Sunday, December 19, 2004

 

ஐஸ§க்கே ஐஸ்!


'க்ளெரிஹ்யு' போட்டிக்கு, வெண்பாப் போட்டியைவிட எண்ணிக்கையில் அதிகமாக, ஐந்நூறுக்கும் மேற்பட்ட கார்டுகளும் கடிதங்களும் வந்து திணறடித்தன. அனைத்தையும் நண்பர் சந்திரனின் உதவியுடன் படித்துத் தேர்ந்தெடுத்ததில், எனக்குப் பிடித்த பதினைந்து இவை:

ஓரங்கி கட்டி பீரங்கி வென்றார் சாந்தி வழியில் காந்தி!
- தாஜ்பால், வல்லம்.

தோற்று வெல்வதில் இன்னொரு கஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி!
- ஸ்ரீ, சென்னை-94.

கலிங்கத்தால் கலங்கி சோகமான அசோகன் ரத்தம் வெறுத்து யுத்தம் நிறுத்தி புத்தம் வளர்த்தான்!
- சரவணன் சேனா, விளாத்திக்குளம்.

அக்கினிச் சிறகுகளால் மக்களைக் கவர்ந்த கலாமுக்குச் சலாம்!
- இரா.இ.தநா, சேலம்-6.

எழுபது தாண்டியும் எழுதியே வரும் கலைஞர் இளைஞர்!
- பொன்.குமார், சேலம்.

உலக அழகி உடன் பழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஐஸ் வைத்தார் ஓபராய்!
- எம்.வி.பாலகிருஷ்ணன், சென்னை-37.

அறியார்களிடம், கடவுள் தெரியார் எனச் சொன்னார் பெரியார்!
- வி.எஸ்.சூர்யா, திருப்பூர்.

முத்தமே இல்லாமல் முழுநீளப் படமென்றால் சத்தம் போடுகிறார் கமல்!
- ஷைலஜா, பெங்களூர்-76.

பேட்டிங்கில் தனியிடம் ரேட்டிங்கில் முதலிடம் சொல்லப்போறேன் நச்சுனு வெல்லப்போறது சச்சினு!
- அட்டிகை நாச்சியார், காரமடை.

கட்டினவளைக் கடைசிவரை காப்பாற்றாவிடினும் தேசியக்கொடி காத்த குமரன் அமரன்!
- பாரதி கல்யாண், விருகம்பாக்கம்.

கவுண்டமணி நகைச்சுவை சினிமாவில் தனிச்சுவை காலால் உதைத்து வேடிக்கை காட்டுவதவர் வாடிக்கை!
- கே.ஆனந்தன், பாப்பிரெட்டிப்பட்டி.

சரித்திரம் படைக்க சரித்திர நாவல்களை Bulky-யாய் எழுதினார் கல்கி!
- அசோக்ராஜ், தஞ்சாவூர்.

ஐம்புலனில் ஒன்றயர்ந்து ஆம்புலன்ஸில் வந்தமர்ந்த கெட்டவனுக்கு வழி ஏதப்பா சுட்டது விதி வீரப்பா!
- தி.சு.விஜய் ஆனந்த், கன்னியாகுமரி.

சல்மான் ருஷ்டி எழுத்தில் புஷ்டி 'அதிலும்' படுசுட்டி!
- ஜூலியஸ், மதுரை-16.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் பாதம் பதித்த உன் கால் வெரி ஸ்ட்ராங்!
- அமுதன், சென்னை-93.

உற்சாகத்துடன் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த போட்டிக்குப் பெயர் 'என்றான் முருகன்'. காத்திருங்கள்!


விகடன் 14.11.04 இதழில், வெண்பாப் போட்டியில் நான் தேர்ந்தெடுத்துத் தந்திருந்த வெண்பாக்களில் பிழை இருந்ததாக, தளைதட்டியதாகக் குறிப்பிட்டு பெரம்பலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து சே.திருவருள் பிரகாசம் எழுதியிருந்தார்.

தான் இயற்றிய நேரிசை வெண்பாக்கள் சிலவற்றைத் தந்து, 'பாராட்ட மனம் இருந்தால் பாராட்டுங்கள்' என்றும் எழுதியிருந்தார்.

பாராட்டலாம்... தங்கள் முதல் வெண்பாவே தளைதட்டாமல் இருந்தால்!

'வெண்பாவில் பாட்டெழுத வேண்டின் எவரெனினும்
கண்ணாக யாப்பதனைக் கற்றிடுக - பண்பாடும்
ஆற்றல் பெருகி அறிவொளியும் வீசிடுங்கால்
போற்றிப் புகழுமிந்தப் பூமி'

- என்று எழுதியுள்ளீர்கள்.

பூமி என்று குற்றியலுகரமற்ற ஈரசைச் சீரில் வெண்பாவை முடிப்பது தவறில்லையா? நேர் - நாள், நிரை - மலர், நேர்பு - காசு, நிரைபு - பிறப்பு... இவற்றுக்குத்தான் அனுமதி!

'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'

என்னும் குறட்பாவை சே.தி.பிரகாசத்துக்கு மட்டுமல்ல... பொதுவாகத் தமிழர்களுக்கே வலுவாகச் சிபாரிசு செய்கிறேன்.

குற்றம்சாட்டுவதில் அவசரம், நம்முடைய ஊடகங்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், தனிமனிதர்கள் அனைவருக்கும் மாநிலம் தழுவிய பொதுக் குணம். பொதுவாகத்தான் சொல்கிறேன்!

சிறந்த எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் கட்டுரையைப் பற்றி 5.12.04 இதழில் எழுதியதில் மகிழ்ந்து, 'கடல் மணலுக்கு ஒரு கிளிஞ்சலின் ஞாபகம்' என்று ஒரு வரிக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சிறு திருத்தம்... 'கடல் மணலில், ஒரு கிளிஞ்சலுக்கு மற்றொரு கிளிஞ்சலின் ஞாபகம்'தான் அது. இருவருமே கிளிஞ்சல்கள்தாம்!

பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் செல்வி ம.இராதாவின் 'அழைத்த இதழ்கள்' (தமிழ் பதிப்பகம், ஜெயங்கொண்டம்) என்னும் கவிதைத் தொகுப்பைத் தற்செயலாகப் பிரித்துப் பார்த்தபோது, பளிச்சென்று இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது தலைப்பு - ‘Tamil காதல்'!

'இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ந்து
இடந்தலைப் பாட்டில் இடறி விழுந்து
இணையத்தில் சம்பாஷித்து
பகற்குறியில் பார்த்து
இரவுக்குறியில் பகிர்ந்துகொண்டதில்
தலைவி தாயானாள்
தலைவன் தலைமறைவானான்
செவிலியும் நற்றாயும்
சேர்ந்தே தேடுகின்றனர்
'மேட்ரிமோனியல்' காலத்தில்
இன்னொரு தலைவனை!

பகற்குறி, இரவுக்குறி, செவிலி, நற்றாய் போன்ற சங்ககாலத்து அகத்திணைச் சொற்களை அறிந்தவர்கள், இந்தக் கவிதையை மிகவும் ரசிப்பார்கள்!<< Home

This page is powered by Blogger. Isn't yours?