் நனைவது, வீதி கிரிக்கெட், விடுமுறை போல பள்ளி நாட்களின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.

எங்கள் கிளாஸ் டீச்சர் தன் ஜிப்பாவுக்குள் ஒரு சிறிய மணிப்பிரம்பு ஒளித்து வைத்திருப்பார். அதை சின்ன வாத்தியார் என்பார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தன் கையை பாக்கெட்டுக்குள் கொண்டு போகும்போது 'இன்னிக்கு யாருக்குடா பலி?' என்று கதிகலங்குவோம். மற்`றாரு சார் மாணவனைக் கீழே போட்டு wwf ரேஞ்சுக்கு குதிப்பார். பிறிதொருவர் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு முதுகில் பளேர் என்று அறைவது ஹெட்மாஸ்டர் ரூம் வரை கேட்கும். சில வாத்தியார்கள் 'ணங்' என்று குட்டுவது, கொஞ்ச நேரம் கண்ணுக்குள் பூச்சி பறக்கும். இன்னும் சிலர் ஏறக்குறைய ரத்தம் வரக் கிள்ளுவார்கள். இதை வீட்டில் போய்ச் சொன்னால் 'வாத்தியார் அடிக்கும்படியாக என்னடா விஷமம் பண்ணினே?' என்று வீட்டிலும் உதை விழும் என்பதால் வாத்தியார் அடித்து வலித்த இடத்தில் அழுத்தித் தடவிக் கொண்டு, ரத்தக்காயமென்றால் எச்சில் துப்பிக் கொண்டு விளையாடப் போய்விடுவோம்.

அந்தக் காலத்தில் அவ்வளவு கடுமையாகத் தண்டனைகள் இருந்தபோதிலும் எவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சரித்திரம் இல்லை. இப்போது என்ன ஆயிற்று என்று யோசித்தால், தற்கொலைக்குக் காரணம் பள்ளிக்கு வெளியே இருக்கிறது என்பதைச் சொன்னால் சிலருக்கு வியப்பாக இருக்கும்.

பொதுவாகப் பள்ளிப்பிள்ளைகளின் மேல் பெற்றோர் தரும் மன அழுத்தம்தான் இதற்கு ஆதாரக் காரணம். பெற்றோருக்கு இந்தப் போட்டி உலகத்தில் தங்கள் பிள்ளைகள் வெற்றிபெற நன்றாகப் படித்து, நிறைய மார்க்குகள் வாங்கவேண்டுமே என்கிற டென்ஷனும் எதிர்பார்ப்பும் குழந்தை பிறந்த சில மாதங்களிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இந்தக் காலத்தில் அப்ளிகேஷன் வாங்குவதற்கே தந்தை அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து ஜமக்காளம் விரித்துப் பள்ளி வாசலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் கலையாத, இன்னும் பால் மறக்காத சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் டெஸ்ட், இன்டர்வியூ என்று வைத்து கடித்துக் குதறப்படும் பெற்றோர் நகங்கள். மேலும் தினம் பெற்றோருக்கே கஷ்டமான ஹோம்வொர்க். அதிகாலைத் துயிலெழுப்பல். வேன் வருகிறதா என்ற பரபரப்பு. போகிற போக்கில் வாயில் திணிக்கப்படும் உணவு, கிழமைக்கு ஏற்ப மாறும் யூனிஃபார்ம், பாட்டு கிளாஸ், கராத்தே கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் என்று பிள்ளை களை இயல்பாக வளரவிடாமல் ஏறத்தாழ எல்.கே.ஜி. வகுப்பில் இருந்தே ஐ.ஐ.டி. ஆசைகள் விதைக் கப்பட்டு, 'தொண்ணூத்தி மூணா? பாக்கி ஏழு மார்க் ஏண்டா கோட்டை விட்டே? இந்த மாதிரி படிச்சா நீ மாடு மேய்க்கத்தான் போறே. இன்னிக்கு உனக்கு டிபன் கிடையாது. பாக்கெட் மணி கட்' போன்ற நிலைமைகள்.

மிகுந்த எதிர்பார்ப்பால் ஏமாற்றமும், மார்க் குறைந்தால் தெருவே துக்கம் விசாரிக்கும் சூழ்நிலையும் இருக்கும் போது, டி.வி-யிலும் செய்தித்தாள்களிலும் நிறைய அவ்வகைச் செய்திகளைப் பார்க்கும்போது தற்கொலைகள் நிகழ்வது சகஜமே.

பள்ளிப்பருவத்தில் பாட்டியிடம் நான் வளர்ந்தேன். பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் 'ருக்மிணி அம்மாள் என்னும் கோதை அம்மாள்' என்று மணி ஆர்டரில் போல் கையெழுத்துப் போடுவாள். இளம் வயதில் இறந்து போன எங்கள் தாத்தா கிருஷ்ணமாச் சாரியார் கணக்கில் புலியாம். பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும்போதே எம்.ஏ. வகுப்பு நடத்தினவராம். காலேஜ் அல்ஜிப்ரா என்று அவர் எழுதிய புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். அப்பாவும் நன்றாகப் படிப்பாராம். நான்? ஹி... ஹி... அவ்வளவு சிலாக்கியம் இல்லை.

தண்டனை பயம் இல்லாததால் பாட்டியிடம் கையெழுத்து வாங்கும் போது, ''கணக்குல மார்க் குறைச்சல் பாட்டி!'' என்பேன். பொய் சொல்ல வராது. ''நீ எத்தனை மார்க் வாங்கினாலும் எனக்கு கவலையில்லேடா! பாஸ் பண்ணிடுவே! நீ யார் பேரன்?'' என்பாள் பாட்டி. யாராவது 'உங்க பேரன் கணக்கில வீக்காம். டியூஷன் ஏற்பாடு பண்ணட்டுமா?' என்றால் 'கணக்குப் பரீட்சையின்போது குழந்தைக்கு 105 டிகிரி ஜுரம். அதனால சரியா போட முடியலை. புத்தகத்தில் இல்லாததெல்லாம் பரீட்சையில் கேட்டா பாவம் அவன் என்ன பண்ணுவான்?' என்று எனக்கே காரணங்கள் சப்ளை செய்வாள்.

படிப்பில் பயமோ அல்லது பெரிய எதிர்பார்ப்புகளோ உறுத்தலோ இல்லாதபோது வாத்தியார் அடித்தாலும் 'காதை மட்டும் திருகாதீங்க சார். எனக்கு ஏற்கெனவே காது வீக். ரொம்ப அடிக்காதீங்க சார். எனக்கு இருமல் ஜாஸ்தி' என்று சொல்லித் துடைத்துக்கொள்ள முடிந்தது. சதா என்பவன் ஒரு அடி அடித்ததுமே நெளி கிற நெளியில் வாத்தியாருக்கே சிரிப்பு வந்து விட்டுவிடுவார். தற்கொலை? கறுப்பா சிவப்பாகூடத் தெரியாது.

நான் corporal punishment-ஐ நியாயப் படுத்தவில்லை. பெற்றோரிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறேன்.

'மலர்களும் அவற்றின் ஆன்மிக மகத்துவமும்' என்ற அழகான புத்தகத்தை பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 'மலர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் தம்மை அர்ப்பணித்து அவற்றின் மௌன மொழியால் அனைவரையும் கவர்கின்றன. மலர்கள் நமக்குத் தரும் படிப்பினை இதுவே ஆகும்' என்கிறார் அன்னை. 'கீழ்ப்படிதல், ஒளியை நோக்கித் திரும்புதல், முன்னேற்றம், உயிராற்றல் போன்ற செய்திகளை நம்மைச் சுற்றியுள்ள அன்றாட மலர்கள் தெரிவிக்கின்றன' என்ற கருத்து சுவாரஸ்யமாக உள்ளது. 'வெள்ளை ரோஜாவே' என்கிற காஸெட் வெளியீட்டு விழாவில் பா. விஜய் அன்னை பற்றி எழுதிய அசினிமாப் பாடல்களுக்கு ரவீந்தர் இசையமைக்க கார்த்திக் ராம், ஜனனி ராமன், எஸ்.பி.பி., உன்னிகிருஷ்ணன் போன்றவர்கள் இனிமையாகப் பாடி இருக்கிறார்கள். கார்த்திக்கும் ஜனனி யும் லைவ் ஆக சில பாடல்களைப் பாடிக் காட்டியது அவர்களது தன்னம்பிக்கையையும் திறமையையும் காட்டியது. வெளியீட்டு விழா ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட் மார்க் புத்தகக்கடையின் இரைச்சலூடே நிகழ்ந்தது.

லேண்ட்மார்க் தற்போது தமிழ் புத்தகங்களை விற்க ஆரம்பித்துள்ளது. இதைத் துவக்கிவைத்த வினோத், பாண்டியன், லிண்ட் ஃபோர்டு மிட்சல் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும்.

This page is powered by Blogger. Isn't yours?