Sunday, December 26, 2004

 

கற்றதும் பெற்றதும்


ரொம்ப நாளைக்கு முன் நான் டில்லியில் இருந்தபோது, 'டைம்' பத்திரிகை ஒரு போட்டி வைத்தது. Tom Swift சொன்னதாக ‘டைம்’ பற்றி ஒரு வாக்கியம் எழுதவேண்டும் என்பதுதான் போட்டி.

ஏராளமான கடிதங்கள் பத்திரிகைக்கு வந்தன. நான்கூட அனுப்பியிருந்தேன்.

பரிசு பெற்றது இந்த வாக்கியம்... Time consists of past, present and future said Tom tensely.

இவ்வகையிலான டாம் ஸ்விஃப்ட் வாக்கியங்கள் ஆங்கிலத்தில் பல உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது -- I wish I’d invented the telegraph said Tom remorsefully. தந்தியைக் கண்டுபிடித்தது மோர்ஸ் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

தமிழிலும் இவ்வகை முயற்சி செய்து பார்க்கத்தான் ‘என்றான் முருகன்' வாக்கியங்கள் சில கொடுத்துள்ளேன். வினை அடை, எழுவாய்க்கும் adverb-க்கும் பொருந்தி வரவேண்டும்.

உதாரணங்கள்...

"அவரிடம் ஈரமே இல்லை’’ என்றான் முருகன் சூடாக.

'‘நகைக்கடைக்காரர் தங்கமான மனுஷர்’' என்றான் முருகன் அலங்காரமாக.

‘'நூறு வாட் பல்பு பொருத்தி விட்டேன்'’ என்றான் முருகன் பிரகாசமாக.

‘‘மீ=னீநீ2 இவ்வளவுதான் ஐன்ஸ்டைன்’' என்றான் முருகன் புத்திசாலித் தனமாக.

‘‘இரண்டு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கிடையாது’' என்றான் முருகன் சிக்கனமாக.

‘'உடம்பு சரியாகிவிட்டது'’ என்றான் முருகன் ஆரோக்கியமாக.

‘‘இதுபோல வாசகர்களும் எழுதி அனுப்பலாம். கார்டு மட்டும்’' என்றான் முருகன் கண்டிப்பாக.

கல்கி ஒரு கட்டுரையில், டிசம்பர் சீஸனில் ரசிகர் கள் பாதியில் வருவதையும் போவதையும், அரங்கம் பாதி காலியாக இருப்பதையும் எழுதியிருக்கிறார். 1953-ல் அவர் எழுதிய கட்டுரை இன்று ஒரு வரி கூட மாற்றத் தேவையில்லாமல் இருப்பது வியப்பே! இந்தச் சூழ்நிலையில், அபஸ்வரம் ராம்ஜி சுஸ்வரத்துக்கு மாறி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உதவியுடன் பள்ளிகளில் 'இசை மழலை'க் கச்சேரிகள் நடத்தி, பிள்ளைகளைச் சங்கீதத்தில் ஈடுபடச்செய்வது ஒரு நல்ல முயற்சி.

டிசம்பர் சீஸன் கர்நாடக சங்கீதத்துக்கு மட்டும் அல்ல, சுஜாதாவின் 'சிறந்தவை'களின் பட்டியலுக்கும் தான்! அன்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

என் கணிப்பில், 2004-ம் ஆண்டின் சிறந்தவை இவை...

சிறந்த புத்தகப் பதிப்பு - 'புதிய சாஸனம்' (வின்சென்ட் சின்னதுரை)

சிறந்த திரைப்படம் - ஆட்டோகிராஃப் (சேரன்)

சிறந்த பாடல் - ‘கனாக்காணும் காலங்கள்...’ (யுவன்ஷங்கர் ராஜா)

சிறந்த திரைப்படப் பாடல் வரிகள் - ‘நான் குழந்தையென்றே நேற்று நினைத்திருந்தேன்... அவன் கண்களிலே என் வயதறிந்தேன்’(நா.முத்துக்குமார்)

சிறந்த இளம் பாடகர் - அனந்தராமன் (வயது 11)

சிறந்த கவிதை நூல் (மரபு) - ‘ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல...’ (கிருஷ்ணார்ப்பணம் சேஷாசலம்) (புதுக்கவிதை) - ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ (த.ஜெயசீலன்)

சிறந்த புத்தகம் (ஆங்கிலம்) - Birds of Tamilnadu - Dr.K.Rathnam ,Tirumph of Truth - Dr.R. Karthikeyan

சிறந்த மறுபதிப்பு - கம்பர் தரும் ராமாயணம் - டி.கே.சி. (வானதி)

சிறந்த நகைச்சுவை நூல் - 'தமாஷாவரிகள்'(ஜே.எஸ்.ராகவன்) சிறந்த திரட்டல் நூல் \ 'தமிழ் நாவல் களில் தேடலும் திரட்டலும்' (கோவை ஞானி)

சிறந்த சிறுவர் அன்பளிப்புப் புத்தகம் - Vision to Mission - டாக்டர் கலாம்

சிறந்த இனிப்பு - சோன்பப்டி ஹல்திராம்

சிறந்த காரம் - ‘லேஸ்’ Lays வறுவல் வகைகள்

சிறந்த கல்லூரி மாணவர் இதழ் - இளந்தூது (ஏ.வி.சி. கல்லூரி)

சிறந்த அறக்கட்டளை - சேவாலயா, திருநின்றவூர்

சிறந்த இலக்கியப் பத்திரிகை - இலக்கியப் பீடம் (விக்கிரமன்)

சிறந்த மருத்துவ நூல் - நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்- டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன்

சிறந்த ஆய்வு நூல் - இலங்கை இந்திய மானிடவியல் - என்.சண்முகலிங்கன், பக்தவத்சல பாரதி

சிறந்த பதிப்பகங்கள் - தமிழினி, விகடன் பிரசுரம்

சிறந்த கணிப்பொறிச் சாதனம் - Wireless A+G Linksys

சிறந்த ஓஎஸ் (Operating System) - லைனெக்ஸ் வயசுக்கு வரும்வரை, விண்டோஸ் எக்ஸ்பி

இந்தப் பட்டியல் அடுத்த வாரமும் தொடரும்.

ஷங்கருடன் ‘ரோபோ’ என்று ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதில் வரும் ரோபாட் இன்றைய தினங்களில் சாத்தியம் இல்லை. கதைக்காக அதற்கு அதிக சாதனை களும், புத்திசாலித் தனமும், மனித உணர்வு களும் தந்தோம். ரோபாட் இயலில் இன்றைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். இன்றைய ரோபாட் ஓர் அறைக்குள் நுழைந்து வெளிவரும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை இரு பரிமாண வரைபடம் செய்து தெரிந்துகொள்ளும். இதற்கே அது ஆயிரக்கணக்கில் செய்தித் துணுக்குகளை உள்ளே பெற்றுக் கொள்ள வேண்டும் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மூலையில் போய் நின்றுவிடும். இல்லையேல், அடுத்த ஃப்ளாட்டில் திரிந்து, அங்கேயுள்ளவர் களை அலறவைக்கும்.

2010-ம் ஆண்டுக்குள் நீங்கள் இதைவிடச் சற்று புத்திசாலியான வீட்டு ரோபாவை எதிர்பார்க்கலாம். அது தன்னைச் சுற்றியுள்ள உலகை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறமை பெற்று, இன்றைய ரோபாட்டைவிட ஆயிரம் மடங்கு அதிக தகவல்கள் சேகரித்து அலசும்.

எதிர்கால ரோபாட்டுகளின் சில முன்மாதிரிகள் இன்றே ஆராய்ச்சி சாலைகளில் கிடைக்கின்றன. வாக்குவம் க்ளீனர் பார்த்திருப்பீர்கள். ஆளுதவி இல்லாமல் தானே வீட்டைத் துப்புரவாக தூசுறிஞ்சி சுத்தமாக்கும் வாக்குவம் க்ளீனர்கள் இன்று சாத்தியம். அவற்றால் மாடிப்படி எது, சுவர் எது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். போகப்போக தன்னிடமுள்ள வரைபடத்தைப் புதுப்பித்துக்கொண்டு, விவரம் சேர்த்துக்கொள்ளும். சுவரில் போய் தானாகவே சார்ஜ் வாங்கிக் கொள்ளும்.

முதல் தலைமுறை முழு ரோபாட்டுகள் மனித வடிவில் இருக்கும். கை கால்கள் வைத்துக்கொண்டு நடக்கும். பல காரியங்கள் செய்யும். ஆனால், உங்களுக்கு நண்பனாக இருக்காது. அதன் மூளையை ஒரு பல்லியின் மூளைக்குச் சமமாகச் சொல்லலாம். சுமார் நூறு ஆணைகள் தெரிந்திருக்கும். ஃபாக்டரியில் வடிவமைத்ததைத் தவிர, புதிய காரியம் எதையும் அதனால் செய்யமுடியாது. புரியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ஓர் ஓரத்தில் போய் நின்றுகொள்ளும். அதைத் திட்டினால் தெரியாது. திட்டலாம்.

2030-க்குள் இரண்டாம் தலை முறை ரோபாட்டுகள் வந்துவிடும். பல்லியின் மூளையிலிருந்து எலியின் மூளைக்கு உயரும். உதாரணமாக, ஒரு பொருளைக் கையில் எடுக்குமுன், அதன் எடைக்கேற்ப ஒரு கை, இரண்டு கை... ஏன், மூன்று கைகளைக்கூடப் பயன்படுத்தும். போகப்போகக் கற்றுக்கொள்ளும் விதமாக‘ கண்டிஷனிங் மாட்யுல்ஸ்’ என்னும் நிரலின்படி நல்ல காரியங்கள், வேண்டாத காரியங்கள் என்றுவிருப்ப அளவை வைத்துக் கற்றுக் கொள்ளும். அதற்கு எஜமானனின் குரல் பரிச்சயம் உண்டு. அவர் சொல்லும் good, bad போன்ற வார்த்தைகளுக்கேற்ப ஒரு செயலைத் தொடரவோ, நிறுத்தவோ செய்யும். நீங்கள் தூங்கும் சமயத்தில் சப்தமெழுப்பாமலிருக்க அதற்குக் கற்றுக் கொடுக்கலாம்..

மூன்றாம் தலைமுறை ரோபாட், ஒரு குரங்கின் திறமையைக் கொண்டிருக்கும். நாம் செய்வதைப் பார்த்து அதுவும் செய்யும். 'மங்கி ஸீ மங்கி டூ!' உங்கள் வீட்டை முழுமையாக அறிந்திருக்கும். வெளியுலகைப்பற்றி அதற்குத் தெரியாது.

நான்காம் தலைமுறை ரோபாட்டுகள்தான் மனிதனுக்கு அருகே வரும். உதாரணமாக,ஒரு இங்க் பாட்டிலைக் கவிழ்த்தால், இங்க் கொட்டி தரை பாழாகிவிடும் என்பதை அறிந்திருக்கும். அதேபோல் பல எளிய திறமைகளை ஒத்திகை பார்த்துவிட்டுக் கற்றுக்கொள்ளும். இந்த நிலைமை வர 2040 வரை ஆகலாம்.

ரோபாட்டுகள் உங்கள் மகளைக் காதலிக்க, இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.

எ.பி.க.

நீங்கள் இப்படிச் செய்வதனால்
பூமியில்சிந்தப்பட்ட எல்லா நீதிமான்களின்
ரத்தத்துக்கும் உங்களிடம் பழிவாங்கப்படும்
அந்தத் தண்டனைகள் எல்லாம்
இந்தத் தலைமுறை மீதே சுமத்தப்படும்!

- புவியரசு

Sunday, December 19, 2004

 

ஐஸ§க்கே ஐஸ்!


'க்ளெரிஹ்யு' போட்டிக்கு, வெண்பாப் போட்டியைவிட எண்ணிக்கையில் அதிகமாக, ஐந்நூறுக்கும் மேற்பட்ட கார்டுகளும் கடிதங்களும் வந்து திணறடித்தன. அனைத்தையும் நண்பர் சந்திரனின் உதவியுடன் படித்துத் தேர்ந்தெடுத்ததில், எனக்குப் பிடித்த பதினைந்து இவை:

ஓரங்கி கட்டி பீரங்கி வென்றார் சாந்தி வழியில் காந்தி!
- தாஜ்பால், வல்லம்.

தோற்று வெல்வதில் இன்னொரு கஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி!
- ஸ்ரீ, சென்னை-94.

கலிங்கத்தால் கலங்கி சோகமான அசோகன் ரத்தம் வெறுத்து யுத்தம் நிறுத்தி புத்தம் வளர்த்தான்!
- சரவணன் சேனா, விளாத்திக்குளம்.

அக்கினிச் சிறகுகளால் மக்களைக் கவர்ந்த கலாமுக்குச் சலாம்!
- இரா.இ.தநா, சேலம்-6.

எழுபது தாண்டியும் எழுதியே வரும் கலைஞர் இளைஞர்!
- பொன்.குமார், சேலம்.

உலக அழகி உடன் பழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஐஸ் வைத்தார் ஓபராய்!
- எம்.வி.பாலகிருஷ்ணன், சென்னை-37.

அறியார்களிடம், கடவுள் தெரியார் எனச் சொன்னார் பெரியார்!
- வி.எஸ்.சூர்யா, திருப்பூர்.

முத்தமே இல்லாமல் முழுநீளப் படமென்றால் சத்தம் போடுகிறார் கமல்!
- ஷைலஜா, பெங்களூர்-76.

பேட்டிங்கில் தனியிடம் ரேட்டிங்கில் முதலிடம் சொல்லப்போறேன் நச்சுனு வெல்லப்போறது சச்சினு!
- அட்டிகை நாச்சியார், காரமடை.

கட்டினவளைக் கடைசிவரை காப்பாற்றாவிடினும் தேசியக்கொடி காத்த குமரன் அமரன்!
- பாரதி கல்யாண், விருகம்பாக்கம்.

கவுண்டமணி நகைச்சுவை சினிமாவில் தனிச்சுவை காலால் உதைத்து வேடிக்கை காட்டுவதவர் வாடிக்கை!
- கே.ஆனந்தன், பாப்பிரெட்டிப்பட்டி.

சரித்திரம் படைக்க சரித்திர நாவல்களை Bulky-யாய் எழுதினார் கல்கி!
- அசோக்ராஜ், தஞ்சாவூர்.

ஐம்புலனில் ஒன்றயர்ந்து ஆம்புலன்ஸில் வந்தமர்ந்த கெட்டவனுக்கு வழி ஏதப்பா சுட்டது விதி வீரப்பா!
- தி.சு.விஜய் ஆனந்த், கன்னியாகுமரி.

சல்மான் ருஷ்டி எழுத்தில் புஷ்டி 'அதிலும்' படுசுட்டி!
- ஜூலியஸ், மதுரை-16.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் பாதம் பதித்த உன் கால் வெரி ஸ்ட்ராங்!
- அமுதன், சென்னை-93.

உற்சாகத்துடன் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த போட்டிக்குப் பெயர் 'என்றான் முருகன்'. காத்திருங்கள்!


விகடன் 14.11.04 இதழில், வெண்பாப் போட்டியில் நான் தேர்ந்தெடுத்துத் தந்திருந்த வெண்பாக்களில் பிழை இருந்ததாக, தளைதட்டியதாகக் குறிப்பிட்டு பெரம்பலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து சே.திருவருள் பிரகாசம் எழுதியிருந்தார்.

தான் இயற்றிய நேரிசை வெண்பாக்கள் சிலவற்றைத் தந்து, 'பாராட்ட மனம் இருந்தால் பாராட்டுங்கள்' என்றும் எழுதியிருந்தார்.

பாராட்டலாம்... தங்கள் முதல் வெண்பாவே தளைதட்டாமல் இருந்தால்!

'வெண்பாவில் பாட்டெழுத வேண்டின் எவரெனினும்
கண்ணாக யாப்பதனைக் கற்றிடுக - பண்பாடும்
ஆற்றல் பெருகி அறிவொளியும் வீசிடுங்கால்
போற்றிப் புகழுமிந்தப் பூமி'

- என்று எழுதியுள்ளீர்கள்.

பூமி என்று குற்றியலுகரமற்ற ஈரசைச் சீரில் வெண்பாவை முடிப்பது தவறில்லையா? நேர் - நாள், நிரை - மலர், நேர்பு - காசு, நிரைபு - பிறப்பு... இவற்றுக்குத்தான் அனுமதி!

'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'

என்னும் குறட்பாவை சே.தி.பிரகாசத்துக்கு மட்டுமல்ல... பொதுவாகத் தமிழர்களுக்கே வலுவாகச் சிபாரிசு செய்கிறேன்.

குற்றம்சாட்டுவதில் அவசரம், நம்முடைய ஊடகங்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், தனிமனிதர்கள் அனைவருக்கும் மாநிலம் தழுவிய பொதுக் குணம். பொதுவாகத்தான் சொல்கிறேன்!

சிறந்த எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் கட்டுரையைப் பற்றி 5.12.04 இதழில் எழுதியதில் மகிழ்ந்து, 'கடல் மணலுக்கு ஒரு கிளிஞ்சலின் ஞாபகம்' என்று ஒரு வரிக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சிறு திருத்தம்... 'கடல் மணலில், ஒரு கிளிஞ்சலுக்கு மற்றொரு கிளிஞ்சலின் ஞாபகம்'தான் அது. இருவருமே கிளிஞ்சல்கள்தாம்!

பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் செல்வி ம.இராதாவின் 'அழைத்த இதழ்கள்' (தமிழ் பதிப்பகம், ஜெயங்கொண்டம்) என்னும் கவிதைத் தொகுப்பைத் தற்செயலாகப் பிரித்துப் பார்த்தபோது, பளிச்சென்று இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது தலைப்பு - ‘Tamil காதல்'!

'இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ந்து
இடந்தலைப் பாட்டில் இடறி விழுந்து
இணையத்தில் சம்பாஷித்து
பகற்குறியில் பார்த்து
இரவுக்குறியில் பகிர்ந்துகொண்டதில்
தலைவி தாயானாள்
தலைவன் தலைமறைவானான்
செவிலியும் நற்றாயும்
சேர்ந்தே தேடுகின்றனர்
'மேட்ரிமோனியல்' காலத்தில்
இன்னொரு தலைவனை!

பகற்குறி, இரவுக்குறி, செவிலி, நற்றாய் போன்ற சங்ககாலத்து அகத்திணைச் சொற்களை அறிந்தவர்கள், இந்தக் கவிதையை மிகவும் ரசிப்பார்கள்!

Sunday, December 12, 2004

 

சில உண்மைகள் ஒளிந்தே இருக்கட்டும்!


ரஜினிகாந்த் இல்லத் திருமண வரவேற்பில் அலைமோதிய கூட்டத்திலிருந்து விலகி, மேல்மூச்சு வாங்கிக்கொண்டு போர்ட்டிகோவில் காத்திருக்கும்போது பாலிவுட், கோலிவுட், ஹைலிவுட் glitterati- களின் கார்கள் வரிசையாக வந்து வந்து புறப்பட, ஜெயம் ரவியிலிருந்து அமிதாப் பச்சன்வரை அத்தனை பேரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

"ஜாக்கி ஷ்ராஃபின் கார் போர்ட்டிகோவுக்கு வரவும்! பிரபு சாரின் கார் போர்ட்டிகோவுக்கு வரவும்..!" என்று இடைவிடாத அறிவுப்புகளின் இடையில் என் காதுகள் தீட்டப்பட்டன! ஜாக்கி சானின் கார் போர்ட்டிகோவுக்கு வரவும்! ஜாக்கி சான்?

'காயத்ரி' படத்தின்போதுதான் ரஜினிகாந்த்தை முதலில் சந்தித்தேன். இருவரும் சிகரெட் பற்றவைத்துக் கொண்டு நெர்வஸாக, தனியாக ப்ரொஜெக்ஷன் பார்த்தோம். அதன் பின், 'பதினாறு வயதினிலே' வெளிவந்து, ரஜினியை வில்லன் ரோலில்தான் பார்க்க விரும்பினார்கள். பஞ்சு அருணாசலம் அவரைக் கதாநாயகனாக்கினார் 'ப்ரியா'வில்! ஆம், கணேஷாக நடித்தார் ரஜினி.

அதன் துவக்கவிழாவில், முதல் காட்சி... சென்டிமெண்ட்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி 'உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு' என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக் கொண் டிருந்தார். இருபத்தைந்து வருஷம் கழித்து எம்.ஆர்.சி. நகரில், அவரை இந்த பிரமாண்ட ரிசப்ஷனில் சந்திக்கப் போகிறோம் என்கிற சங்கதி அப்போதே எங்கோ ஒளிந்திருந்திருக்கிறது.

யோசித்துப் பார்க்கிறேன். அதேபோல், ‘காயத்ரி’ படம் முடிந்து இளம் இளையராஜாவுடன் ப்ளாசா தியேட்டர் அருகில், ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது, இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் இவர் திருவாசகத்தை சிம்பொனி வடிவுக்கு உயர்த்தி, உலகை வியக்க வைக்கப் போகிறார் என்பதும் ஒளிந்திருந்திருக்கிறது.

அதேபோல், 1993\ல் ஒரு நள்ளிரவில், சிறிய ஸ்டுடியோவில் மணிரத்னம் அறிமுகம் செய்துவைத்த பவ்யமான இளைஞர் போட்டிருக்கும் ‘சின்னச் சின்ன ஆசை...’ என்னும் பாட்டு, பதினோரு வருடங்களுக்குப்பின் பிராட்வே மியூஸிக்கல்வரை கொண்டு செல்லும் என்பதும் ஒளிந்திருந்திருக் கிறது. அவை அந்த நேரங்களில் தெரிவதில்லை. அவ்வளவுதான்!

டிஜிட்டல் சினிமா மெள்ள மெள்ள செலுலாய்ட் சினிமாவை இடம் பெயர்க்க முயற்சித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. க்யூப் டிஜிட்டல் சாதனத்தை விற்கும் ரியல் இமேஜ்காரர்கள் சொல்வதைப் பார்த்தால், சென்னையில் பொங்கலுக்குள் சுமார் முப்பது திரைகளில் டிஜிட்டல் சினிமா காட்டப்படும் என்று தோன்றுகிறது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், தியேட்டர்காரர்களுக்கு எளிதாக ப்ரொஜெக்டரைக் கொண்டு வைத்துவிடு கிறார்களாம். ஐந்து வருஷம் கழித்து ப்ரொஜெக்டர் தியேட்டருக்குச் சொந்தமாகிவிடுமாம்.

ஐந்து வருஷத்தில் இதன் மூன்று சிப் டி.எல்.பி. டெக்ஸாஸ் டெக்னாலஜி மாறாமலிருந்தால் பயன்! மேலும், திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்த முறையின் நன்மைகளை உணர்ந்து, தங்கள் படங்களை எச்.சி.டெலிசினி மூலம் டிஜிட்டலாக மாற்றி அழுத்தி, மற்ற செய்திகள் சேர்த்து, டி.வி.டி.ராம் வடிவில் தரவேண்டும். எதிர்காலத்தில் ஃபைபர் நூலிழை மூலமாகவோ சாட்டிலைட் மூலமாகவோகூட படங்களை விநியோகிக்கலாம். இப்போது டிஜிட்டல் வடிவத்தில் மாற்றித் தகடு பண்ணிக்கொடுக்க முன்வரவேண்டும்.

மும்பையிலும், நமது பிரசாத்திலும்தான் இப்போது அந்த வசதிகள் உள்ளன. தயாரிப்பாளர் ஒத்துழைக்கவில்லையேல் தியேட்டர்கள் இருக்க, ப்ரொஜெக்டர் இருக்க, காட்ட படம் இருக்காது. ஐ\மாக்ஸ்க்கான கதி இதற்கும் ஆகக்கூடாது. இந்த டெக்னாலஜி சூடு பிடித்துவிட்டால், ‘திருட்டு வி.சி.டி-யா! அப்படி என்றால் என்ன?’ என்று வருங்கால சந்ததியினர் கேட்கலாம்.

காமராஜ் அரங்கத்தின் பேஸ்மெண்டில் இருக்கும் 'ஐ வோ' (தன்னை நேசி) ஜிம்முக்குச் சென்றிருந்தேன். இத்தனை நவீனமான ஜிம் வசதிகள் தென்கிழக்கு ஆசியாவிலேயே வேறெங்கும் கிடையாதாம். மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டையும் சேர்த்துத் தரும் இந்தப் பயிலரங்கம், இளைஞர் களுக்கும் வெற்றியைத் துரத்தும் எக்ஸிக்யூட் டிவ்களுக்கும் அதிகப் படியாக உகந்தது.

என் வயசில் இதன் ஹைடெக் சாதனங்கள் பலவற்றில் என்னால் பயிற்சி செய்ய முடியாது. ஒரு ஆலிவ் ஆயில்பாத் எடுத்துக்கொண்டு, ஹேர்கட் பண்ணிக்கொண்டு, நகம் வெட்டிக்கொண்டு, ஜிஞ்சர் டீ சாப்பிட்டுவிட்டு, உயரம்(6) எடை(71) உடலில் கொழுப்புச் சக்தி(16) எல்லாம் கம்ப்யூட்டர் துல்லியமாக அளந்துகொண்டுவிட்டு விலகினேன்.

ஆங்கிலத்தில் Granta என்னும் பத்திரிகை, நம் சிறு பத்திரிகைகளுக்கு ஈடானது. அதில் 'சிறுமி துர்கா' என்று ஒரு கட்டுரை படித்தேன். சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தில், சிறுமி துர்காவாக நடித்த ஷம்பா பானர்ஜி எழுதிய கட்டுரை அது.

சின்ன வயசில், அவளை அவர்கள் குடும்பத்து நண்பராக இருந்த ராய் படப்பிடிப்புக்குத் தேர்ந்தெடுத்ததும், முதலில் அவர்கள் குடும்பத்தில் தயங்கியதும், கிராமத்துக்குச் சென்றதும், அந்தப் படம் எடுத்த அனுபவத்தின் லேசான ஞாபகங்களையும் அழகான ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

உங்களில் சிலர் 'பதேர் பாஞ்சாலி' பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் வாழ்வில் நிறைவு பெறாதவர்கள். நவீன சினிமாவின் ஒரு மைல் கல் என்று கருதப்படும் இந்தத் திரைப்படத்தை எடுத்து முடிக்க ரே கஷ்டப்பட்டதும், ஒருவரும் பணம் கொடுக்காமல் தடைப்பட்டு பெஞ்சு, நாற்காலியை விற்று, இறுதியில் மேற்கு வங்க அரசு பணம் கொடுத்து எப்படியோ முடித்ததும், படம் வெளிவந்தபின் அது மெள்ள மெள்ள பெற்ற கவனிப்பும் புகழும், இப்போது சரித்திரம்!

இதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்த சிறுமி பிற்பாடு, ‘க்ராண்ட்டா’ பத்திரிகையில் கட்டுரை எழுதப் போகிறாள் என்பதும் அப்போதே தீர்மானிக்கப்பட்டதா?

'காஸ்ட்யூம் எதும் கிடையாது. என் பாட்டி கொண்டுவந்த பழைய குழந்தைப் புடவைதான் தினமும் கொடுக்கப் பட்டது. மூக்கில் பிசின் போட்டு மூக்குத்தி ஒட்ட வைக்கப்பட்டது. துர்கா ஒரு பானை வழியாக, பூனை, குட்டி போட்டு இருப்பதைப் பார்க்க வேண்டிய காட்சி. அதற்கு ஆர்ட் டைரக்டர் ஒரு பானையைப் பாதியாக வெட்டித் தர, காமிராமேன் அதனடியில் படுத்துக் கொண்டார். அதன் உள்ளே பூனைக்குட்டிகள் இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு என்னை எட்டிப் பார்க்கச் சொன்னார். காமிராமேன் அடிக்கடி டைமீட்டரை என் முகத்தருகே கொண்டு வரும்போது சிகரெட் வாசனை அடிக்கும்.

படம் ரிலீசாகி புகழ் வந்தபின், எனக்கு ஒன்பது வயது வரை கொல்கத்தாவில் நான் எங்கு சென்றாலும் பின்னால் குசுகுசுவென்று பேசுவார்கள்... ‘இந்தப் பெண்தான் துர்காவாக நடித்தது!’, ‘கடைசியில் செத்துப் போகிறாளே, இவளா?’

நான் திரும்பத் திரும்ப, ‘செத்துப் போனது நானல்ல... நான் சின்ன துர்காவாக நடித்தேன். பெரிய துர்காவாக நடித்தது வேறு ஒரு பெண். அவள்தான் செத்துப்போகிறாள்’ என்று சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன்...’

படத்தின் கவிதை ததும்பும் காட்சிகளை இப்படிப் போட்டு உடைக்கும்போது ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. சில உண்மைகள் ஒளிந்திருப்பதே நல்லது.

எ.பி.க.

உணவைத்
தாண்டி

உயிரும்
உடையைத் தாண்டி
உடலும்
பெரிதல்லவா?
சிறகை விரித்துச்
சிலிர்த்தே செல்லும்
பறவைகள் கூட்டம்
பார்ப்பீர் தினமும்

-வின்சென்ட் சின்னதுரை (புதிய சாசனம்)

Sunday, December 05, 2004

 

உண்மையை கறக்கும் கலை!


ப்ரூ காபியுடன் உன்னிகிருஷ்ணனின் காப்பி ராகத்தையும் ஹம்சநாதத்தையும் கலந்து கொடுத்து, கர்நாடக சங்கீதத்தின் புதிய புரவலர்கள் ஆகியுள்ளனர் இந்துஸ்தான் லீவர். இம்மாதிரி பெரிய நிறுவனங்களின் ஆதரவுதான், இந்த ஆண்டு கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் 'அவாள்' சங்கீதமாகி விட்டது!

சீசன், பட்டுப்புடவை, காண்டீனில் அடை அவியல், சபா தாவல் இவை சேர்ந்து, சங்கீதம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மேலும் இளைஞர்கள், கொஞ்சமாவது சினிமாவுடன் சம்பந்தம் உள்ளவர்கள் பாடினால்தான் கூட்டமே வருகிறது. எல்லா சபாக்களும், வித்வான்கள் உற்சாகமிழக்காமல் இருக்க, மினி ஹால்களாகக் கட்ட வேண்டியிருக்கிறது. பெரிய ஹால் என்றால், ஜிலோ என்று சுற்றிலும் வெறுமையைப் பார்க்க பயமாக இருந்து, ஒன்றிரண்டாக வருபவர்களும் இஷ்டத்துக்கு எழுந்து போய்விடுகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் அனைத்தும் க்ளீவ்லாண்டிலும், டல்லாஸிலும் நியூஜெர்ஸியிலும் மட்டும் நடைபெற்றால் ஆச்சரியமில்லை. கல்யாணக் கச்சேரிகளில் சங்கீதம் வைப்பது, அதற்கு ஒரு அவமானமாகும். இருந்தாலும், ஸர்வைவலுக்காக வித்வான்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலை மாற, இந்தச் சங்கீதத்தின் உண்மையான மதிப்பை மக்கள் உணரும்படி செய்யவேண்டும். அதிலிருக்கும் மர்மங்களையும் மேளகர்த்தாக்களையும் ஜன்யங்களையும் காகலி நிஷாதங்களையும் ப்ரதிமத்யம நுணுக்கங்களையும் எளிமைப் படுத்தவேண்டும். ஓர் ஆரம்பமாக, இந்த ஆண்டிலாவது பாடகர்கள் ராகங்களை அறிவித்துவிட்டுப் பாடலாம். 'ப்ரூ'காரர்கள் கால்கிலோ காபி பவுடர் கொடுத்து, காபி டிபன் கொடுத்தாலும், அரங்கம் பாதிதான் நிரம்பி இருந்தது!

மெள்ள மெள்ள 'சேம்பர் மியூஸிக்' என்று வித்வான்கள் அமாவாசை தர்ப்பணம் போல, வீட்டில் வந்து பாடும் நிலைமைக்குக் குறுகிவிடும் அபாயம் உள்ளது. இந்த நிலை மாற முத்ரா, ஒய்.ஏ.சி.எம். போன்றவர்கள் அவசர நடவடிக்கை எடுக்கவேண் டும். அதற்கான என் பத்து அம்சத் திட்டம் இது...

1.கச்சேரிகளின் நேரத்தைக் குறைப்பது.

2.சிறுவர்-சிறுமியருக்கு இலவச அனுமதி.

3.ராகம் கண்டுபிடிப்பதில் போட்டி வைத்துக் கணிசமான பரிசளிப்பது.

4.எம்.பி.சீனிவாசன் செய்ததுபோல், கீழ்நிலை கார்ப்பரேஷன் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடக் கற்றுக் கொடுப்பது.

5.அதற்கு ஸ்காலர்ஷிப் தருவது.

6.தொலைக்காட்சி சானல்கள் ஏஷியாநெட்போல் அரைமணியாவது சினிமாவை மறந்துவிட்டு, கர்நாடக சங்கீதத்துக்கு விளக்கங்கள் தந்து பாடிக் காட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது (நான் பார்த்தவரை பொதிகை மட்டும்தான் இதைப் பிரமாதமாகச் செய்கிறது.).

7.இசை கேட்பவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் தருவது.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.

9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது.

10.நம் இசையமைப்பாளர்களுக்குக் கர்நாடக சங்கீதத்தில் எளிய பாடங்கள் நடத்துவது.

முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந் தது, ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவர்-சிறுமியரை 'தாய் மண்ணே வணக்கம்' பாடவைத்ததுதான்!

அந்தக் குழந்தைகளில் நான்கு பேராவது பிற்காலத்தில் பிரபலமான பாடக-பாடகிகள் ஆவார்கள்!

‘The Dark Art of Interrogation’ என்கிற நீண்ட கட்டுரையை ஆவலுடன் படித்து வருகிறேன்.

என் மகன் அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்த நான்கு பெட்டிப் புத்தகங்களில் ஒன்று The Best American Magazine writing 2004. எஸ்கொயர், அட்லாண்டிக் மன்த்லி போன்ற பல பத்திரிகைகளில் 2004-ல் வந்த கட்டுரைகளில் சிறந்த வற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.

அல்கொய்தா ஒசாமாவுக்கும் தீவிர வாதத்துக்கும் உதவிய காலித் ஷேக் முகமதை, அமெரிக்கர் களும் பாகிஸ்தானிய போலீஸ§ம் கைது செய்து, அவனிடமிருந்து உண்மையை வரவழைக்கச் செய்த செயல்களை விவரித்துவிட்டு, பொதுவாக வற்புறுத்தல் (persuasion) என்ற பெயரில், கௌத மாலா, பே போன்ற சிறைகளில் வாடும் சுமார் ஐயாயிரம் கைதிகளிடமிருந்து தேவைப்பட்ட உண்மையைக் கறக்கும் கலையை விரிவாக விவரிக்கும் கட்டுரை.

முதலில் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மெள்ள மெள்ள அவர்களை நாட் கணக்காகத் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சாப்பாட்டிலோ, தூக்கத்திலோ எந்தவித ஒழுங்கையும் அனுமதிக்கக் கூடாது. மூணு நிமிஷம் தூங்க வைக்க வேண்டும். உடனே எழுப்ப வேண்டும். அதே கேள்வியைக் கேட்கவேண்டும். மறுபடி எட்டுமணி நேரம் தூங்கவைத்து, எதையாவது தின்னக் கொடுக்க வேண்டும். இரவா, பகலா தெரியக்கூடாது. கடிகாரம் கூடாது. எங்கே இருக்கிறோம்... எந்த ஊரில்... ஊரிலா கப்பலிலா என்று எதுவும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.

'உண்மையைச் சொன்னால் விடுதலை, உன் பெண்டாட்டி, பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு' என்று வாக்குக் கொடுக்கவேண்டும். மரிஜுவானா, சோடியம் பெண்டதால் கொடுக் கலாம். வெள்ளமாகப் பேசத் தூண்டும் மருந்துகளான ஸ்பீடு, மெத்தாம் ஃபிபட்டமைன் போன்ற வற்றைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து நாள்கணக்காகக் கேள்வி கேட்டால், உடையாதவர் எவருமில்லை. பலவீன மனசுள்ளவர்களுக்கு ஒருநாள் இரண்டு நாள் போதுமாம். பெற்ற தாயை, பிறந்த பொன்னாட்டை இலவச இணைப்பாகச் சேர்த்து விற்றுவிடுவார்களாம்!

மிகையில்லாமல், தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. வைத்த கண் வாங்காமல் படிக்கவைக்கிறது. அதே சமயம், இந்த முறைகளின் நியாயத்தைப் பற்றி நிச்சயம் சங்கடப்பட வைக்கிறது. கட்டுரையாளர் டார்ச்சர், கொயர்ஷன் (துன்புறுத்துதல், தொண தொணத்தல்) என்கிற இரண்டு முறைகளைப் பற்றிச் சொல்கிறார். டார்ச்சர் என்பது தலை கீழாகத் தொங்க விடுவது. நகக்கண்ணுக்குள் ஊசி ஏற்றுவது, அங்கங்களை வெட்டுவது, கண்ணை நோண்டுவது... இவ்வகை. கொயர்ஷன் - அதட்டுவது, லேசாகத் தட்டுவது, தூங்கவிடாமல் தொண தொணப்பது! இரண்டுமே ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தப்பு.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல், மனித உரிமைக் கழகம் போன்றவர்கள் இந்த மீறல்களை விவரமாக வர்ணித்து இருக்கிறார்கள். இஸ்ரேல் போன்ற நாட்டில் டார்ச்சர் தப்பு. மற்றது தப்பு இல்லை. பொதுவாக, ஒரு ஆள் மறைத்து வைத்திருக்கும் செய்தியால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றால், அதற்குக் காலக்கெடு இருந்தால், செய்தியை வெளிக் கொணர டார்ச்சர் பண்ணலாம் என்று எழுதப்படாத சட்டம் உள்ளது. எல்லாமே நிழலான சமாசாரம்.

தமிழில் இம்மாதிரியான சிறந்த பத்திரிகை எழுத்துகளின் வருடாந் தரத் தொகுப்பு வரவேண்டும். ரொம்ப நாள் முன்னால் ஜ.ரா.சுந்தரேசன், ஒரு ஜைன இளம்பெண் துறவறம் பூணுவதற்கு முன் அழகாக அலங்கரிக்கப்பட்டதையும், பிறகு அவள் கூந்தல் சிரைக்கப்பட்டு, மொட்டையடிக்கப் பட்டதையும் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நான் படித்த சிறந்த பத்திரிகைக் கட்டுரைகளில் அதுவும் ஒன்று. அதை இன்னமும் நினைவு வைத்திருக்கிறேன்.

அதுபோல் ஜூனியர் விகடனில் சமீபத்திய இதழில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய கட்டுரையும் சிறப்பாக இருந்தது.

இவ்வகைகளில் நம் பத்திரிகைகளைத் தேடி எடுத்து, ஒரு தொகுப்பு கொண்டு வந்து, அவற்றை நியூஸ்பிரிண்ட் தற்காலி கத்திலிருந்து விடுவித்து, சாஸ்வதம் கொடுக்க யாராவது முன்வந்தால், அதற்குச் சிறப்பாசிரியராக இருந்து, முன்னுரை தரச் சம்மதிக்கிறேன்.

எ.பி.க...

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி, எதற்கு
வந்தன சிறகுகள்?

- கல்யாண்ஜி

சென்ற வார ‘எனக்குப் பிடித்த கவிதை'யை எழுதியவர்: அகவி

This page is powered by Blogger. Isn't yours?