Sunday, October 31, 2004

 

நெஜம்மாவே சூப்பர்மேன்!


கண்மருத்துவர் டாக்டர் சித்தார்த்தனின் 'உங்கள் பார்வைக்கு' என்ற புத்தகத்தில், கண்பார்வை பற்றிய சில பயனுள்ள செய்திகள் உள்ளன. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி, எது தவறு? சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. குறைந்த வெளிச்சத்தில் படித்தால், கண்கெட்டுவிடும்.

2. டி.வி. அதிகம் பார்த்தால், கண்ணாடி போடவேண்டி வரும்.

3. மெட்ராஸ் ஐ உள்ளவரைப் பார்த்தாலேதொற்றிக்கொள்ளும்.

4. குழந்தையின் கண் கோளாறுக்கு, முலைப்பால் சொட்டு நல்ல மருந்து.

5. குழந்தைகளின் மாறுகண், வயசானால் சரியாகிவிடும்.

விடை கடைசியில்...

‘ஐ.டி. சூப்பர் ஹைவே’ என்று பிரகடனப்படுத்தப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சத்யம், விப்ரோ, காக்னிசெண்ட், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், போலாரிஸ் போன்ற பல கம்பெனிகள், ஒரு பயோடெக் நிறுவனம், ஐந்து பெரிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. சமீபத்தில் ஐ.டி. செகரெட்டரி இந்த ரோடைப் பார்த்தாரா... தெரியவில்லை. கொட்டிவாக்கம், பெருங்குடி பகுதியில் வெட்டி வைத்த பெரும் பள்ளம், கார் பாம் வெடித்த பாக்தாத் புறநகர்போல இருக்கிறது. ஐந்து கி.மீ-க்கு மேல் வேகமாகப் போனால், ஆக்ஸில் ஒடிந்து விடும். போக்குவரத்து அடைசலில் நொந்துபோன வெள்ளைக்காரர்கள் யூ டர்ன் அடித்து, மீண்டும் மீனம்பாக்கம் சென்றுவிடு கிறார்களாம். சென்னை, ஐ.டி\க்கான அடிப்படை வசதிகள் படைத்த சரியான நகரம் என்று சொல்கிறார்கள். பெங்களூர் மூச்சடைத்து விட்டது. மும்பையில் இடம் கிடையாது. ஹைதராபாதின் ஆரம்ப ஜோர் போய்விட்டது. சென்னைதான் விருப்ப ஸ்தலம் என்று பெரிய ஐ.டி. கம்பெனிகள் டேரா போட நினைக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எல்லோரும் கொச்சி, பூனா, கொல்கத்தா என்று போய்விடுவார்கள்.

திரு.விவேக் ஹரிநாராயண் (அவர்தானே இன்னும்?!), ஒரு முறை அந்தப் பக்கம் போய்ப் பாருங்கள். முடிந்தால் சி.எம்-மையும் அழைத்துச் செல்லுங்கள். அல்லது, ஒரு விடியோ எடுத்தாவது காட்டுங்கள்.

நல்லெண்ணெய், பொட்டட்டோ சிப்ஸ், மசாலா பவுடர், ஷாம்பூ போன்ற வஸ்துக்களை சாஷேயில் இலவசமாகக் கொடுத்து, சன் டி.வி-யில் விரிவாக விளம்பரம் செய்ததில், 'குங்குமம்' இதழின் விற்பனை ஏழு லட்சத்தை எட்டியிருப்பதைக் குறிப்பிட்டு, என் கருத்தைப் பலர் கேட்டார்கள்.

'இலவச இணைப்பு’ தமிழ் நாட்டு வழக்கம். ஆன்மிகப் பத்திரிகை ஒன்றில் அம்மன் குங்குமம், கங்கை சொம்பு, பூஜை மணி என்றெல்லாம் கொடுத்தபோது, சர்க்குலேஷன் இரண்டு லட்சத்தை எட்டியதாம். அவ்வப்போது தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் ஏதாவது இலவசமாகக் கொடுப்பதை மக்கள் ஒரு வகையில் எதிர்பார்க்கத் துவங்கினார்கள் (‘கடைக்காரரே! காப்பி பொடியும் சோயா மில்க்கும் கொடுக்கறாங்களே, அந்த புக்கு ஒண்ணு குடுங்க. அடுத்த வாரம் என்னங்க?’).

எல்லா வெகுஜனப் பத்திரிகைகளும் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ஆகிக்கொண்டிருக்கிறது. அதே சைஸ், அதே போட்டோக்கள், அதே அக்கப்போர்கள், அதே சித்திரக்காரர்கள், எழுத்தாளர்கள், அதே நடிகைகளின் அதே தொப்புள்கள்... இந்த நிலையில், ஒரு பத்திரிகையை வாங்க வைக்க இதர தந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த இலவச முகப்பவுடரும் சாம்பார் பவுடரும்.

நான் போன ஜென்மத்தில் 'குமுதம்' பத்திரிகைக்கு ஒரு வருஷம் ஆசிரியராக இருந்த போது, தீபாவளி சமயங் களில்... அச்சடிக்கும் மையில் சென்ட் கலந்து புத்தகம் பூரா, ஏன்... புரசைவாக்கமே மணக்க மணக்கக் கொடுப்பதைக் கவனித்தேன். இதை மாற்ற, டெக்னாலஜியைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்ததில், Vogue, Good House keeping போன்ற புத்தகங்களில், பெர்ஃப்யூம் விளம்பரத் தில் ஒரு இடத்தில் உரசினால், அந்த பெர்ஃப்யூம் மணம் விரலுக்கு வரும் தொழில்நுட்பம் இருப்பதை அறிந்து, ஹாங்காங்கில் விசாரித்து வரவழைத்து, உரசினால் ரோஜா மணம் வரும்படியாக பின் அட்டையில் ஒரு ரோஜாப்பூ படம் போட்டு, அதற்கான ஒரு கவிதையை யும் பதிப்பித்தேன். இது ஒரு gimmick தான். இதனால் சர்க்குலேஷன் உடனே அதிகரித்ததாகத் தெரியவில்லை. ஆனால், பலர் இந்தப் புதுமையைப் பாராட்டி எழுதினார்கள். ஒரு சிலர், 'உரசி உரசி பேப்பர் கிழிந்துவிட்டது. ரோஜா மணம் வரவில்லை’ என்றும் எழுதினார்கள். (‘அவர்களை இ.என்.டி. டாக்டரைப் பார்க்குமாறு பதில் எழுதவில்லை).

அந்தப் பரிசோதனையில் நான் தெரிந்துகொண்டது... உள்ளடக்கம்தான் ராஜா! அதுதான் பத்திரிகையின்மேல் விசுவாசத்துக்கு உத்தரவாதம். வாரா வாரம் புதுமை ஏதாவது செய்யவேண்டும் என்றால், பத்திரிகையின் ஆதார குறிக்கோள் விலகிப் போய்விடும் என்பதால், அந்தப் பரிசோதனையைத் தொடரவில்லை.

இப்போது 'குங்குமம்' செய்யும் துணிச்சலான பணச் செலவு, ஒரு வருஷத்துக்கு இந்த மாதிரி freebies கொடுத்து அதை நிறுத்தும்போது வாசகர்கள் பத்திரிகைக்குப் பழகியிருப்பார்கள் என்னும் நம்பிக்கையில் செய்வதாகத் தெரிகிறது. இதனால், மற்ற பத்திரிகைகளின் வியாபாரம் குறைந் திருக்கிறதா என்று விசாரித்ததில், இல்லையாம்! எனவே, குங்குமம் இந்தத் திட்டத்தை நிறுத்தும் போது பத்திரிகை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக மாகியிருக்கும். இதனால் மறைமுகமாக, செலவில்லாமல் மற்ற பத்திரிகைகளும் பயன் பெறும். 'தினத்தந்தி'யில் ஆளுயர தலைவர்களையும், 'கன்னித் தீவு' போன்ற பொம்மைக் கதைகளையும் மட்டும் படித்துத் தமிழ் கற்றுக் கொண்டவர்கள் பலர். அதிலிருந்து என் மலையாள நண்பர் வேணுகொடுங்காளுர், மெள்ள மெள்ள ஆர்வம் பெற்று, தமிழ் நன்கு படிக்கக் கற்றுக்கொண்டு, இறுதியில் என் கதைகளின் சிறந்த மொழி பெயர்ப்பாளரானார்.

தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு, மசாலா குழம்பு வைத்துவிட்டு, வறுவல் தின்றபின் பத்திரிகையைப் பிரித்துப் படித்தாலும், செம்மொழிக்கு நல்லதே!

இந்த வாரம் இரண்டு பேரைப் பற்றிக் கொஞ்சம் கதைக்கிறேன். கிறிஸ்டோஃபர் ரீவ் 52 வயதிலும், ழாக் டெர்ரிடா 74 வயதிலும் காலமானார்கள். ரீவ், மூன்று சூப்பர்மேன் படங்கள் மூலம் அமெரிக்க இதயங்களைக் கொள்ளை கொண்டவர். (ஒரு படத்தில், அடுக்குமாடியிலிருந்து விழும் கதாநாயகியை, வானத்தில் பறந்து வந்து தாங்கிப் பிடித்து ‘I got you’ என்பார். அவள் ‘but who got you’ என்று வியந்து, மார்பில் மயக்கமுறுவாள்.)

ஒன்பதாண்டுகளுக்கு முன், குதிரை ஏற்றப் போட்டியில் கீழே விழுந்தார் ரீவ். முதுகெலும்பின் நரம்பு சேதமுற்று, கழுத்துக்குக் கீழே அத்தனை செயல்பாடுகளையும் இழந்து, நம்பிக்கையில் வாழ்ந்து, முதலில் வென்ட்டிலேட்டர் மூலமும், அப்புறம் மெள்ள மெள்ள நார்மலாகவும் மூச்சுவிட்டு, பிறகு இடதுகையில் ஒரே ஒரு விரல் அசைவதில் மகிழ்வுற்று, மருத்துவ ஆராய்ச்சியில் தன்னைக் குணப்படுத்தும் மருந்து தன் வாழ்நாளுக்குள் வந்துவிடும் என்று காத்திருந்து, அதற்காகத் தன் சொந்த சம்பாத்தியத்தில் ஓர் அறக்கட்டளை அமைத்து, கடைசியில்... ஒன்பதாண்டு அசையாமல் உட்கார்ந்திருந்ததன் சிக்கல்கள் அவரை மேற்கொள்ள, ஜுரம் வந்து, தன்வசம் இழந்து, இறந்துபோனார் ரீவ்.

சில மாதங்களுக்கு முன் அவர் பி.பி.சி-க்கு அளித்த பேட்டியை மறு ஒளிபரப்பினார்கள்... 'உடலில்தானே எனக்கு பராலிசிஸ். மனதில் இல்லையே!'

பிரெஞ்சு தத்துவஞானி ழாக் டெர்ரிடா ‘டிகன்ஸ்ட்ரக்ஷனிசம்' என்னும் சித்தாந்தத்தின் தந்தை. தமிழில் இதை, ‘கட்டுடைத்தல்’ என்று சொல்கிறார்கள். 1967\ல் டெர்ரிடா அறிவித்த ஒரு புதிய அணுகுமுறை இது.

ஒரு கருத்தைச் சொல்ல மொழியைப் பயன்படுத்தும்போது, அந்தக் கருத்து முழுதும் வெளிப்படாமல், வேறு சில சமாசாரங்களும் வெளிவரும் என்றார் டெர்ரிடா. எழுத்தாளர்கள் தம்மை அறியாமல் வெளிப்படுத்தும் சில உண்மைகளை, வாசகர்கள் படிக்கும்போது கண்டுபிடிக்கவேண்டும். ‘முன்னுரைகள், அடிக்குறிப்புகளில்கூட எழுத்தாளரின் ஆதார நம்பிக்கைகளில் உள்ள முரணான விஷயங்கள் தென்படலாம். அவற்றை வெளிக் கொணருமாறு படிக்கவேண்டும்’ என்றார் டெர்ரிடா.

இந்தக் ‘கட்டுடைத்தல்’ முறை அமெரிக்காவில் மிகவும் பிரபலமாயிற்று. அவர்கள் கொஞ்சம் ஓவராகப் போய், தின வாழ்வின் அத்தனை அம்சங்களையும் அத்தனை இயல்களையும் கட்டுடைக்க ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக, தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் சமீபத்திய சோப்பு விளம்பரத்தைக் கட்டுடைக்கலாம். அந்த சோப்பை ஒரு தாய் வாங்கி வரச் சொல்ல, பெண் குழந்தை புறப்பட்டபின், ‘என்ன சோப் என்று சொல்லாமல் விட்டுட்டேனே... ஐயோ, தப்பான சோப் உபயோகித்தால் அரிப்பு வந்து, முகப்பரு வந்து, அவளுக்குக் கல்யாணமே ஆகாதே!'. இதில் கடைசி செய்தியைக் கட்டுடைத்தால், அழகான பெண்களுக்குத்தான் கல்யாணம் ஆகும் என்று சொல்லி சோப்பு விற்கும் நுகர்வோர் கலாசாரத்தின் அடையாளம் கிடைக்கும். சினிமா பாட்டுகளைக்கூடக் கட்டுடைக்கலாம். கிடைக்கும் உண்மைகள் சுவாரஸ்யமாக இருக்கும்.

ஆரம்பக் கேள்விக்கான விடை: அனைத்துமே தவறு!.

எ.பி.க.

எப்போது செல்வாய்
என்று காத்திருக்கிறேன்
நல்லெண்ணங்களையும்
புன்னகையையும்
ஒரு நேர்க்கோட்டில் குவித்து
உன் கண்களைச் சந்தித்து
உறுதியான கைகுலுக்கலுடன்
வாழ்த்து சொல்ல...

- கனிமொழி

Sunday, October 24, 2004

 

கற்றதும் பெற்றதும்


ஆஸ்திரேலிய காப்டன் ஆடம் கில்க்ரிஸ்ட் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது சிந்திக்க வைத்தது. ‘‘இந்தியாவில் கிரிக்கெட் மோகம் எவ்வளவு ஆழமானது என்பதை மும்பையில் ஒரு பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளைச் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன். முதலில் சுணக்கமாக இருந்த குழந்தைகளிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் காப்டன் வந்திருக்கிறார் என்று சொன்னதும், அத்தனை முகங்களும் மலர்ந்தன. அனைவரும் பார்வையற்ற குழந்தைகள்!"

அனஸ்தீஸியா பற்றி டாக்டர்கள் விளக்கிச் சொல்ல, பொதுமக்கள் கவனித்த நிகழ்ச்சி ஒன்றை சிவசாமி சாலையில் ஏவி.எம். மெர்ஃப் அறக்கட்டளை அரங்கில், டாக்டர் வசந்தி ஏற்பாடு செய்திருந்தார். மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்பு உணர்வும் கிடைத்தது(எப்படி சிலேடை?).
'சதுரங்க' இதழில் 'மஹாபலி' கதைக்கான படம்..

பன்னிரண்டு வயசிலிருந்து துவங்கி, பல சந்தர்ப்பங்களில் நானும் அனஸ்தீஸியாவும் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இந்தச் சிகிச்சைமுறை முன்னேறிக் கொண்டு வந்திருக்கிறது. ஈத்தர், பெண்டதால் எல்லாம் போய், ப்ரோபோஃபால்தான் (Propofol) லேட்டஸ்ட்டாம்! புஷ்பம்போல மயக்கம் வருவதே தெரியாமல், பாதி மயக்கமும் பாதி விழிப்புமாக சர்ஜனிடம், '‘என்ன டாக்டர், எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்கில்லே?’' என்று விசாரிக்கக்கூடச் செய்யலாமாம்.

சர் தாமஸ் பிரவுன் கவிதை போல,

‘These are my drowsy days vain
do I now awake only to sleep again??’ என்று 'அய்யோமிய்யோ' இருக்காதாம்.

அனஸ்தீஸியாவைப் பற்றிய பல செய்திகள் அந்த இரண்டு மணி தேசாலத்தில் எனக்குக் கிடைத்தன. முதன்முறையாக மயக்க மருந்து, அறுவை சிகிச்சைக்காகப் பயன்பட்டது 1846-ல்! அமெரிக்காவில் பாஸ்டன் ஆஸ்பத்திரியில், டை இத்தைல் ஈத்தரை மயக்க மருந்தாகக் கொடுத்து ஆபரேஷனுக்கு உதவினார் வில்லியம் தாமஸ் க்ரீன் மார்ட்டின். அவரது கல்லறையில், 'உலகின் வலியை நீக்கியவர்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

உங்களுக்கு சர்ஜரி என்றால், முதலில் அனஸ்தடிஸ்ட்டைச் சந்திப்பது நல்லது. ஆபரேஷனுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். சிகரெட் குடிப்பவராக இருந்தால்,ஒரு வாரம் முன்பே அதை நிறுத்த வேண்டும். (இதையே சாக்காக வைத்துக்கொண்டு முற்றிலுமாக நிறுத்திவிடுவது உத்தமம்.)

உங்களுக்கு டே கேர் (day care) சர்ஜரி என்றால், ஆபரேஷன் பண்ணின சாயங்காலமே 'மெட்டி ஒலி' பார்க்க வீட்டுக்கு அனுப்பிடுவார்கள். அனஸ்தீஸி யாவில் அதிகம் பயன்படும் வாயு? பிராண வாயுதான்! இடுப்பு வலி இல்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளவும் அனஸ்தீஸியா உதவுகிறது.

சிலவகைத் தொழில்செய்பவர் களுக்கு அனஸ்தீஸியாவால் பிரச்னை வரலாம். எனவே, மயக்குநரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதைச் சொல்லிவிடுவது நல்லதாம்! (நோட்டு அடிப்பவர்கள் சொல்லத் தேவையில்லை.) எழுத்தாளர் களுக்கு இந்தப் பிரச்னை இல்லை என, இதுவரை லோக்கல், ஜெனரல்என்று உலகத்தில் உள்ள அத்தனை அனஸ்களையும் களம்கண்ட தகுதியில் சொல்வேன்.

'பயப்படாதீர்கள்!' அதுதான், அவர்கள் அந்த அக்டோபர் இரண்டில் சாப்பாடு போட்டுச் சொன்ன அறிவுரை!

எனக்குச் சின்ன வயசில் டான்சில்ஸ் ஆபரேஷனுக்குக் கொடுத்த க்ளோரோஃபார்ம் வாசனை இன்னும் ஞாபகமிருப்பது எப்படி என்று வியந்திருக்கிறேன். சமீபத்தில், நம் மூக்கின் மோப்பத் திறமையை ஆராய்ந்து, சில ஆதார உண்மைகளைக் கண்டுபிடித்த அமெரிக்கர்கள் டாக்டர் ரிச்சர்டு ஆக்ஸெல், லிண்டா பக் இருவருக்கும் இந்தஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

நம்மால் மொத்தம் சுமார் 10,000 வாசனைகளைத் தனிப்படுத்தி உணரமுடிகிறது. இது எப்படி என்ற வியப்பு 1992\ல் இவ்விருவரும்பதிப்பித்த ஆராய்ச்சி முடிவுகளில்தான் தீர்ந்தது.

ஆயிரம் தனிப்பட்ட ஜீன்கள்தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித் தார்கள். ஒரு மோப்பம் மூக்கின் மேல்பகுதியில் உலவும்போது, பல மாலிக்யூல்களின் கலவையைக் காட்டுகிறது. ஒவ்வொரு மாலிக்யூலும் ஒரு ஓடோர் ரெசெப்டார் (odor receptor) என்கிற சமாசாரத்தை உசுப்புகிறது. எது எது உசுப்பப்பட்டது என்று அவற்றின் அமைப்பை மூளை தரம் பிரித்து, இது மல்லிகைப்பூ, இது கருவாடு, இது டயர் எரிவது, இது ரோஜா, இது (விக்கிரமாதித்தன் கதையில் வருவதுபோல்) மோர்க்காரி என்று தனிப்படுத்தி அடையாளம் காண்கிறது. பிற்காலத்துக்கு ஞாபகமும் வைத்துக்கொள்கிறது.

இதைக் கண்டிபிடித்ததற்கு ஒண்ணரை மில்லியன் டாலர் பரிசு கொடுத்ததால், பெரிசாக விளைவு ஏதும் இல்லை. எதிர்காலத்தில் பயன்படலாம் என்கிறார்கள்.

மாறாக, இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற டேவிட் போல்ட்ஸர் ஃப்ராங்க் வில்செக், டேவிட் க்ராஸ் என்ற மூன்று அமெரிக்கர்கள் செய்த ஆராய்ச்சி மிக முக்கியமானது. 1973-லிருந்து அவர்கள் சொன்ன க்வாண்டம் க்ரோமோடைனமிக்ஸ் சித்தாந்தம் இப்போதுதான் அங்கீகரிக் கப்பட்டிருக்கிறது. இது பிரபஞ்சத்தின் நான்கு ஆதார சக்திகளை ஒருமைப்படுத்தும் Theory of Everything அமைப்பதற்கு உதவும் என்கிறார்கள். க்வார்க் என்னும் அணுக்கருவில் உள்ள துகள்களுக்கு இடையே இருக்கும் வலுவான சக்திகளை விளக்கும் சித்தாந்தம் இது!

‘யோவ் அமெரிக்கா... எத்தனை தான்யா பரிசு வாங்குவீங்க? மற்ற நாடுகளுக்கும் ஒண்ணு ரெண்டு விட்டு வைக்கக் கூடாதா?!’ என்று வியந்தபோது, கெமிஸ்ட்ரிக்கு இரண்டு இஸ்ரேலியர் களுக்கும், இலக்கியப் பரிசு ஆஸ்திரியா தேசத்துப் பெண்மணிக்கும் (The Piano Teacher இவருடைய நாவலாம்), சமாதானப்பரிசு கென்யா நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மூன்று கோடி மரம் நடும் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஆப்பிரிக்கப் பெண்மணிக்கும் கொடுத்திருக்கிறார்கள்!

பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட எனது சிறுகதைகளில் ஒன்று, விகடனில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'மஹாபலி'. அண்மையில், 'சதுரங்க' என்னும் இதழில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிபெயர்க்க, வங்காளியில் வந்தது.

'சதுரங்க' இலக்கியப் பத்திரிகை போலத் தோன்றுகிறது. அட்டையில் ஒரே ஒரு கோட்டுச் சித்திரத்தைத் தவிர, மற்றபடி படங்களே இல்லை. எல்லாம் மேட்டர்தான்! ஓரிரு விளம்பரங்கள் தாட்சண்யத்துக்குக் கொடுத்ததுபோலத் தோன்றுகின்றன. கதை, கவிதை, கட்டுரை, சர்ச்சை, இலக்கிய விசாரங்கள் எல்லாம் இருப்பது தெரிகிறது.

கவிதைகளில் ஒன்று எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அர்த்தம் புரியவேண்டுமா என்ன? அந்த அழகான பெங்காலி எழுத்துக்கள் பார்க்க நன்றாக இருக்கின்றனவே... போதாதோ? பெங்காலி, ராக் இசையை ரசிப்பதில் லையா..?

இருந்தும், எங்கள் டிஷ்நெட் வயர்லெஸ் ஆபீஸில் பணிபுரியும் பெங்காலி இளைஞர் பிதான் ஹல்தாரைக் கேட்டதில்... நந்திதா சென் கங்கோபாத்யாய் எழுதிய ‘சமய்’ (காலம்) என்கிற கவிதையாம் அது!

காலம் மர்மமாக வந்தது
கனமான காலையாக, நடுப்பகலாக,
மௌன நள்ளிரவாக
நாட்களுக்குப் பின் நாட்களாக

பசும்புல்வெளியில் குடை,
அரண்மனை, ஆழ்ந்த ஜலம்
கனமான காலை, நடுப்பகல், மௌன
நள்ளிரவாக!

Not bad!

'மஹாபலி' முதலில் தமிழில் வந்தபோது, ஈழத்திலிருந்து எதிர்பாராத பாராட்டுகள் வந்தன. அதன் காரணத்தை, கதையைப் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மொழிபெயர்ப்பு சரியாக வந்திருக்கிறதா என்பதை என்னால் மறைமுக மாகத்தான் அறிய முடிகிறது. இரண்டு மொழிகளுக்குமுள்ள கலாசார வித்தியாசத்தால், மூலம் சற்று சேதப்படுவதைத் தவிர்க்கமுடியாது.

'கொட்டு மேளச் சத்தம் கேட்டது. வெறும் மேளச் சத்தம் இல்லை. நாயனக்காரன் என்ன வாசிக்கிறான் என்று புரியவில்லை. டடிம் டகு டகு டடிம் டகு டகு என்று ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பி நான்கு தவுல்காரர்கள் சேர்ந்து அடித்துப் பிளந்துகொண்டு வந்தார்கள். அந்தச் சத்தம் 'எல்லையில்லாத வஸ்துவான சங்கீதத்தையே விழுங்கிவிட்டேன்' என்று ஏப்பம் விட்டுக்கொண்டே, தெருக்கோடியிலிருந்து டாக்டர் வீட்டு வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது...'

தி.ஜானகிராமனின் இந்த வரிகள் புலப்படுத்தும் காட்சியைத் தமிழைத் தவிர, வேறு மொழியில் ஏற்படுத்த முடியுமா?

ராமாவரம் தோட்டத்தை அடுத்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், குழந்தை ரென்னி தாமஸின் பாப்டிசம் திருமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்கவேண்டும் என்று 'ஆஸ்ஸீர்வதிக்கும்' இவ்விழாவுக்கும் இந்துக்கள் பெயர் சூட்டும் புண்யா கவசன விழாவுக்கும் பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டேன். சர்ச்சுக்கு வருபவர்கள் அனைவருக்கும், ‘பரலோகத்தில் வாழும் பரமபிதாவே...’ என்று துவங்கும் பிரார்த்தனை முழுவதும் தெரிந்து இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு முழு தேவாரமோ அல்லது பிரபந்தப் பாடலோ தெரியும்?

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... கோயில்கள் அனைத்துக்கும் பொதுவாக, ஏன்... சர்ச், மசூதி எல்லோருக்கும் பொதுவாக கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடலாம்.

எங்கே... சொல்லுங்கள் பார்க்கலாம், மிக எளிய பாடல்!

‘உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!’’

அர்த்தம் புரியாத எஸ்.எம்.எஸ். தமிழர்களுக்கு...

'எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து முடிவிலாத விளையாட்டுகளை உடைய தலைவருக்கே நாங்கள் சரணம்!'

சென்னைத் தமிழில்... 'நாமெல்லாம் பொறக்கசொல்ல படச்சுக் காப்பாத்தி, சாவடிக்கிறார் பாரு தல, அவரு கால்ல உயு வாத்யாரே!'

எனக்குப் பிடித்த கவிதை

திண்ணையில் வசித்த
அப்பாவீட்டுக்குள் வந்தார்
புகைப்படமாய்

- பா.சேதுமாதவன்

Sunday, October 17, 2004

 

விக்ரம் துரத்த... சதா ஓட...


ஆர்.கே.லக்ஷ்மணின் ‘you said it’ கார்ட்டூன்களுக்கு ஐம்பது ஆண்டுகள் நிறைந்திருக்கும். 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' கிடைக்கும் போதெல்லாம் முதலில் அதைத்தான் பார்ப்பேன். அவற்றில் இப்போது சற்று ஆயாசம் தெரிந்தாலும், நகைச்சுவையின் கூர்மை அப்படியே இருக்கிறது.

‘நந்தினி ஒரு கராத்தே பயிற்சி சாலையில் நுழைகிறாள். அந்நியன் அவளைத் துரத்திவர Action block - இவ்வளவுதான் ஸ்க்ரிப்டில் நான் எழுதியது.

ஜேஜே உள் விளையாட்டரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது, டைரக்டர் ஷங்கரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நூற்றிருபது ஸ்டில் காமிராக்களின் மத்தியில் கதாநாயகி சதா, கீழே விழுவதைப் படம் பிடிக்க, 'மேட்ரிக்ஸ்' வகை ஷாட்டுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். காமிராமேன் மணிகண்டன், ஸ்டண்ட் கோஆர்டினேட்டர் பீட்டர் ஹைன்ஸ், Big Freeze கம்பெனியிலிருந்து வந்திருந்த தொழில்நுட்ப வெள்ளைக்காரர்கள், ஐம்பது கராத்தே வீரர்கள், மூன்று மூவி காமிராக்கள், நூற்றுக்கணக்கான ஸ்டில் காமிராக்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் இருந்து ஒத்திசைந்து இயங்க, விக்ரம் துரத்த... ஓடிவந்து மாடி ஏறி கீழே விழுந்த சதாவை அந்தரத்தில் நிறுத்தி, சுற்றிலும் நெடுக அவளைக் காட்டிவிட்டு, கீழே விழுவதைத் தொடர்கிறது காட்சி.

மிஞ்சிப்போனால் ஒரு நிமிஷம் வரப்போகும் இந்தக் காட்சிக்கு மூன்று நாள் ஆயத்தங்கள்! டேய்ட்டன் டெய்லர் என்பவர், 1994-ல் கண்டுபிடித்த டெக்னிக் இது. முதலில் விளம்பரப் படங்களுக்கு இது பயன்பட்டது. ‘மேட்ரிக்ஸ்’க்குப் பிறகு திரைப்படங் களில் பிரபலமானது. பத்து வருஷத்தில் ரொம்ப முன்னேறிவிட்டது. 120 காமிரா, ஒரே ஷட்டர் கணம், ஒரே ஃபிலிம் சுருளில், ஒரே சமயத்தில் பக்கத்தில் பக்கத்தில் பதியப்பட்ட தனித்தனி ஸ்டில் படங்கள். இதைச் சேர்த்து வைத்து ஓட்டிப் பார்க்கும்போது, அது அந்தரத்தில் தொங்குபவரை நிலைநிறுத்திப் பல கோணங்களில் தெரிய வைக்கலாம். ஸ்லோமோஷனில் வெவ்வேறு கதிகளில் நகரவும் வைக்கலாம்.

அருகில் போய்ப் பார்க்கலாம் என்றால், என்னையும் கயிறு கட்டி விட்டத்தை முட்டவைத்து விடுவார்களோ என்கிற தயக்கத்தால், கிடைத்த கேப்பில் ஸீன் மட்டும் பேசிவிட்டு எஸ்கேப்!

'வீடுமின் முற்றவும்' என்று சொன்ன நம்மாழ்வாரைக் காட்டிலும் சுருக்கமாக, 'விடு. வீடு' என்று உபதேசித்து, சுவிஸ் சாக்லெட் தந்து என்னை ஆசீர்வதித்த சிவசங்கர் பாபாவை ஒரு ஹைடெக் யோகி என்பேன். ஐ.எஸ்.டி.என். கனெக்ஷன் மூலம் உலகோடு பேசுகிறார். உறுத்தாமல் உபதேசிக்கிறார்.

கேளம்பாக்கத்தை அடுத்த அவரது 'சம்ரட்சணா' வசதிகள் 35 ஏக்கரில் பரவியுள்ளன. ஆஸ்பத்திரி அஞ்சு நட்சத்திர ஓட்டல் போல இருக்கிறது. (கட்டணம் ஒரு நட்சத்திரம்கூட இல்லை. இலவசமாம்.) வயசானவர்களுக்கு நிம்மதி தர, ஆரோக்கியமான சூழ்நிலை யில் வீடுகள் கட்டிக்கொடுத்து, 'கம்யூனிட்டி லிவிங்' என்று அவரவருக்கு ட்யூட்டி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

'சுஷீல்ஹரி' சர்வதேசத் தரம் வாய்ந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் ப்ளஸ் டூ வரை படிக்கிறார்கள் (ஆசிரியர்கள் எல்லோரும் தன்னார் வலர்கள்). கிராம மேம்பாட்டுக்கான சேவைகள், இலவச கல்யாணம், கராத்தே, ஜிம், விளையாட்டு மைதானங்கள், வேலைவாய்ப்பு, திறந்த கோயில்கள், மசூதி, சர்ச், ஜெயின் கோயில், புத்தவிஹாரம்... இத்தனையையும் ஒருவர் தீர்மானித்து ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றியது வியக்க வைக்கிறது.

எல்லாம் உடல் உழைப்பு. மன வைராக்கியம். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று அவரவருக்கு அவரவர் பணிகளைப் பிரித்துக் கொடுத்து, பசுமையும் மரங்களும் மலர்களும் சூழ்ந்த ஆரோக்கியமான தனிநகரம் அமைத்திருக்கிறார். அக்கடா என்று போய் இருந்துவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், அவ்வளவு சுகஜீவனமிருந்தால் எனக்கு எழுத வராது. என்னை வீட்டுக்கு எடுத்துச் செல்லவிரும்பும் மயிலாப்பூர் கொசுக்களும், நிசாசரர்களான தண்ணி லாரிகளின் ந்யூட்ரல் உறுமல்களும், அக்கம்பக்கத்தில் குழந்தைகளின் கீச்சுக்குரல் அலறல்களும், அண்டை வீட்டில் இதற்கு மேல் சத்தமாக வைக்க முடியாத டி.வி-யும், எங்கள் 'கிவி'யின் அவ்வப்போதைய 'வள்'ளலும் எழுதத் துணையாக வேண்டும்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களைக் கருவியாக வைத்து அமைப்புகள் தோன்றுகின்றன, விஸ்தாரம் அடைகின்றன, பரவுகின்றன. மேல்மருவத்தூர், கீழ்மின்னல், அமிர்தானந்தமயி, புட்டபர்த்தி என ஒருவரைக் குவிமையமாக வைத்து, அவர் பேர் சொல்லி அற்புதச் செயல்களும், தர்ம காரியங்களும் நிகழ்கின்றன. இறைவன் ஏதோ ஒரு காரணத்துக்காக பிரத்தியட்சமாகத் தோன்ற விரும்பாத இந்த யுகத்தில், இவர்கள்தான் பிரதிநிதிகள்.

சிவசங்கர் பாபா என்னிடம் ஒரு யாக நெருப்பின் போட்டோவைக் காட்டி, ‘ருத்ர தாண்டவம் போலத் தோன்றுகிறது, பாருங்கள்’என்றார். என் வைணவக் கண்களுக்கு, புல்லாங்குழல் கிருஷ்ணன் போல இருந்தது. அசப்பில் இயேசுவும் தெரிந்தார். ‘அவரவரிறையவர் குறைவிலர்'.

'நகரம்' சிறுகதையை பாலுமகேந்திரா தூர்தர்ஷனுக்காக எடுப்பதாக இருந்தது. பட்ஜெட் சரிப்படாததால், 'பரிசு' என்ற கதையை எடுத்துக் கொடுத்தார். இது நிகழ்ந்து ஆறு மாதமாயிற்று. தூர்தர்ஷன் தமிழ்ச் சிறுகதைகளை நாடெங்கும் ஆகஸ்ட்டில் ஒளிபரப்பத் துவங்கப்போவதாக அரசாங்கத்திடமிருந்து கடிதம் வந்தது. நாட்வெஸ்ட் கிரிக்கெட் போட்டியால் அது செப்டம் பருக்குத் தள்ளிப் போடப்பட்டது. ஐ.சி.சி. டோர்னமெண்ட்டினால் நவம்பரில்தான் ஒளிபரப்பாகும் என்று மற்றொரு கடிதம் வந்தது. அப்போது ஆஸ்திரேலியா, அப்புறம் தென் ஆப்பிரிக்கா கோஷ்டி குறுக்கே வரலாம். எனக்கென்னவோ, 2005 நவம்பருக்குத் தள்ளிப் போய்விடும் என்று தோன்றுகிறது. மாறாக டைரக்டர் வஸந்த், என் 'எல்டொராடோ' கதையையும், அழகம்பெருமாள் 'முதல் மனைவி' கதையையும் தனியார் தொலைக்காட்சிக்காகச் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், என் கதைகளைச் சரியாகப் புரிந்துகொண்ட பரம ரசிகர்கள். தன் பெயருக்கே என் கதாபாத்திரம்தான் காரணம் என்கிறார் வஸந்த். என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பதாகச் சொன்னார்.

தொலைக்காட்சிக்காக காம்ப்ரமைஸ் செய்யாமல் வஸந்த், அழகம்பெருமாள், சிவகுமார் (மணிரத்னத்தின் உதவியாளர்), மனோபாலா, காந்தி கிருஷ்ணா போன்ற இளம் டைரக்டர்கள் என் சிறுகதைகளை எடுத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது ராஜீவ் மேனன், மணிரத்னம், கமல், சுஹாஸினி, ஷங்கர் போன்றவர்களும் (மறுத்தால், நான் மென்னியிலிருந்து கத்தியை நீக்கமாட்டேன் என்பதால்) செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம்.

தூர்தர்ஷன் கிரிக்கெட் இல்லாத நேரத்தில் தமிழ்ச் சிறுகதைகளை ஒளிபரப்பலாம் என்று யாரும் யோசனை சொல்லவில்லையா?

அப்பா ஸ்தானம் என்றதும் ஞாபகம் வந்தது. கமல் தனது ‘கற்றதும்... பெற்றதும்’ புத்தக விமரிசனத்தில், 'மாமா ரீல் விடுகிறாரோ' என்று எழுதியிருந்ததற்கு நண்பர் கிருஷ்ணமாச்சாரி, "கமல் உங்கள் மருமானா?"என்று கேட்டார். நான் ‘all Iyengars are related’ என்றேன். ‘‘என்ன உறவு? சரியாகச் சொல்லுங்கோ! நான்கூட கமலுக்கு உறவுதான்’’ என்றார். ‘'கமலின் ஒன்றுவிட்ட பெரியம்மாவும் என் மனைவியின் ஒன்றுவிட்ட சித்தியும், ஹேமமாலினியின் ஒன்றுவிட்ட அத்தங்காவின் உடன்பிறந்தானின் ஆம்படையாளும் சிறுதாயார் பெருதாயார்’' என்றேன், அதைப் புரிந்துகொள்ள அன்பருக்கு ஒரு வருஷமாவது ஆகும் என்ற நம்பிக்கையில்.

‘அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூல் இன்றிக் கோட்டிகொளல்' என்று வள்ளுவர் எச்சரித்திருந்தும், ஆர்வத்தால் தக்கர்பாபா அரங்கில் நடந்த ரசிகமணி டி.கே.சி-யின் 123-ம் ஆண்டு பாராட்டு விழாவுக்குத் தலைமை உரை ஆற்றத் துணிந்தேன். ‘ரசிகமணியின் ரசிகன் என்ற ஒரே ஒரு தகுதிதான்’ என்று ஆரம்பத்திலேயே கையைத் தூக்கிவிட்டேன்.டி.கே.சி-யைப் பற்றி என்னைவிட நிறையத் தெரிந்திருந்த பல பெரியவர்கள் நிரம்பியிருந்தார்கள். டி.கே.சி-யின் கட்டுரைத் தொகுப்பு நூலான 'தமிழ்க் களஞ்சியம்' அந்தக் கூட்டத்தில் எனக்குக் கிடைத்த பரிசு. பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் வெண்பா ஒன்றை அவர் விளக்கும் விதம் டிபிக்கல் டி.கே.சி.

‘‘காவேரி நதிக்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு, துவாதச (பன்னிரண்டு) நாமங்கள் அழகாக இட்டுக்கொண்டு, குண்டஞ்சி சோமன் உடுத்திக்கொண்டு, பக்தி புஞ்சிதராய் தேருக்கு வந்தார். தேர்ப்பக்கம் யாருமே இல்லை. திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களையும், தெருவில் நின்று வீண்பொழுது போக்கிக் கொண்டிருப்பவர்களையும் பார்த்து ஆங்காரத்தோடு பேசுவதாக பாவம்!

'ஒன்றும் அறியா ஊமர்காள் தென் அரங்கர்
இன்று திருத்தேரில் ஏறினார் \ நின்று
வடம்பிடிக்க வாருங்கள் வைகுந்த நாட்டில்
இடம்பிடிக்க வேண்டும் எனில்’

நான் ஒரு வெண்பா நண்பன். சரளமான வெண்பாக்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் பஞ்சமே இல்லை. கவிஞர் 'மரபின் மைந்தன்' எனக்களித்த 'ரசனை' இதழில், தஞ்சை இனியன் சென்னை நகரத்தைப் பற்றித் தளைதட்டாத பதினெட்டு வெண்பாக்கள் எழுதியுள்ளார். அதில் ஒரு சாம்பிள், இந்த வாரம் எனக்குப் பிடித்த கவிதை...

'செல்வார் வருவாரின் சிந்தைகளைச் சீண்டுகிற
சல்வார் கமீஸணிந்த சந்திரன்கள் \ மெல்ல மெல்ல
ஃபில்டர் பிளைனாகும் பீடியாகும் ஆண்வர்க்கம்
மெல்டாகிச் சாகுமே மெய்!’

- தஞ்சை இனியன்

இம்மாதிரியான நவீன விஷயங்களைச் சொல்லும் நேரிசை வெண்பாக்களை வரவேற்கிறேன். சிறந்தவற்றை இந்தப் பகுதியில் குறிப்பிடுகிறேன். நிபந்தனைகள்... 1.தளை தட்டக்கூடாது (‘தளை தட்டினால் உசிதம்போல் திருத்திக் கொள்ளவும்’ பிசினஸ் கிடையாது) 2. ஆகாசம்பட்டு சேஷாசலத்துக்கு அனுமதி இல்லை. (காரணம், அவரைத்தான் ஜட்ஜாகப் போடப் போகிறேன்) 3. நவம்பர் 1-க்குள் தபால்கார்டில் எழுதி அனுப்பவேண்டும். கடவுச்சொல் (பாஸ்வேர்டு) 'நேரிசை வெண்பா' என்பதை கார்டின் நெற்றியில் தவறாமல் குறிப்பிடவும்.

பரிசு? வேறென்ன, புத்தகம்தான்!

Sunday, October 10, 2004

 

பகவத் கீதை வருணாசிரமத்தை வலியுறுத்துகிறதா?


பகவத்கீதையைப் பற்றிய சர்ச்சைகளை அண்மையில் பார்க்கிறேன். அது வருணாசிரமத்தை வலியுறுத்துவதாகவும், ஒரு இந்துவாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்றும் சில அரசியல்வாதிகள் காட்டமான கருத்துக்கள் தெரிவித்ததாகப் படித்தேன்.

மகாபாரதத்தின் பகுதியாக இருக்கும் பகவத்கீதை (இறைவனின் கீதம்) எப்போது எழுதப்பட்டது என்பது பற்றி, ஆராய்ச்சியாளர் களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை சொல் கிறார்கள். பகவத்கீதை ஒருவரால் எழுதப் பட்டதல்ல. முதலில், உபநிஷதக் கருத்துக்களை வலியுறுத்தவும் பிற்பாடு நாராயணனின் அவதாரம் பற்றிய வைணவக் கருத்துக்களை வலியுறுத்தவும் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

பகவத்கீதை வருணாசிரமத்தை வலியுறுத்துகிறதா என்பதுதான் கேள்வி.

‘சதுர்வர்ணம் மயா ச்ருஷ்ட. குணா கர்ம சத்வ ரஜஸ் தமஸ்’ என்கிறார் பகவான். ‘நால்வர்ணப் பிரிவு என்னுடைய சிருஷ்டிதான். சாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களின், செயல்களின் கலவை’ என்கிறார்.

‘பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களே (ஜன்மனா ஜாயதே சூத்ரஹ)! பண்பாடு, கல்வி, அறிவு, இவை வந்தடையும்போதுதான் மானுடன் உயர்சாதியாகிறான்’ என்கிறது ரிக் வேதம். எனவே, இன்றைய சதுர்வர்ணத்தில் சிறந்தவர்களை ப்ரெய்ன் சர்ஜன்கள், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள், சங்கீதக் கலைஞர்கள் இப்படித்தான் பிரிக்க முடியுமே தவிர, ஐயர், ஐயங்கார், பிள்ளைமார், நாயுடு எல்லாம் கீதையில் இல்லை. கீதையில் பகவான் தன்னைப்பற்றிச் சொல்லும்போது சிறந்தவர்கள், சிறந்தவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு, அவையெல்லாம் நானே என்னும்போது, அந்தக் காலத்தில் ராக்கெட் விஞ்ஞானிகள் இருந்திருந்தால், ‘ராக்கெட்டும் நானே, ராக்கெட் விஞ்ஞானியும் நானே’ என்று சொல்லியிருப்பார்.

கீதையை, அது தோன்றிய காலத்தின் கட்டாயங்களின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். பௌத்தமும் சமணமும் தழைத்துக் கொண்டிருந்த சூழலில், இந்துமதக் கருத்துக்களுக்கு ஒரு வலுவான அடிப்படையாக revelationary வடிகாலாகத் தோன்றியது கீதை. அதை எல்லாரும் படித்துப் பயன்படும்படியான இடத்தில் வைக்க, பாரதப் போர்தான் சரியான இடம். கீதை, மகாபாரதத்தில் பிற்பாடு வைக்கப்பட்டது. இல்லையென்றால், அம்புகளும் ஆயுதங்களும் பறக்கும் போர்க் குழப்பத்தின் நடுவில், ஆற அமர அத்தனை பிலாசஃபி பேசினால், அர்ச்சுனன் வில்லை வைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருப்பான்.

எந்தப் பழைய நூலையும் தற்காலச் சிந்தனைகளுக்கு ஏற்ப முழுவதும் பொருத்த முடியாது, கூடாது என்பதை கீதையைக் கடுமையாக விமர்சிப் பவர்கள் உணர வேண்டும். சங்க இலக்கியத்தில் உடன்கட்டை ஏறுவது உள்ளது. சிலப்பதிகாரத்தில் நரபலி உள்ளது. திருக்குறள் பெண்ணியவாதி களுக்கும், நான்வெஜ் சாப்பிடுபவர் களுக்கும் பொருந்தாது. ஆயிரம் யாகத்தைவிட ஓர் உயிரைக் கொல்லா மல் இருப்பது சிறந்தது என்கிறது திருக்குறள். கம்பராமாயணத்தில் அல்குலும் முலையும் பயிலும் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் தரும் ஒரு புத்தகமே உள்ளது. இந்தக் கருத்துக்களுக்காக அந்த அபார நூல்களின் சிறப்பை மறப்பது பொறுப்பற்ற செயல்.

பைபிள், திருக்குரான் எல்லாவற்றையும் அவற்றின் சூழ்நிலையிலிருந்து பிடுங்காமல் பார்த்தால்தான் குறை நிறைகளும், சில கோபங்களும் நியாயமாகும். கீதை ஒரு மகத்தான நூல் என்பது, முழுவதும் படித்துப் பார்த்தால் தெரியும்.

கீதையில் எனக்குப் பிடித்த இரண்டு மேற்கோள்கள்...

‘பிறந்தவர் இறப்பது நிச்சயம். இறந்தவர் பிறப்பது நிச்சயம். எனவே, தவிர்க்க இயலாததை எண்ணித் தவிக் காதே!’ - இரண்டாம் அத்தியாயம்.

கீதையில் சிறந்த அத்தியாயம், பகவான் தன்னைப் பற்றி விவரிக்கும் 10-ம் அத்தியாயம். அதில் சிறந்த சுலோகம் 34. ‘நானே அனைத்தையும் விழுங்கும் மரணம். நானே எதிர்காலத்தின் ஆரம்பம்!’ - இந்த வரியை விஞ்ஞானி ஒப்பன்ஹைமர், 1945-ல் முதல் அணுகுண்டைப் பரிசோதித்த இடத்தில் மேற்கோள் காட்டினார்.

அந்த சுலோகத்தின் தொடர்ச்சி... ‘பெண்பால் சொற்களில் நான், புகழ், சுபிட்சம், பேச்சு, ஞாபகம், அறிவு, தீர்மானம், மன்னிப்பு.’


மைக்ரோ சாஃப்ட்டுக்கு புதிய விரிவாக்கம் இது - MICROSOFT - Most Intelligent Customers Realize Our Software Only Fools Teenagers. www வுக்கு world wide wait.


இப்போதெல்லாம் முன்கூட்டிப் பணம் கொடுத்துப் பதிவு செய்தால், செகண்ட் கிளாஸ் ரயில் சார்ஜ் அளவுக்கு பிளேன் சார்ஜ் வந்துவிட்டது. என்ன... காபி, டிபன் கிடையாது. பிளேனைவிட்டு இறங்க, படி வைக்க மாட்டார்கள். கதவைத் திறந்து தள்ளிவிடு வார்கள். மற்றபடி திவ்யமாகப் போய்ச் சேரலாம். டெக்கான், கிங்ஃபிஷர் போன்ற புது வரவுகள் ஜாம்பவான் களுக்குத் தண்ணி காட்டுகிறார்கள்.

பி.இ.எல். மனமுவந்து எனக்கும் மனைவிக்கும் வழிச்செலவும் கைச்செலவும் கொடுத்ததால், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சொகுசாகவே, சிவப்பான பஞ்சாபி குட்டிகளின் பராமரிப்பில் மும்பை சென்றோம். பிள்ளையார் சதுர்த்திக்கு மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு, வண்ண விளக்குகள் கண்ணடிக்க, ‘சார்வஜனிக்’ பெரிய பிள்ளையார்களாலும், சைக்கிளிலும் கையிலும் டெம்போவிலும் கட்டிக்கொண்டு அன்போடு சொந்தப்பிள்ளைகளைப் போல எடுத்துச் செல்லப்பட்ட குட்டிப் பிள்ளையார்களா லும், டிராஃபிக் ஸ்தம்பித்ததைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டு காத்திருக்கும் வாகனங்களும், மனிதர்களும் கொண்ட தெய்வவேளை (அப்பா! சாண்டில்யன்போல எவ்வளவு பெரிய வாக்கியம்!). ‘ஸன் அண்ட் ஸாண்ட்’(sun and sand)ல் எங்களை விட்ட ஆட்டோக்காரர் சவான், மீட்டருக்கு மேல் கொடுத்ததை (சென்னைப் பழக்கம்) ‘நை சாஹியே’ என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தபோது, என்னை அடையாளம் கண்டுகொண்டு வெர்சோ வாவில் தன் பெரிய வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து அளித்த ட்ரான்ஸ்வோர்ல்டு ராம்நாராயண், 1968\ல் நான் விகடனில் எழுதிய ‘ஒரே ஒரு மாலை’ கதாபாத்திரங் களின் (எனக்கே மறந்து போன) பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு சொல் கிறார் (இந்துமதி, ஆத்மா). அதிருக்கட்டும்... மும்பைக்கு நான் எதற்குப் போனேன்? வாஸ்விக் என்கிற தனியார் அறக்கட் டளையின் சார்பில், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், லண்டன் வாழ் லிபரல் டெமாக்ரட்டிக் பார்ட்டி தலைவர் லார்டு தோலாக்கியா... இவர்கள் தலைமையில் நடந்த விழாவில் எனக்கும், என்னுடன் பி.இ.எல்-லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பிலும், சீரமைப்பிலும் பங்கு கொண்ட டாக்டர் வெங்கடேஷ், ருத்ரமூர்த்தி மற்றும் பல துறைகளைச் சார்ந்த இருபத்தைந்து விஞ்ஞானிகளுக் கும், தொழில் நுட்பர்களுக்கும் 2001, 2002\ம்ஆண்டு களுக்கான ‘வாஸ்விக் அவார்’டாக பட்டோலையும் காசோலையும் வழங்கியதை வாங்கிக்கொள்ள!

‘விவித லக்ஷி ஒளத்யோகிக் சம்சோதன் விகாஸ் கேந்த்ரா’ என்பது வாயில் நுழையாது என்பதால், ‘வாஸ்விக்’ என்று சுருக்கப் பெயர் கொண்ட இந்த நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் விவசாயம், உயிரியல், வேதியியல், மின்னணுவியல், சுற்றுச் சூழலியல், தகவல் செய்தித் தொடர்பியல், உலோகவியல், கட்டமைப்பியல் என ஒவ்வொரு துறையிலும் மக்களுக்குப் பயன்படும்படியான ஆராய்ச்சி செய்தவர்களுக்கு, ஒரு பாரபட்சமற்ற கமிட்டியின் சிபாரிசின்பேரில் பரிசளிக்கிறார்கள். 2002-க்கான எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் எங்கள் ‘இ.வி.எம்’-களுக்குத் தந்தார்கள்.

‘‘கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’’ என்றார் நண்பர். ‘‘சொந்த மாநிலம் தவிர!’’ என்றேன்.

எனக்குப் பிடித்த கவிதை

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்தான்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை.

- நகுலன்

Sunday, October 03, 2004

 

கற்றதும் பெற்றதும்


இந்தப் பகுதியில் 19.09.04 இதழில், எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, “'சாம்சங்' டெலிவிஷன் பெட்டிகள் தானே செய்கிறார்கள்... கப்பல் செய்கிறார்களா என்ன?” என ஓர் அன்பர் ஐயத்துடன் கேட்டிருந்தாராம்.

பலவகைக் கப்பல்கள் செய்கிறார்கள். அவற்றில் 'ஜி கிளாஸ் எல் அண்ஜி டாங்கர்' ஒன்று. அதனுள், மைனஸ் 160 டிகிரிக்கு உறையவைத்துக் கட்டியாக்கி, எரிபொருள்களைக்கூடக் கண்டம் மாற்றலாம்.

கொரியாவிலும் ஜப்பானிலும் கேளிக்கை, வீட்டு உபயோக சாதனங்களிலிருந்து கப்பல் வரை ஒரே தனியார் கம்பெனி உற்பத்தி செய்வதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

ஜப்பானில் 'மிட்ஸ§பிஷி' போல, கொரியாவில் 'சாம்சங்'. நம்ம ஊர் டாட்டா கப்பல் செய்யத் துவங்கிவிட்டால், அவர்களுக்கு ஈடாக வரலாம். தற்போது இரும்பு, கம்ப்யூட்டர், இன்ஷ¨ரன்ஸ், இண்டிகா செல்போன் வரை வந்திருக்கிறார்கள்! 'சரஸ்' ஏரோப்ளேனும் செய்யுமாறு மன்மோகன்சிங் அவர்களைக் கேட்டிருக்கிறார். ஒன்று வாங்கிப் போடலாம் என்றிருக்கிறேன்.

இந்த விஷயத்தில், ரிலையன்ஸ§ம் அதிக தூரத்தில் இல்லை!

பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் நிறுவிய தமிழாய்வகத்தில், சிதம்பரத்திலிருந்து சிறந்த அற்புதமான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். மணிவாசகர் நூலகம் மூலம், சிதம்பரத்தைத் தமிழ் ஆராய்ச்சியின் தலைநகரமாக ஆக்கியவர் ச.மெய்யப்பன்.

அவர் பதிப்பித்த 'தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி' என்னும் ஏ.வி.சுப்பிரமணிய னின்நூல், அண்மையில் நான் வாங்கிப் படித்த சிறந்த ஆராய்ச்சி நூல்.

தொல்காப்பிய சங்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் ஆராய்ச்சி என்பது எந்த வடிவில் இருந்து வந்திருக்கிறது என்பதை யோசிக்க வைக்கும் கருத்தாழம் மிக்க நூல் இது.

குறிப்பாக, 'பண்டை நூல்களின் பாயிரம், பதிகங்கள் போன்றவையே முதல் ஆராய்ச்சி முயற்சிகள்' என்ற கருத்து சிந்திக்க ஏற்புடையது. பதிகம் என்பது, ஒரு வகையான முன்னுரை அல்லது அணிந்துரை போல... நூலின் ஆசிரியர் அல்லாமல், மற்றொருவர் எழுதுவது.

சிலப்பதிகாரத்தின் பதிகம், நூல் எழுதப் பெற்றதன் சூழ்நிலையைப் பற்றிய கதையை விரிவாகக் கூறுகிறது. எழுதியவர் யார், கதைச்சுருக்கம், நூலின் பிரிவு களான கதைகளின் தலைப்புகள் இவையெல்லாம் காணப் பெறுகின்றன. இதனால் இந்தப் பதிகம் பிற்காலத்தது என்பது நிரூபணமாகிறது.

சிலப்பதிகாரத்தின் பதிகத்தில் ஒரு பகுதி திகைக்க வைக்கிறது. 'ஒரு முலையுடன் ஒரு பத்தினிப் பெண்ணைப் பார்த்தேன். மதுரை எரிந்துகொண்டிருந்தது. அமரர்க்கு அரசன் தமரொடு ஈண்டி (சுற்றத்துடன் வந்து) அவள் காதல் கொழுநனைக் (கணவனை) காட்டி அழைத்துப் போனதை நான் கண்ணால் பார்த்தேன்' என்று இளங்கோவடிகளிடம் சொல்லும் குன்றக் குறவர், அடிகளாருக்கு ஒப்பான கற்பனை வளம் மிக்கவர் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் அதன் காலத்துக்கு முற்பட்ட சிங்கபுரத்து சங்கமன், அவன் மனைவி நீலியின் பழைய நாட்டுப்புறக் கதையிலிருந்து கிளைத்த அற்புதமான படைப்பு (இதையும் பதிகம் சொல்கிறது).

நாளாக நாளாகக் கற்பனைக் கதை நிஜமாகிறது. பதிகம் எழுதிய காலத்தில் சத்தியவாக்காகிவிட்டது! கண்ணகியும் கோவலனும் உண்மைப் பாத்திரங்களாகிவிட்டனர்.

"சில ஆபுதத் தன்மை பெற்ற அற்புதங்களாயிருப்பதால் நம்பத் தகுந்தனவல்ல என்பதும், நூல்கள் புராணத் தன்மை பெற்று, புலவரின் கற்பனையில் விளைந்த அருமையான காப்பியங்கள் என்பதும், அவை சரித்திரச் சம்பவங்களைக் கூறவில்லை என்பதும் தற்கால அறிஞர் பலரது துணிபு" என்கிறார் சுப்பிரமணியன். என் துணிபும் அஃதே!

('தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி' - மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்-1. விலை: ரூ.60.) ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவல், வீட்டில் பாசமுள்ள தகப்பனாக இருப்பினும், வெளியில் உடல் ஊனமுற்ற குழந்தைகளையும் கிழவர்களையும் ஸ்த்ரீகளையும் 'உருப்படி'களாகக் கருதிப் பிச்சை எடுக்கவைத்து, ஏன்... கூட்டிக் கொடுத்துக்கூட கலெக்ஷன் பண்ணுவதையே தொழிலாகக் கொண்ட போத்திவேலூர் பண்டாரத்தைப் பற்றிய கதை.

உலகில் இப்படியான விநோதமான உத்தியோகங்கள் பல உள்ளன. அண்மையில் ‘The Book of Hundred worst jobs’ என்கிற புத்தகத்தைப் படித்தேன். உலகிலேயே மிக மோசமான வேலைகளின் பட்டியலில் பல ஆச்சரியங்கள் உள்ளன (பத்திரிகை நிருபர் வேலையும் அதில் ஒன்று!).

நாள் பூராசிக்கன்தலையை வெட்டுவது (சில உயிருடன் இருக்கும்), பன்றிகளைக் கொல்வது (வீட்டுக்குப் போகையில் சட்டையெல்லாம் பன்றி ரத்தம்), டெலிபோனில் செக்ஸ் பேசுவது (கிழவாடிகளைத் திட்டினால் அபராதம்), எலிகளைத் தேடி அடிப்பது (சில வேளை கடிக்கும்) என்று ஒரு பெரிய லிஸ்ட்டே உள்ளது.

என் அனுபவத்தில் இம்மாதிரியான பல வேலைகளைக் கவனித்திருக்கிறேன். பி.இ.எல்-லில் பணிபுரியும்போது, மெஷினிலிருந்து வெளிவரும் ட்ரான்சிஸ்டர்களைத் தரவாரியாக வகை பிரிக்க, வரிசை வரிசையாகப் பெண்கள் உட்கார்ந்து, அவற்றை ஒவ்வொன்றாக ஒரு ஸாக்கெட்டில் செருகி, மூன்று ஷெல்ஃப்களில், எதன் தலையில் விளக்கெரிகிறதோ அதில் வைப்பார்கள். நாள் பூரா, வாரம் பூரா, வருஷம் பூரா!

எச்.எம்.டி. தொழிற்சாலையில் கண்ணுக்கு ஒற்றை லென்ஸ் அணிந்து, கடிகாரத்தின் அசெம்பிளி லைனில், கடிகாரத்தின் சதா ஒரே ஒரு பாகத்தைப் பொருத்தும் வேலை.

சந்திரா பவனில் உஷ்ணமான, நீண்ட சதுர தோசைக்கல்லில் எண்ணெய் கொட்டி, விளக்குமாற்றால் பரப்பி, பன்னிரண்டு இடத்தில் ஒரே ஷேப்பில் தோசைமாவை இட்டுப் பரத்தி, நடுவே மசாலா வைத்துத் திருப்பிப் போட்டு மடித்து, பன்னிரண்டு மணி நேரம் இதே வேலை.

ஆழ்வார்பேட்டை தெருமுனையில் காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை, செவ்வந்திப் பூக்களை நாரில் தொடுக்கும் வேலை.

வார, மாதப் பத்திரிகையின் ஒவ்வொரு புத்தகத்தையும் பாலிதீன் உரையில் போடுமுன், உடன் அம்மன் குங்கும பாக்கெட்டையோ, இலவச ஷாம்பு சாஷே பாக்கெட்டையோ சேர்த்து, லட்சம் பிரதிகளுக்குச் சூடு காட்டிச் சீலிடும் வேலை!

இவ்வாறு மனிதனை மெஷினாக்கும் வேலைகள் ஏராளம். இவற்றை humanize பண்ணுவது பற்றிப் பல ஆராய்ச்சிகள் உள்ளன. கார்ல் மார்க்ஸ் இதை விலாவாரியாக அலசியிருக்கிறார்.

பி.இ.எல்-லில் அந்தப் பெண்களிடம் 'நீங்கள் வகைப்படுத்தும் ட்ரான்சிஸ்டர்கள், மிலிட்டரி செய்தித் தொடர்புக்கான ட்ரான்ஸ் ரிஸீவரில் பயன்பட்டு, நம் தேசத்தைக் காப்பாற்ற உதவுகின்றன' என்று சொன்னோம். அவர்கள் செய்யும் காரியத்தின் இறுதியிலுள்ள நன்மையை அவர்களுக்கு விளக்கிவிட்டால், அந்த வேலையில் உள்ள அலுப்பைப் பெரிதாக மதிக்கமாட்டார்கள்.

இதுபோல, கடிகாரப் பெண்களிடம் 'இந்தியாவே நேரம் பார்த்து இயங்க, நீங்கள் உதவுகிறீர்கள்' என்று சொல்லலாம். மசால்தோசை போடுபவரிடம் 'மக்களின் பசியைத் தீர்க்கிறீர்கள்' என்று சொல்லலாம்.

பாலிதீன் சீலிடும் பெண்களிடம், 'ஜனங்களுக்குப் புண்ணியத்தை பாலிதீனில் அனுப்புகிறீர்கள்' அல்லது ‘கூந்தலைக் காற்றில் அழகாக அல்லாட வைக்கிறீர்கள்' என்று சொல்லலாம்.

ஆழ்வார்பேட்டை தெருமுனைக் கிழவியிடம் 'ஆத்தா, உனக்கு இந்த வேலை அலுக்கலையா?' என்று கேட்டபோது, 'சின்னப் புள்ளைலருந்தே இதானே செய்றேன் ராசா! வேற எதும் எனக்குத் தெரியாதே!’ என்றாள்.

என்னிடம் பல இளைஞர்கள், நான்கைந்து வருஷம் ஒரு கம்பெனியில் நல்ல வேலை செய்துவிட்டுப் பிறகு, 'பிடிக்கவில்லை... போரடிக்கிறது! வேலை மாற்றலாமா? மணிரத்னத்திடம் அசிஸ்டெண்ட்டாகச் சேரலாமா?' என்று யோசனை கேட்பார்கள்.

நான் அவர்களுக்குத் தரும் ஒரே ஒரு உபதேசம் - ‘The Dream Job does not exist’

'உலகிலேயே சிறந்த வேலை எது?' என்று கேட்டால், 'சும்மாயிருப்பது' என்பேன். சம்பளம் தரமாட்டார்கள். அதான் சிக்கல்!

சில வாரம் முன்பு டிஜிட்டல் சினிமாவுக்கு வேளை வரவில்லை என்று எழுதியிருந்தேன். கமலா தியேட்டரின் நிர்வாகி வள்ளியப்பனுடன் மெரீனாவில் பேசிக்கொண்டிருந்போது, ‘'டிஜிட்டல் சினிமா, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தரும். ஆனால், தியேட்டர் சொந்தக் காரர்களுக்குப் பதினைந்து லட்சம் வரை முதலீடு செய்யக் காரணங்கள் போதவில்லை’' என்றார்.

உண்மைதான்! எப்போது காரணங்கள் போதும் எனில், ஒரு படத் தைத் திரையரங்கில் மட்டும்தான் பார்க்கமுடியும்... திருட்டு வி.சி.டி., விடியோ இதற்குக் கிடையவே கிடையாது என்று உத்தரவாதமாகச் சொல்லக்கூடிய நிலையை டிஜிட்டல் சினிமா ஏற்படுத்தும்போது!

அதற்கு, முதலில் செங்கல்பட்டு போன்ற ஒரு முழு ஏரியாவில் உள்ள அத்தனை திரையரங்குகளிலும் டிஜிட்டல் வைத்து, மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படத்தை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றி, என்க்ரிப்ட் செய்து, டவுன்லோடு செய்து திரையிட்டு, இந்த முறையின் சௌகரியங்களை நிரூபித்தபின், மற்ற ஏரியாக்களில் சம்பிரதாயமாக ரிலீஸ் செய்ய வேண்டும். உண்ணாவிரதம் மட்டும் போதாது! தாய்லாந்தின் மதம் பௌத்தம். இருந்தும், அந்நாட்டில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால், சில கேஸ்களில் தொண்ணூறு வருஷத்தில் விட்டுவிடுவார்களாம்!

பி.பி.சி-யில், தாய்லாந்தில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் கைதிகள் இருவரைச் சிறைக்குச் சென்று பேட்டியெடுத்த ஓர் அதிர்ச்சி டாகுமெண்டரி காட்டினார்கள். முன்பெல்லாம் தண்டனையை நிறைவேற்ற ரைஃபிள் வைத்துச் சுட்டுக்கொண்டிருந்தார்களாம்! ஜெயில் சூபரின்டென்டெண்ட்டைப் பேட்டி கண்டபோது, "இந்த வருஷம் மாற்றிவிட்டோம். காரணம், சிலவேளை அவர்கள் சரியாகச் செத்துப் போவதில்லை. திரும்பத் திரும்பச் சுடவேண்டியிருக்கிறது. நிறைய ரத்தம் வடிந்து, தரையெல்லாம் பாழாகிறது. இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டுவிடுகிறோம். முதலில் மயக்க மருந்து இன்ஜெக்ஷன், பின் தசைகள் இளக ஓர் இன்ஜெக்ஷன். அதன்பின்தான் விஷ ஊசி... ரத்தமே கிடையாது. சுத்தம்! மூன்றே மூன்று சிவப்பு பட்டன்கள்... பார்க்கிறீர்களா? வாருங்கள்!" என்றார்.

எனக்கு ரத்தம் உறைந்தது. சேனல் மாற்றிவிட்டேன்!

இந்தியர்கள் தரும் வியப்புகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு ஓர் உதாரணம்தான், ஆரம்பத்தில் நீங்கள் பார்த்த புகைப்படங்கள். நெட் மூலம் எனக்கு வந்தவை இவை.

மற்றொன்று - 19.9.04 விகடன் இதழில் இளைஞர் வேல்முருகனுக்குச் சிறுநீரக மாற்று சிகிச்சையில் உதவி கோரி எழுதியிருந்ததற்கு, உடனடியாக வந்து குவிந்த உதவித் தொகைகள்! ஒரு சிறிய பாராவுக்கு இத்தனை சக்தியா! நியூஜெர்சியிலிருந்து பாலச்சந்திரன் முப்பதாயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார். மேலும் மேலும் சிறிதும் பெரிதுமாகத் தொகைகள் வந்துகொண்டே இருக்கின்றன. விகடன் ரீடர்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்டிலிருந்து இருபத்தையாயிரம் ரூபாய்க்குக் காசோலை உடனே கொடுத்தார்கள். வேல்முருகனின் தாய் திருமதி எம்.லக்ஷ்மியிடம் அனைத்தையும் சேர்ப்பித்துக் கணக்கும் கொடுத்துவிடுகிறேன். மிக்க மிக்க நன்றி!

எனக்குப் பிடித்த கவிதை

கோடரியுடன்
வெட்ட வந்தவன்
வியர்வை காய
இளைப்பாறினான்
விரிந்த மரத்தின்
பரந்த நிழலில்!

- ராஜகுமாரன்

This page is powered by Blogger. Isn't yours?