Sunday, November 30, 2003

 

கற்றதும் பெற்றதும்


'சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்' என்ற நிறுவனத்தில் நண்பர் ஆண்டோ பீட்டர், திருக்குறள் முழுவதையும் நான்கு உரைகளுடன் குறுந்தகட்டில் கொடுத்திருக்கிறார் (மு. வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர், ஜி.யு. போப் உரைகளுடன்).

அதேபோல், குழந்தைப் பாடல்கள் சிலவற்றையும் அனிமேஷன் செய்து, சங்கீதத்துடன் பாடிக் குறுந்தகடாகக் கொடுத்திருக்கிறார். ஆர்வத்துடன் இவர் பதிப்பிக்கும் குறுந்தகடுகளின் வியாபாரம்தான் சரியாக இல்லை என்றார். அடக்க விலைகூடக் கிடைக்கவில்லை என்றார்.

வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி வியாபாரம் நடத்த முடியும்? தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? யாரும் தமிழில் பாப்பா பாடல்களைச் சொல்லிக் கொடுக்க ஏன் முன்வருவதில்லை?

இன்னும் எத்தனை நாளைக்கு 'ரிங்கா ரிங்கா'வையும் 'ஹிக்கரி டிக்கரி டாக்'கையும் ராணியைப் பார்க்கச் சென்ற பூனையையும் பாடிக் கொண்டிருப்போம்?

தமிழில் எத்தனை நல்ல பாடல்கள் உள்ளன? அவற்றைக் கற்றுக்கொடுத் தால், அந்தப் பள்ளிகளுக்குப் பெற்றோர் தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்களாம். இதைவிட ஆச்சரியம்... பால் மறவாத கைக்குழந்தைக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்று பணம் பிடுங்குவது.

அதாவது, தாய்மொழியில் இருந் தால் பரவாயில்லை. மத்தியப் பிரதேஷ், சத்தீஸ்கர் மாநிலங்களில் கிராமங்களைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளிகளில் இந்தி மூலம் கணிப் பொறியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள்.

'ஷிக்ஷா' என்னும் திட்டத்தின்கீழ் தாய்மொழி இந்தி மட்டும் தெரிந்த கிராமத்துக் குழந்தைகள் இயல்பாகக் கணிப்பொறியைக் கையாள்கின்றனவாம்!

மெள்ள இந்த நிலை இந்திய மொழிகளில் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு 'யூனிகோட்' என்னும் ஒருமித்தக் குறியீட்டு முறை முக்கியம்.

தமிழக அரசை ஆளாளுக்குக் குறை கூறிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் ஓசைப்படாமல் அவர்கள் செய்து கொண்டிருக்கும் நல்ல காரியங்களையும் யாராவது சொல்ல வேண்டும்.

ஐ.ஜி.ஆர். என்னும் அரசின் உயர் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆவணங்களையும் இணையம் மூலம் இணைத்து, அவர்களுடைய 'ஸ்டார்' என்னும் மென்பொருளை மாநில அளவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அரசு சார்ந்த சிட்ஃபண்டு கள், சொஸைட்டிகள், ஸ்டாம்பு வெண்டர்கள் பற்றிய அத்தனை தகவலும் கிடைக்கும். திருமணச் சான்றிதழ்கள், வில்லங்க சர்டிபிகேட்டுகள் போன்ற அனைத்தையும் மாநிலத்தின் எந்த மூலையிலிருந்தும் பெறும்படியாக இணைத்திருக் கிறார்கள்.

நீங்கள் திருநெல்வேலியில் இருந்து கொண்டு, சென்னையில் பத்திரமாக நிலம் வாங்கலாம். யாராவது எங்காவது ரெஜிஸ்ட்ரார் ஆபீஸில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டால், அந்த விவரம் உடனே நெட்டில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் கிடைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

இந்தக் கணினியாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் பாராட்டுக்குரியவர்.

அதேபோல் தமிழ்க் கணினி. 'ஓப்பன் சோர்ஸ்' என்னும் திறந்த இயக்கம் மூலம் லினக்ஸ் செயலாக்க மென்பொருள் சார்ந்த தமிழ்க் கணினி ஒன்று சில ஆர்வலர்கள் சேர்ந்து வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஓப்பன் ஆபீஸ் மோஸில்லா கே.டி.ஈ. போன்ற மேல்மேஜை மென்பொருள்களை அப்படியே தமிழில் தர முற்பட்டிருக்கிறோம்.

செந்தொப்பி 'ரெட்ஹேட்'... லினக்ஸ் நிறுவனம் கணிசமான ஆதரவளிக்கிறது. தமிழக அரசின் இணையம் சார்ந்த பல்கலைக்கழகமும் இதற்கு ஆதரவளிக்கிறது.

இந்த மென்பொருள்களில் ஆங்கிலத்தில் சுமார் அறுபதாயிரம் செய்திகளும் வார்த்தை களும் உள்ளன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

கணினி பற்றி அறிய தமிழறிவு மட்டும் போதும் என்பதை உண்மையாக நம்புகிற வர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். tamilpc@ ambalam.com என்னும் மின்முகவரியில் பதிவுசெய்துகொண்டால், உதாரண மொழிபெயர்ப்புகள் கொடுத்து உங்களை எங்கள் குழுவில் புகவைப்போம்.

'ஜெயகாந்தனின் சிறுகதையான 'நந்தவனத்திலோர் ஆண்டி'க்கும் 'பிதாமகன்' கதைக்கும் ஒற்றுமை உள்ளதைக் கவனித்தீர்களா?' என்று கேட்டு எனக்கு அமெரிக்கா விலிருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ஒரு நேயர்.

இதில் இரண்டு விஷயம் எனக்கு உற்சாகமளித்தது. 'பிதாமகன்' போன்ற படங்களை உடனே அமெரிக்காவிலும் பார்த்துவிடுகிறார்கள். ஜெயகாந்தன் கதைகளையும் படித்திருக்கிறார்கள் அமெரிக்காவில் உள்ளவர்கள்.

தமிழ்நாட்டு விஷயங்களை உடனுக்குடன் தொடர்ந்து கவனிக்கிறார்கள். 'இந்து' ஆசிரியர் குழுவையே பஸ் அனுப்பிவைத்து, அரெஸ்ட் செய்வதன் பின்னணியை வியந்து பெரிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

'நந்தவனத்திலோர் ஆண்டி' ஜெயகாந்தன், ஆரம்ப காலத்தில் 'சரஸ்வதி' இதழில் எழுதிய சிறுகதை. இதுவும் ஒரு வெட்டியானின் கதைதான். இதன் ஆதாரக் கருத்து - தினம் தினம் குழந்தைகளின் பிணங்களைப் புதைப்பதால் துக்கம் மரத்துப்போய், எவ்வித வருத்தமும் காட்டாமல் சித்தர் பாட்டை அர்த்தம் புரியாமல் முணு முணுப்பவன் (இவனுக்குக் குடும்பம் உண்டு). இடுகாட்டிலேயே பிறந்த தன் மகனை இழந்ததும்தான், தான் புதைத்த ஒவ்வொரு பிணத்தின் பின்னாலும் சோகம் இருப்பது புரிந்து, எல்லாச் சாவுக்கும் கதறி அழுகிறான் என்பது.

ஜெயகாந்தன் கதையில் கஞ்சா கடத்தல், சூர்யா போன்ற நண்பர்கள் ஏதும் கிடையாது. 'பிதாமகன்' அந்தக் கதையினால் கூபிசூசிகூசுக்க்ஷ என்று வேண்டுமெனில் சொல்லலாம்.

அப்படிப் பார்த்தால், அரிச்சந்திரன் கதைகூட அதற்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். 'ரோஜா'வை 'சத்தியவான் சாவித்ரி' கதையிலிருந்து தட்டியது என்று சொல்லலாம்.

ஜெயகாந்தனின் இந்தக் கதை 'ஜெயகாந்தன் சிறுகதைகள்' என்கிற தலைப்பில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட புத்தகத்தில் உள்ளது.

நீங்கள் படித்துப் பார்த்துத் தீர்மானிக்கலாம். அல்லது, விரைவிலேயே வாரப் பத்திரிகைகள் ஏதாவது அதை மறுபிரசுரம் செய்யலாம்.

ஆகாசம்பட்டு சேஷாசலம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். சரளமான நவீன விஷயங்களை மரபுக் கவிதைகளில் சொல்ல வல்லவர். தற்போது கொஞ்சம் பக்தி சமாசாரங்களில் இறங்கி, அதிலும் சிறப்பான செய்யுள்கள் யாத்திருக்கிறார்.

எனக்குச் சிலவற்றை அனுப்பியிருந்தார். குறிப்பாக, ஜெயதேவரின் 'கீத கோவிந்தம்', ஆதிசங்கரரின் 'சௌந்தர்ய லஹரி', 'பஜ கோவிந்தம்', குலசேகர ஆழ்வாரின் 'முகுந்தமாலை' போன்றவற்றைச் சிறப்பாகச் செய் திருக்கிறார்.

உதாரணம் - 'புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்று துவங்கும் பிரசித்திப்பெற்ற பஜகோவிந்தப் பாடலை வெண்பாவாக -

'மீண்டும் பிறப்பது மீண்டும்
இறப்பது:
மீண்டுமே தாய்மடி தங்குவது:
வேண்டுவேன்
உன்னை முராரி கரைகாணா
வாழ்விருந்து
என்னைக் காப்பாற்றுவாயே...'

முகுந்தமாலையைத் தமிழின் மிகச் சிக்கலான கவிதை வடிவமான கட்டளைக் கலித்துறையில் செய்திருக்கிறார்.

'யோசிப் பதும்அது கண்ணா
ஹரியே தலைவணங்கிப்
பூசிப் பதும்அது பூரிப் பதும்அது
பூவடிகள்
யாசிப் பதும்அது யாதுமாய் ஆன
யதுகுலத்தோய்
நேசிப் பதும்அது நித்தம்
நினைப்பதும் நின்பதமே...'

- ஒவ்வொரு அடியிலும் உள்ள எழுத்துகளை ஒற்று நீக்கி எண்ணிப் பாருங்கள் - 16 வரும். 'திறமை உள்ள வருக்கு மரபு தடையல்ல' என்பதை மறுபடி நிரூபித்துள்ளார் சேஷாசலம்.

'ஹைக்கூவுக்கு நேரடியாகப் பார்த்த காட்சிகள் முக்கியம்' என்று இதுவரை நூற்று ஐம்பத்தாறு தடவை எழுதிவிட்டேன். அதற்கு ஒப்பனை செய்யாதீர்கள்.

வழிப்பறிக் கொள்ளை
வேடிக்கை பார்க்கிறது
தலைக்கு மேல்நிலா
- மு. முருகேஷ்

வெறுமையாய்
யாரின் கூந்தலோ
சாலையில் ரோஜா
- மதுமலர்

இவை இரண்டையும் சற்றே திருத்தி, இப்போது பாருங்கள்

வழிப்பறிக் கொள்ளை
தலைக்குமேல் நிலா

வெறுமையாய் கூந்தல்
சாலையில் ரோஜா

better?

தொகுப்பு: 'பனி படர்ந்த சூரியன்'
- நவநீத் வெளியீடு, திருச்செங்கோடு-637209.<< Home

This page is powered by Blogger. Isn't yours?