Sunday, February 29, 2004

 

கற்றதும் பெற்றதும்


சென்ற ஆண்டின் சிறந்த புகைப்படங்கள் சில எனக்கு அனுப்பப் பட்டன. புகைப்படமோ, திரைப்படமோ, கதையோ, கவிதையோ காட்டும் காட்சிக்கு அப்பால் உணர்த்தும் காட்சி ஒன்று இருந்து, அதை நாம் அடையாளம் கண்டு கொள்ளும்போது, ஒருவகையில் நாமும் அதன் படைப்பாளியாகிறோம். அந்தக் கோணத்தில் இந்தப் படங்களில் உள்ள subtext-ஐ கவனியுங்கள்.

இந்த வாரம் நான்கு திரைப்படங்கள் பற்றிய சிறு குறிப்புகளும், ஒரு மருத்துவ அறிவியல் நூலும், ஒரு கவிதைத் தொகுப்பும்...

பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ அறிமுகத்தில், இனிய தமிழ் மக்களை வழக்கம்போல் விளித்து ‘கேப்பையையும் கூழையும் கொடுத்தவன் இப்போது ஓட்ஸ் கஞ்சி தருகிறேன்’ என்று படத்தை துவக்குகிறார். அவரை ஓட்ஸ் கஞ்சிக்கு அறிமுகப்படுத்தியதில் அடியேனின் பங்கும் உண்டு. படத்தின் Look and feel வேறு வகையில் உள்ளது.

பாரதிராஜா முதல் முறையாக வெளிநாடுகளில் போய் எடுத்த படம் இது. சுவிட்சர்லாந்தில் பாட்டை மட்டும் எடுக்காமல் கதையின் கடைசி காட்சிகளையும் அங்கேயே அமைத்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் மிகச் சிக்கலான சந்தம் கொண்ட ஒரு மெட்டுக்கு தேன்மொழியின் வரிகள் வியக்கவைக்கின்றன.

மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' மே மாதம் வெளியாகப் போகிறது. மாதவன், சூர்யா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், இஷா தியோல், த்ரிஷா நடிக்கும் இந்தப் படத்தில், பாரதிராஜா ஒரு 'கேமியோ' ரோல் செய்திருக்கிறார். இதன் இந்தி வடிவம் 'யுவா'வில் ஓம்பூரி செய்திருக்கும் பாத்திரம். 'படத்தின் பெயர் ஆய்த எழுத்தா, ஆயுத எழுத்தா?' என்று சிலர் சந்தேகம் கேட்டார்கள். ஆய்த எழுத்துதான்! சார்பெழுத்துக்களில் ஒன்றான மூன்று புள்ளிகள் கொண்ட அஃகன்னாவைத்தான் படம் குறிப்பிடுகிறது. வன்முறையை அல்ல! இதற்கு மேல் கதை சொல்ல எனக்கு அனுமதி இல்லை.

ஷங்கரின் 'அன்னியன்' தீபாவளிக்கு வெளிவரும். விக்ரம் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் (ரஹ்மானுடன் சண்டை ஏதும் இல்லை. கால கெடுக்கள் சரிவரவில்லை, அவ்வளவுதான்!) பாடல்கள் வைரமுத்து. இந்தப் படத்துக்குக் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயிலிருந்து சதா வரை ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். படம்ஷங்கரின் வழக்கமான சங்கதிகளுடன் அட்ட காசமாக உருவாக விருக்கிறது.

பெண்டாமீடியா கிராஃபிக்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் இ.டி.பி|யுடன் (E.D.B.) தயாரித்த இருபரிமாண அனிமேஷன் படமான 'தி லெஜண்ட் ஆஃப்புத்தா' சென்சாராகிவிட்டது. பரத்வாஜ் இசையும்வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் இந்த ஆங்கில மொழிப் படத்துக்கு மெருகூட்டுகின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம சித்தார்த்தரின் வாழ்வின் நிகழ்ச்சிகளையும், அவர் போதிச் சத்துவரானதையும், புத்தரானதையும் படமாகத் தயாரித்திருக்கிறார்கள். இதில் சிங்கப்பூர் கலைஞர்கள் பலருக்கு அனிமேஷன் திறமைகளில் பயிற்சி அளித்திருக்கிறது பெண்டா மீடியா நிறுவனம்.

அப்போலோ மருத்துவமனையில் மூத்த எண்டாக்ரினாலஜிஸ்டாக இருக்கும் டாக்டர் சி.வி. கிருஷ்ணன் 'நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டில் அன்பின் நவரச நாடகங்கள் அநேகம் வியப்பூட்டும் வகையில் அரங்கேறுவதைக் கண்ணுறும்போது நமக்கு ஆச்சரியங்கள் மேலிடலாம்...' இவ்வாறான டக்கரான தமிழில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் திருக்குறள் மேற்கோள் காட்டி எழுதியிருக்கும் 'ஜனனம் முதல் மரணம்வரை ஹார்மோன்கள்' என்ற புத்தகத்தின் மருத்துவ உள்ளடக்கம், அனுபவமிக்க டாக்டரின் உத்தரவாதத் துடன் தொனிக்கிறது.

புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள் அமெரிக்கா சென்று புதிய ரத்தம் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டதால் சுறுசுறுப்பாக, இளமையாக இருக்கிறார்கள் என்ற வதந்தி தப்பு. நம் உடலில் ஓடும்ரத்தம் இயற்கையாகவே 120 நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறதாம். வயசானால் 250 நாளைக்கு ஒரு முறை! ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் பல்வேறு கட்டங்களில், நாளமில்லாச் சுரப்பிகளின் ஆதிக்கத்தை விவரமாகத் தரும் இந்தப் புத்தகத்தின்படி எதற்கெடுத்தாலும் அழுவது, தொண தொணவென்று பேசுவது, கஞ்சத்தனம், மார்பகங்கள் பெரிசாக இருப்பது, அதிக நேரம் தூங்குவது, வயதான ஆண்களை இளம்பெண்கள் விரும்புவது போன்ற அனைத்து உபாதைகளுக்கும் இப்போது ஹார்மோன்களைக் காரணம் சொல்கிறார்கள். அப்படியா? இன்ட்ரஸ்டிங்!

அடுத்த தடவை யாராவது கடன் கொடுக்காவிட்டால், அவரை எண்டாக்ரினாலஜிஸ்ட்டிடம் அழைத்துச் சென்று ஹார்மோன் ட்ரீட்மெண்ட் கொடுத்துப் பாருங்கள்.

பதிப்பு: டாக்டர் சி.வி. கிருஷ்ணன், 16-வது தெரு, 4--வது மெயின் ரோடு, சென்னை-40.

கனிமொழியின் 'அகத்திணை', அவரது 'கருவறை வாசனை'க்குப் பிறகு இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஒன்பது வருஷத்தில், ‘பவித்ரமாய் பாதுகாத்த மௌனங்’களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு, கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

பெண்ணியம் பேசும் கவிஞராக இவரைச் சிலர் தப்பர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். மற்ற விஷயங்களுடன் பெண்ணின் சமூக பாத்திரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கவிஞராகத்தான் இவரைப் பார்க்கிறேன். பெண் கவிஞர், கவிதாயினி போன்ற அடைமொழிகள் தேவையில்லை.

தமிழில் இன்று எழுதப்படும் கவிதைகளில் நல்ல கவிதை, சுமாரான கவிதை, மோசமான கவிதை என மூன்று பாகுபாடுகள் எனக்குத் தெரிகின்றன. குத்துமதிப்பாக இவை தமிழில் ஐந்து: பதினைந்து: எண்பது என்கிற விகிதத்தில் இருக்கின்றன. எப்போதாவது இந்த மாதிரி தொகுப்புகள் வந்து விகிதாசாரத்தைக் கலைக்கின்றன. நான் அடிக்கடி சொல்வது_ கவிதை தனிப்பட்ட அனுபவம். எனக்கு நல்ல கவிதை எல்லோருக்கும் நல்ல கவிதையாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

கனிமொழி இந்திய சமுதாயத்தில்பெண்ணின் an irreverant look at religion -ஐயும் நுட்பமாகக் கவனிக்கிறார். அதைக் கவிதையாக்கும்போது சில சமயங்களில் வியக்க வைக்கிறார். சிலசமயம் ஆண்களை வியர்க்க வைக்கிறார். அவ்வளவே!

'தலையில்
எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள்
ஒருத்தி.
புருவம் செப்பனிடப்பட்டது.
உடலின்
உபரிமயிர்
நீக்கப்பட்டது.
முகம் பொலிவூட்டப்பட்டது.
கைகளில் கோலம் போட்டார்கள்...’
இவ்வாறு மணப்பெண் ஜோடனையை வரிசையாக விவரித்து
'நடுங்கும் என் கைகளைப் பிடித்து
யாரோ அழைத்துச் சென்றார்கள்’ என்று முடிக்கிறார்.

'அறம் 2' என்கிற இந்தக் கவிதைக்கு ஈடாக 'அறம் 3' என்று மணமகன் பார்வையில் ஒரு கவிதையும் இவரே எழுதலாம்.

புராணங்களிலும் அவர் பார்வை பெண்பாத்திரங்களுக்கு அனுதாபத்துடன் இருக்கிறது.

தாட்சாயினி மறுபடி சிவபத்தினியாக ஒற்றைக்காலில் ஓராயிரம் வருடம் தவமிருக்க வேண்டியதன் அநியாயத்தை சுட்டிக் காட்டுகிறார்.

'என் பெயரென்ன யாராவது
முடிவு செய்து சொல்லுங்கள்
சில யுகங்களாய்க் காத்திருக்கிறேன் என்னும் அடையாளக் குழப்பம் சரித்திர சம்பந்தமானது.

'பாப விமோசனத்துக்காக
ராமனுக்காகக் காத்திருக்காதே
அவன் சீதையின் அக்கினிப்பிரவேச ஆயத்தங்களில் ஆழ்ந்திருக்கிறான்
சீசரின் மனைவி என்பதாலேயே
அவள் கறைகளின் நிழல்கூடப் படியாதவளாய் இருக்கவேண்டும்
இராவணன் கற்புக்கும் இவளே பொறுப்பு.'

புராண பாத்திரங்களை இவ்வாறு வேறுபட்டுப் பார்க்கும் கனிமொழியின் தனித்தன்மை சிலசமயம் ணீஸீ வீக்ஷீக்ஷீமீஸ்மீக்ஷீணீஸீt றீஷீஷீளீ ணீt க்ஷீமீறீவீரீவீஷீஸீ ஆக மாறுகிறது.

'என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை'

அகத்திணை, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில்-629001. விலை ரூ.40. நஞ்சுண்டன் முன்னுரையுடன் பக்கங்கள் - 78.

Sunday, February 22, 2004

 

வாச(ன்) மலர்


அமரர் எஸ்.எஸ்.வாசன் நூற்றாண்டு மலரில் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் 'நான் கண்ட பாஸ்' என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மிகப்பெரிய, வெற்றிகரமான தந்தையின் நிழலில், ஒரே மகனாக தன்னுடைய தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வளர்வதன் கஷ்டம் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கிறது. அதேசமயம், தந்தை மேல் உள்ள மரியாதை எள்ளளவும் குறையாமல் 'பாஸ்' சொன்னதையெல்லாம் செய்து, அவருக்குப்பின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியதன் கால மாற்றக் கட்டாயங்களையும் பாலசுப்ரமணியன் வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எஸ்.வாசனது கண்டிப்பு பேனாவையோ, பனியன் சட்டை வகையையோ வாழ்நாள் முழுதும் மாற்றாத டிசிப்ளின்.. தினம் ஒரு திருமணம் போல நடந்த ஜெமினி ஸ்டூடியோவின் பிரமாண்டம்.. அவர் தயாரித்த படங்களின் பிரமிப்பு.. பத்திரிகை, சினிமா இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கியது... இவற்றையெல்லாம் நோக்கும்போது வாசன் போன்ற மனிதருக்கு சமகாலத்தில் உதாரணமே இல்லை. இப்போதெல்லாம் ஏதாவது ஒரு துறையில்தான் சிறக்கமுடியும். அந்தச் சிறப்பை, பதினைந்து நிமிஷப் புகழைத் தக்கவைத்துக்கொள்வதே பெரிய காரியம். மிக விரிவாக, கவனமாக, அழகாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மலரில் அந்தக் கால ஜெமினி ஸ்டூடியோவின் முகப்பின் போட்டோ இருக்கிறது. இப்போது ஃப்ளைஓவராலும் நகரமயமாக்கத்தினாலும் மறைந்துபோன சோலைகள், மரங்கள் சூழ்ந்த ஜெமினி ஸ்டூடியோ வளாகத்தின் புகைப்படங்கள் ஏங்க வைக்கின்றன. Those were the days!

‘பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளைத்தான் விரும்புகிறார்கள். திரைப்படத்தின் கலைத்தன்மையை அதிகரிக்கவேண்டுமானால் படம் மெதுவாக நகர்வதைத் தவிர்க்க முடியவில்லை. தினசரி பிரச்னைகளுடன் போராடுவதிலேயே மக்களின் பெரும்பாலான சக்தி போய்விடுகிறது. எனவே, பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே ரசிக்கும் மனோபாவத்துக்கு அவர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். தினசரி வாழ்க்கை யில் பிரச்னை இல்லை என்கிற நிலை தோன்றினால்தான் கலைப்படங்கள் வெல்லும்.'

சினிமா பற்றி வாசனின் அனுபவமிக்க இந்தக் கருத்து இன்றும் அப்படியே ஒரு எழுத்துகூட மாற்றாமல் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மூன்றாவது ஆண்டு விழாவில் வாசன் அவர்கள் ஆற்றிய துவக்க உரையில்...

'ஒருவேளை உங்கள் அன்புக்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியர் என்கிற முறையில் இந்த கௌரவத்தை எனக்கு அளித்திருக்கலாம். அல்லது மடாதிபதி களுக்கு அடுத்தபடியாக படாதிபதி என்று என்னைக் கருதியும் அழைத் திருக்கலாம். அல்லது இந்த மனிதர் ஒருவர்தான் பொதுக்கூட்டங்களில் அதிகமாக அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கிறார். இது ஒரு புதுமுகம். இவரை அழைத்தால் கூட்டம் கூடும் என்ற எண்ணத்திலும் அழைத்திருக்கலாம். இதைத் தவிர, என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்று தவறாகக் கருதியும் அழைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்று உண்மையாகவே கருதியிருந்தாலும் அது குற்றமில்லை. ஏனெனில், நானும் ஒருவிதத்தில் பெரிய எழுத்தாளன்தான். உங்கள் உச்சிப் பிள்ளையார் கோயில் வாசலில்தான் நான் பிள்ளையார்சுழி போட்டேன். அது எனக்கு உச்ச வாழ்வைத் தந்தது' என்று பேசியது, அவரது அபார தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

வழக்கம் போல் இந்த வாரமும் மறுப்புக் கடிதம். சு.சி.கிருஷ்ணன் அவர்கள் கோவையிலிருந்து விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். நான் தமிழிசையைப் பற்றி எழுதியதைக் கண்டித்து, 'தமிழிசை பிழைப்பதற்கு அவரால் எந்த உதவியும் செய்ய முடியாவிட்டாலும், அந்த இயக்கத்தை வாட்டி வதைக்காமலாவது அன்பர் சுஜாதா இருக்கவேண்டும்' என்று எழுதியிருக்கிறார்.

நான் எழுதியது தமிழ்ப் பாடல்களையும் பாசுரங்களையும் அர்த்தம் புரியாமல் வெட்டிப் பாடுபவர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றத்தான்! 'தாயே யசோதா' பாடவேண்டாம் என்று சொல்லவில்லை. 'காலி னிற்சி லம்பு கொஞ்ச' என்று பாடவேண்டாம் என்றுதான் சொன்னேன். இது அவருக்குப் புரியவில்லை என்பது தெரிகிறது. என்னுடைய தமிழ்நடையில் உள்ள குற்றம் இது!

மேலப்பாலையூர், குடவாசல் (வழி) சு.மகாலிங்கம் தன் வீட்டில் பழைய பெட்டியைத் திறந்தபோது கிடைத்தது என்று, தலையுமில்லாமல் வாலுமில்லாமல் பழுப்பான புத்தகத்தின் பத்து பக்கங்களை எனக்கு அனுப்பி (மடியெல்லாம் பொடி) 'இதைப் படித்துப் பார்த்து பயன் உண்டா என்பதைத் தெரிவிக்கவும்' என எழுதியிருந்தார்.

புத்தகத்தின் பெயர்? போகர் எழுத்து.

மெள்ள மெள்ள நான், 'வேலைக்காகாது போல இருக்கு. குப்பைத் தொட்டில போடறதுக்கு முந்தி எதுக்கும் சுஜாதாவுக்கு அனுப்பிப் பார்க்கலாம். அது ஏதாவது எழுதும்' என்ற இலக்காகி வருகிறேன். 'என்ன தவம் செய்தனை சுஜாதா' என்று தமிழிசை பாடவேண்டும். Frightening.

இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் சாகித்ய 'அக்காதெமி' வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் மூன்றை, இந்த முறை புத்தகச் சந்தையில் வாங்கினேன். நா.வானமாமலை, மகாகவி ஸ்ரீஸ்ரீ., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை மூவரையும் பெற்றேன். நா.வானமாமலை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியல் பற்றியே பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் செய்த பணி சிறப்பானது.

கட்டபொம்மன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, கட்டபொம்மன் கூத்து, ஐவர் ராசாக்கள் கதை, முத்துப்பட்டன் கதை, வீணாதி வீணன் கதை போன்றவற்றை மதுரைப் பல்கலைக் கழகத்தின் சார்பாகப் பதிப்பித்து விஸ்தாரமான முன்னுரைகள் தந்துள்ளார்.

வரலாறு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அரசியல், தமிழில் முடியும் போன்ற தலைப்புக்களில் சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ள இந்தப் பேராசிரியரிடம், நான் விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' தொடங்குவதற்கு முன், அவரது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ புத்தகத்திலிருந்து (இப்போது அதை என்.சி.பி.ஹெச். 'தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்' என்று பதிப்பிக்கிறார்கள்) சில பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டேன். அவர் 'இந்தப் பாடல்கள் மக்கள் சொத்து. நீங்கள் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம்' என்று கார்டு போட்டிருந்தார்.

வையாபுரிப் பிள்ளையுடன் வானமாமலையின் ஆராய்ச்சிப் பணியும் சற்று மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் இலக்கியத்துக்கு அப்பாற்பட்டவை. அவரது 'ஆராய்ச்சி' பத்திரிகையை யாராவது திரட்டாக வெளியிடலாம்.

'இயக்குவது இயங்குவது
மாறுவது மாற்றுவது
பாடுவது பாடச் செய்வது
நீண்ட உறக்கம் நீங்கச் செய்வது
முன்னே நோக்கி வழி நடத்துவது
முழுமையான வாழ்வை அளிப்பது
அனைத்தும் வேண்டும்
புதுக்கவிதைக்கு'
- ஸ்ரீஸ்ரீ.

நவகவிதா இயக்கத்தின் முன்னோடியான ஸ்ரீஸ்ரீ (ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாசராவ்) மகாகவி என்று தெலுங்கு மக்களால் போற்றப்பட்டவர். அவருடைய 'நீண்ட பயணம்' என்னும் கவிதை, நவீன இந்திய இலக்கியத்தின் ஒரு காவியமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீஸ்ரீ, மார்க்ஸியம், தாதாயிஸம், சர்ரியலிஸம், சினிமா எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். கார்ட்டூன் கவிதைகூட எழுதினார். 'ஒரு நாய்க்குட்டி, தீக்குச்சி, சோப்புத்துண்டு' இவை எல்லாமே கவிதைக்கு உரியன என்றார்.

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் மரபுக் கவிதைகளின் சரளமும் வார்த்தை வீச்சும் என்னை சிறுவயதிலிருந்து கவர்ந்தன. அவரது 'என் சரிதம்' என் இளமைக் காலத்தில் படித்து வியந்த சுயசரிதம். 'சூரியன் வருவது யாராலே' தமிழின் சிறந்த விருத்தப்பாக்களில் ஒன்று.

'அல்லா என்பார் சில பேர்கள்
அரன்அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
என்று சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பல பேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே'

என்கிறார் கவிஞர்.

அந்த ஹோப்பில்தான் நானும் இருக்கிறேன்.

இருபத்தைந்து ரூபாய்க்கெல்லாம் அழகான புத்தகங்கள் போடும் சாகித்ய அக்கா தம்பிக்கு, ஸாரி... அக்காதெமிக்குஇந்தவாரப் பாராட்டு.

‘வானம் வசப்படும்’ - பி.சி.ஸ்ரீராமால் எச்டி (HD) வடிவத்தில் எடுக்கப்பட்ட முதல் டிஜிட்டல் திரைப்படம். அதில் காலஞ்சென்ற மகேஷின் valediction போன்ற இசையைக் கேட்டபோது, ஒரு நல்ல இசையமைப்பாளரை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் ஏற்பட்டது. இறுதி நாட்களின் வேதனையிலும் உற்சாகமிழக்காமல் மெட்டமைத்திருக்கும் அவருடைய மனோதிடமும், உயிர் வாழும் வைராக்கியமும், இசையின் உற்சாகமும் பிரமிக்க வைக்கிறது.

Sunday, February 15, 2004

 

கற்றதும் பெற்றதும்


மூன்று தினங்கள் மும்பையில் யு.கே. ஃபிலிம் கவுன்சில் நடத்திய திரைக்கதைக்கான தொழிற்சாலையில் கலந்துகொண்டேன். பாலிவுட்டின் பல எழுத்தாளர்களும் இயக்குநர்களும் சினிமா எடுத்தவர்களும் எடுக்கப் போகிறவர்களும் பங்கு கொண்டு நிறைய இங்கிலீஷ் பேசினார்கள். சிகரெட் சாம்பலைத் தட்டிக்கொண்டு சில பெண்கள் கேட்ட கேள்விகள் விக்டோரியன் இங்கிலீஷில் இரண்டு பாரா இருந்தன.

பிரிட்டனிலிருந்து திரைத்துறையைச் சார்ந்த வக்கீல், டெவலப்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் என்னும் முன்னேற்ற நிபுணர், இயக்குநர், கதைத் தரகர், கதை ரிப்பேர் செய்பவர், எழுத்தாளர் என்று ஒரு கிரிக்கெட் கோஷ்டி போல, விஸ்தாரமான மேரியட் ஓட்டலில் கூடியிருந்தார்கள். சென்னையிலிருந்து அடியேன், ராஜீவ் மேனன், சுஹாசினி மூவரும் சென் றிருந்தோம். ராஜீவும் நானும் எழுதிய ‘The Spin’ என்ற திரைக்கதையை ஃபிலிம் கவுன்சிலைச் சேர்ந்த க்ளேர் வைஸ் விரிவாக விவாதித்தார். கோலிவுட்டில் இருந்து வேறு யாரும் வரவில்லை (அவர்களுக்கெல்லாம் வொர்க் ஷாப் தேவையில்லை). கோவிந்த் நிஹலானி, ஷாம் பெனகல், ஷபனா ஆஸ்மி, விஷால் பரத்வாஜ், பூனம் தில்லான், சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி போன்ற பல முகங்களைப் பார்த் தேன். யுகே ஃபிலிம் கவுன்சில் என்பது நம்மூர் என்.எஃப்.டி.சி. போல பிரிட்டனின் அரசு சார்ந்த அமைப்பு. அந்த நாட்டில் திரைப் படத்துறை ஹாலிவுட்டின் ஆக்கிரமிப்பு நிழலின் கீழ் தனி அடையாளம் தேடித் திணறிக் கொண்டிருக்கிறது. டெலிவிஷனுக்கு செலவு செய்வ தில் பத்தில் ஒரு பங்குதான் அங்கு திரைப்படங்களுக்கு செலவழிக்கிறார்கள். அவ்வப் போது ‘Bend it like Beckham’, ‘Harry potter’ போன்ற பல படங் கள் வெற்றிபெற்று பிரிட்டனுக்கு ஆக்சிஜன் ஊட்டுகின்றன. மற்றபடி 'மிராமாக்ஸ்' போன்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் கள் தயவில் போனால் போகிறது என்று ஒன்றிரண்டு படங்களை பிரிட்டனில் எடுக்கிறார்கள். குரிந்தர் சடா எடுக்கப் போகும் 'ப்ரைடு அண்ட் ப்ரிஜுடி'ஸின் நவீன வடிவத் துக்கு நிதி உதவியிருக்கிறார்கள்.

டாண் டாண் என்று மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட அந்த கருத்துப் பட்டறையில், ஒரு திரைப்படம் எப்படி பிரிட்டனில் உருவாகிறது, அதை ஆக்குபவர்களுக்கு இடையே உள்ள உறவுகள் என்ன, காப்பிரைட் விதிகள் என்ன, கருத்துத் திருட்டை எப்படித் தடுப்பது, ஒரு படத்துக்கு ஐடியா எப்படித் தோன்றுகிறது, அந்த ஐடியாவை எப்படி புரொடியூஸருக்கோ, டைரக்டருக்கோ கூவி விற்பது (இதை பிட்ச் என்கிறார்கள்), ஐடியாவை எப்படிக் காப்பாற்றுவது, 'ஸ்டெப் அவுட்லைன்' என்பது என்ன, ட்ரீட்மெண்ட் என்பது என்ன, ஜானர் (genre) எவ்வெவ்வகைப்படும், நாவலை எப்படித் திரைக்கதையாக்குவது, எத்தனை முறை திருப்பி எழுத வேண்டும் (குறைந்தபட்சம் நான்கு), போன்ற பல பயனுள்ள விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். மார்க் இவான்ஸ் என்னும் டைரக்டரின் ஒரு படத்தையும் போட்டுக் காட்டி னார்கள் (நிறைய வன்முறை, நிறைய கெட்ட வார்த்தை). நமக்கும் அவர்களுக்கும் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் தெரிகின்றன. நம் ஊரில் ஏஜெண்ட் என்கிற சமாசாரமே கிடையாது. டெவலப்மெண்ட் ஸ்பெஷலிஸ்டா, யாரது? அவர்கள் 'ஐடியா' என்று சொல்வதை நாம் 'நாட்' அல்லது 'தாட்' என்கிறோம். அவர்கள் 'ஜானர்' என்பதை நாம் சப்ஜெக்ட் என்கிறோம். லவ் சப்ஜெக்ட், காமெடி சப்ஜெக்ட், ஃபேமிலி சப்ஜெக்ட் இப்படி. அவர்கள் 'ட்ரீட்மெண்ட்' என்று சொல்வதும் நாம் சொல்வதும் வேறு. அங்கே ட்ரீட்மெண்ட் என்பது விற்பனைக்கான ஒரு டாக்குமெண்ட். ஓரிரண்டு பக்கங்களில் கதை என்ன, பட்ஜெட் என்ன போன்ற பல விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் அது. இந்த மாதிரியான சமாசாரம் நமக்குக் கிடையவே கிடையாது. எழுதும் படமும், எடுக்கும் படமும், தொடுக்கும் படமும் வேறு என்பதுதான் அவர்கள் சொன்னதன் அடிநாதமாக இருந்தது.

ஒரு ஐடியாவை எழுத்தாளர்களின் கவுன்சிலில் அமெரிக்காவில் பதிவு செய்துகொண்டால், அதை மற்றவர் தொடமுடியாது. திருடுவது கஷ்டம். இங்கிலாந்தில் அப்படி இல்லையாம். இந்தியாவில் விடியோ, டி.வி.டி. இருக்கும்வரை கவலையே இல்லை. உங்களுக்கு ஒரு திரைப்படத்துக்கு நல்லதோர் ஐடியா தோன்றினால், அதை மற்றவர் சுரண்டிவிடுவார்களோ என்ற அச்சமிருந்தால், அவர்களின் லாயர் சொல்வதைப்போல அந்த ஐடியாவை ஒரு காகிதத்தில் எழுதி ஒரு கவருக்குள் போட்டு, ரிஜிஸ்தர் தபாலில் உங்களுக்கே அனுப்பிப் பெற்றுக்கொண்டு, அதை உரை பிரிக் காமல் போஸ்ட் மார்க்குடன் வைத் திருங்கள். உங்கள் ஐடியா முன்பே தோன்றியது என்பதற்கு இதுதான் அடையாளம். உத்தரவாதம். பொதுவாகவே மிகவும் பயனுள்ள கனவுத் தொழிற்சாலை. இதை அடுத்த முறை சென்னை யிலோ, ஹைதராபாத்திலோ இவர்கள் நடத்தலாம்.

மும்பை நகரம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. குப்பை அதிகமுள்ள தெருக்களில் அழகான, பளிச் சென்று உடை அணிந்த பெண்கள் நடக்கிறார்கள். மேரியட் போன்ற ஓட்டல்களின் பிரமாண்டத்தைப் பார்க்கும்போது வேறு லோகத்தில் இருக்கிற பிரமை ஏற்படுகிறது. நான் சென்ற தினம் நிறைய கல்யாணங்கள். வழி எல்லாம் பராத் ஊர்வலங்கள். மாப்பிள்ளைக் குதிரைக்குப் பின்னால் சீதனமாக புத்தம் புது மெர்சிடிஸ் கார்களை இரண்டு ஊர்வலங்களில் பார்த்தேன். மும்பையில்தான் நாட்டின் எண்பது சதவிகிதம் பணம் புழங்குகிறது. எல்லோரும் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தனக்குள் செல்போன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரல்கள் எஸ்.எம்.எஸ். செய்திகளை ஜுரவேகத் தில் அனுப்புகின்றன. சன்ன உணர்ச்சிகளுக்கு நேரமின்றிப் பரபரக்கிறார்கள். டெக்ஸ்டைல் மில்கள் எல்லாம் 'மால்'களாக புதிய அவதாரம் எடுத்துவிட்டன. ஜூஹ§விலிருந்து விமான நிலையத்துக்கு எங்களை சந்து பொந்தெல்லாம் புகுந்து பதினைந்து நிமிஷத்தில் கரைசேர்த்த ராஜுநாயுடு மும்பையில் பிறந்து வளர்ந்த ஆந்திரர். குஜராத்தி, மராட்டி, இந்தி, இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு எல்லாம் பேசுகிறார். ஜாவா படிக்கிறார்.

'இந்தியா ஒளிர்கிறது' என்று பி.ஜே.பி. சொல்லும் அடையாளங்கள் மும்பையில் வெளிப்படையாகத் தெரிகின்றன. தண்ணீர் கஷ்டம் இல்லை. பவர்கட் இல்லை. சில தந்திரங்கள் கற்றுவிட்டால், வாழச் சிறந்த நகரம் மும்பை. என்னால் இங்கே தனியாக ஒரு நாள்கூட வாழ முடியாது. சட்னியாகி விடுவேன். கல்கியின் 'ஏட்டிக்குப் போட்டி'யிலிருந்து ஏஷியா பதிப்பித்த திராவிட மொழிகளின் எட்டிமாலஜி அகராதி வரை, புத்தகச் சந்தையில் நான் தேடிப் பிடித்த புத்தகங்களை ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் அறிமுகப் படுத்துகிறேன். முன்னுரையில் கல்கி தன் கையெழுத்தைப் பற்றி எழுதும்போது,

'ராபர்ட் பிரௌனிங் பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர். பிறருக்குப் பொருள் விளங்காதபடி கவிதைகள் எழுதுவதில் பிரசித்தி வாய்ந்தவர். அவருடைய கவிதைகளை எலிஸபெத் என்னும் மற்றொரு கவிதாமணி பெரிதும் காதலித்தாள். பரஸ்பரம் கவிதைகள் மூலமாகவே அவர்களுக்குள் காதலும் வளர்ந்தது. எலிஸபெத் நோய்ப்பட்டிருக்கிறாள் என்று அறிந்து, ராபர்ட் பிரௌனிங் அந்தக் கவியரசியைப் பார்க்கச் சென்றார். எலிஸபெத் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தாள். புதிதாக வெளியான பிரௌனிங் கவிதை ஒன்றுக்கு அவரிடமே பொருள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணம்தான். பிரௌனிங் முதல் தடவை தன் கவிதையை முகமலர்ச்சியுடன் படித்தவர், இரண்டாவது முறை முகச் சிணுக்கத்துடன் படித்தார். மூன்றாம் தடவை புருவத்தை நெரித்துக் கொண்டு படித்தார்... இந்தக் கவிதைக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் ஒரு காலத்தில் இரண்டு பேர் இருந்தார்கள், ராபர்ட் பிரௌனிங்கும் கடவுளும். அவர்களில் இப்போது ஒரே ஒருவருக்குத்தான் இந்தக் கவிதைக்கு அர்த்தம் தெரியும். அவர் கடவுள்தான்!' ஆரம்ப காலத்தில் தன் கையெழுத்து கண்ணில் ஒத்திக்கொள்ளும்படியாக அழகாக இருந்ததாகச் சொல்கிறார் கல்கி. 'சின்னஞ்சிறிய 'தமிழ்த் தேனீ' குறிப்புகள், 'அகஸ்தியர்' சிறுகதை கள், பொருள் பொதிந்த அழகான கட்டுரைகள், பொருள் இல்லாத உயரமான கட்டுரைகள், ஹாஸ்யரஸம் ததும்பிய வாட்ட சாட்டமான கட்டுரைகள், சோகரஸத்தினால் இளைத்து மெலிந்த கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள், தழுவல்கள்... இப்படியாக என் கையெழுத்து நாசமாவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவையும் கையாண்டேன். தொடர்கதைகள் எழுத ஆரம்பித்தேன். அவ்வளவுதான், என் திவ்யமான கையெழுத்து அடியோடு சர்வ நாசத்தை அடைந் தது. வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!' 1947-ல் இதை எழுதியிருக்கிறார். கல்கியின் நடையில் உள்ள சரளத்தை வியக்கிறேன்.

Sunday, February 08, 2004

 

சத்தமில்லாமல் ஒரு சாதனை


இந்த வாரம் ஐடி வாரம். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் துடிப்புள்ள செக்ரெட்டரி விவேக் ஹரிநாராயணை சந்தித்துப் பேசியபோது, தமிழ்நாடு ஓசைப்படாமல் தகவல் தொழில்நுட்பத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது தெரியவந்தது. சந்திரபாபு நாயுடு ஆரவாரமாகச் செய்வதை ஜெயலலிதா ஓசைப்படாமல் செய்துவந்திருக்கிறார். பார்க்கப் போனால் வளரும் வேகத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. விரைவிலேயே சென்னை, பெங்களூரையும் ஹைதராபாதையும் மிஞ்சிவிடும்.

இன்ஃபர்மேஷன் இன்டெக்ஸ் என்று ஒரு சமாசாரம் உண்டு. இந்திய சராசரி நூறு என்றால், தமிழ்நாடு 145-லும் சென்னை 472-லும் இருக்கிறது. பெருங்குடி, கோவை போன்ற இடங்களில் ஐடி பூங்காக்கள் அமைத்து தமிழ்நாட்டின் ஐடி தொழிலை ஏழாயிரத்திலிருந்து பன்னிரண்டாயிரம் கோடிக்கு உயர்த்தி, கர்நாடகத்தை மிஞ்சப் போகிறார்கள். விரைவில் தமிழ்நாடு முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் ஒளி நூல் இணைப்பின் மூலம் ப்ராட்பேண்டு (broadband) அதிவேக தகவல் தொடர்பு சாத்தியமாகும்.

அண்ணா சாலையில் ஆனந்த் தியேட்டருக்கு எதிராக விமல் ஷோரூம் துணிக்கடை இருந்ததே, அது இப்போது ஹைடெக் வெப்வேர்ல்டாக மாறிவிட்டது. அதைத் துவக்கி வைக்க ராஜா வைத்யநாதன் அழைத்திருந்தார். ரிலையன்ஸ், டிஷ்நெட் போன்ற தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஒளி நூலிழைகளை இணைத்துக் கொண்டிருக்கின்றன. வலை உலகம் மூலம் இன்று நகரங்களிடையே சுலபமாக விடியோ கான்ஃபரன்சிங் செய்யமுடிகிறது. ‘விருமாண்டி’ பற்றிய மாநிலம் தழுவிய கருத்தரங்கம் ஒன்றை டெலிகான்ஃப்ரன்சிங் முறையில் நடத்த கமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதே ரேட்டில் போனால் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே அமெரிக்காவிலிருந்து பெண் பார்க்க மாப்பிள்ளைவீட்டார் பெண்ணை அருகாமையில் உள்ள வெப்வேர்ல்டு’ கேந்திரத்துக்குப் வரவழைத்து, தனி அறையில் உட்கார்ந்து பெண்ணைப் பார்த்துப் பேசி பாட ஆடக்கூடச் சொல்லிவிடலாம். என்ன... பஜ்ஜி சொஜ்ஜிக்கு இங்கே ஜாவாக்ரீன் அல்லது ஃபரெஷ் அண்ட் ஹானஸ்ட் காஃபி! அங்கே ஸ்டார்பக்ஸ். அவ்வளவுதான்.

இதை இன்டர்நெட்டிலும் செய்யலாம். கொஞ்சம் படம் உதறி உதறித் தெரியும். ப்ராட்பேண்டில் அச்சுக்கொட்டினாற்போலத் தெரியும். தமிழ்நாட்டுத் தமிழர்களில்தான் வசிஷ்டர்களைவிட நக்கீரர்கள் அதிகம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்களும் அவ்வாறே! 11--1-2004 விகடன் இதழில் நான் இந்தப் பகுதியில் ‘மல்லிகை’யின் 35-வது ஆண்டு மலரைப் பற்றிஎழுதியது ஞாபகமிருக்கலாம். இதில் கனடா ‘ரொரன்ரோ’ நகரிலிருந்து எம்.எஸ். கனகரத்தினம் நான்கு குற்றங்கள் கண்டுபிடித்து எழுதியிருந்தார்.

1. மல்லிகை பத்து ஆண்டுகளாகத்தான் கொழும்புவிலிருந்து வெளிவருகிறது.அதன்முன் யாழ்ப்பாணத் திலிருந்து வந்தது.
2. அதன் ஆசிரியர் பெயர் டொமினிக் ஜீவா, டோமினிக் ஜீவா அல்ல.
3. ஈழத்து தமிழ் இலக்கியம் ‘விதந்து’ பேசப்படவேண்டும். ‘வதிந்து’ அல்ல.
4. தருமுசிவராமு பற்றிய கட்டுரையில் அவர் ஒரு ‘நிலாவரைக் கிணறு’, ‘நிலவறை'க் கிணறல்ல!

நிலாவரைக்கிணறு யாழ்ப்பாணத்தில் குப்பிழான் என்னும் கிராமத்தின் அருகில் உள்ள வற்றவே வற்றாத கிணறு என்ற தகவலும் தந்திருந்தார். இன்னொரு கடிதம்... தருமுசிவராமு பற்றிய அரூபம் என்னும் கட்டுரையை எழுதிய ரத்னஸபாபதி ஐயர், ‘அன்றோ கணையாழியின் கடைசிப் பக்கத்தில் நான் இடம்பெறவில்லை என்று ஆதங்கம். இன்று ஆனந்த விகடனில் அரைப்பக்கத்தில் என்னை இருத்தி வைத்துவிட்டீர்கள். நன்றி!’ எழுதியிருந்தார். நன்றி.

இம்மாதிரியான கடிதங்கள் அரிதாகத்தான் வருகின்றன. கனகரத்தினம் வகைக் கடிதங்கள்தான் பிழை கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த கணமே எழுதி அனுப்பப்பட்டு விடுகின்றன. விதந்து என்கிற வார்த்தையை உடனே லெக்சிகனில் பார்த்தேன். ‘சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல்’, அபரிமிதமாக, மிகுதியாக என்று பொருள் கொண்ட வார்த்தை அது! ஈழத்துத் தமிழ் இலக்கியம் விதந்து பேசப்படவேண்டியதே.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இந்த ஆண்டு புத்தகச் சந்தை. சென்ற ஆண்டைவிடக் கூட்டம் அதிகம். சென்ற ஆண்டைவிட ஸ்டால்களின் எண்ணிக்கையும் அதிகம். இருந்தும், சென்ற ஆண்டைவிடப் புத்தக வியாபாரம் குறைவு. இதன் காரணம், பணம் சேர்க்க ஆசைப்பட்டு ஸ்டால்களை ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம் என்று முதலாழ்வார்கள் மழைக்கு ஒதுங்கிய இடம்போல குறுகலாக அமைத்ததால், புத்தகத்தை நிதானமாக எடுத்துப் பிரித்து, மாதிரி பார்த்து வாங்க இயலாமல் போய், கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருவரை ஒருவர் தள்ளித் தள்ளி, வெளியே செலுத்தப்பட்டு நகர்ந்தனர். இந்தக் குறையை நிவர்த்திக்க புத்தக சந்தையின் நிர்வாகிகளுக்கு இரண்டு யோசனைகள்.

அடுத்த ஆண்டு ஸ்டால்களின் எண்ணிக்கையை அதிகரிக்காதீர்கள். அல்லது, இடத்தைப் பெரிசு பண்ணுங்கள். பதிப்பாளர்களுக்கு நூற்றுக் கணக்கில் பாஸ்கள் கொடுத்து, புத்தக ஆர்வலர்கள் பாஸ் மூலம் வர தனி சமயம் ஒதுக்கவேண்டும். பிற்பகலில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆறஅமரப்புத்தகம் வாங்குவார்கள். வியாபாரம் அதிகமாக இருக்கும்.

சும்மா வளையல் கடை, பிளாஸ்டிக் எக்ஸிபிஷனுக்கு வருவதுபோல வேடிக்கை பார்த்துவிட்டு, இருப்பதிலேயே ஒல்லியான, விலைகுறைவான புத்தகத்தை வாங்கும் பெரும்பான்மைக்கு சாயங்கால வேளைகளை ஒதுக்கலாம். இத்தாலிய கார்ட்டூனிஸ்ட்டு களின் சிறந்த கார்ட்டூன்கள் பல இந்த வாரம் எனக்கு மெயிலில் வந்தன. அவற்றில் தேர்ந்தெடுத்த சில இந்தப் பக்கங்களில்... கார்ட்டூன்களுக்கு பாஷை தேவையில்லை என்று இவை மறுபடி நிரூபிக்கின்றன.

லீனா மணிமேகலை தன் ‘ஒற்றையிலையென’ என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை விடியோ படமாக, கனவுப்பட்டறை தயாரிப்பில் எழுதி இயக்கி, அதன் டிவிடி தந்தார். அலுவலகத்திலிருந்து திரும்பும் பெண் ஸ்கூட்டரில் திரும்பி (‘டிராஃபிக்கின் காத்திருப்பில் உன்னைஒத்திகை பார்த்துக்கொண்டு) காய்கறி வாங்கிக்கொண்டு, வீடு திரும்பி, சமைத்து, போன் பேசிக் காத்திருந்து பதினோரு மணிக்கு ‘இறுதியில் வந்தாய்

நீ அணைத்துக்கொள்ளும்போது கசகசப்பாய் இருந்தது

தீர்ந்துபோயிருந்தது காதல்!’ நாம் படிப்பதற்குப் பதில் அழகான பெண், காட்சிகளின் சகாயத்துடன் படித்துக் காட்டினால் கவிதையின் மெருகு கூடுகிறது என்பது வாஸ்தவமே ஆனதால், அதற்கு ஆதாரமாக கவிதையில் காட்சிகள் இருக்கவேண்டும்.

‘நீக்குதல்
நீங்குதல்
பற்றியெடுக்கப்படும்
முடிவுகள் எவ்வளவு
அபத்தமானவை...’

இந்த கவிதையை எப்படி விடியோ காட்டமுடியும்?

Sunday, February 01, 2004

 

திருக்குறளில் தொப்புள்கொடி?


'விருமாண்டி'யின் வெற்றிக்கான அடையாளங்கள், மூன்றாவது தினத்திலேயே தெரிந்துவிட்டன!

"சிக்கலான இரண்டு 'பாயிண்ட் ஆஃப் வியூ'வில் (POV) சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையை மக்கள் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை என்கிற செய்தி, தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அறிகுறி. மேலும், இவ்வகை முயற்சிகளில் ஈடுபட அது தெம்பளிக்கிறது" என்று அமெரிக்கா போகுமுன் கமல் சொன்னார். 'ஒரு டிக்கெட்டிலேயே ரெண்டு கதை சொல்லிட்டே தலைவா!' என்றாராம் கமல் ரசிகர் ஒருவர்.

கவனமான பாத்திரத் தேர்வு, மிகத் தெளிவான திரைக்கதை, தொய்வில்லாத கதையோட்டம், சிறந்த நடிப்பு- இவையெல்லாம் ஒன்றுசேரும்போது, எங்களுக்கு 'மம்முத ராசா'வெல்லாம் வேண்டாம் என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்களைக் குறைத்து எடை போடவே கூடாது!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 'இக்கால உலகுக்குத் திருக்குறள்' என்கிற பன்னாட்டுக் கருத்தரங்க மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்துகொண்டேன். நீதியரசர் மோகன், முனைவர் பொற்கோ போன்றவர்கள் சொற் பொழிந்தனர்.

கருத்தரங்கில், 'திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை' என்கிற அடிநாதத்தில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அழகாகப் பதிப்பித்த மூன்று தொகுதிகள் சிறப்பாக இருக்கின்றன. உங்கள் காப்பிக்கு முந்துங்கள்!

குறட்பாக்களை அதனதன் அதிகாரத்திலிருந்து தனிப்படுத்திக் கொஞ்சம் மிகைப்படுத்தினால், அதில் யந்திரவியல், விண்வெளி அறிவியல், ஒளியியல், கணிதவியல், மருத்துவ அறிவியல், கட்டடக்கலை, அன்றாட வாழ்வில் அறிவியல், உணவுத் தொழில் நுட்பம், வேதியியல், மானேஜ்மெண்ட் எல்லாமே இருப்பதாகக் கொள்ளலாம்.

ஆனால், இந்த முறை சரிதானா? யோசித்துப் பாருங்கள். 'நடுவு நிலமை' என்னும் அதிகாரத்தில், 'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்றொரு குறள்.

இதற்கு நேரடியான பொருள், 'நடுநிலைமை உள்ளவரா, இல்லையா என்பது, அவர் இறந்தபின் கிடைக்கும் புகழாலும் பழியாலும் தெரிந்துவிடும்' என்பதே.

இதை ஆராய்ச்சியாளர் 'மரபியல் சித்தாந்தத்தின் மகோன்னத வரிகள்' என்கிறார். 'திருவள்ளுவருக்கு ஜெனட்டிக்ஸ் தெரிந்திருக்கிறது. நோய்கள் தாத்தா, பாட்டியிடமிருந்து வருவதைத்தான் இதில் குறிப்பிடுகிறார்' என்கிறது ஓர் ஆராய்ச்சி.

அதேபோல, 'துறவு' என்கிற அதிகாரத்தில்...

'பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்;
மற்று
நிலையாமை காணப் படும்'
'பற்று நீங்கினால்தான் மீண்டும் பிறக்க வேண்டாம். இல்லையேல் அநிச்சயம் தெரியும்' என்பது நேரடியான அர்த்தம்.

இதில் 'பற்று’ என்பதைத் தொப்புள்கொடி என்று கொண்டு, ‘அது அறுந்தபின்தான் குழந்தைப் பிறப்பு நிறைவுபெறுகிறது. இதனால் வள்ளுவர் ஒரு கைனகாலஜிஸ்ட்!' என்கிறது ஓர் ஆராய்ச்சி.

இதே முறையைப் பயன்படுத்தி, வள்ளுவர் 'ஸ்க்ரீன்-ப்ளே' என்னும் திரைக்கதை எழுதுவது பற்றியும் ஒரு குறளில் சொல்லியிருக்கிறார் என்று என்னால் நிரூபிக்கமுடியும்!

'அரங்கின்றி வட்டாடியற்றே; நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்' (நேர் அர்த்தம் - படிக்காதவன், படித்தவர்களி டம் பேசுவது, ஆடும்அரங்கமில்லாமல் சூதாடுபவரைப் போல!).

இதை 'சரியாக bound script இல்லாமல் படத்தை வெளியிட்டால், திரையரங்கம் காலியாக இருக்கும்' என்றுகூடக் கொள்ள லாம். உண்மையில், திருக்குறளுக்கு இம்மாதிரி இழுத்தடித்துப் பொருள் சொல்லி, அதன் மேதைமையை அழுத்திச் சொல்லத் தேவையே இல்லை!

இந்த அபாரமான நூல், எனக்குத் தினவாழ்வில் பல சங்கடங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறது. 'இது ஒரு வாழ்வியல் நூல். இதில் அணுகுண்டு செய்யும் முறை யைத் தேடவேண்டாம்' என்று சொன்ன டாக்டர் பொற்கோ வுடன் எனக்குச் சம்மதமே!

என் வாழ்நாளில் மிகவும் பயன்பட்ட குறட்பாக்கள் மூன்று...

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.'

'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க;
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.'

'சொல்லுதல் யார்க்கும் எளிய
அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.'

வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் மேற்கோள்காட்டுவதற்கான அருமையான குறட்பாக்கள் நூறு உள்ளன.

விளையாட்டாக ஆரம்பித்தது ஓர் எழுச்சி மிக்க இயக்கமாக மலர்ந்தது.

'பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை' என்று பல மாதங்களுக்கு முன் ஜூ.வி-யில் நான் எழுதிய கட்டுரையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு, பல மைக்ரோசாஃப்ட் ஆர்வலர்கள் 'கையை ஒடிப்பேன்' என்று பயமுறுத்துகிறார்கள்.

பல எதிர்விளைவுகளையும் சில நல்விளைவுகளையும் அந்தக் கட்டுரை ஏற்படுத்தியது. அதில் ஒன்று - தன்னிச்சையாகத் துவங்கிய 'ழ' கணினித் திட்டம். இதன் கீழ் லினக்ஸ் சார்ந்த மென்பொருளான கே.டி.இ. என்னும் மேல்மேஜை கணிப்பொறி சூழலை, ஓப்பன் சோர்ஸ் இலவச மென்பொருளாகக் கொடுக்கும் திட்டம் நிறைவு பெற்றது.

ஆர்வமுள்ள பல மாணவ - மாணவியர் கலந்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ், கே.டி.இ. என்னும் மேல்மேஜை சூழல்களைத் தமிழில் கொண்டுவந்து விட்டனர்!

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவியரும் லயோலா கல்லூரி மாணவர்களும் சில தனியார் வலர்களும் சேர்ந்து கூட்டு முயற்சி யாக, ஏறக்குறைய எண்பதாயிரம் சொற்றொடர்களைத் தமிழ்ப்படுத்தி வலையில் உலவவிட்டு உலகுக்கு அளித்து விட்டனர்.

இன்று ஆங்கிலமே தெரியாத ஒருவர் கணிப்பொறியைத் துவக்கி, முழுவதும் தமிழிலேயே மின்அஞ்சல் அனுப்ப முடியும். வலையில் உலவ முடியும். சொல் தொகுப்பு செய்து, தமிழில் கதை, கட்டுரைகள் எழுத முடியும்.

தமிழிலேயே தகவல் தளங்களை அணுக முடியும். படம் வரைய முடியும். படம் காட்ட முடியும். மைக்ரோசாஃப்ட்டா... யாரது? நாங்க லினக்ஸ§ங்க!

'ழ' கணினிக் குழு இந்தத் தமிழ் மேஜை தளத்தைச் சென்னையில் ஒருநாள் கருத்தரங்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழுக்கு அர்ப்பணிக்கப் போகிறது. இதற்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உதவி செய்தது.

சசிதர், சிவா, ஜெயராதா, லீனா சாந்தகுமார், சந்த்ரன் போன்ற வர்களின் ஆர்வத்திலும் கம்மியில்லை. நான் என்ன செய்தேன்?

என் ஜாதக ராசிப்படி, பின் கை யைக் கட்டிக் கொண்டு 'எல்லாம் சரியா இருக்கா?' என்று கல்யாணச் சாப்பாட்டின்போது ஒருவர் விசாரிப் பாரே... அதுபோல், அந்த அழகான இளைஞர்களைச் சந்தித்து விசாரித்தேன்.

சில சிக்கலான ஆங் கிலச் சொற்களை எளிமையாகத் தமிழ்ப் படுத்தினேன். சொன் னேனே... 'இதனை இதனால் இவர் முடிக் கும் என்றாய்ந்து... அதனை அவர்கண் விட்டேன்!'

புத்தகச் சந்தையில் நிறைய கையெழுத்துப் போட்டேன். நிறைய வாங்கினேன். ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி போலக் கூட்டம் அம்மி யது.

அதில், மனுஷ்யபுத் திரன் சிபாரிசு செய்து, நான் தேடிப் பிடித்த கவிதைத் தொகுப்பு - முகுந்த் நாகராஜனின் 138 கவிதைகளின் 'அகி' (என்ன அர்த்தம்?).

"சரியாகப் பதினைந்து அடிஉயரத்தில் இருந்தது
நாங்கள் சொப்பு வைத்து விளையாடிய
எங்கள் வீட்டு சன்ஷேட்
நாலைந்து பேர்கூட, அதன்மேல் உட்கார்ந்து
விளையாடியிருக்கிறோம்.
எப்படித்தான் விழாமல் இருந்தோமோ,
கூட விளையாடியவனைப் பார்த்தபோது
அவனிடம் விளக்கம் கேட்டேன்...
'நாம் வளர்ந்த மாதிரியே
வீடும் வளர்ந்திருக்கிறது.
அப்போது வெறும் ஒரு அடி உயரத்தில்தான்
இருந்தது அந்த சன்ஷேட்;
உனக்குத்தான் மறந்துவிட்டது' என்றான்,
கொடுத்துவைத்த அந்தப் பாவி..."

முகுந்த் நாகராஜனின் கவிதைகள் இதுவரை எதிலும் பிரசுரமானதில்லையாம்! ('வரப்புயர', 6, டாக்டர் ஜெயலட்சுமி தெரு, குரோம்பேட்டை, சென்னை-44).

This page is powered by Blogger. Isn't yours?