Sunday, September 26, 2004

 

நாகரிகம், அநாகரிகம் தெரியும்... அதென்ன ஆநாகரிகம்?


இதற்குமுன் இங்கு வந்திருக்கிறேன்
எப்போது, எப்படி... தெரியவில்லை
கதவுக்கப்பால் புல்வெளியை எனக்குத் தெரியும்
இனிய நுட்பமான மணம் தெரியும்
பெருமூச்சின் ஓசை தெரியும்
கடற்கரை விளக்குகள் தெரியும்
இதற்குமுன் வந்திருக்கிறேன். (டி.ஜி.ரோஸட்டி, 1828-1882)

தாந்தே கேப்ரியல் ரோஸட்டி கவிஞர் மட்டுமல்ல, ரேஃபெல் காலத்துக்கு முந்திய சித்திரக்காரரும்கூட! தன் முதல் மனைவியைப் பலமுறை அழகான ஓவியங்களாக வரைந்தார். அவள் இறந்தபோது, துக்க மிகுதியில் தன் கவிதைகள் அனைத்தை யும் சேர்த்து அவளுடன் அடக்கம் செய்துவிட் டார். இந்தக் காதல் கதை இத்துடன் முற்றுப் பெற்றிருந்தால் கவிதை. ஆனால், இல்லை!

ரோஸட்டி அதன்பின், ஒரு விலைமாதை மணந்தார். அவளையும் சகட்டுமேனிக்கு வரைந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து, முதல் மனைவியின் கல்லறையை மறுபடி திறக்கச் சொன்னார். அங்கங்கே பூச்சி அரித்திருந்த தன் கவிதைத் தொகுப்பை மருந்தடித்து மீட்டு, அதைப் பதிப்பித்தார். அந்தக் கவிதைகளில் ஒன்றுதான் முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன" என்ற முன்னுரையுடன் எனது நண்பர் சாரதி இ-மெயில் அனுப்பி, 'இது உங்கள் பகுதிக்கு உதவுமா, பாருங்கள். இல்லையென்றால் டெலீட்டுங்கள்' என்று எழுதியிருந்தார்.

பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார் (எனக்கென்னவோ MAD-லிருந்து தட்டியிருக்கிறாரோ என்று சந்தேகம்!). இம்மாதிரி சாரதி இருபது அயிட்டம் கொடுத்திருந்தார். அவற்றில், நம் சூழ்நிலையில் பிரசுரத்துக்குத் தகுந்த பத்து மட்டும் தருகிறேன்.

உதாரணம்:
1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!

2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.

3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் 'ஸ்க்'குவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்' என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் பாய, 'ஸாரி' சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.

4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.

5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.

6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.

7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.

8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.

9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.

10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!

'உலகத் தமிழ் ஓசை' இணைய செயற்கைக்கோள் வானொலி அறிமுக விழா (www.intamil24.com) தமிழக ஆயர் பேரவை ஊடகக் குழுத் தலைவர் மேதகு ஆண்டனி டிவோட்டா தலைமை தாங்க, சிறப்பாக நடைபெற்றது. பெரும்பாலும் கத்தோலிக்கர்கள் நிறைந்திருந்த அந்த விழாவில், அருட்திரு வின்சென்ட் சின்ன துரை, அருட்திரு ஜெகத்கஸ்பார், திரு.ஞானவேல் போன்ற பலரும் நல்ல தமிழில் பேசினார்கள்.

திருச்சபையின ருக்கும் தமிழ் மொழிக்கும் பதினெட்டாம் நூற்றாண்டு பெஸ்கி பாதிரியார் காலத்திலிருந்தே பிணைப்பு உண்டு. வீரமாமுனிவர் தமிழை முழுவதும் கற்று, சதுரகராதி படைத்தார்.

தமிழர் நெஞ்சங்களுக்குக் குறுக்குப் பாதை தேவையென்றால், தமிழ் மொழியை ஒழுங்காகக் கற்கவேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவும் ஜெகத் கஸ்பார், திருவாசகத்திலிருந்து chapter and verse மேற்கோள் காட்டுகிறார்.

இளையராஜாவின் சிம்பொனி, இவர் போன்ற ஸஹ்ருதயர்களின் முயற்சியின் மூலம்தான் உலகுக்குக் கிடைக்கப்போகிறது. இதை அறிந்தால், மாணிக்கவாசகரும் சிவபெருமானும் கர்த்தரும் சந்தோஷப்படுவார்கள். சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம், கம்யூனிட்டி ரேடியோ நடத்த பயிற்சி அளிக்கப்போகிறார்கள். மேலும், ஒரு நல்ல தொலைக்காட்சி சானலும் துவங்கப் போகிறார்கள். எல்லாம் கஸ்பார் மயம் ஜகத்!

டெல்லியில் ஒரு சிற்றுண்டி சாலையில், தரையில் மெத்தை, தலையணை போட்டு, அதில் உட்கார வைத்து, சமூசா சமாசாரங்கள் பரிமாறுகிறார்கள் என்பதைச் செய்தியாக சமீபத்தில் டி.வி-யில் காட்டினார்கள்.

சென்னை நகர பஞ்சாபி தாபா ஒன்றில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, எழுந்திருக்க முடியாமல் தவித்திருக்கிறேன்.

கோடம்பாக்கத்துக் கதை டிஸ்கஷன் வருஷக்கணக்கில் அறையில், தரையில் திண்டு, மெத்தை போட்டுத்தான் பெரும்பாலும் நிகழ்கிறது. தூய வெள்ளையில் உறை போட்ட நுரை மெத்தைகள், மடியில் செல்லமாக வைத்துக்கொள்ளக் குட்டிக் குட்டித் தலையணைகள், பேப்பர், பேடு, ஒரு டைரக்டர், மூன்றிலிருந்து ஆறு பேர் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள், அவ்வப்போது இளநீர், நீர்மோர், காபி, டீ (சர்க்கரை போட்டு, போடாமல்), கொறிக்கக் கடலை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, அரை மணிக்கு ஒருமுறை சூடாக ஆமை வடை... எல்லாம் இருக்கும்.

இல்லாத ஒரே வஸ்து..?

கதை!

விண்வெளியில் வேற்றுக்கிரகங்களில் உயிரின் அடையாளங்கள் உள்ளனவா என்பது பற்றிப் பல கருத்தாக்கங்கள் உள்ளன. ஒழுங்கின்மையில் ஒழுங்கைக் கண்டாலே, அது உயிரின் அடையாளம் என்று சொல்கிறார்கள்.

நிதானமாக யோசித்துப் பாருங்கள்... உதாரணமாக, ஏரியஸ், பிசிஸ் காலக்ஸிகளின் இடைவெளியிலிருந்து மூன்று கோடி ஆண்டுகள் பயணம் செய்த ஒரு சிக்னல், போர்டோரீக்கோ தேசத்தில் உள்ள ரேடியோ டெலஸ்கோப்பில் கேட்கிறது. விட்டுவிட்டு விசில் அடிப்பதுபோல ஒரு சிக்னல். இது உயிரின் அடையாளமா? யாரேனும் நம்முடன் தொடர்புகொள்ள விரும்புகிறார்களா? அப்படியே இருந்தாலும், அவர்கள் விசிலுக்கு நம் பதில் விசில் போய்ச் சேர இன்னும் மூன்று கோடி ஆண்டுகளாகிவிடுமே! அதற்குள் மனித இனமே உயிருடன் இருக்குமா என்பதே சந்தேகம்.

நாம் சூரிய மண்டலத்தின் சிறைக் கைதிகள்!

எனக்குப் பிடித்த கவிதை

இன்று அதிகாலை நடையில்
முதன்முதலாகச் சந்தித்தோம்
நானும் ஒரு பனித்துளியும்

ஒரு வாழ்நாள் முழுவதும்
பேசிக்கொண்டிருந்துவிட்டு
பரஸ்பரம் காணாமல் போனோம்!

-எம்.யுவன்

Sunday, September 19, 2004

 

‘மதுர’ என்பது சரிதானா?


எட்டு வருஷத்துக்குப் பிறகு, சென்ற வாரம் மயிலை கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயில் முதலில் கடற்கரையில், தற்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் இருந்ததாம். போர்ச்சுகீசியர்கள் அதை அழித்துவிட்டுத் தேவாலயம் கட்டினார்களாம். சென்னப்ப மன்னரால் கர்ப்பகிரகத்து லிங்கமும் மூர்த்தியும் பாதுகாக்கப் பட்டு, தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டதாகச் சரித்திரம்.

தெப்பக்குளத்தைக் ‘கபாலதீர்த்தம்’ என்கிறார்கள். சிவபெருமான் தேவலோகத்திலிருந்து பிரம்ம கபாலத்தைக்கொண்டு இதில் சேர்த்ததாக ஐதீகம். இப்போது? நகரமே பிளாஸ்டிக் குடங்களை வைத்துக்கொண்டு அல்லாடிக்கொண்டிருக்கும் போது, தெப்பக்குளத்தில் சட்டென்று நந்தி முழுகும் வரை தண்ணீர் சுரந்ததை தெய்வச்செயல் என்று நினைத்தேன். இல்லையாம்! மெட்ரோவாட்டர் லாரிகளில் கொண்டுவந்து வீராணம் குழாய்கள் மூலம் நிரப்பியதாம். சுற்றிலும் யாரும் மொண்டுவிடாமல் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந் தார்கள்.

சென்னையின் தண்ணீர்க் கஷ்டத்துக்கு என்னதான் தீர்வு? கடல் நீரைக் குடிநீராக்குவது ஒரு வழி. லிட்டருக்கு நூறு ரூபாய் ஆகும். இன்னொரு வழி, மிகப்பெரிய ஐஸ்கட்டிப் பாளங்களை கப்பல் மூலம் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மாதா மாதம் கொண்டு வருவது. இதற்கு மைனஸ் 140 டிகிரியில் கொண்டுவரக் கூடிய ராட்சஸ டாங்கர் கப்பல்களை கொரியா சாம்சங்கிடமிருந்து வாங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டே ‘நதிகளை இணைக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று ஆணையிட்டுவிட்டது. அப்துல் கலாமின் 2020 கனவும் இஃது! நமது அரசியல் சட்டத்தில் (ஆர்ட்டிக்கிள் 246, ஏழாவது ஷெட்யூல்) இதற்கு இடம் இருக்கிறது. சுதந்திரம் வந்ததிலிருந்து நதிகளை இணைப்பதற்கான பற்பல திட்டங்களை யோசித்து யோசித்து கமிட்டி அமைத்து, கூடிப்பேசி இதுவரை 15,678 பக்கம் ரிப்போர்ட்டுகள் எழுதிவிட்டோம். கடைசியாக தேசிய நீர்வழித் திட்டம் ( நேஷனல் வாட்டர்வேஸ் ப்ராஜெக்ட்) என்ற அமைப்பில் இன்ஜினீயர் ஏ.சி.காமராஜ் அவர்கள் முன்வைக்கும் திட்டம், மனமிருந்தால் பணமிருந்தால் சாத்தியம் என்று தோன்றுகிறது.

இந்தத் திட்டத்தில், பிரம்ம புத்ராவிலிருந்து தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் கால்வாய்கள் மூலம் இணைத்து, அவற்றில் வெள்ளம் வரும்போது மட்டும் வழியும் தண்ணீரை அங்கங்கே சேமித்து, கால்வாய்களை ஏற்ற இறக்கமின்றி சமதரையில் அமைத்து, எங்கே வெள்ளமோ அங்கிருக்கும் உபரிநீரைப் பற்றாக்குறைப் பகுதிக்கு இருதிசையிலும் அனுப்பும்படியான ஏற்பாடு... கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுத்தாலும், பருவமழை அதிகமாகி அணைகளில் வெள்ளம் வழிந்து தரம்சிங்கையும் மீறி, மேட்டூருக்கு இந்த வருஷம் தண்ணீர் வந்ததுபோல!

600 மீட்டரிலிருந்து துவங்கி நாடெங்கிலும் பெரும்பாலும் 300 மீட்டரிலேயே, சம தளத்திலேயே சுமார் 15,000 கிலோமீட்டருக்குக் கால்வாய்கள் அமைக்கவேண்டும் (இது துணைக்கண்டத்தின் ஏற்ற இறக்க ஜியோகிரஃபியில்கூட சாத்தியம் என்கிறார் காமராஜ்). போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் என மூன்று பிரச்னைகளையும் தீர்க்கலாம்என்கிற பேராசைமிக்க திட்டம்இது. வருஷா வருஷம் கடலில் விரயமாகப் போய்ச்சேரும் வெள்ளப்பெருக்கில் முப்பது விழுக்காட்டை இவ்வாறு தேக்கினாலே போதுமாம். அதிகம் செலவாகாது. ஐந்து லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் இருந்தால், பத்து வருஷத்தில் கட்டிவிடலாம் என்கிறார் காமராஜ். நான் நூறு ரூபாய் அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

'மச்சான் பேரு மதுர' என்ற டமுக்குடப்பா பாட்டு இப்போது அடிக்கடி ஒலிக்கிறது. படத்தின் பெயர் 'மதுர'. மதுரை இல்லை. இந்தத் தலைப்பில் இருக்கும் இலக்கண விதி தொல்காப்பிய காலத்தது. இதற்கு 'ஐகாரக் குறுக்கம்' என்று பெயர். தமிழில் மதுரை என்று எழுதினாலும், மதுர என்றுதான் உச்சரிக்கிறோம். சொல்லின் இறுதியில் வரும் ஐகாரம் ஒலியளவில் குறைந்து இருப்பதை, நம் நுட்பமான இலக்கண ஆசிரியர்கள் கவனித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஐகாரக் குறுக்கத்தைத் தனிப்பட்டு புள்ளிவைத்துக் குறிப் பிட்டதாகத் தெரிகிறது. இதேபோல், குற்றியலுகரம். 'பட்டு' என்று எழுதினா லும், அந்தக் கடைசி 'உ'வை பாதிதான் ஒலிக்கிறோம். இதையும் முன்பெல்லாம் புள்ளி வைத்துக் குறிப்பிட்டார்கள். நாளடைவில், தமிழில் அத்தனை இறுதி உகரங்களும் குற்றியலுகரங்களாகி விட்டன. தலைப்புள்ளிக்குத் தேவை யில்லாமல் போய்விட்டது. இப்போது யாரும் பட்டுப் புட‘வை' என்பதில்லை. பட்(உ)ப் புட'வ'தான். குற்றியலுகரங்கள் ஜப்பானிய மொழியில் இருக்கின்றன. மலையாளத்தில் குற்றியலுகரங்களைத் தலையில் சந்திரப்ரபை வைத்துக் குறிப்பிடுகிறார்கள். ஒரு அடிதடி சினிமா தலைப்பில்கூட செம்மொழியின் செய்திகள் எத்தனை கிளைத்தெழுகின் றன பாருங்கள்! குற்றியலிகரம் என்று ஒரு சமாசாரம் உள்ளது. மற்றொரு சந்தர்ப்பத்தில் ஜெர்க் விடுகிறேன்.

விகடன் 15.08.04 இதழில், என் கண் ஆபரேஷனைப் பற்றி எழுதியிருந்த கட்டுரை பலரை உடனே போய் தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ளத் தூண்டியது என்று சேலம் கண் மருத்துவர் டாக்டர் சித்தார்த்தனிடமிருந்து அறிந்து மகிழ்ந்தேன். நவம்பரில் அவர்கள் நடத்தும் கண்முகாமுக்குப் போகச் சம்மதித்திருக்கிறேன். சங்கர நேத்ராலயா மொபைல் வேனை அனுப்பி, கிராமம் கிராமமாகச் சென்று ஏழை எளிய மக்களுக்குக் கண் பரிசோதனை செய்து, சாட்டிலைட் மூலம் தகவல் சொல்லி, ‘டெலி ஆஃப்தால்மாலஜி' கொண்டுவருகிறார்கள். காட்ராக்ட் கண்புரை வந்துவிட்டால், "நெல்லுகூடப் பொறுக்க முடியலை உன்னால. வெளியே போய் உட்காரு கிழமே... போட்டதைத் தின்னுட்டுச் செத்துப் போ!" என்று நிராகரிக்கப் படும் அறியாமைதான் தற்போதைய கிராமிய யதார்த்தம். இவ்வாறான திட்டங்கள் இந்த நிலையை மாற்றும்.

அந்தக் கட்டுரையைப் படித்த பலர், ‘எப்படி உங்களால் உங்களையே கேலி பண்ணிக்க முடிஞ்சுது?’ என்று வியந்தார்கள். இம்மாதிரியான கட்டுரைகளில் எனக்கு முன்னோடி அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர். அவரது சின்ன வயசில், அண்ணன் தம்பி வில்லடித்த சண்டையில் கண்ணில் அடிபட்டு, ஒரு கண்ணை இழந்துவிட்டார். ஒற்றைக் கண்ணை வைத்துக்கொண்டு அவர் காலேஜில் பயாலஜி கிளாஸில் மைக்ராஸ்கோப்பில் ஸ்பெஸிமன் பார்த்ததையும் (எல்லாம் பால், ஒன்லி மில்க்!), ராணுவப் பயிற்சியில் எல்லோரும் ஒரு திசையில் கவாத்து சென்றுகொண்டிருக்க, தான் மட்டும் 45 டிகிரி கோணத்தில் எதிர் திசையில் மார்ச் செய்ததையும் University days என்கிற கட்டுரையில் எழுதியுள்ளார். என் கருத்தில் உலகின் மிகச் சிறந்த நகைச்சுவைக் கட்டுரைகளில் அது ஒன்று. மற்றது, உட்ஹவுஸின் 'ஓவர் செவன்ட்டி'.

தர்பர் நாளடைவில் மற்ற கண் பார்வையும் மங்கிப்போய், படிப்பதற்கும் எழுதுவதற்கும் மிகவும் கஷ்டப்பட்டார். கறுப்பு பேப்பரில் கொட்டைகொட்டை யாக வெள்ளை எழுத்துகளில் எழுதினார். பிற்காலத்தில், அவர் கட்டுரைகளில் விரக்தி தொனித்தது. மனசுக்குள்ளேயே வாழ்ந்ததால் சொற் களின் ஆதாரங்கள் அவரை மிகவும் வசீகரித்தன. ‘ஏ’ என்ற எழுத்திலிருந்து ஆரம்பிப்பார். அதில் துவங்கும் அத்தனை வார்த்தைகளையும் மெல்ல அசை போடுவார். பின்னர் 'பி'. அந்தந்த எழுத்துகளுக்கே தனி குணம் கொடுப்பார். தர்பரின் புதிய நீதிக்கதைகள் Fables of our Time உலகப் பிரசித்தி பெற்றவை. அதுவும் The Unicorn in the Garden எத்தனை முறை படித்தாலும் எனக்கு அலுக்காது. இதை நான் முன்பே தந்திருக்கிறேன். இப்போது 'சின்னப்பெண்ணும் ஓநாயும்' The Little Girl and the Wolf என்கிற கதை. இதன் சம்பிரதாய வடிவத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

ஒரு பிற்பகலில் ஒரு பெரிய ஓநாய், காட்டின் இருட்டில் ஒரு சின்னப் பெண்ணின் வருகைக்காகக் காத்திருந் தது. அவள் பாட்டிக்கு ஒரு கூடையில் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவ்வழியே வந்தாள்.

"பாட்டிக்கு சாப்பாடு கொண்டுட்டு போறியா கண்ணு?" என்று கேட்டது ஓநாய். சிறுமி ‘'ஆமாம்’' என்றாள்.

"பாட்டி எங்க இருக்கா சொல்லு கண்ணு."

சின்னப் பெண், பாட்டி எங்கிருக் கிறாள் என்பதைச் சொல்லிவிட்டுக் காட்டுக்குள் போனாள்.

பாட்டி வீட்டின் கதவை சின்னப்பெண் திறந்தபோது, படுக்கையில் யாரோ தலையில் தொப்பி யும் நைட் கவுனும் அணிந்து படுத்திருப் பதைப் பார்த்தாள். 'பாட்டீ' என்று கிட்டே போனாள். சுமார் இருபத்தைந்து அடி அருகில் போனதும், அது பாட்டியில்லை என்பதை சின்னப் பெண் கண்டு கொண்டாள். என்னதான் தலையில் குல்லாய் வைத்தாலும், ஓநாய், பாட்டி மாதிரி தெரியும் என்பது எம்.ஜி.எம். சிங்கத்தை அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்வதுபோல! எனவே, தன் கூடையிலிருந்து துப்பாக்கியை எடுத்து ஓநாயைச் சுட்டுக் கொன்றாள் அந்தச் சிறுமி.

நீதி - முன்பு போல் இப்போதெல்லாம் சின்னப் பெண்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமல்ல!

அமரர் எஸ்.எஸ். வாசன் அவர் களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அழகானதொரு அஞ்சல் தலையையும், முதல் தின உறையையும் இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் கே. சுப்ரமணியத்தின் தபால் உறை பற்றி எழுதியபோது, ( தபால்தலை இனிமேல்தான் வெளியிடப் போகிறார்கள்.) வாசன் அவர்களையும் கௌரவிக்கவேண்டும் என்று எழுதி இருந்தேன். இன்றைய கால கட்டத்தில், வாசன் அவர்களின் படங்கள் நவீன சினிமாவின் வாசல்! திரைக்கதையைப் பற்றிய முக்கிய பாடங்கள் பல 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களில் கிடைக்கின்றன. 'சந்திரலேகா' வந்து ஐம்பது ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்றும் ஒரு காட்சி என் நினைவில் நிற்கிறது. இளைய ராஜகுமாரன் ரஞ்சன், தவறு செய்துவிட்ட ஒரு காவலன் மேல் கோபம்கொண்டு, இதுதான் கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு, 'போ!' என்று ஒரே வார்த்தையில் அதட்டி அனுப்புவார். அதைத் தொடர்ந்து அவருடைய நாய் 'வள்' என்று குலைப்பதாக தனி ஷாட் போட்டிருப் பார். அதுவும் 'போ' என்று அதட்டுவது போலத் தோன்றும்.

'அபூர்வ சகோதரர்க'ளில் நாகேந்திரராவ் என்ற கன்னடக்காரரை வில்லனாகப் போட்டது, அதற்கு ஒரு தனிப் பரிமாணமே தந்தது. ஸ்டண்ட் சோமுவை மெல்ல நிதானமாக ரைஃபிளால் குறிபார்த்து, அதன் விசையின் மேல் விரல் வைத்துவிட்டு, சுடாமல் சிரித்துவிட்டு அனுப்பி விடுவார். தமிழ் சினிமாவின் வில்லன் காட்சிகளின் தாய் அதுதான்.

'ஒளவையா'ரின் கதையைவிட யானைகள் கோட்டையை இடித்த காட்சியும், 'சந்திரலேகா'வின் முரசு நடனமும், 'வஞ்சிக்கோட்டை வாலிப'னின் வைஜெயந்தி-பத்மினி போட்டி டான்ஸ§ம் இன்றும் நிற்கிறது. வாசன்தான் இந்திய சினிமாவில் பிரமாண்டத்துக்கு முன்னோடி!

உதவுங்கள்!

இளைஞர் வேல்முருகன், லயோலா கல்லூரி மாணவர். தமிழ்க் கணினி திட்டத்துக்கு நூற்றுக்கணக்கான எளிய சொல் தொடர்களை அமைக்க, மிகவும் உதவினார். தமிழார்வம் அவரை உந்த, விடுமுறையில் சினிமாவுக்குப் போகாமல் எங்கள் அலுவலகத்துக்கு வந்து, தன்னிச்சையாகத் தமிழுக்கு உதவினார். நல்லவர். நல்லவர்களுக்கு நல்லது நடப்பதில்லை என்பது உலகத்து நியதி போலும்! அண்மையில் உடல்நலம் மோசமாகி, இரண்டு சிறுநீரகமும் பழுதுபட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸில் தவிக்கிறார். அவரது தந்தை, தன் சிறுநீரகத்தைத் தர இசைந்துள்ளார். அதற்காக எழுபதாயிரம் ரூபாய் செலவாகிறதாம். உதவ விரும்பும் அன்பர்கள் writersujatha@ambalam.com-க்குத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

- சுஜாதா

எனக்குப் பிடித்த கவிதை

குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் - அதில்
குறைகள் பல உண்டு - எனைப்
பெற்றவள்செய்தசமையல்தான்-அதில்
பிழைகள் கண்டதுண்டு - ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி - ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும்-அன்னைக்
கைமணம் அதில் வேணும்

(ரவி அன்பில், 'அமெரிக்காவில் தமிழ்த் தென்றல்', மணிமேகலைப்
பிரசுரம். ரூ. 50)

Sunday, September 12, 2004

 

இருபது வருஷமாக ஒரே அதிகார முகங்கள்!


பளுதூக்கும் போட்டியில் இந்த மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று பயந்துதான் கர்ணம் மல்லேஸ்வரி தொட்டுக் கும்பிட்டுவிட்டு தூக்காமல் விலகிவிட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

ஒரு பில்லியன்(நூறுகோடி)க்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள இந்தியாவுக்கு ஒரே ஒரு மெடல்தானா? ஒலிம்பிக்ஸில் மெடல் வாங்குவது எப்படி (எட்டாவது இடத்துக்கு ஒரு அலுமினிய மெடல்) என்று காமெடி பண்ணாமல் உண்மையான காரணத்தை யோசிப்போம்.

முதல் காரணம், கிரிக்கெட்!

கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா நட்சத்திர அந்தஸ்தும் புகழும் கோடி கோடியாக கிரிக்கெட்டுக்குப் புறம்பான வருமானமும் அளித்து, இந்தியாவிலேயே கிரிக்கெட் ஒன்றுதான் முக்கியம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டோம். 'மைனாரிட்டி ஸ்போர்ட்ஸ்'களை நிராகரித்துவிட்டோம். இன்று பள்ளிகளில் உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் நீச்சல், பாக்ஸிங், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் சேர்கிறார்கள்? முதலில் அவற்றுக்கு பள்ளிகளில் வசதி உள்ளதா?

இரண்டாவது காரணம்... இந்தியாவில் விளையாட்டுகள் அனைத்திலும் இருபது வருஷமாக ஒரே அதிகார முகங்களைத்தான் பார்க்கிறோம். ஹாக்கியில் அந்தக் கிழச்சிங்கம் கே.பி.எஸ்.கில்\லை எத்தனை வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறோம்! அதேபோல், பளுதூக்கும்போது வீராங்கனைகளைத் தோளில் துண்டு போட்டு அழைத்துச் செல்கிறாரே மற்றொரு கிழச்சிங்கம்!

சுரேஷ் கல்மாடியை நான் சின்ன வயசிலிருந்து பார்த்து வருகிறேன். வேறு அதிகாரியே கிடையாதா? ஒலிம்பிக் டார்ச் இந்தியா வந்தபோது பி.டி.உஷாவைக் காணோம். கல்மாடியும் ஐஸ்வர்யா ராயும் ஓடுகிறார்கள். நம் ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் ஒரு சினிமா நடிகர்! எப்படி உருப்படுவோம்? தன்ராஜ்பிள்ளை ஆடும் பாணி வழக் கொழிந்துவிட்டது. இப்போதெல்லாம் ஹாக்கியை ஃபுட்பால் மாதிரி ஆடுகிறார் கள். நீண்ட பாஸ்(pass)கள், ட்ராப்பிங் (trapping) ஷார்ட் கார்னரை வேண்டுமென்றே காலில் அடித்துச் சம்பாதிப்பது... இதுதான் நவீன ஹாக்கி.

இந்தியர்கள் பிரமாதமான தனிப்பட்ட விளையாட்டுக்காரர்கள். தயான் சந்த் காலத்திலிருந்து அதே ஆட்டம். பந்தை சாலக்காக அவர்கள் D வரை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அதோடு சுஸ்தாகிவிடுகிறார்கள். நாக்கு வெளியில் வந்துவிடுகிறது, எதிராளி பிடுங்கிவிடுகிறார். அங்கிருந்து ஒரே 'டமால்'. ஆஃப்சைடு ரூலும் கிடையாது!

முதலில் நம் ஒலிம்பிக் அசோஸியேஷன் அதிகாரிகள் அனைவரையும் 'போங்க சார், நாங்க பாத்துக்கறோம்' என்று துரத்திவிட வேண்டும். விளையாட்டில் வெல்வது ஒரு பிக்னிக் அல்ல. கொஞ்ச நாள் கிரிக்கெட்டை மறந்துவிட்டு மற்ற விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்கி, அடுத்த ஒலிம்பிக்ஸ§க்கு இப்போதே பயிற்சியும் திறமை வேட்டையும் அரசாங்கம் துவக்கவேண்டும்.

பெலாரூஸ், ஜார்ஜியா போன்ற குட்டி நாடுகள் மெடல் வாங்கும் போது, இந்தியாவில் ஆட்டங்களுக்கு ஆதரவு போதாது. நான்கைந்து சிறப்பான ஆட்டங்களை அடை யாளம் கண்டு, தனியார் வசம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். மேஜர் ரத்தோருக்கு ராணுவம் அளித்த ஆதரவும் வசதிகளும்தான் மெடல் வாங்கியதற்கு முக்கியக் காரணம். அதுபோல் கடற்படை (நீச்சல்), விமானப் படை (பாக்ஸிங்), மிகப்பெரிய பப்ளிக் செக்டர் நிறுவனங்கள் (ஓட்டப் பந்தயங்கள், கால் பந்து, பளுதூக்கல்) இவர்களிடம் ஆளாளுக்கு ஒரு விளையாட்டை முழுசாக ஒப்படைக்கவேண்டும். ரிலையன்ஸ், பிர்லா, டி.வி.எஸ்., பஜாஜ், விடியோகான், எல்.ஜி. போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் பொறுப்பு தரலாம் (டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன்). அத்லெட்டிக்ஸ், ஹாக்கியில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், ஊருக்கு ஊர் சரியான ட்ராக்குகளும் அஸ்ட்ரோ டர்ஃப்களும் அமைக்க வேண்டும்

அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டி களுக்குப் பரிசுத் தொகைகளைக் கணிசமாக அதிகரிக்கவேண்டும். செகண்ட் கிளாஸ் ரயில் சார்ஜும், கைச்செலவுக்கு ஐம்பது ரூபாயும் மட்டும் போதாது. மேல்நாடுகளில் இருந்து சரியான 'கோச்' களை நிறைய செலவழித்து, கொண்டுவரவேண்டும். அதற்கான பணவசதி நம்மிடம் இருக்கிறது. இளைஞர்களும் உள்ளனர். குறுக்கே நிற்பது அரசாங்கம், அரசியல்!

சென்ற இதழில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்த அந்தத் தப்பு எப்படி வந்தது என்று யோசிக்கிறேன். ஸ்டான்லி கூப்ரிக் 1971\ல் அந்தோனி பர்ஜஸ் எழுதிய ‘எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்’ (A Clockwork Orange) என்னும் சயின்ஸ்ஃபிக்ஷன் நாவலைத் திரைப்படமாக எடுத்தார். அதற்கும் ‘ஃபாரன்ஹீட் 451’\க்கும் குழம்பிவிட்டேன். வயசாகிவிட்டதல்லவா? 'க்ளாக்வொர்க் ஆரஞ்ச்' ஒரு டைஸ்டோபியன் நாவல். (யூடோப்பியாவுக்கு எதிர்ப்பதம்).

சமீபத்திய எதிர்காலம் நிகழ்காலத்தைவிட மோசமானதாக, அடக்குமுறை அதிகமானதாக, சுதந்திரங்கள் பறிபோனதாக இருக்கும் என்ற கருத் துள்ள இவ்வகை நாவல்களுக்குப் பல உதாரணங்கள் உண்டு. 1984, ப்ரேவ் நியூவேர்ல்ட் போன்றவை. நான்கூட எழுதியிருக்கிறேன் (என் இனிய இயந்திரா).

அந்தோனி பர்ஜஸின் நாவல், அலெக்ஸ் என்ற இளைஞனைப் பற்றியது. அவனுடைய ஒரே நல்ல குணம் பீத்தோவனை ரசிப்பது. மற்றபடி தேவை இல்லாத, காரணமில்லாத வன்முறை குணம். அவனை அரசாங்கம் பிடித்து, அவனிடமிருந்த வன்முறையையெல்லாம் 'அவர்ஷன் தெரப்பி' மூலம் சுத்தம்செய்து 'மறுவாழ்வு' தருகிறது. அரக்க குணங்களுடன் சிறப்பு குணங்களையும் இழந்த அவன் நிஜமாகவே நல்லவனாகி விட்டானா என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது.

இது கூப்ரிக்கினால் திரைப்படமாக்கப்பட்ட போது மிகுந்த கண்டனத் துக்குள்ளானது. வன்முறையையும் செக்ஸையும் கருதி அதன் விநியோகம் நிறுத்தப்பட்டது. கூப்ரிக் இறந்து 27 வருஷமான பின்தான் இந்தப் படத்தை புதிய தலைமுறையினர் பார்க்கமுடிந்தது.

ஆகஸ்ட் 22\ம் தேதி சென்னை நகருக்குப் பிறந்த நாள். 1639\ம் ஆண்டு ஈஸ்ட் இண்டியா கம்பெனிக்கு சென்னப்ப நாயக்கரால் சாசனம் பண்ணிக் கொடுக்கப்பட்டு, ஜார்ஜ் கோட்டையிலிருந்து சாந்தோம் வரையுள்ள பகுதிகளில் துவங்கிய சென்னை நகரத்தின் பிறந்த தினத்தை இனி வருஷா வருஷம் கொண்டாடத் தீர்மானித்துள்ளார்கள். இன்றைய சென்னையின் சிறப்பு அம்சங்களை யோசித்துப் பார்க்கிறேன்.

சென்னையில்தான் கீழ்க்காணும் பத்து விஷயங்களைக் கவனிக்க முடியும்.

1. மெரீனா பீச்சில் மல்லிகைப்பூ, மீன்வறுவல், ஓஸோன், ஓனிக்ஸ் கழிவு நான்கும் கலந்த வாசனை.

2. பிளாட்ஃபாரத்தில் கிடைக்காத பொருளே கிடையாது. வேளைக்கும் இடத்துக்கும் ஏற்ப மாங்காய், மல்லிக்காபி, கற்பு, டப்பா பட்டம், சுண்டல் என்று மாறும்.

3. ஆழ்வார்பேட்டையில் பிளாட்ஃபாரத் திலேயே மோட்டார் சைக்கிள் வாங்கலாம். ஜி.என்.செட்டி ரோடு பிளாட்ஃபாரத்தில் கம்ப்யூட்டர் வாங்கலாம்.

4. ஆயிரம் நகை, புடவைக்கடைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு புத்தகக்கடை இருக்கும் ஊர் சென்னைதான்.

5. ட்ராஃபிக் விளக்குகளில் சிவப்பில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. போய்க்கினே இருக்கலாம்... எப்போதாவது ஜல்லிக்கட்டு மாதிரி இரண்டு முரட்டு கான்ஸ்டபிள்கள் ரிஸ்க் எடுத்து குறுக்கே பாய்ந்து மறித்து நிறுத்தி, ஸ்கூட்டர் சாவியைப் பிடுங்கிக்கொள்ளும்வரை!

6. 'நோ பார்க்கிங்' போட்டிருக்கும் இடங்களில் தாராளமாக வண்டியை நிறுத்தலாம். கேட்டால் படிக்கத் தெரியாது என்று சொல்லி விடலாம். வண்டியை டொக்கு போட்டு எடுத்துச் சென்றால், சகாய விலைக்குப் பேரம் பேசலாம்.

7. சென்னையில்தான் மூன்று ரேடியோ ஸ்டேஷன்கள், 'ஹலோ... எப்டி இருக்கீங்க?’, ‘நீங்க எப்டி? இருக்கீங்க?’, ‘நீங்க எப்டி இருக்கீங்கனு முதல்ல சொல்லுங்க!’ என்ற உரையாடலிலேயே 24 மணி நேரமும் நடைபெறுகிறது. ஆர்.ஜே-க்களுக்கு அந்தளவு தமிழ் போதும்.

8.சென்னையில்தான் காபி, பாலைவிட தண்ணீர் விலை அதிகம்.

9. எந்தத் தெருவிலும் யாரும் நடு சென்டரில் தோண்டத் துவங்க லாம். ஒரு கடப்பாரை போதும். காரணம் தேவை இல்லை.

10. சுவரொட்டிகளில் வாழும் சென்னையில், எல்லோரும் வருங்கால முதல்வர்கள்! எனக் குக்கூட ஒருநாள் ஒட்டியிருந் தார்கள்.

ஹ்யூமர் கிளப்பில் மற்றொரு ஜோக் கேட்டதாக பேராசிரியர் ஞானசம்பந்தன் சொன்னார்.

"என் மனைவி ரொம்ப டி.வி. பாக்கறாங்க..."

"அதனால என்ன, நிம்மதி தானே."

"பவர் கட் ஆனாலும் பாக்கறாளே!" "என்னது?" "மெழுகுவத்தி வச்சுகிட்டு!"

Sunday, September 05, 2004

 

இரட்டைக் குதிரைச் சவாரி


இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகராக நாமினேட்டப்பட்டிருக்கும் விக்ரம் அவர்களை ஒரு பார்ட்டியில் சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். 'அந்நிய'னுக்காக காடாக தலை வளர்த்திருந்தார். எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். விக்ரமுக்கு ஸ்டார் - ஆக்டர் என இரண்டு குதிரைகளில் சவாரி செய்யவேண்டியிருக்கிறது. இரண்டு வகையிலும் அகப்படாமல் இரண்டையும் கைக்குள் வைத்திருப்பதுதான் சாகசம் என்றேன். ஹிரித்திக் ரோஷன், கமல்ஹாசன், மனோஜ் பாஜ்பாய் போன்றவர்கள் இறுதியில் சிறந்த நடிகருக்கான களத்தில் இருந்ததாகத் தெரிந்தது. ஒரு வார்த்தை வசனம் பேசாமல் தேசிய விருது கிடைத்தது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். இதற்காக டைரக்டர் பாலாவை மிகவும் பாராட்டினார். பல இடங்களில் பேசிவிடலாம்போல இருந்த ஆசையை அடக்கிவைத்தவர் அவர்தான் என்றார். தமிழ்சினிமாவின் சரித்திரத்தில் வாய் பேசாத பாத்திரங்கள் கொண்ட படைப்புகள் பல இருந்தா லும், எல்லாவற்றிலும் சுற்றுப்பட்ட வர்கள் இரட்டிப்பாகப் பேசிவிடு வார்கள்.

உதாரணம்... கதாநாயகி - பே பே பே...

அருகில் இருக்கும் மாது - உங்கப்பாவைக் கூப்பிடச் சொல்றியா கண்ணு?

கதாநாயகி - பேபேபே...

மாது - ஓ... அப்பா போயிட்டாரா?

இப்படித்தான் கதை செல்லும். இப்படியில்லாமல் சித்தனின் கோப தாபங்களை, பாடி லாங்வேஜ் மற்றும் உறுமல் செறுமல்கள் மூலமாகவே வெளிப்படுத்தியதற்கு அவார்டு வாங்கிவிட்டார்.

தமிழ் சினிமா ஒரு தேக்க நிலையில் இருந்து மெள்ள வெளிவந்து கொண்டிருப்பது தெரிகிறது. 'பிதாமகன்', 'ஆட்டோகிராஃப்', 'அழகிய தீயே' போன்ற படங்களையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். 'இயற்கை' போன்ற படங்கள் வெளிவந்து தேசிய விருது பெறுகின்றன. 'கில்லி', 'நியூ' போன்ற படங்களையும் ரசிக்கிறார்கள். கதை யில்லை என்றால், நிராகரிப்பு இரண் டாவது ஷோவிலேயே தெரிந்துவிடுகிறது. இதெல்லாம் ஆரோக்கியமான விஷயம் தான். இதனிடையே டிஜிட்டல் சினிமா தலை தூக்கத் துவங்கியிருக்கிறது. என்னதான் டிஎல்பி சிப், ஜேவிசி, பானசானிக் ப்ரொஜெக்டர்கள் ரெசல்யூஷன் என்ற டெக்னிக்கல் ஜல்லியடித்தாலும் ‘வேளை வந்துவிட்ட தொழில்நுட்பத்தைவிட சக்தி வாய்ந்தது எதுவும் இல்லை’ (nothing is more powerful than a technology whose time has come) என்று எங்களவர்களில் ஒரு சொலவடை உண்டு. டிஜிட்டல் சினிமாவுக்கு டெக்னாலஜி வந்துவிட்டது. வேளை இன்னும் வரவில்லை.

இந்தப் பகுதியில் நான் இதற்கு முன் இருமுறை கேயாஸ் (chaos) தியரி பற்றி எழுதியிருக்கிறேன். லோரென்ஸ் என்பவர் அறுபதுகளில் முதலில் அறிவித்த சித்தாந்தம் இது. லோரென் ஸின் ஆதார மேற்கோள் ஒன்று அறிவாளிகளை மிகவும் சிந்திக்க வைத்து, இது ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு கேயாஸ் தியரி முக்கியமடைந்தது.

The flapping of a single butterfly’s wing today produces a tiny change in the state of the atmosphere. Over a period of time, what the atmosphere actually does diverges from what it would have done. So, in a month’s time, a tornado that would have devastated the Indonesian coast doesn’t happen. Or maybe one that wasn’t going to happen, does. (Ian Stewart)

ஒரே ஒரு வண்ணத் துப்பூச்சியின் சிறகடிப்பு, சூழ்நிலையில் மிகச் சிறிய மாறுதலை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் பொறுத்து சூழ்நிலையில் நிகழ்வது, நிகழ்ந்திருக்க வேண்டிய துடன் வேறுபடுகிறது. எனவே, ஒரு மாதத்தில் இந்தோனேசிய கடற்கரையை நாசமாக்கவிருந்த சுழற்காற்று நிகழ்வதில்லை... அல்லது, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகாளவியதாக இருக்கும் என்பதற்குப் பலவிதமான உதாரணங்கள் உள்ளன. கும்பகோணம் தீ விபத்தில், அந்த அடுப்பை ஒரு ஐந்து அடி தள்ளி வைத்திருந்தால் தொண்ணூத்து மூணு குழந்தைகள் செத்திருக்க மாட்டார்கள். பங்களூரில் என் நண்பன் வி.எம்.ராவ் ஒருநாள் ராத்திரி கிளப்பிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். நடுவே ரயில்வே கேட் சார்த்தியிருந்தது. ரயில் கடந்து, ஸ்கூட்டரை மீண்டும் ஸ்டார்ட் பண்ணும்போது மக்கர் செய்தது. ஸ்பார்க் பிளக்கை ராவிவிட்டு கொஞ்ச நேரம் உதைத்தபின்தான் உயிர் வந்தது. ராவ் புறப்பட்டான். ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் லாரியில் அடிபட்டுச் சாலையில் செத்தான். (இந்த விஷயங்கள் யாவும், நண்பனைத் தேடிச் சென்றபோது, ரயில்வே கேட்-கீப்பர் மூலம் அறிந்தவை.)

இந்தச் சம்பவத்தின் ஆதார காரணத்தை கேயாஸ் தியரிப்படி, ஸ்பார்க் பிளக்கை ஃபாக்டரியில் பரிசோதித்துபாஸ் பண்ணும் இன்ஸ்பெக்டர் வரை கொண்டு செல்லலாம். ஏன், அந்தப் ப்ளக்கை இன்ஸ்பெக்ட் பண்ணும் அன்றைக்கு, அந்த இன்ஸ்பெக்டர் ஆபீஸ் புறப்படும்போது அவருடன் சண்டை போட்ட அவரது மனைவி வரை சொல்லலாம். சின்னச் சின்ன அலட்சியங்களை மன்னிக்கக்கூடாது என்பது ஷங்கரின் 'அந்நியன்' சொல்லும் செய்திகளில் ஒன்று.

சில சமயங்களில் தண்டனை தாமதமாகும்போது, மன்னிக்கலாம் என்னும் கருத்து வலுப்பெறுகிறது. அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தனஞ்ஜய் சாட்டர்ஜியைத் தூக்கில் போடலாமா, கூடாதா என்று 'எஸ்.எம்.எஸ்.' கேள்வி கேட்டிருந்தார்கள். போடலாம் என்றால் 'ஒய்', கூடாது என்றால் 'என்' அனுப்பும்படி நம்பர் கொடுத்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதில்களுக்கு டி.வி., ஃப்ரிஜ் பரிசளிப்பதாக அறிவித் திருந்தார்கள். எப்பேர்ப்பட்ட டெக்னாலஜி முன்னேற்றம் பாருங்கள்!

தனஞ்ஜய் சாட்டர்ஜி யின் தண்டனையை இத்தனை வருஷம் இழுக்கடித்துவிட்டு, அதன்பின் 'வா! வந்து தொங்கு' என்றது இரட்டை தண்டனை யாகும் என்ற வாதத்துடன் எனக்குச் சம்மதமே! தூக்கு தண்டனை என்பது rarest of rare cases-ல்தான் தரப்படுகிறது. கீழ், மேல் கோர்ட்டுகளில் தீர விசாரித்துவிட்டு, சந்தேகத்துக்கு இடமில்லாதபோது தான் தருகிறார்கள். மேல் முறையீட்டுக்கு அவகாசமும் தருகிறார்கள். எல்லாம் சரிதான். எல்லாமே நம் நாட்டில் நத்தை வேகத்தில் நகர்ந்தால், தினசரி செத்துப் பிழைக்கும் தண்டனை அவனுக்குக் கொடிது. இப்படி நான் சொல்வது சரியென்றால் எனக்கு ‘ஒய்’ என்றும், தப்பு என்றால் ‘என்’ என்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

அண்மையில், சன் டி.வி-யில் ஸ்பஷ்ட மாகக் காட்டப்பட்ட பிணைக்கைதியின் தலை சீவல், தலைக்குமேல் துப்பாக்கி வைத்து 'அல்லாஹ§ அக்பர்' என்று சொல்லிவிட்டு, சுட்டுத் தள்ளப்பட்டு அவன் சொத்தென்று விழ, மெள்ள ரத்தம் பரவும் காட்சி... இதையெல்லாம் பார்த்தால் மக்களுக்குக் கருணை என்பதே காலியாகிவிடாதா? குழந்தைகள் பார்த் தால் எவ்வித மனச் சிதைவுகள் ஏற்படும்? டி.வி-யில் காட்டுவதற்கு ஒருவிவஸ்தை வேண்டாமோ? தனஞ்ஜய் சாட்டர்ஜியின் கேஸிலும், தூக்கு தண்டனை அளிக்க அலிபோர் ஜெயிலுக்கு வரப்போகிறவனை டெண்டுல்கரைப் போல பேட்டி கண்டு, ‘‘எப்படிங்க... கயிறெல்லாம் சரியா இருக்கில்லே? முடிச்சு அவிழாதே? கயிற்றுக்குக் கழுத்து பாகத்தில் நெய், மஞ்சள் எல்லாம் தடவுவீங்களாமே? கால் உதர்றது நிக்கற வரைக்கும் பார்த்துக் கிட்டிருப்பீங்களா? ரொம்ப நுரை தள்ளுமோ?" என்கிற ரேஞ்சுக்கு 'டி.வி. டுடே'யில் பேட்டி கண்டார்கள். தூக்கு தண்டனை நிறைவேற்றி விட்டு அந்தத் துக்கத்தில் மயக்கமாகி வெளியே கயிற்றுக் கட்டிலில் கொண்டுவருவதை 'ஸ்டெடிகாம்' வைத்துக் காட்டி... கண்ணறாவி (morbid)!

பல வருடங்களுக்கு முன் 'துடிப்பு' என்று ஒரு கதை எழுதினேன். தூக்கு தண்டனையைப் பார்க்க அனுமதிக்கப் படும் ஒரு பார்வையாளனின் கோணத்தில் எழுதப்பட்ட அந்தக் கதையின் இறுதியில், பிளாட்பாரம் நீக்கப்பட்டு சுருக்கு விழுவதை அந்தப் பார்வையாளன் தன் கழுத்தில் உணர்கிறான்.

ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடும் கணத்தில் சமூகமே அவனுடன் சற்று நேரம் தூக்கில் தொங்குகிறது என்கிறார்கள்.

தினம் தவறாமல் எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பு வரும்போது, மிக மிக அரிதாகத்தான் 'உள்ளங்கையில் உலகம்' போன்ற புத்தகங்கள் வருகின் றன. இதன் ஆசிரியர் ஆதனூர் சோழன். இதைத் தனது இரண்டா வது நூல் என்கிறார். முதல் நூல் கவிதை. இப்போது அறிவியல் கட்டுரைகள். 'கவிதை கற்பனை, அறிவியல் நிஜம்! ஆனாலும், கற்பனைகள்தாம் பிற்பாடு நிஜமாகின்றன' என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடே! சிறப்பாக, சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள். சூரியமண்டலத்தின் விளிம்பைத் தாண்டப்போகும் வாயேஜர் பற்றிய குறிப்புகள் சுவையாகத் தொகுக்கப் பட்டுள்ளன. பூமியைக் கவ்விய காந்தப் புயல், மீன் இனங்களின் கணக்கெடுப்பு, ஒளியின் வேகம் குறைகிறது போன்று பல துறை அறிவியல் செய்திகளைத் தொகுத்து, தெளிவான உரைநடையில் எழுதியிருக்கும் ஆதனூர் சோழனிடம் ஒரு வேண்டுகோள்... இம்மாதிரியான புத்தகங்களை அதிகம் எழுதவும்! கவிதை எழுத மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். (பதிப்பு: ஜெயம் ஃபர்னிச்சர்ஸ், பூங்காவனம் வீதி, மதுரை-1, விலை ரூபாய் 45.)

This page is powered by Blogger. Isn't yours?