Sunday, November 28, 2004

 

சந்திர ‘கலர்’ லேகா


கே.ஆஸிஃப் எடுத்த காவியமாகிய 'முகல் ஏ ஆஸம்' நவீன தொழில்நுட்பங்களால் கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படமாக மாற்றப்பட்டு DTS சமாசாரங்கள் சேர்த்து புதிய தலைமுறையினருக்காக மீண்டும் வெளியிடப்பட்டு, மும்பை திரையரங்கு களில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

'சந்திரலேகா'வை யாராவது இப்படி மாற்றி வெளியிட்டால் தற்காலத்து அத்தனை தமிழ்ப் படங்களுக்கும் தண்ணி காட்டிவிடும்.

க்ளெரிஹியு (Clerihew) என்கிற வேடிக்கைக் கவிதை வகை பற்றி முன்பு ஒருமுறை குறிப்பிட்டிருந்ததையும், வள்ளுவர்-வாசுகி பற்றி ஒரு வெண்பா எழுதியிருந்ததையும் என் பழைய வாசகர்கள் படித்திருக்கலாம்.

புது வாசகர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்... எட்மண்ட் க்ளெரிஹியு பெண்ட்லி (1875\1965) என்னும் கவிஞர் அறிமுகப்படுத்திய பாவினம் இது.

ஒரு பிரபலமானவரைப் பற்றியும், அவரது பிரபலத்துக்கான காரணத்தையும் இணைத்து நான்கு வரி வேடிக்கைக் கவிதை.

உதாரணமாக, ஸர் ஹம்ஃப்ரி டேவி, சோடியம் என்னும் தனிமத்தைக் கண்டுபிடித்தவர். அவர் பற்றிய க்ளெரிஹியூ இது...

‘Sir Humphrey Davy
Abominated gravy
He lived with odium
Of having discoverd Sodium’

தமிழில்...

‘சர் ஹம்ஃப்ரி டேவிக்கு
பிடிக்காதது கிரேவி
சோடியம் கண்டுபிடித்து
வாடியும் போனார்.’

இந்த அளவுக்குச் சரளமாக தமிழில் 'க்ளெரிஹியு' எழுதுவது கஷ்டம் என்றாலும் முயன்று பார்த்திருக்கிறேன்.

‘வால்மீகிக்கு ஒரு படி
மேலாக எழுதியபடி
கம்பர்தான்
நம்பர் ஒன்!’

‘கண்ணகி கதையால்
கண்ணில் நீர்வரக்
கலங்கவைத்தார்
இளங்கோவடிகள்.’

‘யாரிது என்று
வெள்ளைக்காரனை
சொல்ல வைத்தவர்
பாரதி.’

வாசகர்களும் முயற்சிக்கலாம். கடைசி தேதி நவம்பர் 30. விதிகள் \ நாலு வரி, பிரபலமானவர் பற்றியது, ஓசை நயம், சொற்சிக்கனம், முடிந்தால் நகைச்சுவை வேண்டும்.

டான் ப்ரௌன் (Dan Brown) எழுதிய ‘தி டா வின்சி கோட்’ (The Da Vinci Code) என்னும் சிறந்த விற்பனை (பெஸ்ட் செல்லர்) நாவலை ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயம் என்கிற கணக்கில் படித்து வருகிறேன். மாணவப் பருவத்தில் இந்த மாதிரி தலையணை நாவல்களை முழு மூச்சில் சோறு, தண்ணீர், தூக்கம் மறந்து படித்து முடித்துவிட்டுத்தான் வகுப்புக்குப் போவேன். இப்போதெல்லாம் அத்தனை வேகமில்லை. வயசாகிவிட்டது மட்டும் காரணம் இல்லை. இப்போதும் எனக்குப் பிடித்த விஷயமாக இருந்தால் சட்டென்று படித்து முடித்துவிடுகிறேன். உதாரணம், சென்ற வாரம் குறிப்பிட்ட ஐம்பது சிறந்த கிழக்கத்திய சிந்தனையாளர்கள் பற்றிய புத்தகம்.

நாவல்கள், இப்போது என் பிடித்த விஷயங்களின் பட்டியலில் கடைசியோ கடைசி. காரணம், நானே நிறைய நாவல்கள் எழுதி விட்டேன். அதன் உள் தந்திரங்கள் பல எனக்கு அத்துபடி யாகிவிட்டன. அமெரிக்காவில் டாம் க்ளான்ஸி வகைப் புத்தகங்கள் எழுத சில சிறப்புத் திறமைகள் வேண்டும். முதலில் உரை நடை பிழையில் லாமல் இருக்க வேண்டும். வொக்கபிலேரி, வார்த்தை வீச்சு அதிகம் வேண்டும். ஆராய்ச்சியோ, ஆராய்ச்சிபோல் தோற்றமளிக்கும் விஷயங்களோ நிச்சயம் வேண்டும். அப்போதுதான் வாசகர் ஏமாறுவார்.

'டாவின்சி கோட்’ புத்தகத்தில், 'ரிலீஜியஸ் ஐகனோகிராஃபி'யை மையமாக வைத்து ஒரு த்ரில்லர் எழுதியிருக்கிறார் டான். படிக்கும்போது நிஜமாக நடந்ததுபோல இருக்கிறது. அந்த அளவுக்குப் பூ சுத்தி, நிறுத்தி நிதானமாக எழுதப்பட்ட நாவல். ஒவ்வொரு பக்கமும் நத்தை வேகத்தில் சென்றாலும், அடர்த்தியான தகவல்கள், சுவையாக உள்ளன.

பிரான்ஸ் தேசத்தின் லூவர் அருங் காட்சியகத்தின் வாசல் பிரமிடைத் தாண்டி படியேறி, போலீஸ் சூப்பரின் டென்டெண்ட்டும் கதாநாயகனும் செல்வதற்குள் ஒரு முழு அத்தியாயம் முடிந்துவிடுகிறது. ஒவ்வொரு படியையும், கண்ணாடி ஜன்னலையும், சித்திரத்தையும் அவர்கள் கடந்து செல்லும்போது சரித்திரச் சமாசாரங்களை வர்ணித்துவிட்டு, கடைசியில்தான் ‘டெட்பாடி’க்கு வருகிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இப்படி திடுக்கிடும், அடுத்த அத்தியாயத்துக்குத் தாங்கும் அளவுக்குத் திருப்பம் ஒன்று தருகிறார்.

இவ்வகையில், தமிழில் எழுதி இன்றும் படிக்கப்படுபவர் சாண்டில்யன். இன்றைய அமெரிக்க பெஸ்ட் செல்லர்கள் எல்லாம் நவீன சாண்டில்யர்கள்தான்.

இன்டர்நெட் யுகத்தில் 'பெஸ்ட் செல்லர்'களை யார் படிக்கிறார்கள்? பொதுவாக, ஏர்போர்ட் நாற்காலிகளில் அடுத்த ஃப்ளைட்டுக்குக் காத்திருப்பவர்கள், வேலைக்குப் போகாத பெண் மணிகள், அடுத்த படத்துக்குக் கதை தேடும் திரை எழுத்தாளர்கள், குறை எழுத்தாளர்கள், பத்தாவது வரை படித்த மாணவ\மாணவியர் (பத்தாவது தாண்டிய இளைஞர்கள் படிக்கிறார்களா என்பது சந்தேகமே!) என இப்படிக் குறுகிய ஓர் ஆதரவு இருந்தாலும், பெஸ்ட் செல்லர்கள் லட்சக்கணக்கில் விற்பதற்குக் காரணம் படிப்பறிவும், ஆங்கிலத்தின் சர்வதேசப் பரவலும்தான்.

தமிழில் ஒரு பதிப்புக்கு ஆயிரத்தி லிருந்து இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. லைப்ரரி ஆர்டர் என்பதை நம்பியே பல புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. அண்மையில், விகடன் பிரசுரம் போன்றவர்கள் இந்த நிலையை மாற்றியிருப்பது ஆரோக்கியமான விஷயமே! வர்த்தமானன், பழந்தமிழ் இலக்கியங்களைச் சிறப்பாக உரையுடன் வெளியிடுகிறார்கள். ‘விஜயா’ வேலாயுதம், தி.நகர். பாரதி புத்தக நிலையம் போன்றவர்களின் தனிப்பட்ட முயற்சியில் புத்தக விற்பனை கூடியுள்ளதும் உண்மையே!

சிலப்பதிகாரத்தில் உள்ள இசைக்குறிப்புகளையும், நாட்டியக் குறிப்புகளையும், மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களையும் பலர் நிச்சயம் ஆராய்ந்து எம்.ஃபில் பட்டங்கள் பெற்றிருப்பார்கள். மாதவி அணிந்திருந்த நகைகளின் பட்டியல் உஸ்மான் ரோடு நகைக்கடைக்காரர்களுக்கு உதவும். தமிழறிஞர்களுடன் ஆராய்ச்சி செய்து புதிய மோஸ்தரில் அடுத்த தீபாவளிக்குள் நகைகளைக் கொண்டுவரலாம்.

'கடல் ஆடு காதை'யில் மாதவி அணிந்த நகைகள் இவை... கால் விரல்களில் மெட்டி மட்டுமின்றி ஒவ்வொரு விரலுக்கும் மோதிரம், பாதசரம், நூபுரமாகிய சிலம்பு, பாடகம், சங்கை, தொடைக்கு குறங்குசெறி என்னும் நகை, முப்பத்திரண்டு முத்துச்சரத்தால் செய்த மேகலையை நீலநிறத் துகிலுடன் சேர்ந்து இடுப்பில் கட்டியது, தோளுக்கு மாணிக்க வளையல், முத்து வளையல், சூடகம், கையில் மாணிக்கமும் ரத்தினமும் வைரமும் பதித்த வளையல்கள், பொன் வளையல்கள், சங்கு வளையல், பவழ வளையல், முடக்கு மோதிரம், அடுக்காழி மோதிரம், வைரமும் மரகதமும் சேர்ந்த மோதிரம், கழுத்தில் வீரச்சங்கிலி, சவடி, சரப்புளி, முத்தாரம், பிடரியை மறைத்த மணிமாலை, நீலக் கல்லும் வைரக்கல்லும் பதித்த தோடு, தலைக்கோலமாய் அலங்காரங்கள்... இத்தனை நகைகளை அணிந்து, 'கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்தாள்' என்று அடிகள் சொல்கிறார்.

கழற்றி வைக்காமல் கூடியதுதான் கோவலன் ஊடலுக்குக் காரணமோ?

எ.பி.க...

நிரம்பிப் பிதுங்கும்
ஒரு சாயங்காலப் பேருந்தில்
பள்ளிக்கூடச் சிறுவன்
நின்றுகொண்டே தூங்குகிறான்.

Sunday, November 21, 2004

 

செல்போன் ஜாக்கிரதை!


‘Fifty Great Eastern Thinkers’ என்ற அருமையான புத்தகத்தை, என் தம்பி ராஜகோபாலனிடமிருந்து கர்ச்சீப் போட்டுக் கவர்ந்து கொண்டு வந்துவிட்டேன்!

இதன் ஆசிரியர்கள் டையேன் காலின்சன், கேத்ரின் ப்ளாண்ட், ராபர்ட் வில்கின்சன் மூவரும் அமெரிக்கத் திறந்த பல்கலைக் கழகத்தில் தத்துவப் பாடம் கற்பிக்கும் பேராசிரியர்கள்.

ஜோராஸ்ட்ரியனிசம், இஸ்லாம், இந்திய, திபேத்திய, சீன, கொரிய, ஜப்பானியத் தத்துவ ஞானிகளை யும் ஞானங் களையும் சரியாகப் புரிந்துகொண்டு விளக்கும் அற்புத மான நூல்.

பொதுவாகப் பார்த்தால், எல்லாத் தத்துவங்களிலும் மரணத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தின், மனித இனத்தின் ஆரம்பம் பற்றியும் ஏற்படும் வியப்பு வெவ்வேறு கருத்துகளாகப் பரிணமிப்பது பொது அம்சமாக இருக்கிறது.

உதாரணமாக, பார்சிக்கள் பின்பற்றும் ஜோரஸ்தரின் 'ஜெந்த் அவஸ்தா'வில், எல்லாவற்றையும் படைத்தவர் அஹ¨ரா மாஸ்தா. அவர்தான் குற்றமற்றவர். உலகின் நன்மைகளின், உண்மைகளின், கருணைகளின் வடிவம்.

இவருடன், இவருக்கு நேரெதிர் கெட்ட குணங்களின் வடிவாக, அங்கரா மைன்னயுவும் படைக்கப் பட்டார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். இவ்விருவருடன், ஆறு நல்ல குணங்களுக்கான ஆறு உப தேவர்களும் உண்டு. உலகின் சிருஷ்டி ஏழு படியாக அமைந்தது.

பார்சி மதம் எளிமையான நல்ல குணங்களை உயர்த்திச் சொல்கிறது. சுதந்திர வேட்கை, செய்யும் தொழிலில் சிரத்தை, அதில் சந்தோஷம் பெறுவது, தற்சார்ந்தவர்களைப் பேணுவது, தீமையை எதிர்கொள்வதில் தைரியம் காட்டுவது, பிரபஞ்ச சிருஷ்டியின்மேல் வியப்பு, உலகையும் உயிரையும் வாத்சல்யத்துடன் அனுபவிப்பது... இவ்வளவுதான்!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பார்சிக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. லண்டன், லாஸ் ஏஞ்சலீஸ், டொராண்டோவில் சில ஆயிரம் பேர், இந்தியாவிலும் இரானிலும் தலா பதினேழாயிரம் பேர்... அவ்வளவுதான்!

'என்டோகமி' (Endogamy) என்று குழுவுக்குள்ளேயே கல்யாணம் செய்து கொள்வதாலும், தாமதித்த திருமணங்களாலும், பார்சி மக்கள் தொகை கவலைப்படுமளவுக்குக் குறைந்துவிட்டது.

இவர்களின் சடங்குகள் எளிமை யானவை. தினப்படி சுருக்கமாக ஐந்து முறை பிரார்த்தனை, வருஷத்துக்கு ஐந்தாறு விருந்து தினங்கள், நவ்ரோஸ் என்னும் புது வருஷக் கொண்டாட்டம்... அவ்வளவுதான்!

பார்சி மதம் மிகப் பழைமையானது. கி.மு.1500-க்கும் 1000-க்கும் இடையில் வாழ்ந்தவராம் ஜாரதுஷ்டிரர். இதன் நம்பிக்கைகளின் பாதிப்பு, முஸ்லிம் வழக்கங்களில் உள்ளது (தினசரி பிரார்த்தனை).

சில கருத்துக்களை பைபிளின் 'பழமொழிகள்' அதிகாரத்தில் காணமுடி கிறது. யூதர்களின் கருங்கடல் சான்றுகள் (Deadsea Scrolls) என்னும் பழைய வாசகங்களில், பார்சி மதத்தில் இருநிலைக் கருத்து உள்ளது.

இந்தியாவில், டாடா உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் பார்சிக்கள். நடிப்பு, கலை, இலக்கியம், பத்திரிகைத் துறையில் இவர்கள் மிகவும் சிறந்திருக்கிறார்கள். இவர்கள், தங்கள் சமூகத்தின் விதிகளைத் தளர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சில நுட்பமான காரியங்களை விவரிக்கத் தமிழில் சில உன்னதமான வார்த்தைகள் உள்ளன. உதாரணமாக, 'விளாவல்' என்றால் தண்ணீரையும் வெந்நீரையும் கலந்து, இளஞ்சூட்டுக்குக் கொண்டு வருவது. இத்தனை விரிவான காரியம், 'விளாவல்' என்ற ஒரே வார்த்தையில் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுகிறது!

'சொதப்பல்' என்ற வார்த்தைக்குத்தான் எத்தனை வின்யாசங்கள்! பார்த்திவ் படேல் சொதப்புகிறார்... ஆபீஸில் உங்களுடன் பணிபுரியும் பெண்கூடச் சொதப்புகிறார்...

தரையில் உட்கார்ந்துகொண்டு, தேய்த்தபடியே பக்கவாட்டில் நகர்வதற்கு, 'டேக்குதல்' என்ற நெத்தியடி வார்த்தை உள்ளது. நேற்றைய மிச்சத்தைச் சாப்பிட்டபின், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, எழுந்திருப்பதற்கு முன் எழுப்பும் ஒலிக்கு 'புளிச்ச ஏப்பம்'. அப்போது தன்னிச்சையாக, சாப்பிட்டது தொண்டைக்கு வர எத்தனிப்பதற்கு, 'எதுக்களிப்பது' போன்ற பொருள்செறிந்த வார்த்தைகள் பல இருந்தாலும், தின வாழ்வில் நாம் சாதாரணமாகச் சந்திக்கும் பல அனுபவங்களும், சந்தர்ப்பங்களும் வார்த்தை கிடைக்காமல் தவிப்பதையும் குறிப்பிடவேண்டும்.

உதாரணமாக, என் படுக்கைக்கு அருகில் படிக்கப்படாமல் கிடக்கும் ஆறு புத்தகங்களை ஒட்டுமொத்தமாக விவரிக்க ஒரு சொல் தேவை (அநாதகங்கள்?).

புதுச் சட்டையின் எல்லாக் குண்டூசி களையும் நீக்கிய பின்னும் ஒளிந்திருந்து, நம் கையைக் குத்தும் போக்கிரி குண்டூசிக்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது (ஊசி படவா?).

மற்றவர் வீட்டுக்குச் சென்று, அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பின்னங்கை கட்டிக்கொண்டு, முதுகுகளை மட்டும் தலைசாய்த்து ஆராய்பவர்களைக் குறிப்பிட ஒரு வார்த்தை வேண்டும் (நூல் மேயர்?).

நண்பரின் மனைவியை 'பூசினாப்ல இருக்கே... முழுகாம இருக்கீங்களா?' என்று கேட்பவர்களை (அதிகார்வலர்), 'இவர்தான் மிஸ்டர் துரைசாமி' என்ற முதல் அறிமுகத்திலேயே, 'தொச்சு... உட்காரு' என்று அவரைப் பெயர் சுருக்கி அதட்டுவதற்கும், அதட்டுபவருக்கும், பத்து வருஷத்துக்கு முந்தின டெலிபோன் டைரக்டரிகளைச் சேகரிப்பவருக்கும் ஒரு வார்த்தை தேவை.

இலக்கியக் கூட்டத்தில் எழுந்து ஒரு கேள்வி கேட்டுவிட்டு, அதற்கு நான் பதில் சொல்லுமுன் எழுந்து செல்பவருக்கும், இருந்து 'நான் எதுக்கு இதைக் கேக்கறேன்னா...' என்று ஒரு மணி நேரம் கழுத்தறுத்துத் தள்ளுபவருக் கும் அர்ஜெண்டாக இரண்டு வார்த்தைகள் வேண்டும்.

சோபாவில் ஒருவர் உட்கார்ந்த பின் மிச்சம் வைக்கும் கதகதப்புக்கு... ஆஷ்டிரேயைக் காலி செய்யும்போது மூக்கைத் தாக்கும் வாசத்துக்கு... இம்மாதிரி ஒரு தேவைப் பட்டியலே தயாரித்திருக்கிறேன்.

இதற்கு என் முன்னோடி, காலஞ்சென்ற பிரிட்டிஷ் விஞ்ஞானக் கதை எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸின் ‘The Meaning of Liff’ என்ற புத்தகம் (not life). அவருடைய அகராதிப்படி, Liff என்பது அட்டைப்படத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை. உதாரணம் - ஜோதிகா படத்தை அட்டையில் போட்டுவிட்டு, அவர் மார்பின் குறுக்கே 'செல்போன்கள் ஜாக்கிரதை' என்பது!

இவ்வகையான நூற்றுக்கணக்கான தினசரி நிகழ்ச்சிகளுக்கும், சந்தர்ப் பங்களுக்கும் வார்த்தை ரூபம் கொடுத்து, ஓர் அகராதியே தயாரித்திருக்கிறார் ஆடம்ஸ். தமிழில் என் செல்லத் திட்டங்களில் அதுவும் ஒன்று.

எல்லாப் புதுக் கவிஞர்களும் கைவசம் இம்மாதிரி ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

உ-ம்: மகுடேஸ்வரன்?-

மயானத்தில் கற்பூரப் புகை
பூக்கடைத் தெருவின் பின்னிரவு
ஆட்டம் முடிந்த அரங்கின் வெறுமை!

அலிஸ்டேர் குக் (Alistair Cooke) மிகச் சிறந்த நிருபர். 'அமெரிக்காவில் இருந்து கடிதம்' என்ற தலைப்பில், வாரா வாரம் பி.பி.சி. ரேடியோவுக்கு அவர் பேசி அனுப்பிய பல ரிப்போர்ட் கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை.

தொண்ணூற்றைந்து வயதில், அவர் அண்மையில் இறந்துபோவதற்குச் சில மாதங்கள் முன்பு வரை, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த அவரது நிருபர் கடித ரேடியோ நிகழ்ச்சி கின்னஸ§க்கு உரித்தானது.

கென்னடி மரணம் (ராபர்ட் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டபோது, பத்து அடி அருகில் இருந்திருக்கிறார்!), வியட்நாம், மார்ட்டின் லூதர் கிங்கின் எழுச்சி, நிக்ஸனின் பொய்கள், மோனிகா லெவின்ஸ்கி ('ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் கடைசிக் காலங்களில், மக்கள் தங்கள் சக்ரவர்த்தி சொந்த வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... வரியைக் குறைத்து, நல்ல சாலைகள் கொடுத்தால் போதும்!' என்றதுபோல், அமெரிக்க மக்கள் கிளிண்ட்டனை மன்னித்து விட்டார்கள்!), பள்ளிச் சிறுவர்களை ஒரு ஸ்னைப்பர் கண்டபடி சுட்டுக் கொன்ற சம்பவம், செப்டம்பர் 11, 2001... இவை பற்றி அவர் அனுப்பிய கூர்மையான ஒலிபரப்புகளைத் தொகுத்து பி.பி.சி. அளித்திருந்தது!

இங்கிலாந்தில் பிறந்து, படித்து, அமெரிக்கப் பிரஜையான குக், ஒருமுறை தொண்ணூற்றொம்பது வயசுக்காரரை, 'உங்கள் மனைவியுடன் எழுபத்தெட்டு ஆண்டு தொடர்ந்த இல்வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன?' என்று கேட்டாராம்.

தாத்தா சொன்ன பதில்: 'அடிக்கடி பிரிவும் அதிகரிக்கும் காது மந்தமும்...'

மிகச் சிறந்த ஜாஸ் இசைக் கலைஞர் ட்யூக் எல்லிங்டன் இறந்தபோது, கெர்ஷ்வின் பற்றி எழுத்தாளர் ஜான் ஓ ஹாரா சொன்னதை மேற்கோள் காட்டினார் குக்.

'அவர் இறந்துவிட்டார். எனக்கு விருப்பமில்லையென்றால், இதை நான் நம்ப வேண்டியதில்லை!'

வள்ளுவர் சொன்னதுபோல், சிலர் இறந்தாலும் எச்சத்தால் அறியப்படு வார்கள்.

Sunday, November 14, 2004

 

ஒரு தாயின் சங்கீதம்!


நாடகாசிரியர் மஹேஷ் தத்தானியின் திரைப்படமான ‘மார்னிங் ராகா’ (காலை ராகம்), இந்தியப் பாத்திரங்கள் ஆங்கிலம் பேசும் அண்மைக் காலப் படங்களில் சிறந்த ஒன்று (முன்னுதாரணங்கள்: ‘மான்சூன் வெட்டிங்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்’, ‘டான்ஸ் லைக் எ மேன்’).

எளிமையான திரைக்கதை. ஷபானா ஆஸ்மி கர்நாடக சங்கீதப் பாடகி. அவள், தன்னுடன் திறமையாக வயலின் வாசித்த சிஷ்யப் பெண்ணை வற்புறுத்தி ஓரிடத்துக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் பாலத்தில், சாலை விபத்தில் அந்தப் பெண் இறந்து போகிறாள். அதன்பின், குற்ற உணர்ச்சியில் பாடுவதையே நிறுத்திவிடுகிறாள் ஷபானா. பாட்டை மறக்கிறாள். பாலத்தைக் கடந்து செல்லவே மறுக்கிறாள்.

இறந்த பெண்ணின் மகன் பெரியவனாகி ஹைதராபாத்தில் விளம்பர ஜிங்கிள்ஸ் உலகில் கொடிகட்டி வாழ்ந்தாலும், அவனுள் தாயின் சங்கீதம் மிச்சமிருக்கிறது. மியூஸிக் ட்ரூப் ஆரம்பிக்கிறான். ஆனால், அதில் திருப்தியில்லாமல், தன் தாயின் குருவை நாடுகிறான். ஷபானா தயங்குகிறாள். மெல்ல மெல்ல அவளைச் சமாதானப்படுத்திப் பாட வைக்க, நகரத்துக்கு அழைக்கிறான். பாலத்தைக் கடக்கும்போது அவளுக்குப் பழைய ஞாபகங்களால் பதற்றம் ஏற்பட்டு மயக்கமடைகிறாள். மிகுந்த ஏமாற்றம் அடைகிறான்.

பின்னர், ஷபானாவைக் கதாநாயகனுடைய சினேகிதி அணுகி, அவளிடம் பாட்டுக் கற்றுக் கொள்கிறாள் (சினேகிதிக்கு ஓர் உபகதை. குற்ற உணர்ச்சி. அவள் அப்பாதான் அந்த விபத்துக்குக் காரணர்). இறுதியில், அவர்கள் தோடி ராக ஆதாரத்தில் ஒரு ஃப்யூஷன் கச்சேரி செய்யும்போது, ஷபானா வந்து சேர்ந்து கொள்கிறாள். ‘என் மகனுக்காக மறுபடி பாடுகிறேன்’ என்கிறாள்.

சிக்கலில்லாத இந்தக் கதை ஹைதராபாத் நகர, ஆந்திர கிராமச் சூழ்நிலைகளில் மிகத் திறமையாக ராஜீவ் மேனனால் படம் பிடிக்கப்பட்டு, மணி ஷர்மாவின் பொருத்தமான, உறுத்தாத, நவீனமும் பாரம்பரியமும் கலந்த இசையாலும் சர்வதேச அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நாசர், தலைவாசல் விஜய் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஷபானா நிஜமாகவே கமாஸையும் நாட்டையையும் பாடுவதுபோல் அத்தனை உன்னிப்பாக பாடகிகளின் உதட்டசைவுகளைக் கவனித்து நடித்திருக்கிறார். இருந்தாலும், படத்தின் நிஜக் கதாநாயகி இசைதான். இறுதியில் சுதா ரகுநாதன் பாடும் தோடி ராகத்தின் க்ளைமாக்ஸ் பாட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.

பெருமைப்படத்தக்க ஒரு புதிய வகை இந்திய சினிமாவும், புதிய வகை ரசிகர்களும் உருவாகி வருவதற்கு அத்தாட்சி இந்தப் படம்.

வெண்பா போட்டியில் தளை தட்டாத வெண்பாக்களைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது. இருநூறு கார்டுகள் வந்தன. திணறிப்போய் தேர்ந்தெடுத்ததில் தேறினவை இவை. நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை ஒழுங்காக அறிந்தவர்கள் என்று தயங்காமல் சொல்லப்படக்கூடியவர்கள் என்.சிவன் (அமுதன்), மற்றும் தஞ்சை இனியன்.

இனி, வெண்பாக்கள்-

காணி நிலம் வேண்டாம் பராசக்தி மாளிகை,
கேணிகள், தென்னைமரம் கேட்கவில்லை - -தேனினிய
பைந்தமிழை என்னாட்டின் பள்ளிப் பயில்மொழியாய்
ஐந்தாம் வகுப்புவரை ஆக்கு.

- - தஞ்சை இனியன், தஞ்சாவூர்-7.

சின்னத்திரை காட்டும் சீரியலின் சோகத்தால்
கண்ணைக் கசக்கினாள் காமாட்சி - -கண்ணிலே
மெட்ராஸ்ஐ வந்தும் மெகாத்தொடர் பார்த்தபின்தான்
சொட்டு மருந்திட்டாள் சோர்ந்து.

ஆட்டோகிராஃப் சேரன் அடுத்த படத்துக்கு
ஃபோட்டோகிராஃப் என்றேதான் பேர் வைத்தார்--கேட்டால்
‘எதுகை விளையாட்டாய் இப்படியோர் டைட்டில்
புதுமைக் கதை சொல்வேன் பார்’.

- அமுதன், சென்னை--93.

மோட்டார் மகிழுந்தோ மோப்பெட்டோ சைக்கிளோ
ஆட்டி அலைக்கழித்து அன்றாடம் --- ஓட்டத்தில்
வாட்டம் கொடுக்க வழியில் நிறைந்திருக்கும்
¢‘பாட்ஹோல்’ எனும் பள்ளம் பார்.

- அபுல் கலாம் ஆசாத், சென்னை-116

டின்னில் நுரை பீரும் டிஸ்கோ நடனமும்
கண்ணில் தெரிகின்ற காதலும் - -இன்னும்
வளமைகள் யாவையும் வாய்த்துக் கலக்கும்
இளமையே என்றும் இனிது. -

- மதிபாரதி, காஞ¢சிபுரம்-2.

கண்குளிரக் காவிரியை கண்டிருந்த மக்களின்று
தண்ணீருக் காகத் தவிக்கின்றார் - -பெண்மயிலே
வற்றாத ஆறுகளை ஒன்றிணைத்து தேசியத்தை
வற்றாமல் வாழ்விப்போம் வா.

- - செ. ஆடலரசு, சேலம்-3.

சபல குணத்தை சமாதியில் போடு
அபலைப் பெண் என்றால் அகலு- - சுபவாழ்வில்
புண்ணியம் செய்யவே போலீசில் சேர்ந்திருக்காய்
பெண்களைப் பாதுகாக்கப் பார்.

-- சீதா, அணக்குடி--5.

சோறும் துவையலும் இட்லியும் சட்டினியும்
போறும் எனக்கினிப் போடாதே- - நீரிழிவால்
கூறினேன், கோதுமையில் நீ செய்து வைத்திருக்கும்
பூரியைக் கொண்டுவா போ.

- - வைகைவாணன், மானாமதுரை-6.

கல்லாரும் கற்றவரும் நல்லாரும் பொல்லாரும்
எல்லாரும் ‘செல்’லுடனே சுற்றுகிறார் - -தொல்லுலகில்
பல்லின்றி வாழ்ந்தாலும் வாழ்வார்கள் மாந்தரிலே
செல்லின்றி வாழ்வதில்லை காண்.

-- டி.கே.சுப்ரமண்யம், திருப்பரங்குன்றம்\5.

அங்கே இங்கே கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு, திருத்தி செப்பனிட்டு வெளியிட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் வெண்பா திறமை இன்னமும் அங்கிங்கே இருப்பதறிந்து மகிழ்ச்சி. ஆனால், விரைவில் மறைந்து கொண்டிருப்பது அறிந்து வருத்தம்.

மனைவி: - நீங்கள் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்வதற்கு முன்னால் அழகா இருந்திங்க!

கணவன்: ஆமாம், நான் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்வதற்கு முன்னால் நீயும் அழகாத் தான் இருந்தாய்!

விகடன் தீபாவளி மலரின் வடிவமைப்பு நேர்த்தியைக் கண்டு வியந்தேன். அதைவிட, எனக்கு அந்த நாட்களில் விகடன் வார இதழ்களில் கோபுலு, ராஜு, தாணு, மாலி, மாயா, மதன் போன்ற சித்திரக்காரர்கள் சாதாரண ஒரு வரி இரண்டு வரி ஜோக்குக்குக்கூட எத்தனை விவரமாக, நுட்பமாகப் படம் வரைந்திருக்கிறார்கள் என்பது பெரிய வியப்பாக இருந்தது. (உதாரணம்: பக்கம் 325-ம் கடைசிப் பக்கமும்.) ஜோக்கைப் படித்துவிட்டு சற்று நேரம் படத்தி லும் கண்களைத் தங்க வைத்தனர்.

God is in the details என்பார்கள். இப்போது யாருக்கும் அத்தனை பொறுமை படம் போடுவதற்கும் இல்லை, பார்த்து ரசிப்பதற்கும் இல்லை. விகடனார் தீபாவளி மலரை மீட்டதுபோல அந்த சகாப்தத்தையும் மறுபடி கொண்டுவரலாம்.

சில வாரங்களுக்கு முன் இந்தப் பகுதியில், இளைஞர் வேல்முருகனுக்கு உலகெங்கிலுமிருந்து உதவி வந்து கொட்டியதை எழுதியிருந்தேன். இதை எழுதும்வரை, மொத்தம் நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரத்துப் பதினேழு ரூபாய் வந்தது!

அனைத்தையும் வேல்முருகனின் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டோம். வேல்முருகனுக்கு அவர் தந்தை சிறுநீரகம் தானம் கொடுக்க, மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் அக்டோபர் 12-ம் தேதி மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்தது. ஆபரேஷன் செலவு முழுவதையும் அன்பர் ஸ்கந்த கணேஷ் எடுத்துக் கொண்டார். தந்தையும் மகனும் சௌக்கியம். பணம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. முழுக் கணக்கும் 'அம்பலம் டாட் காம்' வலைதளத்தில் உள்ளது.

இந்தப் பணம் வேல்முருகனின் முதல் வருஷ அதிக விலை மருந்து, மாத்திரைகளுக்குப் பயன்படும்.

Sunday, November 07, 2004

 

வாழ்க, நரகாசுரன்!


ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.

சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத் தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!

பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.

தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது!

ஓலைப்பட்டாசு என்று ஒன்று இருந்தது. இப்போது அது தடை செய்யப்பட்டுவிட்டது. அதில் இரண்டு வகை. வாலுள்ளது, இல்லாதது.

கொள்ளிடம் போகும் பாதையில், ஒரு கடையில் செய்து சல்லிசாக விற்பார்கள். வெடி, காது அதிரும். வாலில்லாத ஓலைப்பட்டாசைக் கையில் பிடிப்பதுதான் தலையாய வீரம். வடக்கு வீதியில் கே.வி. ஒருத்தன் தான் அதைச் செய்வான். முழுச் சரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, அதைத் தூரப்போடா மல், வீரப்பனுக்கு வெடித்தார்களே... அதைப்போல வெடிப்பது இரண்டாவது வீர சாகசம். முன்பு சொன்னதுபோல வெடிக்காத குண்டைச் செயலிழக்கச்செய்ய, புத்தர்போல அமைதி யாக இருக்கும் லட்சுமி வெடியை அணுகி உதைப்பதுதான் மூன்றாவது வீரம்.

அதைப் புதுசாகத் திரி போட்டு வெடிக்க வைக்கும் சின்னப் பசங்களின் கிழிந்த டிராயரும், எண்ணெய் கண்டிராத பரட்டைத் தலையும், அப்போதே சமூகத்தின் அடித்தள ஏழ்மையை எங்களுக்கு அறிவிக்கும். என் அண்ணா, தன் பட்டாசில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிடுவான்!

தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம். என் உறவுக்காரப் பெண்மணி கோமளா, அதிகாலை எண்ணெய் ஸ்நானம் ஆன கையோடு, திருச்சி வெலிங்ட னுக்குப் போய், அங்கே காலைக் காட்சி பார்த்துவிட்டு, அருகே ராக்ஸியில் மத்தியானக் காட்சியும், அங்கிருந்து ராஜா தியேட்டர் போய் சாயங்காலக் காட்சியும், படம் நன்றாக இருந்தால் இரவுக் காட்சியும் பார்த்துவிட்டுக் கண்கள் சிவக்க வீடு வருவாள்.

என்ன கதை என்று கேட்டால் குழம்புவாள். புராணக் கதையும் சமூகக் கதையும் காபி போலக் கலந்து சொல்வாள். இப்போது அந்தத் தியேட்டர்களும் இல்லை... கோமளாவும் இல்லை!

வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத் துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!

டெல்லியில் தீபாவளி வேறுவிதமாக இருக்கும். அஜ்மல்கான் ரோட்டில், எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர் தெருவையே அடைத்துவிடுவார். பஞ்சாபி இளைஞர்கள், கேர்ள் ஃப்ரெண்டுகள் கவனிக்கும்படியாக, பார்க்கில் அட்டகாசமாகப் பட்டாசு சுடுவார்கள். அப்போதே டென் தவுசண்ட்வாலா எல்லாம் இருந்தது!

பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. மல்லேஸ்வரம் மைதானத்தில் எல்லா பட்டாசுக் கடைக்காரர்களும் ஒன்று சேர்ந்து விற்பார்கள். கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!

அமெரிக்காவில் ஒரு வருஷம் மவுண்டன் வியூவில், நண்பர் வீட்டில் தீபாவளி கொண்டாடினோம். அருகாமைத் தமிழர்கள் அனைவரும் கூடி, சாஸ்திரத்துக்கு ஒரே ஒரு புஸ்வாணம்தான் வைக்க முடிந்தது. 'வெடி வெடிப்பதற்கு போலீஸ் அனுமதி வேண்டும்' என்றார்கள். எல்லாரும் சேர்ந்து பெரிய விருந்து. தீர்த்தவாரி!

கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி சுத்தமாகக் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.

ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது! தீபாவளிக்கு நண்பர்களுக்கு ஒரு கிரந்தம் (புத்தகம்) தரவேண்டும் என்று, ஒரு புராணக்கதை விஷ்ணு புராணத்தில் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

திருவெள்ளரை பாடல் பெற்ற கோயில். பெரியாழ்வாரும் திருமங்கை மன்னனும் பாடியிருக்கிறார்கள். புண்டரீகாக்ஷப் பெருமாள் (தாமரைக் கண்ணன்) 'தாயார்' அனுமதி இல்லாமல் வெளியே புறப்பட மாட்டாராம்.

'எத்தனை மணிக்குப் போனேன், எப்போது திரும்பி வந்தேன் என்பதை அவர் தன் மனைவியிடம் சொல்லிவிட வேண்டுமாம்!' என்று அர்ச்சகர், நின்ற திருக்கோலத்துக்குக் கற்பூரார்த்தி காட்டும்போது சொன்னார்.

நாம் எல்லோருமே புண்டரீகாக்ஷப் பெருமாள் நிலைமையில்தான் இருக்கிறோம். சொல்லாமல் வெளியே போய் வந்தால்... சுளுக்கு!

திருவெள்ளரைக் கோயில் பிராகாரம் சுத்தமாக இருக்கிறது. அதன் முற்றுப் பெறாத கோபுரத்தை வேணு ஸ்ரீனிவாசன், வானமாமலை ஜீயர், ஸ்ரீரங்கநாத ஜீயர், திருப்பதி சின்ன ஜீயர் ஸ்ரீமத் ஆண்டவன் போன்றவர்கள் சிரமமெ டுத்துக் கட்டி முடித்தால், சேவார்த்திகள் பெருகுவார்கள். இப்போது ஈயடிக்கிறது!

குணசீலத்தில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து, கோயில் புதுப் பொலிவுடன் இருக்கிறது. சங்கிலியில் கட்டிப் போடப்பட்ட மன நோயாளி களைக் காணோம்!

ஸ்ரீரங்கத்துக்குத் தரிசனம் செய்யச் செல்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு... மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை எல்லாச் சந்நிதிகளிலும் நடை சார்த்தி இருக்கும். இது உள்ளூர்க்காரனான எனக்கே தெரியாமல் போனதில், 'ரங்கராஜா! நாளைக்கு வா!' என்று அனுப்பிவிட்டார்கள். மறுதினம், பெரிய பெருமாள் சேவை கிடைத்தது.

ஸ்ரீரங்கத்தில் புதுசான ஒரு விஷயம்... அங்கே யாரும் வீடு வாங்கினால், தேவஸ்தானத்திலிருந்து என்.ஓ.சி. பெற வேண்டுமாம்! கொள்ளிடத்திலிருந்து அம்மா மண்டபம் வரை உள்ள அத்தனை இடமும் ரங்கநாதருக்குச் சொந்தமாம். பட்டா இருக்கிறதாம்! சப்-ரிஜிஸ்திரார் அலுவலகமே கோயில் நிலத்தில் இருப்பதால், ஒரு தீர்வு வரும். அதுவரை யாரும் பதிவு பண்ண முடியாது. கீழச்சித்திரை வீதியில் எங்கள் பூர்வீக வீட்டை விலை பேசலாமா என்று யோசித்திருந்தேன். தென்னரங்கர் என்.ஓ.சி. கொடுக்க மாட்டார் போலத் தெரிகிறது!

காலஞ்சென்ற தமிழ்க்குடிமகன் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக் கிறார்... சாந்தோமிலிருந்து மியூஸிக் அகாடமி வரை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை எல்லாமே கபாலீஸ்வரருடையதாம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில், 1984-ல் பிஷப் ஹீபர் கல்லூரிக்கு விஜயம் செய்து அதற்கும், புத்தனாம்பட்டி நேரு கல்லூரிக்கும் பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களைத் துவங்கலாமா என்று ஆராய்ந்து, அனுமதி தந்தேன்.

பிஷப் ஹீபர் நாற்பது மாணவர்களில் துவங்கி, இன்று ஏறத்தாழ ஆயிரத்து நானூறு மாணவர்கள் கணிப்பொறியில் பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி., பி.பி.ஏ., எம்.சி.ஏ., ஐ.டி. போன்ற பாடங்கள் படிக்கிறார்கள். ஒரு முழுக் கட்டடமே கட்டி, நூற்றுக்கணக்கில் கம்ப்யூட்டர்களும், செமினார் ஹால்களுமாக விரிவடைந்துள்ளதைப் பார்த்து, இதில் என் அணில் பங்கும் இருந் தது குறித்துப் பெருமைப்படுகிறேன்.

மாணவர்களின் கம்ப்யூட்டர் விழாவில் அறிமுக உரையாற்றியபோது, டாப் டென் ஐ.டி. டெக்னாலஜிகளைப் பற்றிப் பேசினேன் (பார்க்க: விகடன் தீபாவளி மலர்).


வெண்பா போட்டிக்காக வந்த முதல் ஐம்பது வெண்பாக்களில் நாற்பத்தைந்து தளை தட்டியது. ஒன்றே ஒன்றுதான் சரியாக இருந்தது. நன்றாகவும் இருந்தது!

எழுதியவர்: ந.கந்தசாமி, 65, பாரதி நகர், திருநெல்வேலி-627007.

இது, இந்த வார எ.பி.க:

'நெஞ்சில் துயரம் நெருப்பாகச் சுட்டுவிட்டால்
தஞ்சம் அடைவேன் கவிதையில் - பஞ்சம்
கவிதைக்கும் வந்துவிட்டால் நானென்ன செய்வேன்
புவியைப் படைத்தவனே சொல்!'


எஸ்.வி.சேகரின் நாடகங்கள் அனைத்தையும் ‘அல்லயன்ஸ்’ புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். உடன் சில கட்டுரைத் தொகுதிகளையும் சேர்த்து, ஏறத்தாழ நாற்பது புத்தகங்களை 'வெச்சுக் கோங்கோ' என்று என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மூச்சு முட்டுகிறது. ஆசுவாசப் படுத்திக்கொள்ள...

"இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே வருதே... ஏன் தெரியுமா?"

"தெரியலையே!"

"ஏன்னா, அது தீபகர்ப்பமா இருக்கிறதால!"

"டைப்ரைட்டிங் மெஷின் ஆணா, பெண்ணா?"

"தெரியலை!" ‘‘பெண்தான்! ரிப்பன் இருக்கில்லே?"

'கடிச்சக்ரவர்த்தி' என்று சேகருக்கு யாராவது பட்டம் தரலாம்!

This page is powered by Blogger. Isn't yours?