Sunday, December 07, 2003

 

பூமணியின் பூக்கள் மணம்!


தொலைக்காட்சியால் திரைப்படங்கள் பாதிக்கப்பட்டு விட்டன என்பதில் எனக்கு உடன்பாடில்லை. டி.வி--யில் கிடைக்கும் சில விஷயங்களை தியேட் டரில் பார்க்கமுடியாது. உதாரணம் - விசுவின் 'அரட்டை அரங்கம்', லட்சுமியின் 'கதையல்ல நிஜம்', ரோகிணியின் இயல்பான பேட்டிகள், ஊர்வசியின் 'டேக் இட் ஈஸி!', டி.ராஜேந்தரின் கோர்ட்டு... என்று ஆளாளுக்குப் பேசிப் பேசி மாயும் வாய்ப்பு டி.வி-யில்தான் உண்டு. அதேபோல், சினிமாவில் விரிந்த திரையிலும் சூழ்ந்த ஒலியிலும் கிடைக்கும் அனுபவத்தை சின்னத்திரை நூறில் ஒரு பாகம்தான் கொடுக்க முடியும். பிரச்னை - டி.வி. சினிமாவாக முற்படுவதும், சினிமா தொப்புளை விட்டு காமிராவை நகர்த்தாததும் தான்.

சமீபத்தில் எனக்கு வைரஸ் ஃபீவர் வந்து ராத்திரி விழித்திருந்தபோது, டி.வி. சவுண்டை ம்யூட் பண்ணிவிட்டு சினிமா நடனங்களைப் பார்த்தேன். நீங்களும் இப்படிப் பாருங்கள்... தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மாற்றி மாற்றிப் பார்க்கலாம். தினம் ஒரு பதினைந்து நிமிஷமாவது பாருங்கள். Hilario! அதுவும் 'மம்மத ராசா.. மம்மத ராசா'!

குழந்தைகள் தினத்தன்று நான் டி.வி-யில் பார்த்த 'கருவேலம்பூக்கள்' என்கிற திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறிவிட்டேன். டி.வி-யின் ஓயாத விளம்பரங்களுக்கு இடையில் இந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்க வைத்தது, அதன் அடித்தளத்தில் இருந்த யதார்த்தமும் செய்தியின் நேர்மையும் வட்டாரத் தமிழும் ராதிகாவின் நடிப்பும்தான். எத்தனை தலைமுறைகள் கழிந்தாலும் கிராமப்புறங் களில் ஆணாதிக்கமும், பெண் களை ஆண்கள் பல்வேறு வகை சுயநலன்களுக்காகப் பயன்படுத்துவதும் ஓயாது. தீப்பெட்டி ஆபீஸில் வேலை செய்யும் சிறுமியரின் எதிர்காலம் தெரியாத, அதிகாலை பஸ் பயண சந்தோஷங்களையும் துக்கங்களையும் அழுத்தமாகச் சொல்லத் தவறிய டைரக்டரின் விஷ§வல் நேரேஷனில் இருந்த குறைகளையெல்லாம் ஒரே முட்டாக கதையின் யோக்கியம் மறக்க வைத்துவிட்டது. பல காட்சிகள் கண்ணீர் வரவழைத்தன. தீப்பெட்டி ஆபீஸ§க்கு அனுப்பப்படும் பெண் ‘'அம்மா, கையெல்லாம் எரியுதும்மா'' என்கிறாள். ''கொஞ்ச நாள்ல பழகிரும்டி.''

கொஞ்சம் திரைக்கதையைக் கத்திரித் திருந்தால் 'பரண்' ரேஞ்சுக்கு வந்திருக்கக்கூடிய இந்தப் படத்தில் கடைசிக் காட்சி ஒரு கண்ணீர் கவிதை. அம்மாவும் இறந்துபோய் அக்காவும் இறந்துபோய் குடிகார அப்பன் இன்னும் விழிக்காத அதிகாலையில் தம்பியை எழுப்பித் தலைவாரி விட்டு, டிபன்பாக்ஸை எடுத்துக்கொண்டு, தலையில் கொஞ்சம் பூ வைத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபீஸ§க்குப் போகும் வழியில் கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் ஒரு தடுமாற்றம். இந்த என்.எஃப்.டி.சி. படத்தை நம் பத்திரிகையாளர்கள் விமரி சித்தார்களா தெரியவில்லை. முதலில் பார்த்திருப்பார்களா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

பூமணி பாராட்டுக்குரியவர். தொலைக்காட்சியால்தான் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கும் அனுபவம் கிடைத்தது. அதற்கு ராஜ் டி.வி-க்கு நன்றி!

தினம் தூங்கப்போவதற்கு முன் ஒரு 'செக் லிஸ்ட்' தருகிறார் சிவசங்கர் பாபா (ஆதாரம்: 'சம்ரட்சணா' நவம்பர் 2003).

1. காலையிலிருந்து உபயோக மாக ஏதாவது செய்தீர்களா?

2. யார் மேலாவது கோபம் வந்ததா?

3. யாரிடமாவது அன்பாக நடந்துகொண்டீர்களா?

4. யாரையாவது வெறுத்தீர் களா?

5. கொஞ்சமாவது விட்டுக் கொடுத்தீர்களா?

இந்த எளிய கேள்விகளுக்கு முறையே ஆம் - இல்லை - ஆம் - இல்லை - ஆம் என்று பதில் கிடைத்துவிட்டால் Your day is made.

பணம் சம்பாதித்துப் பிழைப் பதற்காக மலேசியா சென்றிருந்த, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுத் தமிழர்கள் தங்கியிருந்த இடத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் காத்திருக்கிறார்கள் என்று ஒரு செய்தி. இதுசம்பந்தமாக மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹாவுக்கு வைகோ கடிதம் எழுதிய செய்தியும் வந்திருக்கிறது. அந்த எட்டுப் பேரில் ஒருவரான சரவணன் என்பவரின் அண்ணன் ஆனந்த் எண்ணூரிலிருந்து கடிதம் அனுப்பியிருந்தார். தம்பியின் அப்பீலையும் ஜெராக்ஸ் பிரதி வைத்திருந்தார். 'அப்துல் கலாம் உங்கள் கல்லூரித் தோழராயிற்றே, நீங்கள் சொன்னால் அவர் உடனே கேட்டு மலேசிய ஜனாதிபதிக்கு எழுதி தூக்குக்கயிற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றலாமே’ என்று கேட்டிருந் தார்.

இதை இந்திய சர்க்கார் அதிகார பூர்வமாக எடுத்துக்கொள்ளும் முன் அவர்கள் ஹைகமிஷனிடம் கீழ்க்காணும் விவரங்கள் கேட்பார்கள். மரணதண்டனை விதிக்கப்பட்டது நிஜமா? அந்த நாட்டின் மேல் முறையீட்டு, மன்னிப்பு விதிகள் என்ன? Presidential Pardon உண்டா? வீட்டுக்காரன் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக வாடகைக்கு இருப்பவர்கள் எட்டு பேருக்கும் மரணதண்டனை விதிக்கும் அளவுக்கு இரக்கமற்ற அரசாங்கமா மலேசியா?

பொதுவாக, இங்கே பணம் கொடுத்து ஏஜெண்டுகள் மூலம் வேலை கிடைத்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் சம்பாதிப்பது இங்குள்ளதைப் போல நிச்சயம் பத்துமடங்கு இருக்கலாம். அதுவும் நல்ல தொழில் திறமை உள்ள வர்களாயிருந்தால், அங்கே அத்தனை பணம் கிடைக்கும் போது-விசா தீர்ந்ததும் அதை விட்டுவிட்டு வர மனசு வராது. They overay. அந்த நாட்டின் இமிக்ரேஷன் மற்றும் போதைப்பொருள் சார்ந்த சட்டங்கள் கடுமையானவை என்பது அதிகம் படித்திராத இந்தத் தமிழர்களுக்குத் தெரிவதில்லை. தெரியாத்தனமாய் மாட்டுகிறார்கள். வக்கீல்கள் அவர் களை அரவணைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

சரவணன் எழுதிய கடிதத்தில், அடுத்த வாரம் உனக்கு விடுதலை என்று வக்கீல்கள் சொல்லிச் சொல்லி நம்பிக்கை கொடுத்துவிட்டுக் கடைசி யில் உன்னைத் தூக்கில் போடப் போகிறார்கள் என்று போக்குக் காட்டியிருப்பது தெரிகிறது.

இதுபற்றிய மேல்விவரங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் கவிதைத் தொகுப்புகளுக்கு டைட்டில்களே சுவாரஸ்யமாக உள்ளன என்று சில வாரங்களுக்குமுன் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல், தமிழ்நாட்டின் எதிர்பாராத நகரங்களிலிருந்தெல்லாம் கவிதைத் தொகுப்புகள் வருகின்றன.

'பூனை போல் அலையும் வெளிச்சம்', 'பலூன்காரன் வராத தெரு'வுடன் சேர்ந்துகொள்ள, இதோ மற்றொன்று- 'பழங்கள் சந்தைக்குப் போய்விட்டன'. -சிஜி ராமதாஸ், அதீதா பதிப்பகம், ராஜபாளையம்-626117.

இதில் ஒரு கவிதை...

‘கல் சிலைகள்
கல் விளக்குகள்

கல் சங்கிலிகள்
கல் சிற்பங்கள்
மற்றும்
கல்தூண்கள் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன
கோயில்களில்
உறைந்து கிடக்கும்
கனத்த அமைதியின்
ரகசியத்தை.’

குட்டி ரேவதிக்குப் பின் பெண்கள் இப்போதெல்லாம் தைரியமாக ஆண்கள் எழுதத் தயங்கும் விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்ல முன்வந்துள்ளனர். வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுகிர்தராணியின் சில கவிதைகள் என்னைக் கொஞ்சம் கலக்கின. உடலுறவு சம்பந்தமாக எழுதிய கவிதைகளை மிகச் சுலபமாக எடுத்துக்காட்டி அற்ப சந்தோஷம் பெற விரும்பவில்லை. தேடிப் பாருங்கள். சுகிர்தராணியின் கவிதை ஒன்று...

‘இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்

பாசாங்குசெய்யும் நீ
என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?’<< Home

This page is powered by Blogger. Isn't yours?