Sunday, January 16, 2005

 

அலைமகளின் அட்டகாசம்!


சென்ற வாரம், சுமத்ராவிலிருந்து சோமாலியாவரை இந்துமாக்கடலோரத்தின் பன்னிரண்டு நாடுகளைத் தாக்கிய ‘சுனாமி’ பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். Tsunami - இது ஒரு ஜப்பானிய வார்த்தை. அவர்கள் ‘T’யை சற்றே மென்மையாக உச்சரிக்கிறார்கள், (ட்)சுனாமி என்று! 'துறைமுக அலை' என்பது இதன் அர்த்தமாம்.

கடல் படுக்கையடியில் அதிக சக்தி பூகம்பங்கள் நிகழும்போது விளைவது. அப்போது கடல் தரை லேசாகப் புரண்டு படுக்கிறது. கடல் நீர்மட்டம் அந்த இடத்தில் சற்று உயர்கிறது. பர்மா ப்ளேட், இந்தியா ப்ளேட் என்ற இரண்டு 'டெக்டானிக்' ப்ளேட்களின் லேசான உரசலால் ஏற்பட்ட நம் வேண்டாத விருந்தாளி, இந்த சுனாமி. கடலடி பூகம்பத்தின் விளைவு கடல் நீரின் மட்டத்தைச் சற்றேதான் உயர்த்தியிருக்கிறது. புறப்படும்போது அந்த அலை மூன்று நான்கு அடிதான் உயரமிருக்கும். ஆனால், ஆயிரம் கிலோமீட்டர் வரை நீளம்! ஜல அளவு மிகமிக அதிகமாக இருக்கும் நீரில் கல் எறிந்தால் வட்ட வட்டமாகப் பரவுமே, அதுபோல்ஒரு பிரம்ம ராட்சஸ வட்டம்

ஆரம்ப ஸ்தலத்திலிருந்து ஏகோபித்துப் பரவி, தன் பயணத்தைத் துவக்குகிறது. இதை வர்ணிக்க, நாம் நம்மாழ்வாரைத் தான் நாட வேண்டும்.

‘ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழியெழ உலகம் கண்டவாறே!’

ஆழ்கடலில் இந்த சுனாமி அவ்வளவு ஆபத்தானதல்ல! உயரம் கம்மியாக, அதிவேகமாகப் பரவுவதால், நடுக்கடலில் உள்ள கப்பல்களை ஒரு தூக்கு தூக்கிவிட்டு, 'கரைக்கு வா! கவனிச்சுக்கறேன்' என்று அவசரமாகப் போய்க்கொண்டே இருக்கும். மணிக்குக் கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் வேகத்தில் தன் ராஜ்ஜியத்தை விரிவு படுத்தும்போது, பயண வேகம் மெள்ள மெள்ளக் குறைய, பின்னால் வரும் தண்ணீர் முன்னால் சென்ற நீரலை யுடன் சேர்ந்துகொண்டு (இதை shoaling என்கிறார்கள்) வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் கும்பல்போல முன் பக்கம் பெரிதாகி, கரையை வந்து சேருமுன் மூன்று மாடிக் கட்டட உயர அலை ஆகிவிடுகிறது.

குறுகிய காலத்தில் அது ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் கரையைத் தாக்கும்போது, அதன் சீற்றத்தில் உச்சகட்ட வடிகாலாக கடலோரக் கட்டடங்களை உப்புநீரால் குளிப்பாட்டி, உயரப் பந்தாடி, புரட்டி எடுத்து, மிதித்துச் சுழற்றித் திரும்பும்போது தரதரவென்று கார், போட், வீடு, நட்சத்திர ஓட்டல், வெள்ளைக் காரர்கள், குழந்தைகள், பெரியவர்கள், நல்லவர், உள்ளவர், பொல்லாதவர், இல்லாதவர், கவிஞர்கள், கலைஞர்கள், வலைஞர்கள் எல்லாரையும் கடலுக் குள் இழுத்துச்சென்று, அடுத்த அலைமகளிடம் ‘இந்தா வெச்சுக்கோ!’ என்று ஒப்படைத்து விடுகிறது.

'மொத்தம் ஒண்ணேகால் லட்சம் பேர்தான் செத்தார்களா... எட்டே முக்கால் ரிக்டருக்கு பத்தாதே! அடுத்த முறை, 'மவனே! இருக்கு உனக்கு' என்று சொல்லிவிட்டுச் சாது போலப் படுத்துவிடுகிறது.

இந்தப் பேராபத்தைத் தடுத்திருக்க முடியாதா என்றால், முடியாது! இதன் பரிணாமம் நம் மனித யத்தனங்களுக்கு மிக மிக மிக அதிகமானது. 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' சூரியனை வைத்து எரித்த விளக்கு ரேஞ்சுக்கு, ஊழி முதல்வன் உருவம் பெரியதோ பெரியது! அதன் முன் நம் கண்ணிவெடிகளும் தீவிரவாதங்களும் அற்பமோ அற்பம்! ஜே.கிருஷ்ணமூர்த்தி சூரியாஸ்த மனத்தை மும்பையில் பார்த்து வியந்தபோது, ‘can you help it!’ என்றார். அதுபோல, நம்மால் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்ய முடியாது.

ஆனால், இந்த கடலோரப் பேராபத்தை எதிர்பார்த்துச் சொல்லியிருக்க முடியுமா? ‘முடியும்’ என்கிறார்கள் புவியியலாளர்கள். நுட்பமான 'சுனாமி'க்கான கடல் படுக்கை சென்ஸார்களும், மிதவைகளும் (buoys) பசிபிக் பகுதியில் இருக்கின்றன. அவை சாட்டிலைட்டுகளுக்கு உடனடி செய்தி கொடுக்கும். அவர்கள் சைஸ்மோகிராஃப்கள் மூலம், சுமத்ரா கடலடி பூகம்பத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். எட்டரை ரிக்டர் நிச்சயம் பதிவாகியிருக்கும். இடமும் தெரிந்திருக்கும். அதன் மேற்கு நோக்கிய பயணமும் வேகமும் தெரிந்திருக்கும். ஒரு டெலிபோனை எடுத்து இந்திய அரசை எச்சரித்திருக்கலாம். யாருக்குச் சொல்வது?

அரசாங்கத்துக்கு! அரசாங்கச் செய்தித் தொடர்பு என்பது பந்தாக்கள் நிறைந்த ஆமை வேகக் காரியம். அமெரிக்க அரசு, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, கலெக்டர்கள், தாசில்தார்கள், கரையோர போலீஸ் கான்ஸ்டபிள்கள் என்று எச்சரிக்கை வடிகட்டி, அவர்கள் பாட்டரி போட்டு ஒலிபெருக்கிகளுடன் வந்து சேர்வதற்குள்... டூ லேட்! அலை வந்து சேர்ந்து அடித்துச் சென்றுவிட்டது. மேலும், ‘கலிஃபோர்னியா பக்கம் வருகிறதா? இல்லையே! ஆளைவிடு!’ என்று அவர்களும் வாளாவிருந்திருக்கலாம். பேராபத்துக்கான எச்சரிக்கை தரும் கருவிகள் எதுவும் நம்மிடம் இல்லை. அதற்கான செய்தித் தொடர்புகள், சைரன்கள் எதுவும் இல்லை. இருந்திருந்தால், சுனாமி சுமத்ராவிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் வந்து சேரும் சில மணி நேரத்துக்குள் நம் கடலோர மக்கள் அனைவரும் உள்நாட்டில் சரணடைந்து இருக்கலாம். உயிர் சேதத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம்.

பொதுவாக, சுனாமி பசிபிக் மாக்கடலின் நெருப்பு வட்டம் ring of fire பகுதியில்தான் புறப்படும். மிக அரிதாகத்தான் மெடிட்ட ரேனியன், கரீபியன் கடல்களிலும், அதைவிட அரிதாக இந்துமாக் கடலிலும் புறப்படும். ஜப்பான், ஹவாய் தீவு இரண்டும் தான் அதிகம் அடிபடும். ஹவாய் தீவில் 1819-லிருந்து 46 சுனாமிக்கள் தாக்கியிருக்கின்றன. 1960\ல் சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் புறப்பட்ட அலை 16,000 கிலோ மீட்டர் தாண்டி, ஜப்பானை வந்து தாக்கியது. 22 மணி நேரம் பயணம் செய்தது. இந்தோனேசியாவில் 1883\ல் அலையடித்து 16,000 பேர் மூழ்கினார்கள். இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இது முதல் அனுபவம்!

உலகளாவிய உதவிகளுக்குக் குறைவில்லை. அதை வாங்கி உரியவருக்கு உரிய நேரத்தில் சேர்ப்பிப்பதைத் தடுக்க, கூட்டு முயற்சியாக மைய அரசு, மாநில அரசு, சன் டி.வி., ஜெயா டி.வி., தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அனைவரும் 'நான்தான் முந்தி' என்று முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நலிந்த மக்களைக் காப்பாற்ற அரங்கனை இரங்கி வேண்டுகிறேன்.

9/11-ன்போது நியூயார்க் மேயர் ஜூலியானி மாதிரி யாராவது ஒருவர் தேவை. இல்லையேல், சுனாமி மிச்சம் வைத்தவர்களை பேனாமியால் அன்பாலேயே கொன்றுவிடுவார்கள்!

பீச் பக்கம் ஒரு வீடு வாங்கலாம் என்ற எண்ணமிருக்கும் அன்பர்கள் யோசியுங்கள். நான் மயிலாப்பூரில் இருப்பதால், ஒரு லைஃப் ஜாக்கெட் வாங்கிவிட உத்தேசித்திருக்கிறேன்.

எபிக-

நீயுமா
பாரதி
விடுதலையைப் பாட
நாங்கள்
குனிந்து கும்மியடிக்க
வேண்டுமா?
- நர்மதா
தொகுப்பு: 'நாங்கள் அவர்கள் அல்ல'


எத்தனை எத்தனை முருகனடா!

'என்றான் முருகன்' போட்டிக்கும் நிறைய கார்டுகள் வந்தன (இனி அனுப்ப வேண்டாம்). அவற்றில் எனக்குப் பிடித்தவை இவை:

"வடை சுவையாக இருந்தது" என்றான் முருகன் மெதுவாக.

-கோ.முரளிதர், வேளச்சேரி.

"நீட்டி முழக்காதே!" என்றான் முருகன் சுருக்கமாக.

-ஆதனூர் சோழன், மதுரை-18.

"தொப்புளில் பம்பரம் விடுவது கேவலம்" என்றான் முருகன் சாட்டையடியாக.

-பாரதி கல்யாண், விருகம்பாக்கம்.

"ராணுவத்தில் சேரப்போகிறேன்" என்றான் முருகன் மிடுக்காக.

-வரத.சண்முகசுந்தரவடிவேலு, வாழப்பாடி.

"வாழைப்பழம் வாங்கி வா" என்றான் முருகன் கனிவாக.

-பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி-26.

"இன்னிக்கு ரோஜா பூத்திருச்சு" என்றான் முருகன் மலர்ச்சியாக.

-தெ.சு.கவுதமன், ஓட்டேரி.

"நிர்வாணத்தில் ஒன்றுமே இல்லை" என்றான் முருகன் அப்பட்டமாக.

-பாலா, நாமக்கல்.

"பிரமோஷன் கிடைத்துவிட்டது" என்றான் முருகன் பதவிசாக.

-இரா.ஆதித்தநாராயணன், தஞ்சாவூர்.

"புது ஹீட்டர் சூடே ஏறலை" என்றான் முருகன் கொதிப்பாக.

-ந.சுப்பிரமணியன், சென்னை-93.

"எல்லாமே நல்லா இருந்தது" என்றான் முருகன் பாராட்டாக.

-சுஜாதா, மயிலாப்பூர்.<< Home

This page is powered by Blogger. Isn't yours?