Sunday, December 05, 2004

 

உண்மையை கறக்கும் கலை!


ப்ரூ காபியுடன் உன்னிகிருஷ்ணனின் காப்பி ராகத்தையும் ஹம்சநாதத்தையும் கலந்து கொடுத்து, கர்நாடக சங்கீதத்தின் புதிய புரவலர்கள் ஆகியுள்ளனர் இந்துஸ்தான் லீவர். இம்மாதிரி பெரிய நிறுவனங்களின் ஆதரவுதான், இந்த ஆண்டு கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் 'அவாள்' சங்கீதமாகி விட்டது!

சீசன், பட்டுப்புடவை, காண்டீனில் அடை அவியல், சபா தாவல் இவை சேர்ந்து, சங்கீதம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மேலும் இளைஞர்கள், கொஞ்சமாவது சினிமாவுடன் சம்பந்தம் உள்ளவர்கள் பாடினால்தான் கூட்டமே வருகிறது. எல்லா சபாக்களும், வித்வான்கள் உற்சாகமிழக்காமல் இருக்க, மினி ஹால்களாகக் கட்ட வேண்டியிருக்கிறது. பெரிய ஹால் என்றால், ஜிலோ என்று சுற்றிலும் வெறுமையைப் பார்க்க பயமாக இருந்து, ஒன்றிரண்டாக வருபவர்களும் இஷ்டத்துக்கு எழுந்து போய்விடுகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் அனைத்தும் க்ளீவ்லாண்டிலும், டல்லாஸிலும் நியூஜெர்ஸியிலும் மட்டும் நடைபெற்றால் ஆச்சரியமில்லை. கல்யாணக் கச்சேரிகளில் சங்கீதம் வைப்பது, அதற்கு ஒரு அவமானமாகும். இருந்தாலும், ஸர்வைவலுக்காக வித்வான்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலை மாற, இந்தச் சங்கீதத்தின் உண்மையான மதிப்பை மக்கள் உணரும்படி செய்யவேண்டும். அதிலிருக்கும் மர்மங்களையும் மேளகர்த்தாக்களையும் ஜன்யங்களையும் காகலி நிஷாதங்களையும் ப்ரதிமத்யம நுணுக்கங்களையும் எளிமைப் படுத்தவேண்டும். ஓர் ஆரம்பமாக, இந்த ஆண்டிலாவது பாடகர்கள் ராகங்களை அறிவித்துவிட்டுப் பாடலாம். 'ப்ரூ'காரர்கள் கால்கிலோ காபி பவுடர் கொடுத்து, காபி டிபன் கொடுத்தாலும், அரங்கம் பாதிதான் நிரம்பி இருந்தது!

மெள்ள மெள்ள 'சேம்பர் மியூஸிக்' என்று வித்வான்கள் அமாவாசை தர்ப்பணம் போல, வீட்டில் வந்து பாடும் நிலைமைக்குக் குறுகிவிடும் அபாயம் உள்ளது. இந்த நிலை மாற முத்ரா, ஒய்.ஏ.சி.எம். போன்றவர்கள் அவசர நடவடிக்கை எடுக்கவேண் டும். அதற்கான என் பத்து அம்சத் திட்டம் இது...

1.கச்சேரிகளின் நேரத்தைக் குறைப்பது.

2.சிறுவர்-சிறுமியருக்கு இலவச அனுமதி.

3.ராகம் கண்டுபிடிப்பதில் போட்டி வைத்துக் கணிசமான பரிசளிப்பது.

4.எம்.பி.சீனிவாசன் செய்ததுபோல், கீழ்நிலை கார்ப்பரேஷன் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடக் கற்றுக் கொடுப்பது.

5.அதற்கு ஸ்காலர்ஷிப் தருவது.

6.தொலைக்காட்சி சானல்கள் ஏஷியாநெட்போல் அரைமணியாவது சினிமாவை மறந்துவிட்டு, கர்நாடக சங்கீதத்துக்கு விளக்கங்கள் தந்து பாடிக் காட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது (நான் பார்த்தவரை பொதிகை மட்டும்தான் இதைப் பிரமாதமாகச் செய்கிறது.).

7.இசை கேட்பவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் தருவது.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.

9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது.

10.நம் இசையமைப்பாளர்களுக்குக் கர்நாடக சங்கீதத்தில் எளிய பாடங்கள் நடத்துவது.

முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந் தது, ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவர்-சிறுமியரை 'தாய் மண்ணே வணக்கம்' பாடவைத்ததுதான்!

அந்தக் குழந்தைகளில் நான்கு பேராவது பிற்காலத்தில் பிரபலமான பாடக-பாடகிகள் ஆவார்கள்!

‘The Dark Art of Interrogation’ என்கிற நீண்ட கட்டுரையை ஆவலுடன் படித்து வருகிறேன்.

என் மகன் அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்த நான்கு பெட்டிப் புத்தகங்களில் ஒன்று The Best American Magazine writing 2004. எஸ்கொயர், அட்லாண்டிக் மன்த்லி போன்ற பல பத்திரிகைகளில் 2004-ல் வந்த கட்டுரைகளில் சிறந்த வற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.

அல்கொய்தா ஒசாமாவுக்கும் தீவிர வாதத்துக்கும் உதவிய காலித் ஷேக் முகமதை, அமெரிக்கர் களும் பாகிஸ்தானிய போலீஸ§ம் கைது செய்து, அவனிடமிருந்து உண்மையை வரவழைக்கச் செய்த செயல்களை விவரித்துவிட்டு, பொதுவாக வற்புறுத்தல் (persuasion) என்ற பெயரில், கௌத மாலா, பே போன்ற சிறைகளில் வாடும் சுமார் ஐயாயிரம் கைதிகளிடமிருந்து தேவைப்பட்ட உண்மையைக் கறக்கும் கலையை விரிவாக விவரிக்கும் கட்டுரை.

முதலில் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மெள்ள மெள்ள அவர்களை நாட் கணக்காகத் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சாப்பாட்டிலோ, தூக்கத்திலோ எந்தவித ஒழுங்கையும் அனுமதிக்கக் கூடாது. மூணு நிமிஷம் தூங்க வைக்க வேண்டும். உடனே எழுப்ப வேண்டும். அதே கேள்வியைக் கேட்கவேண்டும். மறுபடி எட்டுமணி நேரம் தூங்கவைத்து, எதையாவது தின்னக் கொடுக்க வேண்டும். இரவா, பகலா தெரியக்கூடாது. கடிகாரம் கூடாது. எங்கே இருக்கிறோம்... எந்த ஊரில்... ஊரிலா கப்பலிலா என்று எதுவும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.

'உண்மையைச் சொன்னால் விடுதலை, உன் பெண்டாட்டி, பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு' என்று வாக்குக் கொடுக்கவேண்டும். மரிஜுவானா, சோடியம் பெண்டதால் கொடுக் கலாம். வெள்ளமாகப் பேசத் தூண்டும் மருந்துகளான ஸ்பீடு, மெத்தாம் ஃபிபட்டமைன் போன்ற வற்றைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து நாள்கணக்காகக் கேள்வி கேட்டால், உடையாதவர் எவருமில்லை. பலவீன மனசுள்ளவர்களுக்கு ஒருநாள் இரண்டு நாள் போதுமாம். பெற்ற தாயை, பிறந்த பொன்னாட்டை இலவச இணைப்பாகச் சேர்த்து விற்றுவிடுவார்களாம்!

மிகையில்லாமல், தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. வைத்த கண் வாங்காமல் படிக்கவைக்கிறது. அதே சமயம், இந்த முறைகளின் நியாயத்தைப் பற்றி நிச்சயம் சங்கடப்பட வைக்கிறது. கட்டுரையாளர் டார்ச்சர், கொயர்ஷன் (துன்புறுத்துதல், தொண தொணத்தல்) என்கிற இரண்டு முறைகளைப் பற்றிச் சொல்கிறார். டார்ச்சர் என்பது தலை கீழாகத் தொங்க விடுவது. நகக்கண்ணுக்குள் ஊசி ஏற்றுவது, அங்கங்களை வெட்டுவது, கண்ணை நோண்டுவது... இவ்வகை. கொயர்ஷன் - அதட்டுவது, லேசாகத் தட்டுவது, தூங்கவிடாமல் தொண தொணப்பது! இரண்டுமே ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தப்பு.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல், மனித உரிமைக் கழகம் போன்றவர்கள் இந்த மீறல்களை விவரமாக வர்ணித்து இருக்கிறார்கள். இஸ்ரேல் போன்ற நாட்டில் டார்ச்சர் தப்பு. மற்றது தப்பு இல்லை. பொதுவாக, ஒரு ஆள் மறைத்து வைத்திருக்கும் செய்தியால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றால், அதற்குக் காலக்கெடு இருந்தால், செய்தியை வெளிக் கொணர டார்ச்சர் பண்ணலாம் என்று எழுதப்படாத சட்டம் உள்ளது. எல்லாமே நிழலான சமாசாரம்.

தமிழில் இம்மாதிரியான சிறந்த பத்திரிகை எழுத்துகளின் வருடாந் தரத் தொகுப்பு வரவேண்டும். ரொம்ப நாள் முன்னால் ஜ.ரா.சுந்தரேசன், ஒரு ஜைன இளம்பெண் துறவறம் பூணுவதற்கு முன் அழகாக அலங்கரிக்கப்பட்டதையும், பிறகு அவள் கூந்தல் சிரைக்கப்பட்டு, மொட்டையடிக்கப் பட்டதையும் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நான் படித்த சிறந்த பத்திரிகைக் கட்டுரைகளில் அதுவும் ஒன்று. அதை இன்னமும் நினைவு வைத்திருக்கிறேன்.

அதுபோல் ஜூனியர் விகடனில் சமீபத்திய இதழில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய கட்டுரையும் சிறப்பாக இருந்தது.

இவ்வகைகளில் நம் பத்திரிகைகளைத் தேடி எடுத்து, ஒரு தொகுப்பு கொண்டு வந்து, அவற்றை நியூஸ்பிரிண்ட் தற்காலி கத்திலிருந்து விடுவித்து, சாஸ்வதம் கொடுக்க யாராவது முன்வந்தால், அதற்குச் சிறப்பாசிரியராக இருந்து, முன்னுரை தரச் சம்மதிக்கிறேன்.

எ.பி.க...

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி, எதற்கு
வந்தன சிறகுகள்?

- கல்யாண்ஜி

சென்ற வார ‘எனக்குப் பிடித்த கவிதை'யை எழுதியவர்: அகவி<< Home

This page is powered by Blogger. Isn't yours?