Sunday, January 30, 2005

 

பூட்டிய மனங்களைத் திறப்பது எப்படி?


இந்தியாவுக்குத் தெற்கே மிக அருகில் உள்ள நாடு எது?

கார்த்தி சிதம்பரம் (‘க்’கன்னா கிடையாது!) என்னிடம் கேட்ட இந்தக் கேள்விக்கு அதிர்ச்சி பதில் கடைசியில்...


மருத்துவத்தில் BMC என்னும் இயலில், சில தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. மனித மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் நேரடியாகச் செய்தித் தொடர்பு ஏற்படுத்துவது எப்படி?

மூளையைத் திறந்து, ஓரிரு எலக்ட்ரோடுகளை விதைத்தா... அல்லது, மண்டையில் சுரண்டிவிட்டு இ.இ.ஜி. சாதனங்களை ஒட்டவைத்தா? இவ்விரண்டு முறைகளும் உள்ளன. இன்வேசிவ், நான்-இன்வேசிவ் என்று வகைப்படுத்துகிறார்கள். பல்வேறு காரணங்களால் தசைகளின் எல்லாச் செயல்களையும் முழுவதும் இழந்தவர்கள், அதாவது கண் ரப்பையிலிருந்து கால் விரல் வரை அத்தனை சலனங்களையும் செயல் திறன்களையும் இழந்தவர்கள்! கோமாவில் இல்லை... ஆனால், அவர்களின் சிந்தனாசக்தி மட்டும் அப்படியே மிச்சமிருக்கிறது! இப்படிப்பட்டவர்களுடன் எப்படித் தொடர்புகொள்வது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள்!

சிந்திக்கும்போது மூளையில் ஏற்படும் 'எஸ்.ஸி.பி.' (SCP - Slow Cortical Potential) என்னும் மெதுவான நுண் மின்அலைகளை 'ஆம்/இல்லை' வகைக் கேள்விகளுக்கு விடையாகக் கட்டுப்படுத்த முடிகிறது. இதன்மூலம், அந்த மூளையுடன் நேரடி யாகத் தொடர்புகொள்ள முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். சக்கர நாற்காலியைச் சிந்தனையாலேயே கட்டுப்படுத்த முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

டால்டன் ட்ரும்போ என்பவர் 1939-ல் எழுதிய நாவலில், யுத்தத்தில் சேதப்பட்ட ஒரு சோல்ஜர் அத்தனை இயக்கங்களையும் இழந்துவிடுகிறான். காது போச்சு, கண் போச்சு, பேச்சு போச்சு, தொடுகை போச்சு... சிந்தனை மட்டும் போகவில்லை! மெள்ள மெள்ளத் தலையசைப்பதன் மூலம் 'ஆம், இல்லை' என்று பதில் சொல்லப் பழகுகிறான். அதை வைத்துக்கொண்டு, தந்தியில் பயன்படுத்தும் மோர்ஸ் கோடு மூலம் உலகுடன் பேசுகிறான். இந்த முறையைத்தான் ஆதாரப்படுத்தி, தற்போது ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரு கம்ப்யூட் டர் திரையில் துள்ளிக் கொண்டிருக்கும் பந்தை 'ஆம்' என்றால் மேலே, 'இல்லை' என்றால் கீழே போகும்படி சிந்தனை மூலம் கட்டுப்படுத்தப் பயிற்சி தருகிறார்கள். இவ்வாறு, பூட்டப்பட்ட மனங்களைத் (Locked Minds) திறப்பதில் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். பூட்டப்படாத மனங்களைத் திறப்பதே எத்தனை பெரிய காரியம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

ஒரு ஹெலன் கெல்லரோ, ஸ்டீபன் ஹாக்கிங்கோ இவ்வகை ஆராய்ச்சி முறைகளால்தான் உலகுடன் தொடர்பு கொண்டார்கள். ‘Locked in’ ஸ்திதியில் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு ஒரே ஒரு தசையோ, ஒரு கண்ணிமையோ மட்டும் இயங்கும். அவர்களுடன் தொடர்புகொள்வது அவ்வளவு கஷ்டமல்ல. ஒவ்வொரு எழுத்தாகக் காட்டி, 'ஆம்' என்றால் ஒரு தடவை சிமிட்டல், 'இல்லை' என்றால் இரண்டு சிமிட்டல்... இப்படித் தொடர்பு கொண்டு, அவர்களை வைத்துக் கவிதைத் தொகுப்புகூடப் போட்டிருக்கிறார்கள்!

அடுத்த வருஷம் வரப்போகும் தமிழ் சினிமாக்கள் அனைத்தையும் ஒருசேர ஸ்தம்பிக்க வைத்து ஹைஜாக் பண்ண யாராவது யோசித்திருந்தால், ஜனவரி 7\ம் தேதி பிலிம் சேம்பர் அரங்கத்தில் அதை எளிதாகச் சாதித்திருக்கலாம். பாலாஜி சக்திவேல் உட்பட கிராமத்தில் இருந்து வந்த அத்தனை இளம் டைரக் டர்களும் ('நான் சாலிகிராமம்' - ரமேஷ்கண்ணா) கூடி, இயக்குநர் சுசி கணேசனின் 'வாக்கப்பட்ட பூமி' புத்தகத்தை வெளியிட, அவர் தாய் சிட்டம்மாள் ‘ஈன்றபொழுதிற் பெரிதுவந்து’ பெற்றுக்கொண்டார்.

சுனாமியில் (இப்போது இது தமிழ் வார்த்தையாகிவிட்டது) இழந்தவர்களுக் கும் இறந்தவர்களுக்கும் செலுத்திய ‘மௌன’ அஞ்சலியில் அவ்வப்போது செல்போன் ஒலித்தது.

பாரதிராஜா நெகிழ்வாகப் பேசினார். நான் எழுதிவைத்துப் பேசினேன். மேலாண்மை பொன்னுச்சாமி முற்போக்காகப் பேசினார். டாக்டர் அனந்த கிருஷ்ணன் தெளிவாகப் பேசினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் சிரிக்க வைத்துப் பேசினார். சுசிகணேசன் சுருக்கமாக ஏற்புரைத்தார்.

காலஞ்சென்ற ப.திருப்பதிசாமி, சுசி கணேசன், கரு.பழனியப்பன், எஸ்.பி. ஹோசிமின்போன்ற பலர் விகடன் மாணவர் திட்டத்திலிருந்து பிரமோஷன் வாங்கித் திரைத்துறைக்குச் சென்றவர்கள். ‘தினமணி கதி’ரில் கணேசன் 92’\ல், நிறையக் கவனித்து, எளிய நடையில் எழுதிய இந்தக் கிராமத்துப் பயணக்கட்டுரைத் தொகுப்பின் தனிச் சிறப்பு போட்டோக்களும் தோட்டா தரணியின் கோட்டுச் சித்திரங்களும்!

சுசி கணேசனின் புத்தக வெளியீட்டு விழாவில், என் ஹாஸ்டல் தினங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னேன். எம்.ஐ.டி\யில் சீனியர் மாணவர்களுக்கு தனி அறை. என் அறையின் சுவர்களில் கண்டபடி படம் வரைந்திருந்தேன். என் தந்தையார் அப்போது பாபநாசத் தில் இன்ஜினீயராக இருந்தார். திடீர் என்று சொல்லாமல் கொள்ளாமல் என்னையும் ஸ்டான்லியில் மெடிக்கல் படித்துக்கொண்டு இருந்த என் அண்ண னையும் பார்க்க வந்தார்.

கடிதம் போட்டுவிட்டு வரவேண்டாமோ? கதவைத் திறக்கிறேன் அப்பா நிற்கிறார்! போதாக்குறைக்கு ஆடிட்டர் சித்தப்பாவையும் அழைத்து வந்திருந்தார். சுவர் முழுவதும் வியாபித்திருந்த ஒரு பெண்ணின் சார்க்கோல் சித்திரம்... உடன் ஒரு கவிதை வேறு!

நான் உள்ளுக்குள் ரொம்ப சிறுமைப் பட்டுப் பேயறைந்தாற்போல் விழித்து அவசர அவசரமாக 'போண்டா நன்றாக இருக்கும்' என்று மெஸ்ஸ§க்கு அவர்களை அழைத்துச்சென்றேன். அப்பா மௌனமாகவே இருந்தார்.

எனக்குக் குற்ற உணர்ச்சி வெள்ளம் போல் ததும்ப 'அது என்னாச்சுன்னா...’ என்று இரண்டு முறை ஆரம்பித்து விளக்கத்தைக் கைவிட்டேன். எப்படி அவருக்கு விளக்குவது? நான் அப்படிப்பட்ட ஆசாமியில்லை. பாடப் புத்தகங்களைப் படிக்கிறவன், ஏதோ கிறுக்குத்தனத்தால் விதிவிலக்காக அந்தச் சித்திரத்தை வரைந்துவிட்டேன். வெள்ளையடித்து அழிக்க நேரம் தராமல் வந்தால் எப்படி என்று எவ்வளவோ மனதுக்குள் சொன்னாலும் வாய் வார்த்தையாக எதுவும் வரவில்லை. காற்றுதான் வந்தது.

அப்பா இறக்கும்வரை அந்த சம்பவத்தை நேரடியாக என்னிடம் கேட்கவில்லை. சேலத்தில் ஒரு முறை இரவில் நோயால் படுத்து எழுந்திருந்தபோது, நானே அப்பாவிடம்"எம்.ஐ.டி-ல படிக்கறபோது சுவர்ல..."

"பொம்மனாட்டி படம் போட்டு இருந்தே... ஞாபகம் இருக்கு. உடம்பில ஒண்ணுமில்லாம..."

"இல்லைப்பா, ஷர்ட் போட்டுண்டு இருந்தேம்பா."

"சிரிக்க வைக்காதே."

"அதுக்கு ஏம்ப்பா என்னைக் கோவிச்சுக்கலை."

"படம் போட்டாலும் படிச்சு வெளில வந்துருவேனு எனக்குத் தெரியும்."

கார்த்தி சிதம்பரத்தின் கேள்விக்கு விடை - இந்தோனேசியா!


எனக்குப் பிடித்த கவிதை

வீடுகள் முளைக்கும்
விளைநிலம் எல்லாம்
காடுமேடெல்லாம் கார்கள்
காற்றை நசித்துக் கடக்கும்
பற்சக்கரப் பதிவுகள்
இனிய தோட்டத்தில்
இரும்புக் கழிகள்
இதயத்துக்கருகில்
இயந்திரப் பொறிகள்
கம்ப்யூட்டரின் மடியில்
படுத்துப் புரளும் பூமி
காற்றும் விற்கப்படும்.
சத்தியமும் அன்பும்
வாங்க ஆளின்றி!

('நிகழ்', மேன்ஷன் கவிதைகள்- பவுத்த அய்யனார்)

Sunday, January 23, 2005

 

நாற்பதாண்டு தெளிவு!


பேராசிரியர் கவிஞர் பழமலய்யும், பர்த்யு (Purdue) பல்கலைக் கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஏ.ஐ. (Artificial Intelligence) என்னும் செயற்கை அறிவியல் பாடம் நடத்தும் புரொபஸராக இருக்கும் வெங்கட் வெங்கடசுப்ரமணியனும் வீட்டுக்கு வந்திருந் தார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு கலக்கலான அனுபவமாக இருந்தது.

பழமலய் வள்ளலார் பற்றியும் வெங்கட் ஜெனட்டிக் அல்காரிதம் பற்றியும் பேச, இடைச்செருகலாக நான் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலுக்கும் எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ§க்கும் மத்தியில் தாவிக் கொண்டிருக்க... எங்கள் கிவி (நாய்), 'ஏதாவது ஒரு சப்ஜெக்ட் பேசுங்கப்பா' என்பதுபோல் ஒருமாதிரி எங்களை வேடிக்கை பார்த்தான்.

பழமலய்க்கு எப்போதும் ஆரிய-திராவிட வேறுபாடுகளில் ஈடுபாடு.

'லெமூரியா கண்டத்திலிருந்து வந்த திராவிடர்களும் சிந்துவெளியிலிருந்து வந்த ஆரியர்களும் கலந்ததுதான் இன்றைய பிராமணர்கள் என்றொரு சித்தாந்தம் இருக்கிறதே... அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று வெங்கட்டைக் கேட்டார் பழமலய் (இது யார் சித்தாந்தம் என்று சொல்லவில்லை!).

'இந்தப் பிரச்னை யெல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் பல்வேறு மனிதஇனங் களின் டி.என்.ஏ. சரங்களை ஒப்பிடு வதன் மூலம் தீர்ந்து விடும்!' என்றார் வெங்கட்.

தீர்ந்தாலும், அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒப்புக்கொள்ளுமா? சந்தேகம்தான்.

ஏ.ஐ. என்னும் செயற்கை அறிவியல் மிகுந்த வீறாப்புடன் புறப்பட்டது. மெள்ள மெள்ள, 'மனித மூளை செய்யும் காரியங் களையெல்லாம் கம்ப்யூட்டர் மூலம் செய்ய வைப்பது அவ்வளவு எளிதல்ல' என்பதை இந்த நாற்பதாண்டு களில் உணர்ந்திருக்கிறார்கள்.

தற்போது இந்த இயலில், மிகை தீர்த்த ஒரு தெளிவு நிலை வந்திருக் கிறது!

என் புத்தாண்டுத் தீர்மானங்களில் ஒன்று - எத்தனை சொன்னாலும் தெரியாதவர் அனுப்பி, அழையாமல் வந்து என்னைச் சூழ்ந்துள்ள புத்தகங்களில், குறைந்த பட்சம் நூற்றைம்பதை நூலகங்களுக்கு அன்பளிப் பது (முதியோருக்கான நூலகங்கள் விண்ணப்பிக் கலாம்!).

மற்றொன்று - இந்த வருஷம் பன்னிரண்டு கவிதைகள் எழுதுவது. அந்த வரிசையில், ஜனவரி மாதக் கவிதையைக் கீழே கொடுத்துள்ளேன்! அன்பர்கள் பெஞ்சு, நாற்காலிகளை என் மேல் எறியாமல் இருந்தால், இந்த விஷப் பரீட்சையைத் தொடர உத்தேசம்.

கவிதை எனக்கு வராது
அதன் சுருக்கம் நெருக்கம்
சிக்கனம் மெத்தனம் யத்தனம்
எல்லாம் எனக்கு
நடுக்கம்
நான் உரைநடை ஆசாமி
வாக்கியங்கள் நீளலாம்
வேண்டுமிடத்தில் மாளலாம்
நெளிய வேண்டாம்
காதல் போன்ற அபத்தங்களில்
ஒளிய வேண்டாம்
வார்த்தைகளைச் சலிக்க வேண்டாம்
அவை மணியோசை போல
ஒலிக்க வேண்டாம்

கவிதை கவிஞர்களுக்கு
உரைநடை கலகங்களுக்கு

- சுஜாதா

இந்தக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு NDTVயின் ‘Poetry Corner’-ல் உள்ளது.

டிசம்பர் சீஸனில் முத்தாய்ப்பாக, ‘கலாரசனா’வில் மாண்டலின் யு.ஸ்ரீநிவாஸ் கச்சேரிக்குப் போயிருந்தேன். இவர் பாலகனாக இருந்தபோதே கேட்டிருக்கிறேன்.

இடைப்பட்ட வருஷங்கள், இவரது திறமையைத் தீட்டி, அந்த வாத்தியத்தால் முடியாத சங்கதி எதுவுமில்லை என்பதைச் சிரித்துக்கொண்டே நிரூபித்திருக்கிறார்!

அதுவும், அன்று அரங்கம் நிறைந்த, அதிகம் நடுவே எழுந்து போகாத ரசிகர்கள். செல்வகணேஷ், ஹரி குமார், சுப்ரமண்யம், ஸ்ரீரங்கம் கண்ணன் நால்வரும் இணைந்த ஆவர்த்தனங்கள்... உற்சாகம் துள்ளியது! மக்லாஃப்லின், மியோலா, லுசியா மூவரும் சேர்ந்து சான்ஃப்ரான் சிஸ்கோவில் வாசித்த பிரசித்தி பெற்ற 'லைவ்' கித்தார் இசையை ஞாபகப்படுத்தியது.

அந்த ரேஞ்சுக்கு இசைப் பின்னல்கள் சிலவற்றை, ஜனவரி 1-ம் தேதி கச்சேரி யில் ஸ்ரீநிவாஸ் பயன் படுத்தினார்.

தமிழில் மருத்துவம், சோதிடம், இலக்கணம், கணிதம் போன்ற அத்தனை இயல்களும் சென்ற நூற்றாண்டு வரை செய்யுள் வடிவத்தில்தான் எழுதப் பட்டன. பெரும்பாலும் வெண்பா கட்டளைக் கலித்துறை வடிவங்களைப் பயன்படுத்தினார்கள்.

நவீன இயல்பியலின் (இயற்பியலா, இயல்பியலா... அறிஞர்கள் தீர்மானிக்க வேண்டுகிறேன்!) ஒரு பகுதியான ஒளியியலைத் தமிழார்வமும் அறிவியல் திறமையும் கொண்ட முனைவர் தி.சே.சுப்பராமன், 'ஒளி நூறு' (மீனாட்சி மொழியகம், சென்னை-83) என்ற புத்தகத்தில், முழுதும் வெண்பா வடிவத்தில் எழுதியுள்ளார்.

உதாரணமாக, 'ஒருங்கொளி' என்னும் லேசரின் பண்புகளான directionality, monochromaticity, intensity, coherence களை,

'ஓரியலும் உற்ற திசைவிலாகத்
தன்மையும்
ஓரலையாய் வாழும்
இயல்புமாய் சீருலவ
ஆர்ந்த செறிவுடன்
ஆற்றும் ஒருங்கொளியை
தேர்ந்து நலம்பெறச் செய்!'

என்று கச்சிதமாகச் சொல்கிறார்.

முனைவர் அவர்களுக்கு ஒரே ஒரு யோசனை... புத்தகத்தின் அடுத்த பதிப்பின்போது அட்டைப் படத்தை மாற்ற வேண்டுகிறேன்.

மீனாட்சியம்மனையும் மதுரை கோபுரத்தையும் பார்த்தால், பக்திப் புத்தகம் போலத் தோன்றுகிறது. அம்மனுக்குப் பதில், நியூட்டன் அல்லது ஹைஜென்ஸ் பயன்படுத்தலாம்.

'இளமை - ரவுசு’ சிறப்பிதழில் கொடுத்திருந்த ஸ்நூப்பி கார்ட்டூனுக்கு விளக்கமாகப் பெரும்பாலானோர், 'அந்த நாய் சுச்சா போனதால் திட்டு வாங்கியது' என்றுதான் எழுதியிருந்தார்கள்.

ஸ்நூப்பி அப்படிப்பட்ட நாய் அல்ல. சிந்தனா சக்தியும் கற்பனைத் திறனும் உள்ள பீகிள் வகை ஒஸ்தி நாய்.

இருந்தும், பலர் எழுதியதற்கு மரியாதையாக, அதைக் கார்ட்டூனாக வரைந்து அனுப்பிய 'அண்ணாநகர் ஜீவி'க்கும், கோவை-34-லிருந்து கொஞ்சம் கற்பனையுடன், ''ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸைக்கூட ஒழுங்கா பிடிக்கமுடியலையேனு திட்றது’' என இரு பெயர்களில் (விஜயலக்ஷ்மி அருண்கிருஷ்ணா) எழுதியவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Sunday, January 16, 2005

 

அலைமகளின் அட்டகாசம்!


சென்ற வாரம், சுமத்ராவிலிருந்து சோமாலியாவரை இந்துமாக்கடலோரத்தின் பன்னிரண்டு நாடுகளைத் தாக்கிய ‘சுனாமி’ பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். Tsunami - இது ஒரு ஜப்பானிய வார்த்தை. அவர்கள் ‘T’யை சற்றே மென்மையாக உச்சரிக்கிறார்கள், (ட்)சுனாமி என்று! 'துறைமுக அலை' என்பது இதன் அர்த்தமாம்.

கடல் படுக்கையடியில் அதிக சக்தி பூகம்பங்கள் நிகழும்போது விளைவது. அப்போது கடல் தரை லேசாகப் புரண்டு படுக்கிறது. கடல் நீர்மட்டம் அந்த இடத்தில் சற்று உயர்கிறது. பர்மா ப்ளேட், இந்தியா ப்ளேட் என்ற இரண்டு 'டெக்டானிக்' ப்ளேட்களின் லேசான உரசலால் ஏற்பட்ட நம் வேண்டாத விருந்தாளி, இந்த சுனாமி. கடலடி பூகம்பத்தின் விளைவு கடல் நீரின் மட்டத்தைச் சற்றேதான் உயர்த்தியிருக்கிறது. புறப்படும்போது அந்த அலை மூன்று நான்கு அடிதான் உயரமிருக்கும். ஆனால், ஆயிரம் கிலோமீட்டர் வரை நீளம்! ஜல அளவு மிகமிக அதிகமாக இருக்கும் நீரில் கல் எறிந்தால் வட்ட வட்டமாகப் பரவுமே, அதுபோல்ஒரு பிரம்ம ராட்சஸ வட்டம்

ஆரம்ப ஸ்தலத்திலிருந்து ஏகோபித்துப் பரவி, தன் பயணத்தைத் துவக்குகிறது. இதை வர்ணிக்க, நாம் நம்மாழ்வாரைத் தான் நாட வேண்டும்.

‘ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழியெழ உலகம் கண்டவாறே!’

ஆழ்கடலில் இந்த சுனாமி அவ்வளவு ஆபத்தானதல்ல! உயரம் கம்மியாக, அதிவேகமாகப் பரவுவதால், நடுக்கடலில் உள்ள கப்பல்களை ஒரு தூக்கு தூக்கிவிட்டு, 'கரைக்கு வா! கவனிச்சுக்கறேன்' என்று அவசரமாகப் போய்க்கொண்டே இருக்கும். மணிக்குக் கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் வேகத்தில் தன் ராஜ்ஜியத்தை விரிவு படுத்தும்போது, பயண வேகம் மெள்ள மெள்ளக் குறைய, பின்னால் வரும் தண்ணீர் முன்னால் சென்ற நீரலை யுடன் சேர்ந்துகொண்டு (இதை shoaling என்கிறார்கள்) வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் கும்பல்போல முன் பக்கம் பெரிதாகி, கரையை வந்து சேருமுன் மூன்று மாடிக் கட்டட உயர அலை ஆகிவிடுகிறது.

குறுகிய காலத்தில் அது ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் கரையைத் தாக்கும்போது, அதன் சீற்றத்தில் உச்சகட்ட வடிகாலாக கடலோரக் கட்டடங்களை உப்புநீரால் குளிப்பாட்டி, உயரப் பந்தாடி, புரட்டி எடுத்து, மிதித்துச் சுழற்றித் திரும்பும்போது தரதரவென்று கார், போட், வீடு, நட்சத்திர ஓட்டல், வெள்ளைக் காரர்கள், குழந்தைகள், பெரியவர்கள், நல்லவர், உள்ளவர், பொல்லாதவர், இல்லாதவர், கவிஞர்கள், கலைஞர்கள், வலைஞர்கள் எல்லாரையும் கடலுக் குள் இழுத்துச்சென்று, அடுத்த அலைமகளிடம் ‘இந்தா வெச்சுக்கோ!’ என்று ஒப்படைத்து விடுகிறது.

'மொத்தம் ஒண்ணேகால் லட்சம் பேர்தான் செத்தார்களா... எட்டே முக்கால் ரிக்டருக்கு பத்தாதே! அடுத்த முறை, 'மவனே! இருக்கு உனக்கு' என்று சொல்லிவிட்டுச் சாது போலப் படுத்துவிடுகிறது.

இந்தப் பேராபத்தைத் தடுத்திருக்க முடியாதா என்றால், முடியாது! இதன் பரிணாமம் நம் மனித யத்தனங்களுக்கு மிக மிக மிக அதிகமானது. 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' சூரியனை வைத்து எரித்த விளக்கு ரேஞ்சுக்கு, ஊழி முதல்வன் உருவம் பெரியதோ பெரியது! அதன் முன் நம் கண்ணிவெடிகளும் தீவிரவாதங்களும் அற்பமோ அற்பம்! ஜே.கிருஷ்ணமூர்த்தி சூரியாஸ்த மனத்தை மும்பையில் பார்த்து வியந்தபோது, ‘can you help it!’ என்றார். அதுபோல, நம்மால் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்ய முடியாது.

ஆனால், இந்த கடலோரப் பேராபத்தை எதிர்பார்த்துச் சொல்லியிருக்க முடியுமா? ‘முடியும்’ என்கிறார்கள் புவியியலாளர்கள். நுட்பமான 'சுனாமி'க்கான கடல் படுக்கை சென்ஸார்களும், மிதவைகளும் (buoys) பசிபிக் பகுதியில் இருக்கின்றன. அவை சாட்டிலைட்டுகளுக்கு உடனடி செய்தி கொடுக்கும். அவர்கள் சைஸ்மோகிராஃப்கள் மூலம், சுமத்ரா கடலடி பூகம்பத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். எட்டரை ரிக்டர் நிச்சயம் பதிவாகியிருக்கும். இடமும் தெரிந்திருக்கும். அதன் மேற்கு நோக்கிய பயணமும் வேகமும் தெரிந்திருக்கும். ஒரு டெலிபோனை எடுத்து இந்திய அரசை எச்சரித்திருக்கலாம். யாருக்குச் சொல்வது?

அரசாங்கத்துக்கு! அரசாங்கச் செய்தித் தொடர்பு என்பது பந்தாக்கள் நிறைந்த ஆமை வேகக் காரியம். அமெரிக்க அரசு, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, கலெக்டர்கள், தாசில்தார்கள், கரையோர போலீஸ் கான்ஸ்டபிள்கள் என்று எச்சரிக்கை வடிகட்டி, அவர்கள் பாட்டரி போட்டு ஒலிபெருக்கிகளுடன் வந்து சேர்வதற்குள்... டூ லேட்! அலை வந்து சேர்ந்து அடித்துச் சென்றுவிட்டது. மேலும், ‘கலிஃபோர்னியா பக்கம் வருகிறதா? இல்லையே! ஆளைவிடு!’ என்று அவர்களும் வாளாவிருந்திருக்கலாம். பேராபத்துக்கான எச்சரிக்கை தரும் கருவிகள் எதுவும் நம்மிடம் இல்லை. அதற்கான செய்தித் தொடர்புகள், சைரன்கள் எதுவும் இல்லை. இருந்திருந்தால், சுனாமி சுமத்ராவிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் வந்து சேரும் சில மணி நேரத்துக்குள் நம் கடலோர மக்கள் அனைவரும் உள்நாட்டில் சரணடைந்து இருக்கலாம். உயிர் சேதத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம்.

பொதுவாக, சுனாமி பசிபிக் மாக்கடலின் நெருப்பு வட்டம் ring of fire பகுதியில்தான் புறப்படும். மிக அரிதாகத்தான் மெடிட்ட ரேனியன், கரீபியன் கடல்களிலும், அதைவிட அரிதாக இந்துமாக் கடலிலும் புறப்படும். ஜப்பான், ஹவாய் தீவு இரண்டும் தான் அதிகம் அடிபடும். ஹவாய் தீவில் 1819-லிருந்து 46 சுனாமிக்கள் தாக்கியிருக்கின்றன. 1960\ல் சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் புறப்பட்ட அலை 16,000 கிலோ மீட்டர் தாண்டி, ஜப்பானை வந்து தாக்கியது. 22 மணி நேரம் பயணம் செய்தது. இந்தோனேசியாவில் 1883\ல் அலையடித்து 16,000 பேர் மூழ்கினார்கள். இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இது முதல் அனுபவம்!

உலகளாவிய உதவிகளுக்குக் குறைவில்லை. அதை வாங்கி உரியவருக்கு உரிய நேரத்தில் சேர்ப்பிப்பதைத் தடுக்க, கூட்டு முயற்சியாக மைய அரசு, மாநில அரசு, சன் டி.வி., ஜெயா டி.வி., தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அனைவரும் 'நான்தான் முந்தி' என்று முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நலிந்த மக்களைக் காப்பாற்ற அரங்கனை இரங்கி வேண்டுகிறேன்.

9/11-ன்போது நியூயார்க் மேயர் ஜூலியானி மாதிரி யாராவது ஒருவர் தேவை. இல்லையேல், சுனாமி மிச்சம் வைத்தவர்களை பேனாமியால் அன்பாலேயே கொன்றுவிடுவார்கள்!

பீச் பக்கம் ஒரு வீடு வாங்கலாம் என்ற எண்ணமிருக்கும் அன்பர்கள் யோசியுங்கள். நான் மயிலாப்பூரில் இருப்பதால், ஒரு லைஃப் ஜாக்கெட் வாங்கிவிட உத்தேசித்திருக்கிறேன்.

எபிக-

நீயுமா
பாரதி
விடுதலையைப் பாட
நாங்கள்
குனிந்து கும்மியடிக்க
வேண்டுமா?
- நர்மதா
தொகுப்பு: 'நாங்கள் அவர்கள் அல்ல'


எத்தனை எத்தனை முருகனடா!

'என்றான் முருகன்' போட்டிக்கும் நிறைய கார்டுகள் வந்தன (இனி அனுப்ப வேண்டாம்). அவற்றில் எனக்குப் பிடித்தவை இவை:

"வடை சுவையாக இருந்தது" என்றான் முருகன் மெதுவாக.

-கோ.முரளிதர், வேளச்சேரி.

"நீட்டி முழக்காதே!" என்றான் முருகன் சுருக்கமாக.

-ஆதனூர் சோழன், மதுரை-18.

"தொப்புளில் பம்பரம் விடுவது கேவலம்" என்றான் முருகன் சாட்டையடியாக.

-பாரதி கல்யாண், விருகம்பாக்கம்.

"ராணுவத்தில் சேரப்போகிறேன்" என்றான் முருகன் மிடுக்காக.

-வரத.சண்முகசுந்தரவடிவேலு, வாழப்பாடி.

"வாழைப்பழம் வாங்கி வா" என்றான் முருகன் கனிவாக.

-பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி-26.

"இன்னிக்கு ரோஜா பூத்திருச்சு" என்றான் முருகன் மலர்ச்சியாக.

-தெ.சு.கவுதமன், ஓட்டேரி.

"நிர்வாணத்தில் ஒன்றுமே இல்லை" என்றான் முருகன் அப்பட்டமாக.

-பாலா, நாமக்கல்.

"பிரமோஷன் கிடைத்துவிட்டது" என்றான் முருகன் பதவிசாக.

-இரா.ஆதித்தநாராயணன், தஞ்சாவூர்.

"புது ஹீட்டர் சூடே ஏறலை" என்றான் முருகன் கொதிப்பாக.

-ந.சுப்பிரமணியன், சென்னை-93.

"எல்லாமே நல்லா இருந்தது" என்றான் முருகன் பாராட்டாக.

-சுஜாதா, மயிலாப்பூர்.

Sunday, January 09, 2005

 

வீணைக்கு ஜீன்ஸ்... கீபோர்டுக்கு வேஷ்டி!


சென்னையில் டாக்டர் பி.கே.வேதாந்தனைச் சந்தித்தேன். அமெரிக்க கொலராடோ மாகாணத்தில் ஆஸ்துமா சிகிச்சை நிபுணர். மைசூர்க்காரர். கன்னடத்தில் பேசியதும் கட்டி முத்தம் கொடுக்காத குறை!

‘சர்வதேச ஆஸ்துமா சேவை’ என்னும் அமைப்பின் தலைவர் (pkv1947@yahoo.com). பாண்டிச்சேரியில் ஒரு படிப்பு மையமும் ஆராய்ச்சி மையமும் டாக்டர் ஸ்ரீதருடன் சேர்ந்து அமைக்க இருக்கிறார். ஆஸ்துமா பற்றிய புதிய தகவல்கள் சில தந்தார்.

1. கிராமப்புறத்தில் தூசு, புழுதி அதிகமிருந்தாலும் ஆஸ்துமா நகர்ப்புறத்தைவிட அங்கே குறைவு.

2. நகர நெருக்கடி வாழ்க்கையே ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணம். கிழக்கு ஜெர்மனி ஏழ்மையாக இருந்தபோது ஆஸ்துமா குறைவு. மேற்கு ஜெர்மனியுடன் சேர்ந்து நகர நாகரிகமும் சுபிட்சமும் பெற்ற பின் அதிகரித்துவிட்டதாம்.

3. புகை, புழுதியைவிட 'டஸ்ட் மைட்' என்னும் நுண்பூச்சிகள்தான் ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணம். 1964-ல் கண்டறியப்பட்ட இந்தச் சிறு பூச்சிகள் உலகெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன. காற்றில் ஈரம் 70-லிருந்து 80 சதவிகிதம், உஷ்ணம் 24-லிருந்து 27 டிகிரி இருந்தால் இவற்றுக்குக் கொண் டாட்டம். உங்கள் வீட்டுக்குள் புத்தம் புதுசாக ஒரு படுக்கை வாங்கி வருகிறீர்கள். வாங்கின நாலு மாதத்தில் அது 20 கோடி நுண்பூச்சிகளின் வாசஸ்தலமாகிவிடும். தலையணை, கரடி பொம்மைகள், சோபா திரைகள், பெட்ஷீட், உங்கள் ஆடைகள் எல்லாவற்றிலும் அவை இருக்கும். அவற்றை எந்தவிதத்திலும் ஒழிக்க முடியாது.

ஆனால், இவற்றால் வியாதி வருவ தில்லை. இவற்றின் கழிவினால்தான். அவைதான் மூக்கினுள்ளும் கண்திரையின் ஊடேயும் புகுவதற்கான சரியான சைஸில் உள்ளன. அவைதான் ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற அலர்ஜிக்களை உண்டாக்குகின் றன. ஓர் அறையில் நுழையும் போது, சட்டை போடும்போது, படுக்கையில் விழும்போது என நீங்கள் தவிர்க்க முடியாமல் சுவாசிக்கும் இந்த கால் மில்லிமீட்டர் பூச்சிகளை வெயிலில் நுட்பமாக உற்றுப்பார்த்தால் வெள்ளைப் புள்ளிகளாகத் தெரியலாம். அவற்றுக்கு கண், காது, மூக்கு கிடையாது. வாய் மட்டும்தான். 90 நாள் வரை வாழக்கூடிய இந்தச் சிறு பூச்சிகள் உஷ்ணம் அதிகமிருந்தால் மரித்துப்போகும்.

வாக்குவம் க்ளீனரால் இந்த மைட் போகாது. வாஷிங்மெஷினில் வெந்நீர் பயன்படுத்த வேண்டும். நவீன வாஷிங் மெஷின்களில் இந்த வசதியிருக்கும். விளக்குமாறு வைத்துப் பெருக்குவதில் போகாது. ஈரத்துணி போட்டுத் துடைப்பது நல்லது.

அடுத்த தடவை படுக்கையில் தனியாகப் புரளும் போது, கூடவே கோடிக்கணக்கான நுண் பூச்சிகள் உங்க ளுக்குத் துணையிருக்கின்றன என்பதை அறியவும்.

4. வாகனப் போக்குவரத்தில் வெளிப்படும் கார்பன் மோனாக்ஸைடும் ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணம். (லயோலா மாணவர்கள், சென்னையில் ஒரு சர்வே நடத்தி அச்சப்படலாம்).

5. வீட்டில் பெரியவர்கள் புகை பிடிப்பதும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரக் காரணம். ஆஸ்துமா ஒரு தொற்றுநோய் என்று ஒரு மகானுபாவன் தப்பான செய்தியை ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தாராம். இது மிக மிகத் தவறான தகவல் என்று டாக்டர் ஸ்ரீதரன் குறிப்பிட்டு வருத்தப்பட்டார். ஆஸ்துமா எந்தவிதத்திலும் மற்றவர்களிடமிருந்தும் வராது, பரவாது. சில அரைகுறை வைத் தியர்கள் வலுவான ஸ்டீராய்டுகளைக் கொடுத்துக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, பயங்கரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துகிறார்கள். கிட்னி பாழாகிவிடும்.

ஆஸ்துமாவுக்கு இன்றைய நாட்களில் மிக அருமையான மருந்து, மாத்திரைகள் உள்ளன. ஹைதராபாத் மீனையும் லாட்ஜ் வைத்தியர்களின் மூலிகை சூர்ணங் களையும் அரைகுறை அறிவுள்ள கட்டுரை களையும் நம்பாமல், தக்க சமயத்தில் ஆஸ்துமாவில் தேர்ச்சி பெற்ற டாக்டர்களிடம் காண்பித்தால் அதன் பாதிப்பு பெருமளவுக்குக் குறையும்.

டாக்டர் வேதாந்தன், பொது மருத்து வர்களுக்கு ஆஸ்துமா சிகிச்சையில் பயிற்சி கொடுத்து பாண்டிச்சேரி, அண்ணாமலை அல்லது ராமச்சந்திரா மூலம் பட்டயம் கொடுக்க முன் வந்துள்ளார்.

டிசம்பர் சீஸனில் கடம் கார்த் திக்கின் ‘ஹார்ட் பீட் ஆன்ஸாம்பிள்’ கதம்ப நிகழ்ச்சியை ரசித்தேன். தாள வாத்தியங்களுடன் எம்பார் கண்ணன் - வயலின்; பி.ராஜு மேண்டலின் சேர்ந்து கொண்டு சாருகேசி, பூஷணி, அம்ருத வர்ஷிணி போன்ற மென்மையான ராகங்களை இசைக்கும்போது அற்புத சுகமாக இருக்கிறது. எம்பார் கண்ணன், கன்யாகுமாரியின் சிஷ்யர். இன்றைய தினத்தின் மிகச்சிறந்த வயலின் கலைஞர் என்று தயங்காமல் சொல்ல லாம். கார்த்திக் கடம் வாசிக்கிறார்; பாடுகிறார்; கொன்னக்கோல் சொல் கிறார். அடுத்து அவரை சினிமாவுக்கு இசை அமைக்க யாராவது கூப்பிட்டால் ஆச்சரியம் இல்லை. ராஜேஷ் வைத்யா வீணையில் செய்யும் சாகசங்களும் பழைய பாகவதர் பாடல்களை அவர் ரீமிக்ஸ் செய்து ஜீன்ஸ் அணிவித்ததும் நாடறிந்ததே.

மாஸ்டர் சத்யநாராயணன் கீபோர்டு இசையும் இந்த ஆண்டு கவனிக்கப் பட்டது. இந்தச் சிறுவனின் வாசிப்பை வியந்து அமெரிக்காவிலிருந்து ஓர் அன்பர் கார்க் (korg) கீபோர்டு ஒன்றை அவனுக்கு அன்பளித்திருக்கிறார். அவனைவிடப் பெரிசாக இருக்கும் வாத்தியத்தில் சிரித்துக்கொண்டே அனாயாசமாக ராகம் தாளம் பல்லவி வாசிக்கிறான். அதன் bend வசதிகளைப் பயன்படுத்தி கர்நாடக சங்கீதத்தின் நிரவல்களையும் கமகங்களையும் சுலபமாகச் சமாளிக்கிறான்.

மேற்கத்திய வாத்தியங்களான வயலின், கிளாரினெட், சாக்ஸபோன், மேண்டலின், கித்தார் போல கீபோர்டும் எதிர்காலத்தில் வேஷ்டி அணிந்து கொண்டால் ஆச்சரியமில்லை. கீபோர்டில் ஒரு சௌகரியம்... தேவைப்பட்டால் எந்த வாத்தியத்துக்கும் அது வேஷம் மாற முடியும். இளம் கலைஞர்களில் பரத் சுந்தர், வித்யா கல்யாணராமன் இருவரைப் பற்றியும் பெரிதாகப் பேசுகிறார்கள்.

ஸ்ரீநிதி சிதம்பரம், தன் பரத நாட்டிய நிகழ்ச்சியில் ஒரு மிக நீண்ட வர்ணத்துக்குப் பிறகு கல்கியின் 'மாலைப் பொழுதினிலே' பாடலுக்கு (எம்.எஸ். அம்மாவுக்கு சமர்ப்பணமாக) அழகாக அபிநயம் செய்தார். பாடல் எளிய தமிழில் இருக்கும்போது அதற்கான அபிநயத்தைச் சுலபமாக ரசிக்க முடிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் கார்த்திக் சிதம்பரத்துடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். திராவிடக் கட்சிகள் மெள்ள மெள்ள நீர்த்துப்போய் தமிழ்நாட்டில் ஒரு வலுவான மாற்று அணி வருவது சாத்தியம் என்றே நம்புகிறார். 'எனக்கு பரதநாட்டியம் பற்றி ஏதும் தெரியாது. என் மனைவிக்கு அரசியல் தெரியாது. கிரிக்கெட் தெரியாது. நிம்மதி' என்கிறார் கார்த்திக். வருங்காலத்தில் இந்த இளைஞரைப் பற்றி நிறையத் தெரியப்போகிறது.

எபிக

கலைந்த கூந்தலை சரிசெய்
வாடிய பூக்களின் வாசம் நுகர்
உடைந்த வளையல்கள் கணக்கெடு
காயங்களுக்கு மருந்து பூசு
மீண்டும்
..............
..............
தயாராக வேண்டியுள்ளது
அடுத்தவனுக்காய்.

செல்வ மைந்தனின் 'அரங்கேற்றத்தில் தொலைந்த நாடகம்' என்கிற இந்தக் கவிதையின் முழு வடிவத்தைக் கொடுக்க முடியாத நிலையில், 'இமைகளின் மௌனங்கள்' என்ற சுவாரசியமான கவிதைத் தொகுப்பில் அதைக் காணலாம் (வெளியீடு: தச்சன் பதிப்பகம் அந்தணக்குறிச்சி சாலை, நியாய விலைக் கடை எதிரில், திருவையாறு-613204.)

Sunday, January 02, 2005

 

செல்போனால் ஆண்மைக்கு ஆபத்தா?


சில வருஷங்களுக்குப் பிறகு சேலம் மாறியிருக்கிறது. மேம்பாலம் கட்டி விட்டார்கள். நால்ரோடு ஐந்து ரோடாகிவிட்டது!

வழக்கம்போல் சேலம் இரவெல்லாம் கண் விழித்திருக்கிறது. சுரைக்காய் அளவுள்ள ஃப்ளோரஸண்ட் பல்புகளை ஐந்தடி இடைவெளிகளில் வைத்து டீக்கடைகளும் பாயா - குஸ்கா கடைகளும் ஜொலிஜொலிக்கின்றன. பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றி விட்டார்கள்!

சேலம் டாக்டர் சித்தார்த்தனின் டி.எம்.எஸ். (அந்த டி.எம்.எஸ். இல்லை... ‘தம்பி மோட்டார் சர்வீஸ்’) கண் மருத்துவமனையின் நவீன வசதிகளைப் பார்வையிட்ட பின், ஸாரி... பார்த்தபின், பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொண்ட 'டயாபடீஸ§ம் கண்ணும்' என்னும் விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் தேர்ந்த டாக்டர்களுடன், ஒரு தேர்ந்த டயாபடீஸ் நோயாளி என்கிற தகுதியில் கலந்துகொண்டேன். யூராலஜிஸ்டிலிருந்து நியூராலஜிஸ்ட் வரை ஒரு டஜன் மருத்துவ நிபுணர்கள், மக்கள் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளித்தார்கள்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: 'கணவருக்கு டயாபடீஸ் இருந்தால், மனைவியைப் பாதிக்குமா?'

'பாதிக்கும்' என்று நான் சொன்னபோது, டாக்டர்களின் புருவங்கள் உயர்ந்தன. எப்படி என்று விளக்கியதும் தாழ்ந்தன!

கணவனுக்கு டயாபடீஸ் என்றால், மனைவி அதைச் சொல்லிக்காட்டினால் பாதிப்பு

வரும் ('உங்க ஃபேமிலிலதான் சர்க்கரை வியாதி... எங்க ஃபேமிலில இல்லை!'). அதனால், சச்சரவுகள் சில சுவாரஸ்யமாக எழலாம் ('உன் தங்கை மெக்ஸிகோக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட தைச் சொல்லிக்காட்ட எத்தனை நேரமாகும்?’ ‘உங்க தம்பி... துறையூர்ல ஒருத்தி, உறையூர்ல ஒருத்தி...'). இவ்வாறு ஒரு டேட்டாபேஸே தோண்டப் படும்!

மேலும், கணவன் திருட்டுத்தனமாகச் சாப் பிடும் சாக்லெட், முந்திரி பர்பி எல்லாம் நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள், டாக்டர்கள் மத்தியில் மனைவியால் 'போட்டு உடைக்க'ப்படும். இது போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். உறவில் கல்யாணம் என்றால், இருவருக்கும் பொதுவான தாத்தா - பாட்டி யாருக்காவது டயாபடீஸ் இருந்தால், இருவருக்கும் டயாபடீஸ் வர நாற்பது சதவிகித சாத்தியமுள்ளது!

டாக்டர் கே.ரவி, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு முன் கண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொன்னார்.

'அதுவும் அப்பா, அம்மா இருவரும் கண்ணாடி என்றால், நிச்சயம் சோதிக்க வேண்டும். லேசர் வைத்து காட்டராக்ட் ஆபரேஷன் பண்ண முடியாது. அது அபத்தம். காட்டராக்ட் ஆபரேஷ னுக்குப் பின் ஏற்படும் சில பிரச்னைகளை நிவர்த்திக்க லேசர் பயன்படுத்துகிறார்கள். லேசர், ரெட்டினோபதி என்கிற கண் திரை ரத்தக் கட்டிகளை நீக்கவும் இயற்கையான கண் லென்ஸின் குவி தூரத்தைத் திருத்தவும் பயன்படுகிறது' என்றார்.

'கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு டயாபடீஸ் வரலாம். அது பிரசவித்ததும் நின்றுபோகும். இருந்தும், அவர்களுக்குப் பிற்காலத்தில் டயாபடீஸ் வரச் சாத்தியம் இருக்கிறது’ என்றார்.

இந்தியா, உலகின் டயாபடீஸ் தலைநகரம் என்கிற பெருமை படைத்தது. இரண்டு கோடி பேர் டயாபடீஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2008-க்குள் இது எட்டு கோடியாகலாம் என்கிறார்கள்.

‘இரண்டு கோடி சரியான கணக்கல்ல... இன்னும் இரண்டு கோடி பேராவது டயாபடீஸ் இருந்தும், அதை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. அல்லது, நம்புவதில்லை. இதைச் சர்க்கரை வியாதி என்று சொல்வதே தப்பு. மாவுச்சத்து வியாதி!' என்றார் ஒரு டாக்டர்.

'செல்போன் உபயோகித்தால் ஆண்மை குறைகிறது' என்ற ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் பற்றி சன் டி.வி. நிருபர் போன் பண்ணிக் கேட்டார்.

'செல்போன் நாம் பேசும்போது ஒரு வாட், 900 மெகாஹர்ட்ஸ் டிரான்ஸ்மீட்டர். அதுவும் நவீன ஜி.எஸ்.எம். முறைகள். சிக்னலுக்குத் தகுந்தாற்போல் பவரைக் குறைத்துக் கொள்ளும். செல்போனால் ஆண்மைக்கு ஆபத்தில்லை!' என்றேன்.

நிருபர் சற்று ஏமாற்றமடைந்தார். 'டயாபடீஸினால் ஆண்மைக் குறைவு ஏற்படும்' என்றதில், அவர் அதிகம் சுவாரஸ்யம் காட்டவில்லை!

சேலத்திலிருந்து அதிகாலை திரும்பியபோது, சென்ட்ரல் ஸ்டேஷ னில் மொஸைக் போட்டிருந்தார்கள். நடப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது!

ஆனால், திடுதிப்பென்று பாதி பிளாட்பாரத்தில் மொஸைக் நின்றுவிடுகிறது. காண்ட்ராக்டருக் குக் காசு கொடுக்கவில்லை போலும். தடுக்கி விழ இருந்து, என்னை ரவி பிடித்துக்கொண்டதால் தப்பித்தேன்!


சிறந்தவற்றின் தொடர்ச்சி இந்த வாரமும்...

சிறந்த நடிகர் - சூர்யா (பிதாமகன், பேரழகன்)

சிறந்த குணச்சித்திர நடிப்பு - விக்ரம் (பிதாமகன்)

சிறந்த நடிகை - சந்தியா (காதல்)

சிறந்த தொலைக்காட்சி மெகா தொடர் - மெட்டி ஒலி (கேபிள் வரவில்லை என்றால், தாய்மார்கள் கரம் நடுங்கி, மேல்மூச்சு கீழ்மூச்சு (hyperventilate) வாங்குகிறார்கள்!)

சிறந்த செய்தித் தொடர் - 'குற்றம்' - நடந்தது என்ன?

சிறந்த பேச்சுக் காட்சி - சுஹாசினி (லேடீஸ் ஜங்ஷன்)

சிறந்த டி.வி. காமெடி நடிகர் - சந்தானம் (சகலை ரகளை, லொள்ளு சபா)

சிறந்த டி.வி. காமெடி நடிகை - கோவை சரளா (சகலகலா சரளா)

சிறந்த தொடர் நடிகை - தேவயானி (கோலங்கள்)

சிறந்த திரை இசைநிகழ்ச்சி - 'நீங்கள் கேட்ட பாடல்' (விஜயசாரதி)

திரையிசை அல்லாத நிகழ்ச்சி - விஜய் டைம்ஸ்

சிறந்த வார இதழ் அட்டைப்படம் - 'ஆனந்த விகடன்' கிருத்திகா (கும்பகோணம் தீ விபத்தில் தப்பித்த பெண்)

சிறந்த திரைப்படம் - போன வாரம் சொல்லிவிட்டேன்... 'காதல்' அதன் இடத்தைப் பிடிக்கலாம்.

ஆங்கிலம் - Fahrenheit 9/11

கார்ட்டூன் படம் - Incredibles

இந்தி - மே ஹ¨(ம்) நா

சிறந்த அரசியல் நகைச்சுவை - 'சோனியா பிரதமரானால் மொட்டை போட்டுக்கொண்டு ஸ்வேத வஸ்திரம் அணிவேன்' என்று பி.ஜே.பி. பெண்மகள் சொன்னது.

சிறந்த பத்திரிகை கார்ட்டூன் - 'ஹிந்து' பார்லிமெண்ட் தொலைக்காட்சி பற்றி.

தவிர, செய்திப் பத்திரிகைகளை அதிகம் ஆக்கிரமித்த மூன்று பெண்கள் - செரீனா, ஜீவஜோதி, ஜெயலட்சுமி

அரசியல்வாதிகள் - சோனியா காந்தி, ஜெயலலிதா, உமாபாரதி

அதிகம் ஆக்கிரமித்த செய்தி - வீரப்பன், சங்கராச்சாரியார்

மிக விரைவில் மறக்கப்பட்ட செய்தி - கும்பகோணம் தீவிபத்து

எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய தலைவர் - வைகோ.


எபிக

---கடல் அலை
மணல் சுவடுகளை அழித்ததுபோல்
என் நினைவை அழித்தார்
நான் அழிக்க மாட்டேன்!

- சிலப்பதிகாரம், கானல் வரி 34-ன் எளிய வடிவம்

This page is powered by Blogger. Isn't yours?