Sunday, February 22, 2004

 

வாச(ன்) மலர்


அமரர் எஸ்.எஸ்.வாசன் நூற்றாண்டு மலரில் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் 'நான் கண்ட பாஸ்' என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மிகப்பெரிய, வெற்றிகரமான தந்தையின் நிழலில், ஒரே மகனாக தன்னுடைய தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வளர்வதன் கஷ்டம் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கிறது. அதேசமயம், தந்தை மேல் உள்ள மரியாதை எள்ளளவும் குறையாமல் 'பாஸ்' சொன்னதையெல்லாம் செய்து, அவருக்குப்பின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியதன் கால மாற்றக் கட்டாயங்களையும் பாலசுப்ரமணியன் வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எஸ்.வாசனது கண்டிப்பு பேனாவையோ, பனியன் சட்டை வகையையோ வாழ்நாள் முழுதும் மாற்றாத டிசிப்ளின்.. தினம் ஒரு திருமணம் போல நடந்த ஜெமினி ஸ்டூடியோவின் பிரமாண்டம்.. அவர் தயாரித்த படங்களின் பிரமிப்பு.. பத்திரிகை, சினிமா இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கியது... இவற்றையெல்லாம் நோக்கும்போது வாசன் போன்ற மனிதருக்கு சமகாலத்தில் உதாரணமே இல்லை. இப்போதெல்லாம் ஏதாவது ஒரு துறையில்தான் சிறக்கமுடியும். அந்தச் சிறப்பை, பதினைந்து நிமிஷப் புகழைத் தக்கவைத்துக்கொள்வதே பெரிய காரியம். மிக விரிவாக, கவனமாக, அழகாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மலரில் அந்தக் கால ஜெமினி ஸ்டூடியோவின் முகப்பின் போட்டோ இருக்கிறது. இப்போது ஃப்ளைஓவராலும் நகரமயமாக்கத்தினாலும் மறைந்துபோன சோலைகள், மரங்கள் சூழ்ந்த ஜெமினி ஸ்டூடியோ வளாகத்தின் புகைப்படங்கள் ஏங்க வைக்கின்றன. Those were the days!

‘பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளைத்தான் விரும்புகிறார்கள். திரைப்படத்தின் கலைத்தன்மையை அதிகரிக்கவேண்டுமானால் படம் மெதுவாக நகர்வதைத் தவிர்க்க முடியவில்லை. தினசரி பிரச்னைகளுடன் போராடுவதிலேயே மக்களின் பெரும்பாலான சக்தி போய்விடுகிறது. எனவே, பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே ரசிக்கும் மனோபாவத்துக்கு அவர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். தினசரி வாழ்க்கை யில் பிரச்னை இல்லை என்கிற நிலை தோன்றினால்தான் கலைப்படங்கள் வெல்லும்.'

சினிமா பற்றி வாசனின் அனுபவமிக்க இந்தக் கருத்து இன்றும் அப்படியே ஒரு எழுத்துகூட மாற்றாமல் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மூன்றாவது ஆண்டு விழாவில் வாசன் அவர்கள் ஆற்றிய துவக்க உரையில்...

'ஒருவேளை உங்கள் அன்புக்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியர் என்கிற முறையில் இந்த கௌரவத்தை எனக்கு அளித்திருக்கலாம். அல்லது மடாதிபதி களுக்கு அடுத்தபடியாக படாதிபதி என்று என்னைக் கருதியும் அழைத் திருக்கலாம். அல்லது இந்த மனிதர் ஒருவர்தான் பொதுக்கூட்டங்களில் அதிகமாக அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கிறார். இது ஒரு புதுமுகம். இவரை அழைத்தால் கூட்டம் கூடும் என்ற எண்ணத்திலும் அழைத்திருக்கலாம். இதைத் தவிர, என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்று தவறாகக் கருதியும் அழைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்று உண்மையாகவே கருதியிருந்தாலும் அது குற்றமில்லை. ஏனெனில், நானும் ஒருவிதத்தில் பெரிய எழுத்தாளன்தான். உங்கள் உச்சிப் பிள்ளையார் கோயில் வாசலில்தான் நான் பிள்ளையார்சுழி போட்டேன். அது எனக்கு உச்ச வாழ்வைத் தந்தது' என்று பேசியது, அவரது அபார தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

வழக்கம் போல் இந்த வாரமும் மறுப்புக் கடிதம். சு.சி.கிருஷ்ணன் அவர்கள் கோவையிலிருந்து விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். நான் தமிழிசையைப் பற்றி எழுதியதைக் கண்டித்து, 'தமிழிசை பிழைப்பதற்கு அவரால் எந்த உதவியும் செய்ய முடியாவிட்டாலும், அந்த இயக்கத்தை வாட்டி வதைக்காமலாவது அன்பர் சுஜாதா இருக்கவேண்டும்' என்று எழுதியிருக்கிறார்.

நான் எழுதியது தமிழ்ப் பாடல்களையும் பாசுரங்களையும் அர்த்தம் புரியாமல் வெட்டிப் பாடுபவர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றத்தான்! 'தாயே யசோதா' பாடவேண்டாம் என்று சொல்லவில்லை. 'காலி னிற்சி லம்பு கொஞ்ச' என்று பாடவேண்டாம் என்றுதான் சொன்னேன். இது அவருக்குப் புரியவில்லை என்பது தெரிகிறது. என்னுடைய தமிழ்நடையில் உள்ள குற்றம் இது!

மேலப்பாலையூர், குடவாசல் (வழி) சு.மகாலிங்கம் தன் வீட்டில் பழைய பெட்டியைத் திறந்தபோது கிடைத்தது என்று, தலையுமில்லாமல் வாலுமில்லாமல் பழுப்பான புத்தகத்தின் பத்து பக்கங்களை எனக்கு அனுப்பி (மடியெல்லாம் பொடி) 'இதைப் படித்துப் பார்த்து பயன் உண்டா என்பதைத் தெரிவிக்கவும்' என எழுதியிருந்தார்.

புத்தகத்தின் பெயர்? போகர் எழுத்து.

மெள்ள மெள்ள நான், 'வேலைக்காகாது போல இருக்கு. குப்பைத் தொட்டில போடறதுக்கு முந்தி எதுக்கும் சுஜாதாவுக்கு அனுப்பிப் பார்க்கலாம். அது ஏதாவது எழுதும்' என்ற இலக்காகி வருகிறேன். 'என்ன தவம் செய்தனை சுஜாதா' என்று தமிழிசை பாடவேண்டும். Frightening.

இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் சாகித்ய 'அக்காதெமி' வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் மூன்றை, இந்த முறை புத்தகச் சந்தையில் வாங்கினேன். நா.வானமாமலை, மகாகவி ஸ்ரீஸ்ரீ., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை மூவரையும் பெற்றேன். நா.வானமாமலை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியல் பற்றியே பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் செய்த பணி சிறப்பானது.

கட்டபொம்மன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, கட்டபொம்மன் கூத்து, ஐவர் ராசாக்கள் கதை, முத்துப்பட்டன் கதை, வீணாதி வீணன் கதை போன்றவற்றை மதுரைப் பல்கலைக் கழகத்தின் சார்பாகப் பதிப்பித்து விஸ்தாரமான முன்னுரைகள் தந்துள்ளார்.

வரலாறு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அரசியல், தமிழில் முடியும் போன்ற தலைப்புக்களில் சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ள இந்தப் பேராசிரியரிடம், நான் விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' தொடங்குவதற்கு முன், அவரது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ புத்தகத்திலிருந்து (இப்போது அதை என்.சி.பி.ஹெச். 'தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்' என்று பதிப்பிக்கிறார்கள்) சில பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டேன். அவர் 'இந்தப் பாடல்கள் மக்கள் சொத்து. நீங்கள் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம்' என்று கார்டு போட்டிருந்தார்.

வையாபுரிப் பிள்ளையுடன் வானமாமலையின் ஆராய்ச்சிப் பணியும் சற்று மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் இலக்கியத்துக்கு அப்பாற்பட்டவை. அவரது 'ஆராய்ச்சி' பத்திரிகையை யாராவது திரட்டாக வெளியிடலாம்.

'இயக்குவது இயங்குவது
மாறுவது மாற்றுவது
பாடுவது பாடச் செய்வது
நீண்ட உறக்கம் நீங்கச் செய்வது
முன்னே நோக்கி வழி நடத்துவது
முழுமையான வாழ்வை அளிப்பது
அனைத்தும் வேண்டும்
புதுக்கவிதைக்கு'
- ஸ்ரீஸ்ரீ.

நவகவிதா இயக்கத்தின் முன்னோடியான ஸ்ரீஸ்ரீ (ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாசராவ்) மகாகவி என்று தெலுங்கு மக்களால் போற்றப்பட்டவர். அவருடைய 'நீண்ட பயணம்' என்னும் கவிதை, நவீன இந்திய இலக்கியத்தின் ஒரு காவியமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீஸ்ரீ, மார்க்ஸியம், தாதாயிஸம், சர்ரியலிஸம், சினிமா எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். கார்ட்டூன் கவிதைகூட எழுதினார். 'ஒரு நாய்க்குட்டி, தீக்குச்சி, சோப்புத்துண்டு' இவை எல்லாமே கவிதைக்கு உரியன என்றார்.

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் மரபுக் கவிதைகளின் சரளமும் வார்த்தை வீச்சும் என்னை சிறுவயதிலிருந்து கவர்ந்தன. அவரது 'என் சரிதம்' என் இளமைக் காலத்தில் படித்து வியந்த சுயசரிதம். 'சூரியன் வருவது யாராலே' தமிழின் சிறந்த விருத்தப்பாக்களில் ஒன்று.

'அல்லா என்பார் சில பேர்கள்
அரன்அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
என்று சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பல பேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே'

என்கிறார் கவிஞர்.

அந்த ஹோப்பில்தான் நானும் இருக்கிறேன்.

இருபத்தைந்து ரூபாய்க்கெல்லாம் அழகான புத்தகங்கள் போடும் சாகித்ய அக்கா தம்பிக்கு, ஸாரி... அக்காதெமிக்குஇந்தவாரப் பாராட்டு.

‘வானம் வசப்படும்’ - பி.சி.ஸ்ரீராமால் எச்டி (HD) வடிவத்தில் எடுக்கப்பட்ட முதல் டிஜிட்டல் திரைப்படம். அதில் காலஞ்சென்ற மகேஷின் valediction போன்ற இசையைக் கேட்டபோது, ஒரு நல்ல இசையமைப்பாளரை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் ஏற்பட்டது. இறுதி நாட்களின் வேதனையிலும் உற்சாகமிழக்காமல் மெட்டமைத்திருக்கும் அவருடைய மனோதிடமும், உயிர் வாழும் வைராக்கியமும், இசையின் உற்சாகமும் பிரமிக்க வைக்கிறது.<< Home

This page is powered by Blogger. Isn't yours?