Sunday, April 11, 2004

 

எதை, எங்கே, எப்படி வைக்கவேண்டும் என்று


தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ் சிறுகதைகள் வரிசையில் ‘பரிசு’ சிறு கதையை பாலுமகேந்திரா தொலைப் படமாக்கியிருக்கிறார். அது தொடர் பாக என்னைப் பேட்டியெடுத்தார். பேட்டி என்பதைவிட, இருவரும் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து, ஒரே ஒரு தெர்மோகோல் வைத்துவிட்டு, காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார். பல விஷயங்கள் பற்றிப் பேசினோம். பேட்டி முடிந்து படம் போட்டுக்காட்டினபோது, 'அட.. இது நானா..?' என்று ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான். தெர்மோகோல் ஏராள மாக சென்னையில் கிடைக்கிறது. இருந்தும் எதை, எங்கே,எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திராதான் இருக்கிறார்.

பாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்து காலங்களிலேயே தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் அவர் ‘சங்கராபரணம்’ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்’ படித்துவிட்டு, அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார். பெங்களூருக்கு அவர் ‘கோகிலா’ படம் எடுக்க வந்திருந்தபோது கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். மூவரும் நிறைய பேசினோம். பின்னர், ‘கரையெல்லாம் செண்பகப் பூ’வை பாலுமகேந்திரா எடுப்பதாக, நடராஜன் (பிற்பாடு பிரமிட்) தயாரிப்பதாக, காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது. திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

பாலு அதற்குப் பதில் ‘மூடுபனி’ எடுத்தார். பின்னர் பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத, அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம். அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. ஓரளவுக்கு பாலுமகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும் ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார். சற்றே சமாதானமானோம்.

‘கரையெல்லாம் செண்பகப் பூ’வை அதன்பின் சாவி தான் எடுப்பதாக ஒரு நண்பரைக் கூட்டி வந்தார். அதன்பின் இளையராஜா, அதன்பின் பஞ்சு அருணாசலம், புவியரசு என்று பேருக்குப் பேர் அதை எடுத்தே தீருவேன் என்று ஆரம்பித்து கைவிட்டார்கள். ஜி.என். ரங்கராஜன் கடைசியில் அதை எடுத்து ஒரு வழிபண்ணினார். இப்போதுகூட ஒரு டைரக்டர் அந்தக் கதையைரீ-\மேக்காக மறுபடி எடுக்கலாம் என்று என்னை அணுகினார். ‘என்னங்க.. அவன் நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக்கு சுவிட்சர்லேண்டு போறதா வெச்சுக்கிட்டு அங்க ஒரு சாங் வெக்கலாங்க’ என்றார். நான் ‘எஸ்கேப்’ என்று ஓடிவந்துவிட்டேன்.

பாலுவுடன் பேசிக்கொண்டிருந்த அந்தப் பேட்டி எப்போதாவது விரிவாக ஒளிபரப்பாகலாம். அதில், எழுதப்பட்ட கதையை சினிமாவுக்கு மாற்றுவதில் உள்ள சங்கடங்களையும் சந்தோஷங்களையும் பற்றிப் பேசினோம். நான் ஒரு கதையின் துவக்கத்தில் கணவன் \ மனைவியை வர்ணிக்கையில், ‘பத்து வருஷ திருமண வாழ்வின் அலுப்பும் மௌனமும் அவர்களிடையே நிலவியது’ என்று எழுதுவதை பாலு மாற்றும்போது, கணவன் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறான். எதிரே மனைவியை பேப்பர் மறைக்கிறது. குக்கர் சத்தம் கேட்கிறது. அழைப்பு மணி ஒலிக்கிறது. கணவன் கவனிப்பதில்லை. தொடர்ந்து பேப்பர் படிக்கிறான். இப்படி கதையின் ஆதார உணர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு மற்றொரு ஊடகத்துக்குக் கடத்தும்போது எழுத்தாளனிடமிருந்து பறிக்கப்படும் சுதந்திரம் வேறு வடிவில் மீட்கப்படுகிறது.

இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன் தன் ‘இரத்தினகிரி மணிமாலை’ கவிதை நூலை எனக்கு அனுப்பியிருந்தார். இரத்தினகிரியை 'ஏழாம் படை வீடு' என்கிற அளவுக்கு ஏற்றமாகப் பாடப்பட்ட மரபுக் கவிதைகள். இரத்தினகிரி ஒரு அதிசயம்தான். பாலமுருகன் அடிமை என்னும் அதன் சுவாமிகள், மின்வாரியத்தில் ஒரு பணியாளராக இருந்தவர். ஒருநாள், ஆபீஸ§க்குப் போகாமல் அந்தக் குன்றின்மேல் ஏறிக்கொண்டு சிதிலமாக இருந்த சிறிய முருகன் கோயிலில் உட்கார்ந்துவிட்டார். பேசுவதை நிறுத்தி விட்டார். இப்படி ஆரம்பித்த அந்தக் கோயில்,அரை நூற்றாண்டில் மிகப் பெரிய முருகன் தலமாக விரிவடைந்து, படி கட்டிப் பாதை அமைத்து, நகைகள் வாங்கி, பிராகாரம் கட்டி, விழாக்கள் எடுத்து, அறக்கட்டளை அமைத்து, பக்தர்கள் கோடிக்கணக்கில் கொண்டுவந்து கொட்ட, மிகப்பெரிய தெய்வத்தலமாக மாறிவிட்டது.

ஆரம்பகாலத்தில் அவரை அவ்வப் போது சென்று பார்த்திருக்கிறேன். சிலேட்டில் எழுதிக்காட்டுவார். அவ்வளவுதான். அவருடைய சொத்து ஒரு சிலேட், ஒரு சாக்கட்டி, கள்ளமில் லாத சிரிப்பு. இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய கோயிலை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது என்றால் அதை தெய்வச் செயல் என்பதா.. டாமினோ எஃபெக்ட் என்பதா?! ஒரு நடை வேலூர் அருகே உள்ள கீழ் மின்னலுக்குப் போய்ப் பாருங்கள்.. என் பிரமிப்பின் காரணம் உங்களுக்குப் புரியும்.

சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். 'நீங்கள் எழுதுவீர்களா?' எனக் கேட்டேன். 'ஒரு காலத்தில் எழுதியிருக்கிறேன். தற்போது ரிப்போர்ட்டுகள்தான் எழுதிக் கொண்டிருக் கிறேன்' என்றார். நடராஜன், பூர்ணம் விசுவநாதனின் சகோதரர் மகன். எழுத்தாளர் உமாசந்திரன் அவர்களின் மகன் (‘முள்ளும் மலரும்’). நான் ஓரிருமுறை உமாசந்திரனைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். சென்னை போலீஸ் பல புதிய ஹைடெக் விஷயங்களைக் கொண்டுவந்திருக் கிறது. கண்ட்ரோல் ரூமிலும், பேட்ரோல் கார்களிலும் ஜி.பி.எஸ். வைத்து, உடனுக்குடன் சம்பவத்தலத்துக்கு விரைகிறார்கள். டிராஃபிக் விளக்குகளில் ‘கவுண்ட் டவுன்’ வைத்திருப்பது ஒரு மிக நல்ல உத்தி. காமிரா வைத்து மீறல்களையும் கண்காணிக்கிறார்கள். மீறுபவர்களுக்கு அமெரிக்கா போல கடுமையான அபராதம், தண்டனைதான் இல்லை. அண்மையில் என் மாமனார் வீட்டில் திருடு போயிற்று. கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். மூன்று நிமிஷத்தில் ரோந்து கார் வந்தது. இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் மற்றும் அபிராமபுரம் எஸ்.ஐ. குழுவினர் அரை நாளில் குற்றவாளியைக் கண்டுபிடித்து முக்கால்வாசிப் பணத்தையும் மீட்டுக் கொடுத்துவிட்டார் கள். நடராஜன் மூலமாக அவர் களுக்குஎன் பாராட்டுகளைத் தெரிவித்தேன்.

‘கற்றதும் பெற்றதும்’ இரண்டாவது அவதாரம் ஓராண்டுக்கு மேல் வந்து எனக்கு எல்லையில்லாத கிளர்ச்சியையும், சினேகித லிகிதங்களையும், மென்மையான மின்னஞ்சல்களையும் உலகெங்கிலுமிருந்து தந்தது. எந்த நல்ல விஷயத்தையும் அளந்துதான் கொடுக்கவேண்டும். மேலும், இப்போது தமிழக மக்கள் தேர்தல் கவனக் கலைப்பில் இருப்பதால், புதுக்கவிதையும் இலக்கிய விசாரமும் சுயபிரலாபங்களும் ஆழ்வார்களும் அவ்வளவாக எடுபடாது. அதனால் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது பாகத்தைத் துவங்குகிறேன்.அதுவரை எலெக்ஷன்.. கிரிக்கெட் எல்லாம் முடித்துவிட்டு வாருங்கள்!

Sunday, April 04, 2004

 

குழாயில் ஒரு குவளை நீர்!


'What Almost Every Woman Knows Sooner or Later’ என்ற தலைப்பில் ஆக்டன் நாஷ் (Ogden Nash) எழுதிய கவிதையை அண்மையில் மறுமுறை ரசித்துப் படித்தேன். நாஷ் அருமையான வேடிக்கைக் கவிஞர். 'எனது துறை மனித இனத்தில் சின்ன முட்டாள் தனங்களைச் சித்தரிப்பது’ என்றார். அவர் அமெரிக்கர். 1971 வரை நியூயார்க்கில் வாழ்ந்தவர் டென்னஸி மாகாணத்தில் நாஷ்வில் நகரம் இவர் மூதாதையர் பெயரில் ஏற்பட்டது. இவருடைய கவிதைகளின் அமைப்பு மிக விநோதமானது. வரிகளை எங்கே ஒடிப்பார், எங்கே முடிப்பார் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஒரு வரி மூன்றே வார்த்தைகளில் இருக்கும். மற்றது இருபது. சரளமான வார்த்தை வீச்சுடன் இறுதி எதுகை இருந்தே தீரும். ஒரு உதாரணம் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

Husbands

Husbands are things that wives
have to get used to putting up with.
And with whom they breakfast
with and sup with.
They interfere with the discipline
of nurseries,
And forget anniversaries,
And when they have been
particularly remiss
They think they can cure
everything with a great big kiss,

எப்போது எதுகை வரும் என்கிற ஆச்சரியம்தான் கவிதையில் நம் கவனத்தை நிறுத்தும். தமிழில் இவ்வாறு எதிர்பாராத இடங்களில் எதுகைகள் வைப்பவர் எனக்குத் தெரிந்து கவிஞர் வாலி ஒருவர்தான்.

‘அசோதை மைந்தன்
அடங்காச்சினம் கொண்டு
அள்ளினான் கொக்கை

அதன் கூரிய அலகுகளை
இரு கூறாகப் பிளந்து
ஆவியை உருவ,
அரக்கன் ஆனான்
சக்கை!'.

இம்மாதிரியே ராமாயணம், மகாபாரதம், கண்ணன் கதை அனைத்தும் சளைக்காமல் எழுதிவரும் எங்கள் ஊர்க்காரருக்குப் பாராட்டுக்கள்.

தேர்தல் வருகிற சமயத்தில் யாருக்கு வோட்டுப் போடுவது என்னும் கேள்வி எழும். இதற்கான விதிமுறைகளை நான் முன்பே அன்புடன் அளித்துள்ளேன். தயை கூர்ந்து நினைவுகூரவும். இந்த முறை உங்களை வேட்பாளர் அல்லது அவரது அல்லக்கை ஒருவர் வோட்டுக் கேட்டு வரும்போது சென்னைவாசிகள் உத்தர வாதமாகக் கேட்கலாம்... 'அய்யா! தேர்தல் தேதிக்கு முன் ஓரிரண்டு காரியம் செய்வீர்களா? குடிநீர் வாரியக்காரர்களும், மின்வாரியர் களும், கார்ப்பரேஷர்களும் ஒத்துழைத்து எங்கள் ‘.................’ தெருவை மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி போல் தோண்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். இதை அடைத்து, நடப்பதற்காவது இடம் கொடுப்பீர்களா?

மெட்ரோ வாட்டர் மஞ்சள் அட்டை அனுப்பி, வராத தண்ணீருக்கு வரி கேட்டிருக்கிறார்கள். கட்டுகிறோம். தேர்தல் தேதிக்குள் குழாயில் அல்பம் ஒரு குவளைத் தண்ணீராவது வரவழைப்பீர்களா? இவ்விரண்டு காரியங்களையும் செய்துவிட்டால் போதும்.. உமக்கே எங்கள் வோட்டு!' என்று சொல்லுங்கள். அதிசயமாக, அவசரமாக நீங்கள் கேட்டது நிகழ்ந்துவிட்டால், அதற்கு இருவரும் கிரெடிட் எடுத்துக் கொள்வார்கள். யாருக்குப் போடுவது என்கிற கேள்வி மறுபடி வரும். இருவரில் யார் அதிகம் படித்தவர், யார் குறைந்த வயது, ஆணா, பெண்ணா., நல்ல குடும்பத்தவரா போன்ற வழக்கமான சுஜாதாவின் பத்துத் தகுதிகளின்படி வோட்டுப் போடுங்கள். இல்லை.. பக்கத்து வீட்டு குட்டிப் பாப்பாவைக் கூப்பிட்டு... ‘இரண்டு விரல்ல ஒண்ணு தொடு’!

சோனியாகாந்தி யிலிருந்து தயாநிதி மாறன், பாலகங்கா வரை படம் எழுது பவர்களுக்கு, கம்பத்தில் நுங்கு பறிப்பவர்போல ஏறத் தெரிந்தவர்களுக்கு, கொடி தயாரிப்பாளர்களுக்கு, தெருமுனை பேச்சாளர்களுக்கு, பாட்டரியில் இயங்கும் ஆம்ப்ளிஃபையர் வைத்திருப்பவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் தயாரிப்பவர்களுக்கு.. இப்படி சுமார் முப்பது புதிய தொழில்கள் என் கணக்கிலேயே உள்ளன. இதெல்லாம் நேர் வழிகள். குறுக்குவழிகளான கத்திவீச்சு, கள்ளவோட்டு, கள்ளநோட்டு, கொலை மிரட்டல், வேட்பாளரைப் போட்டுத் தள்ளுவது, நாட்டு வெடிகுண்டு, பலான பார்ட்டி போன்றவை எல்லாம் முதல் லிஸ்டில் சேராது.

இந்த வாரம் இரண்டு வைணவ அறிஞர்கள் பற்றி..

ஸ்தானீகம் பார்த்தசாரதி ஐயங்காரின் நூற்றாண்டு நிறைவையும், ஸ§தர்சனர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஐயங்காரின் எண்பதாண்டு நிறைவு விழாவையும் சமீபத்தில் வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமிகளும் மற்ற வைணவ அறிஞர்களும் சென்னை யில் ஒய். ஜி.பி. அரங்கில் கொண்டாடி னார்கள். பார்த்தசாரதி ஐயங்காரின் பெருமைகளைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். பல மாத இதழ் களும் நூல்களும் பதிப்பித்துள்ளார். அவரது திவ்யப்பிரபந்த அகராதி ஒரு மகத்தான நூல். அது சொற்களுக்கு அர்த்தம் மட்டும் சொல்லும் அகராதி அல்ல. ஆங்கிலத்தில் Concordance என்பார்கள். அதுபோல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் கூறி, அது பிரபந்தத்தின் எந்தெந்தப் பாடலில் எந்தெந்த இடத்தில் வருகிறது என்று திரட்டியிருக்கிறார்.

ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும் நூல். ஏறத்தாழ அரை லட்சம் சொற்கள் இருக்கலாம். ஒருவரே முனைந்து அவ்வளவு முழுமையான அகராதியைத் தயாரித்திருப்பது பிரமிப்பூட்டும் விஷயம். எனக்கு பிரபந்தத்தில் பல வார்த்தை களுக்கு நேரடியான பொருள் விளங்காதபோது, நான் முதலில் நாடித் தேடுவது ஸ்தானீகம்தான். மேலும் இந்தப் புத்தகத்தை என் தந்தை கையெழுத்திட்டு அன்பளிப்பாக எனக்குத் தந்தார். இது என் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. என் தமிழில் ஏதோ லேசான சிறப்பு இருக்கிறதாக யாரோ சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் பிரபந்தம்தான். அதை எனக்குப் பலவிதங்களில் தெளிவாக்கியது இந்த அகராதிதான். ஐம்பது ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படாத இந்த அரிய நூலின் புதிய பதிப்பைக் கொண்டுவர வைஷ்ணவஸ்ரீ முன்வந்திருக்கிறார். முன்பதிவு செய்துகொள்ள வைஷ்ணவஸ்ரீ, 214, கீழஉத்திர வீதி, திருச்சி 6-க்கு எழுதவும்.

திருப்பதி கோயில் நிஜமாகவே வைணவக் கோயிலா போன்ற அர்த்தமற்ற சர்ச்சைகளில் ஈடுபடாமல், வைணவர்கள் திராவிட வேதமான பிரபந்தத்தை நிலைப்படுத்துவதில் ஈடுபடவேண்டும். சைவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தில் எல்லாம் குறிப்பிட்டிருக்கும் மால்வரை குன்றத்தை சிவன்கோயில் என்று சொல்லி வைணவர்களை - குறிப்பாக புத்தூர் ஸ்வாமிகளை சீண்டாமல் இருக்கவேண்டும்.

ஸ§தர்சனர் பற்றிப் பேசவும் வேண்டுமோ? அவர் ஒரு சிம்மம். வைதீக மதத்தின் காவலர். எங்கே வைணவத்தைப் பற்றித் தப்பான செய்திகள் வருகின்றனவோ, உடனே கண்டனம் தெரிவிப்பார். நானே அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். (ஆழ்வார்கள்- ஓர் எளிய அறிமுகம்) அவருடைய கண்டனத்தை அறிவூட்டும் கண்டனம் என்பர். எந்தவித மரியாதைக்குறைவோ, வசவோ இருக்காது.ஆணித்தரமாக ஒரு தேர்ந்த வழக்கறிஞர்போல வாதங்களை முன்வைப்பார். கலைஞன் பதிப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கும் அவரது 'ஸ§தர்சனர் 1008' என்னும் நூல், இந்து மதத்தை அறிந்துகொள்ள எல்லாருக்கும் பயன்படும் நூல்.

புத்தூர் ஸ்வாமி அவர்களை 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று வைணவ உலகமே வாழ்த்தியது.

இரவி தலைப்புக் கொடுப்பதில் தேர்ந்தவர் என்பது தெரிகிறது. அவருடைய கவிதைத் தொகுப்புக்குப் பெயர் 'கனவுநிலை உரைத்தல்’. முன்னுரை-'சப்போட்டா மர அருகாமையும் ஒரு வெயிலடர்ந்த வேளையும்’. பின்னுரைக்கு ‘ஒரு கவிதைக்காரனின் சிராய்ப்புகளும் கிணற்றுப்பூண்டு வைத்தியமும்’ என்று தலைப்பு.

‘‘ஓணான் அடித்து மயங்கிய அதன் கண்களில் எருக்கம்பாலை வைத்து இறப்பின் இறுதியில் அதைப் புதைத்துவிட்டு மறுநாள் தோண்டினால் ஐந்து ரூபாய் கிடைக்கும் எனநம்பி \ அளவுக்கு அதிகமாய் நுணாப்பழம் தின்று காலை ‘வெளிக்கி’ கருப்பாய் வந்ததைப் பார்த்து பயந்து \ பாட்டன்கரட்டிலிருந்து காசரளிசெடி பிடுங்கிவந்து பாத்திரம் கழுவுமிடத்தில் அதை நட்டு, அது பூக்கும் காலத்தில் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்று கூத்தாடி பனங்கொட்டைகள் சேகரித்து...

இவ்வாறு முடிவில்லாமல் செல்லும் நடை தற்போது பலரால் பயன்படுத்தப் படுகிறது. எனக்கு ஒரு வாக்கியம் ஆறு வார்த்தை. அவ்வளவுதான். அதற்கு மேல் போனால் மனம் போதும் போதும்என்று மணியடிக்கும்.

இரவியின் சில சிறுகவிதைகள் சொல்லும்படியாக உள்ளன.

'பெண்களிடம் பேசுகையில்கன்னத்தில் அறைவதாய்ப்படும்மாராப்புச் சரிசெய்தல்கள்''தமிழுக்கு அமுதென்று பேர்தமிழனுக்கு இரண்டு மொழிகளில் பேர் ஷி சந்தானம்'

மதி நிலையம், பிருந்தாவன் அடுக்ககம், தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. ‘வாயாட’வும் ‘கைப்பேச’வும் எண்கள் தந்துள்ளார். மதிப்பு ரூபாய் 20.

This page is powered by Blogger. Isn't yours?