Sunday, March 28, 2004

 

இசைஞானியின் இசையில் திருவருள் ஞானி


இசைஞானிஇளையராஜா திருவாசகத்தை சிம்பொனிப்படுத்தும் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள். அதற்குப் பல வெளிநாட்டு, உள்நாட்டுத் தமிழன்பர்கள் நிதி உதவியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நிதி சேர்க்க உதவ, ரெவரண்ட்ஃபாதர் ஜகத் காஸ்பர் பாதிரியார் முன்வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

மாணிக்கவாசகரின் 'திருவாசகத் துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்வார்கள். நான் ஏற்கெனவே திருவாய்மொழிக்கு உருகிவிட்டதால் திருவாசகத்தை உன்னிப்பாகக் கவனித்ததில்லை.

'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்
கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்
தேவராய்
செல்லாஅ நின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்அடிகள் கண்டு
இன்று வீடுற்றேன்'

என்னும் வரிகளில் மாணிக்கவாசகர் டார்வினுக்கு வெகு அருகில் வந்திருக் கிறார். இசைஞானி எப்படி இசை அமைக்கப்போகிறார் என்பதை அறியவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது. சைக்காவ்ஸ்கி, பீத்தோவன், மோஸார்ட் போன்றவர்களின் இசை எல்லாம் உலகம் முழுவதும் இசைக் கப்படும்போது,இசைஞானி எழுதியதை வாசிப்பதில் அவர்களுக் குச் சிரமம் இருக்காது.

விரைவில் இது தகுந்த முறையில் வெளியிடப்படும். ரிக்கார்டிங்குக்காக 200 இசைக் கலைஞர்கள் ஹங்கேரிக்குச் செல்லப் போகிறார்கள். ஜனவரி இறுதியில் நியூஜெர்சி சென்று வந்தி ருக்கிறார் ராஜா. திருவாசகத்தை இசைப்படுத்தியபின் அவரைக்கொஞ்சம் ஆழ்வார்கள் பக்கமும் இழுக்க உத்தேசித்துள்ளேன்.

contactus@thiruvasakaminsymphony.com வலைமனையில் விவரங்கள் உள்ளன. முன்பதிவு செய்துகொள்ள லாம்.

ஜெயா டி.வி-யில், எனக்குப் பிடித்த பழைய பாடல்கள் சிலவற்றை அவர்களின் ‘சிறப்புத் தேன்கிண்ணம்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதற்காக கேட்டார்கள். ஒப்புக்கொண்டேன். 'நீங்கள் ஜெயா டி.வி-யிலும் வருவீர் களா?' என்று நண்பர்கள் சந்தேகம் கேட்டனர். இப்போதெல்லாம் எந்த டி.வி-யில் ஒருவர் முகம் காட்டுகிறார் என்பதைப் பொறுத்து, அவருக்கு அரசியல் வண்ணம் பூசப்படுகிறது. தொலைக்காட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று நம்புபவன் நான். மேலும், என்னுடைய செல்ல சிந்தனை ஒன்று... தமிழ்நாட்டில் இருப்பது ஒரே ஒரு டி.வி. சானல்தான். அதற்கு 'ஜெயவிஜய ராஜசூரியன்' என்று பெயர். அதேபோல் ஒரேஒரு கட்சிதான். ஒரே ஒரு பத்திரிகைதான். தீவிரமாக யோசித்துப் பார்த்தால்,இதன் வாஸ்தவம் உங்களுக்குத் தெரியும். அல்லது, தேர்தல் முடிந்த பின் கட்சி சார்புகள் கலைத்துப் போடப் படும்போது தெளிவாகும்.

அந்த நிகழ்ச்சிக்கு நான் கேட்ட பாடல்கள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடிக்க அவர்களுக்குச் சிரமம் இருந்தது. ‘வதனமே சந்த்ரபிம்பமோ', 'உனைக்கண்டு மயங்காத பேர் களுண்டோ', 'உன்னழகைக் காணஇரு கண்கள் போதாதே', 'நமக்கினி பயமேது', 'காதல் கனிரசமே...' என்றுநான் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனேன். ஒரு வாரம் டயம் கேட்டுப் போனார்கள். இந்த இதழ் வெளி வரும்போது ஒளிபரப் பாகி இருக் கும்.

சிவரஞ்சனி, சிந்துபைரவி, கல்யாணி, காபி போன்ற ராகங்கள் பழைய திரைப்படப் பாடல்களிலும், புத்தம் புதுப் பாடல்களிலும் கணிசமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, ‘மன்னவன்வந்தானடி’ (கே.வி. மகாதேவன் - கண்ணதாசன்), ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ (இளையராஜா - பாரதியார்), 'சில்லல்லவா..' (ஏ.ஆர். ரஹ்மான்-வாலி) மூன்றும் கல்யாணிதான்.

‘தியானமே எனது மனது நிறைந்தது' பாகவதர் பாடிய காபி ராகம், அண்மையில் ‘பார்த்திபன் கனவு’ படத்தில் வித்யாசாகரால் பயன்படுத்தப்பட்டது ('ஆடும் மயில் பாடும் குயில்'). 'வதனமே சந்த்ர பிம்பமோ' சிந்துபைரவி. ‘சந்தனத் தென்றலை’ அதுவும் சிந்துபைரவி. ‘அழகான ராட்சசியே’ ரீதி கௌள. 'கண்ணாமூச்சி ஏனடா' நாட்டக்குறிஞ்சி.

'தீனகருணாகரனே நடராஜா' என்ற பாகவதர் பாடலை ராஜேஷ் வைத்யா வீணையில் ஃப்யூஷனாக வாசித்திருக்கிறார். இந்தியில் தற்போது பழைய ஓ.பி. நய்யர் பாடல் ஒன்றை ‘பிஜீஸ்’ஸின் staying alive உடன், இடுப்பு ஒடியும் குட்டிகள் நடனத்துடன் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். டக்கராக இருக்கிறது. பழைய பாடல்கள் தங்கம் போல.!

‘ஈழநாடு' பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியகே.ஜி. மகாதேவாவின் ‘நினைவலைகள்’ புத்தகத்தில், ஈழத்தில் நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் பல ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. ஈழநாடு பத்திரிகை 1958-ல் கே.சி. தங்கராசா, சண்முகரத்தினம் சகோதரர்களால் நிறுவப்பட்டு, 1959, பிப்ரவரியில் வாரம் இருமுறை ஏடாக முதலில் வந்தது. வடபகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, 1961-ல் தினசரியாகி, நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவி, தமிழர்களின் தேசிய இதழாகப் பரிணமித்தது. தைரியமாகச் செய்திகளைப் பிரசுரித்ததால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் நெருப்புக்கும் எரிப்புக்கும் ஆளாகியும், தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. பல இன்னல்களைக் கடந்து, இப்போது சிலரின் முயற்சியால் ஐரோப்பாவிலும் ஈழத்திலும் தினசரியாக வெளிவந்துகொண்டிருக் கிறது.

மகாதேவாவின் புத்தகத்தில் ஐ.பி.கே.எஃப். அங்கே நடந்துகொண்ட விதம் பற்றிய பகுதி சங்கடப்படுத்துகிறது.

‘நாங்கள் ஏன் வந்தோம் என்பதுகூடத் தெரியாது. உடனடி உத்தரவு. புறப்பட்டு விட்டோம். ஏன் போகிறோம், என்ன செய்யவேண்டும் என்பதுகூடத் தெரிவிக்கப் படவில்லை’ - இப்படியாக இந்திய அமைதிப் படையில் சில தமிழர்கள் கூறியது வியப்பளித்தது. இவர்களும் ‘சிறுபான்மை’யாக இருந்ததால் எதுவும் சொல்லமுடியாத சூழ்நிலை என்றும் பரிதாபமாகச் சொன் னார்கள். இந்திய அமைதிப்படையின் அத்து மீறல், அராஜகம், மானபங்கக் கொடுமை பற்றிப் பொதுமக்கள் தெரிவித்த புகார்களை அதிகாரி காலோனிடம் பட்டியலிட்டுக் கூறினோம். அந்த அதிகாரியின் முகத்தில் எந்தவிதசலனமும் தென்படவில்லை. 'ஆர்மி என்றால் அது இந்திய ஆர்மி, இலங்கை ஆர்மி, பாகிஸ்தான், ஏன்... அமெரிக்கா, பிரிட்டிஷ் ஆர்மி என்று வேறுபடுத்த முடியாது. அவர்கள் எல்லோ ரும் ஒரே ஆர்மிதான். கட்ட விழ்த்துவிட்டால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப் பார்கள். இதைத் தவிர்க்க முடியாது’ என்று ஆங்கிலத்தில் கூறி, கையை விரித்தார்.'

மகாதேவா இந்தக் கூற்றை நிச்சயம் இட்டுக்கட்டி எழுதி இருக்க முடியாது.

மித்ர வெளியீடு, ஆற்காடு சாலை, சென்னை-24.விலை: ரூ. 70.

காரடையான் நோன்புக்காக இந்த வாரம் கவிதை வேண்டாம் என்று வைராக்கியம் செய்திருந்தேன். இரா. சரவணனின் ‘கூப்பிடு தொலைவில்’ விரதத்தை மீறச் செய்தது.

'கூப்பிடு தொலைவில் நீ.
என்ன சொல்லிக்
கூப்பிடுவது என்ற
தயக்கத்தில் நான்.
தெரிந்துகொள்ளும் ஆசை
காதலாகிப்போனது.'

பேருந்தில் காதல் செய்வது எப்படி என்பது பற்றிய உபயோகமுள்ள குறிப்புகள் இந்த ஒல்லியான கவிதைத் தொகுப்பில் கிடைக்கின்றன.

இரா. சரவணன், 55, வி.நகர்-5, இராசிபுரம்-637409.

Sunday, March 21, 2004

 

சிரிப்பு உதிராத புகைப்படம்


அவ்வப்போது நல்ல கவிதைகளைக் குறிப்பிடுவதுபோல் நல்ல திரைப்படப் பாடல்களையும் குறிப்பிட விருப்பம்.

இந்த வாரம்... ‘ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது’

பாடியவர்கள் சாதனா சர்கம், பவதாரிணி. இசை இளையராஜா.

மூன்று கவிதைகளையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

சுபாஷிணி பிறப்பு 1984 இறப்பு 2003
சுபாஷிணியின் வீடு
எந்த திசையில் இருக்கிறது
சிரிப்பு உதிராத புகைப்படத்தில் இருக்கும் சுபாஷிணி
தற்கொலை செய்துகொண்டாளா
மழைக்கால நேரங்கள் ஏதாவதொன்றில் இறந்துபோனாளா
சாலை விபத்தா
சுபாஷிணியைப் பற்றிய சுவரொட்டிகள்
எதையும் தெரிவிப்பதில்லை
சங்கர ராமசுப்ரமணியனின் இந்த அபாரமான கவிதையின் ஆதார சிந்தனை, ஒவ்வொரு முறை 'கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்களைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றியிருக்கிறது.

தொகுப்பு - காகங்கள் வந்த வெயில், புதுமைப்பித்தன் பதிப்பகம்,53--வது தெரு, அசோக் நகர், சென்னை--63. விலை ரூ. 25.

சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ நாளிதழில் பணிபுரியும் லதாவின் கவிதைத் தொகுப்பு ‘தீவெளி’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

அதில் எனக்குப் பிடித்த கவிதை ஒன்று

வானத்தில்
பறந்துகொண்டிருந்த
பட்டங்களுக்குள் ஒரு போட்டி
விழுவது யார் என்று
தற்செயலாய் ஒரு பட்டம்
வாலறுந்து விழுந்தபோது(தான்)
பறப்பது பற்றித் தெரிந்துகொண்டது
லதாவின் கவிதைகள் சிங்கப்பூர் நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலின் தொகுப்பு களிலும், பல பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

சிங்கப்பூரில் எம்.ஆர்.டி. என்னும் பறக்கும் ரயிலில், ‘நகரும் கவிதைகள்’ வரிசையில் இவருடைய இருமொழிக் கவிதை படிக்கப்பட்டது.

நம்மூர் ரயில்களில்கூட பல்பொடி விற்பனையைத் தவிர்த்து கவிதை படிக்க ஆரம்பிக்கலாம். கூட்டம் சற்றுக் குறையும்.

தீவெளி, National Arts Council Singapore. விலை குறிப்பிடவில்லை.

'தென் இலங்கைக் கவிதை' என்ற தலைப்பில்சோ.பத்மநாபன் சிங்களத்திலிருந்து ஆங்கிலம் வழியாகச் சில கவிதைகளை மொழிபெயர்த்திருக் கிறார். ‘நியாயம் உணர்ந்த சிங்களவர் கள் ஏன் உரத்துப் பேசவில்லை? தமிழர் களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்குபெரும்பான்மையோர் மௌன அங்கீகாரம் தருகிறார்களா?’ என்கிற கேள்வி நமக்கும் எழுந்தது. 'இல்லை' என்ற அழுத்தமான விடை இந்தக் கவிதைகளில் கிடைக்கிறது. 1983 ஜூலை தமிழர்களால் மறக்க இயலாதது. அப்போது ஒரு சிங்களவர் எழுதிய கவிதையில்,

நின் சாவின் சுமையினை என்நெஞ்சம் சுமக்கிறது
இந்தச் சூரியனே இருவர் மீதும் முன்பு காய்ந்தது
நாம் சொந்தம் என்று கொண்டாடி வந்ததும்
இந்தக் காற்றையே
உன்னை நினைத்தே அழுகின்றேன், ஆமாம் நான்
நம்மை நினைத்தே அழுகின்றேன்

என்று உருகி எழுதியிருக்கிறார் மோறீன் செனிவிதர்ந, ‘ஸ்ரீலங்கா 83 யூலை’ என்கிற கவிதையில்.

நல்ல கவிஞர்கள் மொழி கடந்தவர்கள்.

விசாகப்பட்டினத்தில்வாழும் எழுத்தாளர் திவாகர், கலிங்கத்துப் பரணியையும் கல்வெட்டுகளையும் மற்ற சரித்திரக் குறிப்புகளையும் ஆதாரமாகக்கொண்டு,‘வம்சதாரா’ என்ற வரலாற்றுப் புதினம் எழுதி எனக்கு அனுப்பியிருக்கிறார். அறுநூறு பக்கங்களுக்குமேல் இரண்டு பாகங் களாக எழுதப்பட்டிருக்கும் இந்தத் தமிழ் நாவலின் சரித்திரச் சான்றுகள் என்னைக் கவர்கின்றன.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்தகலிங்கத்துப்போர்களில் இரண்டாவது மிகக் கொடூரமாக இருந்தது என்பது ஜெயங்கொண்டரின் கலிங்கத்துப் பரணியிலிருந்துதெரி கிறது. ‘எது கொல் இது! எரிகொல்? மறலிகொல்? ஊழியங்கடைஅது கொல்?'(என்ன கொடுமைஇது! நெருப்பா,எமனா, ஊழிக்காலத்து முடிவா?) இவ்வளவுகொடூரம் ஏன்?தமிழரசனான குலோத்துங்க சோழன் அத்தனைகொடூர மானவனா என்பதை ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.ஏன்.. கண்ணில்தெரிந்ததை யெல்லாம்சுட்டுக் கொளுத்தவேண்டும்.. வெட்டிச்சாய்க்க வேண்டும்?அப்படி என்ன பகை? திரை தராதது மட்டும்தான் என்றால்,அற்பக் காரணமாகாதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்நாவலின் சுவாரஸ்யமான கதைப் போக்கில் விடை தந்திருக் கிறார் ஆசிரியர்.

வம்சதாரா என்பது கற்பனைப் பெண் பாத்திரம். வேறு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். பி.ஜே.பி-யை ஞாபகப்படுத்துகிறது. திவாகர் இதைத் தெலுங்கிலும்மொழிபெயர்த்து வெளியிடலாம்.

நர்மதா பதிப்பகம், 10 நாணா தெரு, சென்னை-17. விலை ஒவ்வொரு பாகமும் நூறு ரூபாய்.

Sunday, March 14, 2004

 

பேய் உண்டா இல்லையா?


விஜய் டி.வி-யில் மறுஒளிபரப்பாக சிமி க்ரேவாலின் மென்மையான, அழுத்தமான கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பதில்கள் தயக்கமில்லாமல் தெளிவான ஆங்கிலத்தில் இருந்தன. ‘‘என் வாழ்நாளின் முதல் பகுதியை என் தாய் ஆக்கிரமித்தார். இரண்டாவது பகுதியை மிஸ்டர் எம்.ஜி.ஆர். வழி நடத்தினார். இப்போதுதான் நான் என் வாழ்க்கை யில் மற்றவர் பாதிப்பில்லாமல் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார். ‘‘சில சமயம் ஏன் இப்படி ஆனேன் என்று வியந்திருக்கிறேன். அதற்குக் காரணம் என் வாழ்க்கைதான். அம்மா எனக்குப் பதினெட்டு வயதில் யாராவது மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்திருந்தால் திருப்தியுள்ள மனைவியாக குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்திருப்பேன்’’ என்ற ஜெயலலிதா, சட்டசபையில் புடவை கிழிந்ததும், ஜெயிலுக்குப் போனதும், அவரது வைராக்கியத்தை மாற்றிய முக்கிய சம்பவங்கள் என்றார். ‘‘இனி இந்த சட்டசபையில் நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்று தீர்மானித்தேன். சிறைச்சாலையில் அவதிப்பட்டபோது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை’’ என்றார். சசிகலாவுடனான நட்பையும் விஸ்தாரமாக விளக்கினார். எல்லோர் வாழ்விலும் திருப்புமுனைச் சம்பவங்கள் உள்ளன. அவை நிகழும் போது திருப்புமுனைகளாகத் தெரிவதில்லை.

ஷேக்ஸ்பியரின் ப்ரூட்டஸ் சொன்னதுபோல் There is a tide in the affairs of men which taken at the flood leads on to fortune. பார்ப்போம்.

வாசகரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்தக் கவிஞர்கள் என்னவெல்லாம் தந்திரங்கள் செய்கிறார்கள்! வழுக்கும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடுகிறார்கள். பக்கத்துக்குப் பக்கம் படம் போடுகிறார்கள். ஃபிலிம் சேம்பரில் அல்லது தேவநேயப்பாவாணர் அரங்கில் அல்லது புக்பாயிண்ட்டில் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதற்கு என்றே பட்டிமன்ற கோஷ்டிபோல ஒரு கோஷ்டி இருக்கிறது. அதை விளித்து வந்தவருக்கெல்லாம் டிபன் காபி கொடுத்து, பெரிசாக வெளியீட்டு விழா நடத்தி மேடையில் முப்பது பேரை நெருக்கமாக உட்கார வைத்துப் புகழ்க் குளிப்பாட்டில் நனைந்து, மையமான அசட்டுச் சிரிப்புடன் ஒன்பது மணிக்கு ஏற்புரை தந்து, அரங்கத்தில் சலுகை விலையில் பத்து காப்பி விற்கிறார்கள். அப்புறம் லைப்ரரி ஆர்டருக்குக் காத்திருக்கிறார்கள். கட்டாயமாக எனக்கு ஒரு காப்பி ‘தங்களுடைய கருத்தையும் ஆதரவையும் எதிர்பார்த்து’ என்று அனுப்பிவிடுகிறார்கள். இதெல்லாம் இந்த விளம்பர யுகத்தில் தேவை போலிருக்கிறது.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி எல்.எஸ். ரமேஷ் விஸ்வநாதன் தன் னுடைய ‘காதல்சுவடி’ கவிதைத் தொகுப்பை ஓலைச்சுவடி சைஸிலேயே கெட்டி அட்டையில் அச்சிட்டுத் தனித்தனியாக அடுக்கி பட்டுக்குஞ்சலம் வைத்த தங்க கலர் கயிற்றால் அதைச் சுற்றி அத்தனை அழகாக அனுப்பியிருக் கிறார்.

பிரித்துப் படிக்கவே மனசு வர வில்லை.

பிரித்துப் படித்தது, அச்சுப் பிழைகள் மலிந்த ‘கள்ளியங்காட்டு நீலி’ என்னும் சிவதாணுவின் சிறுகதைத் தொகுப்பை. சிவதாணு ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர், தற்போது சின்னத்திரையில் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சமே! நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் கதைகளில் அடிப்படையாக ஒரு யதார்த்தத்தை கவனிக்க முடிகிறது. குறிப்பாக, ‘கள்ளியங் காட்டு நீலி’, ‘சிறு தெய்வம்’ போன்ற கதைகள் அண்மையில் தமிழில் வந்த சிறந்த கதைகளில் இரண்டு. கதைகளின் யோக்கியம் நம்மைச் செலுத்துவதால் அச்சுப்பிழைகள் உறுத்துவதில்லை.

‘சிறு தெய்வம்’ என்பதில் கிராமத்து நம்பிக்கைகளின் சமூக வியல் அடையாளங்கள் இயல்பாக அமைந்திருக்கின்றன. ''இருட்டில் செல்வம் தியேட்டருக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் சாணல் பாலத்தின் திண்டு என் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெரிகிறது. இந்த சின்ன திண்டின்மேல் யாரோ இருப்பதுபோல் தெரிகிறது. நெருங்க நெருங்கத்தான் அது ஒரு குழந்தை என்று தெரிகிறது. மூன்று வயதுக்கு மேல் இருக்காது இந்தக் குழந்தைக்கு. அதுவும் இது புடவை கட்டியிருக் கிறது. பயந்து போய் விலகிவந்து ஒரு கடையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள டூவீலரை நிறுத்த, கடைக்காரர் 'சாணல்கரை இசக்கியாத்தான் இருக்கும். இன்னிக்கு ஓடுகத்தி வெள்ளிக்கிழமை இல்லை? அதான்... அவ வெளிய வந்து உட்கார்ந்து இருக்கிறா. குழந்த ரூவத்துல இருந்தா அவ ஒண்ணும் பண்ணமாட்டா. நீங்க பயப்படாம போங்க. நானும் அம்மைய பல சந்தர்ப்பத்துல பாத்திருக்கேன்’ என்று தைரியம் தருகிறார்...'' எப்படியோ, வீடு வந்து சேர்கிறார் இவர். அடுத்த நாள் காய்ச்சல். கரையடி மாடன் கோயில் கொடையில் சாமி வந்து ஆடுகிறார்கள். பட்டணத்திலிருந்து வந்த நண்பருடன் அதே பெண்ணை ராத்திரி மறுபடி பார்க்கிறார். நண்பர் அசால்ட் டாக, ‘‘உங்க ஊர்லயும் இரவுராணிகள் நடமாட்டம் அதிகமிருக்குபோல’’ என்கிறார்.

முன்னாடி நடந்துபோகும் அந்தப் பெண்ணைச் சொல்கிறார்.

‘‘பெண்ணா அது... சின்னக் குழந்தை!’’

‘‘ஐந்தரை அடி உயரம் உள்ள பொண்ணு உங்க ஊர்ல குழந்தையா?’’

‘என் கண்ணுக்கு அது குழந்தையாகத் தெரிகிறது. நண்பர் கண்ணுக்கு அது பெண்ணாகத் தெரிகிறது.'

‘‘அவ வருவாளான்னு நான் கேக்கறேன்’’ என்கிறார் சிவதாணுவின் நண்பர். மறுநாள் கன்னியாகுமரியில் நண்பர் ரயில் ஏறவில்லை. மிக மிக வினோதமான அமைப்புக் கொண்ட இந்தக் கதை கிராமத்தில் ‘மித்’ என்பது எப்படி உருவாகிறது என்பதைக் கோடி காட்டுகிறது. நிஜத்தை நம்ப விரும்பாதபோது சிறு தெய்வங்கள் தேவைப்படுகிறார்கள். அற்புதமான கருத்தைப் போகிறபோக்கில் அலட்டிக் கொள்ளாமல் சொல்லியிருக்கிறார் சிவதாணு.

சில சமயம் பெண்களின் உள் மனக் கிடக்கைகளை வெளிப்படுத்த சிறு தெய்வங்கள் தேவைப்படு கிறார்கள்.

‘கள்ளியங்காட்டு நீலி’யில் குப்புசாமி பெண்டாட்டி மாடத்திக் குப் பேய் பிடிக்கிறது. புருஷனால் துன்புறுத்தப்படும் பெண் அவள். பேயை ஓட்டும் பல முயற்சிகள் நுட்பமாக விவரிக்கப்படுகின்றன. உண்மையிலேயே பேயா என்கிற கேள்வி பதிலளிக்கப்படாமலேயே இருக்க... 'இனிமேல் மாடத்தியோடு வாழ முடியாது. கொழுந்தியாளைக் கட்டிக்கொடு' என்று குப்புசாமி கேட்க.. பேய் சட்டென்று விலகுகிறது!

மித்ர 32/5, ஆற்காடு சாலை, சென்னை- 24. விலை ரூ.45.

கொஞ்சம் டெக்னாலஜி பேசலாம்.

Wifi, Wireless Fidelity என்பதுதான் இன்டர்நெட்டில் லேட்டஸ்ட்! விமானநிலையம், சென்ட்ரல் ரயில்நிலையம், ஸ்பென்சர் பிளாசா போன்ற மக்கள் கூடும் கட்டடங்களில் ‘ஹாட் ஸ்பாட்ஸ்’ என்று சில இடங்கள் இருக்கும். அங்கே உங்கள் லாப்டாப் மடிக் கணினியை எடுத்துச் சென்று ஆன் செய்தால் போதும்... வேறு எந்த டெலிபோன், கேபிள் இணைப்புகளும் தேவையில்லை. நேரடியாக இன்டர் நெட்டை அணுகலாம், மெயில் பார்க்கலாம், வலையுலாவலாம். வலை சார்ந்த காரியங்கள் அனைத்தும் செய்யலாம்.

ஓர் அலுவலகத்தில் உள்ள அத்தனை கணிப்பொறிகளையும் இணைக்கலாம். உங்கள் லாப்டாப்பில் அல்லது மேசைக் கணினியில் இதற்கான வசதி தரும் பிஸிஎம்ஸி கார்டு செருகியிருக்க வேண்டும். புதிதாக வரும் எல்லா லாப்டாப் களிலும் இது இயல்பாகவே தரப்படும். மேலும் விண்டோஸ் 2000 இருந் தால் நல்லது.

இது எப்படிச் சாத்திய மாகிறது?

அந்த ஏரியாவில் ஒரு குட்டி ட்ரான்ஸ்மிட்டர் ரேடியோ வெளிச்சம் போடுகிறது. 2.4 கிகா ஹெர்ட்ஸில் ஸிஸிகே என்னும் காம்ப்ளிமெண்டரி கோடு கீயிங் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி 11 மெகாபிட் வேகத்தில் செய்தியை அனுப்பவும், பெறவும் முடியும். ஸிஸிகே என்பது என்ன என்பதை விளக்க ஆட்டோகோரி லேஷனை விளக்கவேண்டும். அதை முற்பட்டால் நீங்கள் மூடி வைத்துவிட்டு, ரேடியோ மிர்ச்சியில் ‘மே மாதம் 98|ல் மேஜரானேனே’ கேட்கப் போய் விடுவீர்கள்.

சென்ட்ரல் ஸ்டேஷனில் இந்த வசதியை டிஷ் நெட் நிறுவனமும் விமானநிலையத்தில் சிஃபியும் ஏற்படுத்தியுள்ளார்களாம். ஸ்பென்சர் பிளாசாவிலும் இந்த ரேடியோ வெளிச்சப் பகுதிகள் உள்ளன.

இந்தியா ஒளிர்கிறது (லாப்டாப் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்)!

செந்தில்குமாரின் ‘ஒன்றுமற்ற ஒன்று’ என்கிற கவிதைத் தொகுப்பில் (குடில் பதிப்பகம், மன்னார்புரம், திருச்சி 20) இந்தக் கவிதையின் கடைசி வரிகளின் படிமம் எனக்குப் பிடித்திருந்தது.

எங்கிருந்தோ
ஒரு விரல் நுனியில் துவங்குகிறது
பின்
வெளியில் கரைந்து எண்களின் குரலாக ஒலிக்கிறது
.....
....
மீன்களின் செதில்கள் வழியாக
கடக்கும் நீரைப் போல

மற்றொரு முனையில்

ஒரு மாறுதலுக்கு காதலை மறந்து விட்டு செல்போன் பற்றி கவிதை எழுதமுன் வந்த திருச்சிக்காரருக்குப் பாராட்டுகள்.


Sunday, March 07, 2004

 

கற்றதும் பெற்றதும்


தேர்தல் நெருங்க நெருங்க மக்களுக்கு நலவாழ்வுத் திட்டங்களையும் சலுகைகளையும் செங்கோட்டையும், ஜார்ஜ் கோட்டையும் ரிப்பன் கட்டடமும் போட்டி போட்டுக்கொண்டு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் 'இந்தியா ஒளிரும் ஒன்பது பர்சன்ட் முகூர்த்த வேளை'யில் எங்கள் வீட்டு கிவிக்குக் கூடத் தெரியும், இது ஏப்ரலுக்கு மேல் தாங்காது என்று. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள, சில வேண்டுகோள்களை கார்ப்ப ரேஷனுக்கும் மாநில அரசுக்கும் மைய அரசுக்கும் முன்வைக்கிறேன். இவற்றை நிறைவேற்றினால் என் வோட்டு உத்தரவாதமாக உங்களுக்கே!

வள்ளுவர் கோட்டத்துக்கு முன்னால் இருக்கும் நான்கு வருஷச் சகதிப்பாதையைச் சீராக்கவும். கோடம்பாக்கத்துக்கு மற்றொரு ஓவர் பிரிட்ஜ் கட்டவும். மாநில அரசு விவசாயிகளுக்குக் கொடுத்தது போல எல்லாருக்கும் இலவச மின்சாரம் கொடுக்கவும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு செல்போன் வழங்கலாம். அல்லது லாப்டாப்! அல்லது, குறைந்தபட்சம் ஒரு குஞ்சாலாடு.

மைய அரசு இன்கம்டாக்ஸை முழுசாக ரத்து செய்யலாம். ஏரோப்ளேன் டிக்கெட்டுகளை பஸ் கட்டண ரேட்டுக்குக் கொண்டுவந்து விமானத்தின் உள்ளே ஸ்டாண்டிங் அனுமதிக்கலாம். சும்மா கேட்டு வைப்போமே!

பா. சத்தியமோகன் நெய்வேலியில் என்.எல்.சி-யில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிகிறார். ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக் கிறார். ‘அப்பா வாசனை’ என்ற சிறுகதைத் தொகுப்பை இப்போ வெளியிட்டிருக்கிறார் (அப்பா - இப்போ... எப்படி எதுகை!). சிறுகதைத் தொகுப்புகளில் முதலில் தலைப்புக் கதையைப் படித்துவிடுவேன். ஆசிரியரே ஏதோ ஒரு முக்கிய காரணத்துக்காக அதைத் தலைப்புக்குத் தேர்ந்தெடுத்திருப் பார்.

‘அப்பா வாசனை’ என்கிற கதை சிறப்பாகவே இருந்தது. கோமாவில் இருந்து பெட்ஸோர் வந்து எல்லோருக்கும் கஷ்டம் தரும் அப்பாவை தூக்கமாத்திரை கொடுத்து கருணைக்கொலை செய்ய வருத்தத்துடன் தீர்மானித்த பின், அதன் குற்ற உணர்வை நீக்குவதுபோல் அப்பாவே அதற்குத் தேவையில்லாமல் செத்துப்போய்விடுகிறார்.

'‘அந்த மூடின கண்களிலிருந்து ஏதோ கேள்வி... 'உன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்திட்டேன் பாத்தியா?'

ஊதுவத்திப் புகை காற்றை இழைக்க முதுகுப்புறம் யாரோ பேசினார்கள்... ‘இனிமேல் வீடு நாற்றமில்லாமல் இருக்கும்.’

அய்யோ... எனக்கு அது வேண்டும்! அந்த வாசனை இனி அறைவிட்டுச் செல்லுமோ? அப்பா வாசனை... அப்பா வாசனை...’’

இங்கேயே அழகாக கதை முடிகிறது. மார்பில் அடித்துக்கொண்டு அவருக்குக் கொடுக்க இருந்த தூக்கமாத்திரை அட்டை வெளியே வந்து விழுவது போன்ற முடிவைத் தவிர்த்திருக்கலாம். சிறுகதை என்பது ஒரு sஜீக்ஷீவீஸீt போல, நூறு மீட்டர் ஓடிய பின்பும் மார்பில் ரிப்பன் தொடர மைதானம் முழுக்க ஓடிக்கொண்டே இருப்போம்.அதுதான் கஷ்டம்! எனினும், இந்தக் கதையின் அடிப்படைச் சங்கடம் எல்லாக் குடும்பங்களிலும் ஒரு கால கட்டத்தில் நிச்சயம் ஏற்படுவதால்,இது ஒரு சர்வதேசத் தன்மை பெற்ற கதை.

வெளியீடு: காவ்யா, முதல் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம், சென்னை-24. விலை ரூ. 55.

Redivider போன்ற வார்த்தையை இடம் வலமாகவும் வலம் இடமாகவும் ஒரே மாதிரி படிக்கமுடியும். இவற்றை ‘பாலிண்ட்ரோம்’ (palindrome) என்பார்கள். வாக்கியத்துக்கு murder for a jar of red rum என்பது ஓர் எளிய உதாரணம். ஆங்கிலத்தில், பாலிண்ட்ரோம்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள். உலகின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 19000 எழுத்துகளுக்கு மேற்பட்டது.

தமிழில் விகடகவி, மோருபோருமோ, தேரு வருதே போன்ற சிறிய உதாரணங்கள்தான் இருக்கின்றன என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.

‘மாலை மாற்று' என்கிற பாவகையே இருக்கிறது. இதில் தேர்ந்தவர் திருஞானசம்பந்தர். மாலை மாற்றாக பதினோரு குளறளடிச் செய்யுள்கள் பாடியுள்ளார். உதாரணம்...

‘யாமாமா நீயாமா மாயாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா’

'அற்ப மனிதர்களால் ஒன்றும் பண்ண முடியாது, மகாசக்தி வாய்ந்த இறைவா உன்னால்தான் முடியும்' என்பது இதன் அர்த்தம் என்று காஞ்சி மகா பெரியவாள் எழுதியிருக்கிறார். எப்படி என்று யாராவது தமிழ்ப் பண்டிதர்கள் பதம் பரித்து அர்த்தம் கொடுத்தால், தன்யனாவேன். கூடவே, எளிதில் புரியும்படியாக தமிழில் பாலிண்ட்ரோம்கள் அனுப்பினால், மிக நீண்டவைகளுக்கு விகடன் பிரசுரமாக வரப்போகும் என் புத்தகமான ‘ஏன், எதற்கு, எப்படி’ இரண்டாம் பாகம் அனுப்புகிறேன்.

குடவாசல் நண்பர் அனுப்பிய ‘போகர் எழுநூறு’ (22.2.04) என்ற கிழிந்த புத்தகத்தில் என்னதான் இருந்தது என்று சிலர் கேட்டு எழுதியிருக்கிறார்கள். அவர்களின் நன்மைக்காக இதோ ஒரு சாம்பிள். நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

‘ஊட்டடா வெள்ளாட்டுப் பால்தானொன்றுத்தமனே தேங்காய்ப் பால்படிதான் ரெண்டு ஊட்டடாப் பாலோடுகியாழமொன்று ஊட்டிவைத்து இன்னும் வகையுரைக்கக் கேளு மூட்டடா சாதிக்காய் பத்திரி கிராம்பு முடிவான ஏலமொடு லவங்ககோஷ்டம் வாட்டடா குங்குமப் பூ கோரோசனைதான் வால்மிளகு குரசாயனியோமமுமாமே...’’

இவ்வகையிலான எழுநூறில், நூற்றுக்கு மேற்பட்ட வாசகங்கள் எனக்கு அன்புடன் அனுப்பப் பட்டன.

ஏதோ நாட்டு மருந்து சமாசாரம் போல இருக்கும் இதனைப் பதம் பிரித்து, இன்னா மேட்டர் என்று கண்டுபிடித்து தயாரித்துச் சாப்பிட்டுப் பார்த்து மலச்சிக்கல் தீர்கிறதா, நேர்கிறதா என்பதை எனக்கு எழுதவும்.

இந்த வாரக் கவிதை:

காரின் வண்ணம் மாற்றும் கவலை
காலணியில் சகதி பட்ட வருத்தம்
பேருந்தைத் தவறவிட்ட உளைச்சல்
மழை வெயில் பற்றிய எரிச்சல்
தூசிவாரி இறைத்த காற்றின்
மீதான தூஷணை
பகை, கோபம் வளர்ப்பு.
மறைவாக
பாயத் தயாரான புலியாக
வந்துகொண்டிருக்கிறது மரணம்
- (ஆனந்தா, நிறங்களின் கூடு, காவ்யா)

This page is powered by Blogger. Isn't yours?