Sunday, October 26, 2003

 

''பிள்ளைங்களே.. வாங்க.. வாங்க! நல்லா படிக்கலாம் வாங்க!''


மெரீனாவில் வாக் போகும்போது, இரண்டுவித வாகனங்களைக் கவனித்தேன். ஒன்று - மெரீனா மணலைச் சலித்து, அதிலுள்ள குப்பைகளை நீக்கி, வெண்மணலாக மெரீனாவுக்குத் திருப்பும் இயந்திரத்தை இழுக்கும் டிராக்டர்.

மற்றது - ஒலிபெருக்கி மூலம் சுண்டல் சிறுவர்களைப் படிப்புக்குச் சுண்டியிழுக்கும் வண்டி. அவ்வப் போது பிளாட்பாரங்களை இடிக்கும் இயந்திரங்களையும் பார்க்க முடிகிறது. மணல்வண்டியைக் கிட்டத்தில் பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றிக் கருத்துச் சொல்ல இயலவில்லை.

மெரீனாவில், சென்னை சேர்க்கும் குப்பைகளுக்குப் பொருத்தமாகக் குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காந்திசிலையை விட்டால், பஸ் ஸ்டாண்டில்தான் அடுத்த குப்பைத் தொட்டி. இடையே, பேட்டையே வந்து துணி தோய்த்து, அரை கிலோ மீட்டருக்குக் காயப்போடுகிறது.

மணலில் அல்ப்பசங்க்யை செய்து மூடுபவர்கள் லுல்லாவை வெட்டிவிட சட்டம் வேண்டும். மெரீனா யாருடையது என்பதில்தான் இப்போது குழப்பம்.

'பிள்ளைங்களே... வாங்க, வாங்க... நல்லா படிக்கலாம், வாங்க...' என்று அழைக்கும் அந்த வண்டியைக் கண்டதுமே சுண்டல் சிறுவர்கள் ஆங்காங்கே பதுங்குகிறார்கள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந் திருக்கும்போது, அவர்களில் ஒருவனை அழைத்தேன். ஏறக்குறைய அவன் சைஸ#க்கு ஒரு தகரடப்பா, அதனுடன் எவர்சில்வர்தூக்கு, பேப்பர் சதுரங்கள் போன்ற சாமக்கிரியைகளைக் கீழே வைத்துவிட்டு, ''சுண்டல் எவ்ள வேணும் சார்?'' என்றான்.

''ஏண்டா, வண்டில படிப்பு சொல்லிக்கொடுக்கறாங்கல்ல... போறது தானே?'' இதற்குள் அவனுக்கு ஒரு சகா சேர்ந்துகொண்டான். அண்ணன் போலும்... ''இவன் இஸ்கோல் போறான் சார்!'' சத்தியமாகப் பொய்.

''என்ன கிளாஸ்?''

அவன் தன் அண்ணனைப் பார்த்துவிட்டுத் தீர்மானமில்லாது நான்கைந்து விரலைக் காட்டினான்.

''அப்ப தமிழ் படிப்பியா?'' என்றார், என்னருகில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவர்.

''ம்... படிப்பாங்க!'' என்று பம்மினான். ''வாடா, போலாம்...''

''இர்றா...'' - அவர் செய்தித் தாளிலிருந்து எடுத்துக் காட்டி, ''ஏதாவது படி...'' என்றார்.

''திருடா திருடி... காதல் கொண்டேன்...'' என்றான்.

''பொம்மை பார்த்துப் படிக்கிறே... இதைப் படி...'' என்று 'சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினா'ரைக் காட்டினார்.

அவன் சட்டென்று பெட்டியை மூடிவிட்டு, ''இதெல்லாம் இஸ்கோல்ல தாங்க படிப்பான். வேலைக் காவாதுங்க...''

''அந்த வண்டிக்குள்ள போடா... படிப்பு சொல்லிக்கொடுப்பாங்க...''

''சார்... வாங்கறியா, இல்லையா? சொல்லு... எடத்தைக் காலி பண்ணிக்கிட்டுப் போய்க்கினே இருக்கேன். இந்நேரம் பத்து ரூவா போணியாயிருக்கும்...'' என்று புறப்பட்டவனிடம் ''இந்தா...'' என்று பத்து ரூபாய் நோட்டு கொடுத்தேன்.

பெட்டியைத் திறந்து சுண்டலுக்குப் பெரிய காகிதத்தைக் கூர்ச்சை யாக்கினான்.

''சுண்டல் வேண்டாம்...'' என்றேன்.

''காசு வேண்டாம்...'' என்று திருப்பிக் கொடுத்தான். புறப்பட்டான். ''தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்!'' என்று அவன் குரல் சற்று தூரத்தில் கேட்டது.

இந்தப் பையன் படித்து முன்னுக்கு வருவான்!

'மாஞ்சு' கதை பல பேரைப் பாதித்திருப்பது கடிதங்களிலும் தபால்களிலும் தொலைபேசி அழைப்புகளிலும் நேர்சந்திப்புகளிலும் தெரிகிறது. 'அதன் முடிவைக் கிரகிக்க முடியவில்லை' என்று பலர் சொன்னார்கள். 'ஏன், அவள் தனியாக வாழத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?' என்று பலர் பதைபதைத்துக் கேட்டிருந்தார்கள்.

நான் கதை எழுதும் முறைகளைப் பற்றி இந்தப் பத்திரிகையிலேயே பல முறை முன்பு எழுதியிருக்கிறேன். சில சமயம் கதையை நான் எழுதுவதற்குப் பதில், கதை என்னை எழுதிச் செல்லும்.

இந்த அனுபவம் எல்லா எழுத்தாளர்களுக்கும் வரும். சப்கான்ஷியஸிலிருந்து நேரடியாகக் காகிதத்துக்கு (என் கேஸில் - கம்ப்யூட்டர் திரைக்கு) மாற்றப்படுவது போல நிகழும்.

'மாஞ்சு' கதையை எப்படி முடிக்க லாம் என்று யோசிக்கவே விடாமல், விசைப்பலகையிலிருந்து திரைக்கு நிமிர்ந்து பார்த்தபோது, ஆண்டாள் அந்த முடிவெடுத்துவிட்டாள்.

மாஞ்சுவின் மரணத்துக்காகவும் ஆண்டாளின் முடிவுக்காகவும் வாசகர் களுடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டேன் - ஸாரி.

சென்ற வாரம் மூத்த எழுத்தாளர் ஜி.எஸ். பாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். 1943-லிருந்து இன்றுவரை தமிழில் வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதிப் பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறவர்.

தமிழில் எஸ்.வி.வி., தேவன், கல்கி போன்றவர்களுக்குப் பிறகு, இடைப்பட்ட காலத்தில் துமிலன், நாடோடி, பாலகிருஷ்ணன் போன்றோர் நகைச்சுவைக் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

ஜி.எஸ். எழுதிய சிறுகதைகளை, என் போன்ற எஸ்.எஸ்-களுக்கு ஞாபகம் இருக்கின்றன. அவருடைய எளிய, மென்மையான நகைச்சுவை கலந்த உரைநடைக்கு ஓர் உதாரணம் - இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வகையில், 'சபாஷ் சந்துரு' என்ற புத்தகத்திலிருந்து (ஜெனரல் பப்ளிஷர்ஸ் வெளியீடு)...

''வெள்ளைச்சட்டையும் நிஜாரும் அணிந்துகொண்டு, டெல்லியிலிருந்து சென்னைக்குப் போகும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் கனகம்பீரமாக டிக்கெட் பரிசோதித்த சந்துருவை, அனைவரும் நிஜமாகவே ரயில்வே ஊழியன் என்றே எண்ணி விட்டார்கள்.

பென்சிலால் தட்டி, தூங்கும் பயணிகளை அவன் எழுப்பிய ஜோரும் டிக்கெட் இல்லாமல் இலவசமாகப் பயணம் செய்து கொண்டிருந்தவர்களிடம் பிள்ளையாண்டான் அள்ளிவிட்ட ரயில்வே ஹாஸ்யத் துணுக்குகளும் அவனை அசல் டிக்கெட் பரிசோதக னாகவே எண்ணும்படி செய்தது...''

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கும் இந்த 'நான் அவனில்லை' வகைக் கதைகளில் மெல்லிய நகைச்சுவை ஊடாடுகிறது.

அம்பது வருஷம் தாவி, மே 2003-க்கு வரலாம்.

மூன்று கவிஞர்கள் சேர்ந்து, நாற்பத்தெட்டே பக்கத்தில் ஒல்லியாக கவிதைத் தொகுப்பு அனுப்பினால் நிச்சயம் படித்துவிடுவேன். கவிஞர்கள் இரா.அ. தென்றல்நிலவன், டி.என். சத்யா முருகவேல், அ. நவநீதகிருஷ்ணன்.

தொகுப்பின் பெயர் 'உறங்காதப் பொழுதுகளில்' ('ப்'பன்னா அவர்களுடையது!). நவநீத் வெளியீடு, இராஜாக்கவுண்டன்பாளையம், திருச்செங்கோடு.

'தமிழ்நாட்டில் எந்த மூலையிலிருந்து அடுத்த கவிதைத் தொகுப்பு வரும்?' என்று இப்போதெல்லாம் சொல்லவே முடிவதில்லை. ஒவ்வொரு கவிஞருக்கும் முறையே ஒரு சாம்பிள்...

1. குழந்தையோடு கொஞ்சிக்
கொண்டும்
மனைவியோடு சந்தோஷமாய்
பேசிக்கொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில்
நினைவுக்கு வந்து
உறுத்துவாள்
முதன்முதலில் பெண் பார்த்து
இன்னும் திருமணமாகாத
அந்தப் பெண்!

2. அம்மாவிற்கு மகனாய்
அப்பாவிற்கு வாரிசாய்
அண்ணனுக்கு அடிபணியும்
தம்பியாய்
நண்பர்களுக்கு
நன்றியுள்ளவனாய்
காதலிக்கும்போது
காதலனாய்
சிரிப்பவர்களுடன் சிரித்து
அழுபவர்களுடன் அழுது...
எப்பொழுது,
எங்கே,
எது நான்?

3. காத்திருந்து காத்திருந்து
சோர்கையில்
நீ வருவாய்
கோபப்படுவேன் நான்
வெட்கப்படத் தெரியாததால்...

மூன்று கவிதைகளிலும் Subtext இருப்பதால் தேர்ந்தெடுத்தேன்.

Sunday, October 19, 2003

 

கற்றதும் பெற்றதும்


விகடன் தீபாவளி மலர் மறுபடியும் வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. எங்கள் இளமைக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் தீபாவளி என்றால் அதிகாலை எண்ணெய்க் குளியல், புத்தாடைகள், பட்சணங்கள், பட்டாசு, தீபாவளி ரிலீஸ் படங்களுடன், தீபாவளிமலரும் பண்டிகையின் ஓர் அங்கம். ஏஜெண்டிடம் சொல்லி வைத்து, உறை பிரிக்காமல் முகப்புப் படத்தில் கண்ணாடி பேப்பருடன் வரும் மலரை முதலில் கையில் வைத்து வாசனை பார்ப்பதே இன்பமான தீபாவளி அனுபவம். போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். நான் முதலில் பொம்மை பார்த்துவிட்டு, 'இவர்கள் எல்லாம் சண்டைபோட்டு ஓயட்டும்... நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்... எங்கே போகிறது?' என்று விட்டுப் பிடிப்பேன். யாரார் வீட்டில் மலர் வாங்கி இருப்பார்கள் என்பது தெருவுக்கே தெரியும். 'ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு, இதோ இப்பக் கொடுத்துர்றேன்' என்று கூசாமல் இரவல் வாங்கிச்செல்வார்கள். கொடுத்தது வீதியெங்கும் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு - தற்செயலாக தெற்குச் சித்திரை வீதிக்குப் போனால், அங்கே நம் கையெழுத்துடன் மலர் ஓடிக் கொண்டிருக்கும். பொலிவிழந்து, பக்கங்கள் காது மடங்கி, சில தேவ தேவதைகள் நீக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்துப் பிரசவத்துக்கு வரும் மகள் போல அல்லது ஹாஸ்டலிலிருந்து லீவுக்கு வரும் மகன் போல் திரும்பி வரும்.

என் நினைவில் தேவனின் மல்லாரிராவ் கதையோ, துப்பறியும் சாம்பு கதையோ ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். சில்பியின் தெய்வீகச் சித்திரங்கள், கோபுலுவின் முழுப்பக்க 'நார்மன் ராக்வெல்' ரக ஓவியம், ராஜுவின் நகைச்சுவை ஓவியங்கள் இவையெல்லாம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன.

விகடன் பவழவிழா மலர் போட்ட போது, அதற்குக் கிடைத்த ஆதரவைப் பார்த்து நானும் பிரமித்தேன். இதுதான் தீபாவளி மலரை மறுபடி கொண்டுவரும் தைரியம் தந்திருக்கிறது. சில கலாசார அடையாளங்கள் மறைந்தாலும் திரும்பி வந்துவிடும் என்று மக்லூஹன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

நார்மன் ராக்வெல் Portrayed american as americans chose to see themselves என்று சொல்வார்கள். Saturday Evening Post இதழில் 1933-ல் துவங்கி அறுபது வருஷமாக அவர் வரைந்த 332 அட்டைப் படங்கள் சமகால அமெரிக்க சரித்திரமாகி விட்டன. விகடன் இதழ்களில் மாலியும் ராஜுவும் கோபுலுவும் அதைத்தான் செய்தார்கள். அவற்றைத் தொகுத்து வெளி யிடலாம்.

ஸ்ரீரங்கத்துக் கதைகள் எழுதின இந்த இடைப்பட்ட காலத்தில் அழையாத விருந் தாளிகளாக நூறு கவிதைத் தொகுப்புகள் எனக்கு அனுப்பப்பட்டன. மிகச் சில சிறுகதைத் தொகுப்புகள், தவச்சில கட்டுரைத் தொகுப்புகள். 'வைணவ வேதம்' (டாக்டர் முல்லை. ச. முருகன்), 'புதிய வார்த்தை தன்னாளுமைத் தத்துவம்' (ம. திருவள்ளுவர்) போன்ற உதிரிப் புத்தகங்கள், இரு குறுந்தகடுகள், ஒன்று பண்டைத் தமிழ் இலக்கியங்கள், மற்றது பொள்ளாச்சி நசனின் சிறுபத்திரிகைத் தொகுப்பு.

பொள்ளாச்சி நசன் பதினெட்டு ஆண்டுகளாகச் சிற்றிதழ்களைச் சேகரித்து வருகிறார். 2,553 சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட இதழ்களைத் தோற்றம் முதல் மறைவு வரை வைத்திருக்கிறார். சிற்றிதழ் என்றாலே சிறிது காலம் தோன்றி மறையும் இதழாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. சில சிற்றிதழ்கள் நீண்ட நாட்களாக வெளிவருகின்றன, இரண்டாயிரத்துக்குக் குறைவான வாசகர்களைக் கொண்டு! அவர்கள் அனைவரும் கவிதையோ, கதையோ, ஆசிரியருக்குக் கடிதமோ அதில் எழுதியிருக்கும் இதழ்கள் சிற்றிதழ்கள் என்று அறுதியிடலாம்.

பொள்ளாச்சி நசனின் பட்டியலைப் பார்க்கையில், சில இதழ்கள் மறுபிறவி எடுத்திருக்கின்றன ('மீண்டும் கவிக் கொண்டல்'). ஓவியம், கல் ஓசை, சத்தம், ஹோமியோ நண்பன் என்று எத்தனை வகையான பத்திரிகைகள் வந்து போயுள்ளன. இவற்றை சாஸ்வதப்படுத்த குறுந்தகடுகளாக்கும் அவர் முயற்சி பாராட்டத்தக்கது. மேல்விவரங்கள் nasan@thamizhan.net.

எனக்கு வந்த மாதிரித் தகட்டில் 'சரஸ்வதி' இதழ் ஒன்றும் விவேகசிந்தாமணி 1905-ம் ஆண்டு இதழ் ஒன்றும் முழுசாக இருந்தன. ஆங்கிலம், தமிழ் இரு மொழியிலும் வந்த வி.சி. இதழில் 'Merry Wives of India' என்று ராமசாமி ஐயர் பி.ஏ. ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதியுள்ளார். 'தெய்வம் காட்டுமே அன்றி ஊட்டாது' என்கிறது ஒரு கட்டுரை. மற்`றான்று, 'திருவிடைமருதூர் வசந்தோத்ஸவ கல்யாணம்' பற்றியது. பிறிதொன்று பூர்வ ஜென்ம வாசனை பற்றியது. இன்னொன்று ருஷ்யா - ஜப்பான் யுத்தம்!

1904-லேயே பத்திரிகைகள் வாசகர்களைக் குழப்பியுள்ளன. இந்தப் பாரம்பரியம்தான் இன்று தொடர்ந்து ஒரு பக்கம் ஆன்மீகமும் மற்`றாரு பக்கம் த்ரிஷாவும் வலம் வருகிறார்கள். பல சிற்றிதழ்களின் முதல் பக்கங்களும் ஓலைச்சுவடிகளின் படிகளும் அந்தக் குறுந்தகட்டில் இருந்தன. இனிமேல் நசன் தன் சிற்றிதழ்களையெல்லாம் இவ்வாறு ஸ்கேன் பண்ணி, தன் வலைதளத்தில் வைத்துக்கொள்வார்... அவருடைய நண்பர் மகேஷ் உதவுவார் என எதிர் பார்க்கிறேன். கணினியம்மன் கடாட்சத்தால் அவை மறைந்து விடும் ஆபத்தில்லை.

அதேபோல, அண்மையில் நான் ரசித்த குறுநாவல் ஜெயா வெங்கட்ராமனின் 'ஆனை'. கோயிலுக்கு கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் குட்டியானை மெள்ள மெள்ள வளர்ந்து பெரிசாகும்போது, கோயிலைச் சுற்றியுள்ள நாகரிகத்தின், குடும்பங்களின் சரிவை விளக்கும் அற்புதமான குறுநாவல். 'ஓம் சக்தி' பத்திரிகையில் வந்து கங்கை பதிப்பகத்தின் புத்தகமாக என்னிடம் வந்தது.

பொதுவாக இப்போது எல்லா புத்தகங்களிலும் அச்சு நேர்த்தி யாக இருக்கிறது. தேன்மொழியின் கவிதைத் தொகுப்பாகட்டும் ('அனாதிகாலம்'), கலாப்ரியாவின் ('வனம் புகுதல்') புதிய தொகுப்பாகட்டும். எல்லாமே டக்கரான அட்டைப் படம். நல்ல மேப்லித்தோ காகிதம், டெம்மி சைஸ் இவையெல்லாம் தகுதரமாகிவிட்டது (Standard). உள்ளடக்கம்தான் முன்னே பின்னே இருக்கிறது. நெய்வேலி, கோவை, திருச்சி போன்ற புத்தக விழாக்களில் தமிழ் மக்கள் 'பாய்ஸ்' பார்த்துக் கெட்டுப் போகாமல் நிறைய புத்தகம் வாங்குகிறார்கள். ஒரு எடிஷன் சில மாதங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. 'உயிர்மை' போன்ற புதிய இலக்கியப் பத்திரிகைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயங்களே.

கலாப்ரியாவின் அண்மைக் கவிதைகளில் சில புதிய வகைகளைக் காண்கிறேன். ஒரு வகை கிராமத்துக் கொச்சை வகை (தலைப்பாரம்), மற்`றான்று பிரம்மராஜன் வகை (மகாவாக்கியம்). கலாப்ரியா தலித் வகை கவிதைகளையும் போஸ்ட் மாடர்ன் வகை கவிதைகளையும் விட்டுவைக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

எனக்குப் பிடித்த கலாப்ரியா, தன்னைச் சுற்றியுள்ள அன்றாடக் காட்சிகளில் உள்ள கவிதைகளை உன்னிப்பாகக் கவனித்து தேர்ந்தெடுத்துச் சொல்லும் கலாப்ரியாதான். போன வாரம் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வகை கொஞ்சம் அரிதாகிக் கொண்டு வருகிறது. அதேபோல் ஹைக்கூ பாசாங்குகளில் நிஜ ஹைக்கூவைத் தேர்ந்தெடுப்பது அரிதாகி வருகிறது.

'தக்கையை வெரிக்கும்
தூண்டில்காரன்
காலுக்கருகே அல்லி'
- யை அரிதாகத்தான் காணமுடிகிறது (மு. முருகேஷ்). ஹைக்கூ பாசாங்கு இல்லாமல் எழுதப்படும் கவிதைகளின் சில வரிகள் ஹைக்கூ தன்மை பெறுகின்றன.

எல்லா மழைக்காலம்
போல் அல்லாமல்
இந்த மழைக்காலம்
இலையுதிர்காலத்தை ஞாபகப்படுத்துகிறது
(தேன்மொழி)

பருவம் தப்பிய மழைக்கும்
மண் விடுவிக்கிறது
தன் வாசத்தை
(சல்மா, பச்சைதேவதை)

போன்ற வரிகளில் உள்ள அகாலப் பருவங்களும் உணர்ச்சிகளும் நுட்பமானவை. ஹைக்கூ பத்திரிகை களில் எழுதப்படும் வழிகாட்டிக் குறிப்புகள் சரியாகத்தான் உள்ளன.

உதாரணமாக - தமிழன்பன் (இனிய ஹைக்கூ செப்டம்பர் 2003) ''உபதேசம் இருக்கிறதா, தொங்குசதையாக சொற்கள் இருக்கின்றனவா, தேவையற்ற இணைப்புச் சொற்கள், விரிந்த வேற்றுமை உருபுகள், ஆரவாரம் செய்யும் சொற்கோவைகள் இருக்கின்றனவா, சொற்களளவில் மட்டும்தான் பொருள், ஒற்றைப் பரிமாணத்தைக் கடக்காத தேய்வு தேக்கம் இருக்கின்றனவா? அது மூன்று வரியில் இருந்தாலும் ஹைக்கூ ஆகாது'' என்று இவ்வளவு தெளிவாகச் சொல்லியும் ஒரு நாளைக்குச் சராசரி 126 மோசமான ஹைக்கூக்கள் எழுதப்படுவது துர்ப்பாக்கியமே.

This page is powered by Blogger. Isn't yours?