Sunday, March 27, 2005

 

மாணவியைக் கொன்ற குரு!


'அனாமிகா' சிறுகதையில் (விகடன் 27-2-05 இதழ்) நவகாளமேகனின் வெண்பாவைப் படி எடுக்கையில் ஒரு பிழை நேர்ந்தது. முதல் வரி ‘உடுக்க உடையும் உணவொடு மீன்கள்’ என்பதற்குப் பதிலாக, ‘உடுக்க உடையும் உணவும் மீன்கள்’ என்று வெளி யாகிவிட்டது. உடனே, கதையை ரசித்தாரோ இல்லையோ, அதன் தளைதட்டலைக் குறிப்பிட்டு, வழக்கம்போல் ‘சுஜாதா இம்மாதிரி பிழைபட்ட வெண்பாவை மேற்கோள் காட்டலாமோ? த்ஸோ... த்ஸோ...’ என்று கடிதம் எழுதியுள்ளார் ஒரு புலவர். தமிழினத்தின் வெண்பாத் திறமை அழியவில்லை என்பதை அறிய சந்தோஷமாக இருக் கிறது. அதே சமயம், சி.மணியின் கவிதையும் நினைவுக்கு வருகிறது... 'புலவர் அடைப்பக் கவிஞர் திறப்பர்.’

விகடன் 13-3-05 இதழில் குறிப்பிட்டிருந்த ‘சைடுவேஸ்’ படத்துக்கு, நாவலிலிருந்து எடுத்த சிறந்த திரைக்கதைக்கான அவார்ட் கிடைத்தது. நமக்கு இம்மாதிரி அவார்டுக் கான தேவையே இல்லை. நாவலிலிருந்து இப்போதெல்லாம் திரைக்கதை யாரும் எழுதுவதில்லை. கதை 'தயாரிப்பது' என்பது கோலிவுட்டின் குடிசைத் தொழில்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜேமி ஃபாக்ஸ்க்குக் கிடைத்துள்ளது. படம் 'ரே'. அண்மையில் இறந்துபோன ‘ரே சார்லஸ்’ என்னும் இசைக்கலைஞ னின் வாழ்க்கை வரலாறு இது. ஒரு வாழ்க்கை வரலாற்றை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம். ரே சார்லஸ் ஐம்பது களிலும் அறுபதுகளிலும் ராக் அண்ட் ரோலின் துவக்க காலத்தில், காஸ்பெல் பாடல்கள், ஜாஸ்,ஃபோக், ரிதம் போன்றவற்றைக் கலந்து ஒரு புது வகை ஸோல், 'ப்ளூஸ்' (blues) சங்கீதம் கொண்டு வந்தார். தற்போது இப்பிரிவு களுக்கென்று தனி எம்மி அவார்டே கொடுக்கிறார்கள்.

ரே சார்லஸ் அமெரிக்க ஜார்ஜியா வில், ஏழைத் தாய்க்குப் பிறந்து, இளம் வயதிலேயே பியானோ வாசிப்பதில் திறமை பெற்றபோது, ஏழு வயதில் தன் தம்பி இறந்துபோகும் அதிர்ச்சி கரமான சம்பவத்தைக் காண நேரிடுகிறது. க்ளாக்கோமாவால் கண்பார்வையை மெள்ள மெள்ள, முழுவதுமாக இழந்துவிடுகிறான். மற்ற புலன்கள் தீட்டப்படு கின்றன.

அவன் தாய் அவனை வாழ்க்கையில் சொந்தக் கால் களில் நிற்கப் பழக்குகிறாள். 150 மைல் தள்ளியிருக்கும் பார்வை அற்றோர் பள்ளிக்கு அனுப்புகிறாள். ப்ரெய்லியில் சங்கீதம் கற்கிறான். தாயைப் பதினாலு வயதில் இழக்கிறான். மெள்ள மெள்ள அவன் திறமையும் புகழும் பரவ,

அதற்குக் கட்டாய விலைகளாக ஹெராயின் பழக்கம், விலைமாதர் சகவாசம் எல்லாம் வரித்துக்கொள்ள, வீடு, வாசல், பெரும் செல்வம், பேர், புகழ் கிடைத்தும் நிம்மதி கிடைக் காமல், போதைப் பழக்கத்துக்கு முழுவ தும் அடிமையாகிறான்.

தக்க சமயத்தில், அவனுக்குத் தாயின் நினைவும், அவள் கொடுத்த தைரியமும் கைகொடுக்க, போதைப் பழக்கத்தை கரெக்ஷன் சென்ட்டருக்குப் போய் ஒழித்துக் கட்டிவிட்டு, மீண்டும் தன் சங்கீதத்துக்குத் திரும்புகிறான். அவனை நிராகரித்த ஜார்ஜியா மாகாணம், பொது மன்னிப்புக் கேட்டு, ‘ஜார்ஜியா! உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று அவன் இசையமைத்த பாடலை மாநிலத்தின் தேசியகீதமாக அறிவிக்க, பாசிட்டிவ்வாகக் கதை முடிகிறது.

ஜேமி ஃபாக்ஸ் நிஜ ரே சார்லஸை (2004-ல் இறந்துபோனார்) கடைசி காலத் தில் பார்த்து, இந்தப் படத்துக்கென்றே அவருடன் சேர்ந்து பியானோ வாசித்துப் பழகியவர். நல்ல நாடகர். பியானோ கலைஞர். பார்வையற்றவனின் பாத்திரத்தை அற்புதமாகப் படைத்திருக்கிறார். ஆஸ்கரைக் குறை சொல்ல மாட்டார்கள்.

அதேபோல் சிறந்த படம், சிறந்த டைரக்ஷன் (க்ளிண்ட் ஈஸ்ட்வுட்), சிறந்த நடிகை (ஹிலரி ஷ்வாங்க்), சிறந்த குணச்சித்திர நடிகர் (மார்கன் ஃப்ரீமன்) என நான்கு விருதுகளை வாங்கிய படம் ‘மில்லியன் டாலர் பேபி’. ஒரு பாக்ஸிங் பயிற்சியாளருக்கும் அவர் மாணவிக்கும் உள்ள உறவைக் கொச்சைப்படுத்தாமல், எந்தவிதமான உபதேசமும் இல்லாமல், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது உடல் அமைப்பைப் போல உருவிவிட்டாற் போன்ற திரைக்கதையில், அவசரப் படாமல் நிதானமாகச் சொல்லியிருக் கிறார்.

அந்தப் பெண் உலக சாம்பியனை சவால் விடும் போட்டியில், வெற்றி வேளையில், மிக மோசமாக, அநியாய மாக அடிபட்டுக் கழுத்தெலும்பு முறிந்து, வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகிவிடுகிறாள். பயிற்சி அளித்துப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற ஆசானே அவளை யுத்தனேசியா முறையில் கொன்று விடுகிறார். அதிர்ச்சிகரமான முடிவு. உணர்ச்சிவசப்படாமல், நியாய அநியாயங்களை அலசாமல், திகைக்க வைக்கும் க்ளிண்ட், தன் 'மிஸ்டிக் ரிவ’ரை மிஞ்சியிருக்கிறார்.

சிதம்பரம் தன் பட்ஜெட்டில் எத்தனையோ மாற்றங்கள் கொண்டு வந்தார். புது வரிகள் போட்டார். எடுத்தார். ஆயிரம் கோடிகளிலேயே புரண்டார். மக்கள் கவனிக்காமல்தான் இருந்தார்கள். வங்கியில் பத்தாயிரத்துக்கு மேல் கேஷாக எடுக்கும்போது பத்து ரூபாய் வரி கட்டவேண்டும் என்று சொன்னதுதான் தாமதம்... இந்தியத் துணைக்கண்டமே செங்கட்சீயம் போல் வெகுண்டு எழுந்து, ‘என்ன அநியாயம்! எங்கள் அந்தரங்கம் பறிக்கப்படுகிறது. கடையடைப்பு, தர்ணா செய்து ரோடில் படுத்துக் கொள்ளப் போகிறோம். இந்தியாவே ஸ்தம்பிக்கப் போகிறது’ என்றது. (தமிழ்நாட்டில் ஒரு கட்சி பத்து ரூபாயை பத்து பர்சென்ட் என்றது!) திட்டத்தை அவசரமாக வாபஸ் வாங்க யோசிக்கிறார் சிதம்பரம்.

பத்து ரூபாய்க்கு இத்தனை எதிர்விளைவு எதனால் என்று யோசித்துப் பார்க்கிறேன். பலருக்கு மடியில் கனமிருப்பது, எல்லோரிடமும் கொஞ்சம் கறுப்புப் பணம் இருப்பது தெரிகிறது.

மைக்ரேஷன் பறவைகளுக்கு ரேடியோ காலர் போடுவதுபோல, கறுப்புப் பணத்துக்கு ஓர் அடையாளம், ஒரு விரல் பொட்டு வைக்க விரும்பினார் சிதம்பரம். கேஷ§க்குப் பதிலாக செக் கலாசாரத்தை உருவாக்குவது உப நோக்கம். செக் என்று வந்துவிட்டால் அது வரிவலைக்குள் அகப்பட்டுவிடும். எளிய முயற்சி இது. அமெரிக்காவில் நாலு டாலருக்கெல்லாம் செக் தருவார்கள். அங்கே பத்தாயிரம் டாலருக்கு மேல் வித்ட்ரா பண்ணினால், வங்கியே அரசுக்குத் தகவல் சொல்லி விடும் என்கிறார்கள்.

மணி லாண்ட்ரிங், அவர்கள் பிரச்னை. கறுப்புப் பணத்தின் இணைப் பொருளாதாரம், நம் பிரச்னை. ‘வேறு ஏதாவது வழி சொல்லுங்கள்’ என்கிறார் சிதம்பரம். பத்தாயிரத்தை ஐம்பதாயிர மாக ஆக்க ஒரு யோசனை உள்ளது. தாமஸ் செனியின் கார்ட்டூனில் உள்ளதுபோல ஏதாவது செய்யாமலிருந் தால் சரி!

நான் 'குமுதம்' ஆசிரியராக இருந்த போது, ஜே.பி.மில்லரின் Rabbit Trap டெலிவிஷன் நாடகத்தைத் தழுவி 1994-ல் எழுதிப் பதிப்பித்த 'முயல்' நாடகத்தை, ‘குருகுலம்’ நாடகக் குழு வினர், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் மேடையேற்றினார்கள். இந்திரா பார்த்தசாரதியின் 'அற்றது பற்றெனின்' சிறுகதையின் நாடக வடிவ மான ‘வீடு’ ஓரங்க நாடகமும் அரங் கேற்றப்பட்டது. டைரக்டர் வசந்த் என்னைப் பற்றி ஒரு நிஜமான வாசக னின் வியப்போடு பாராட்டினார். என் வாழ்வின் நாற்பத்தேழாவது சால்வை போர்த்தப்பட்டது. முப்பத்தாறாவது க்வார்ட்ஸ் சுவர்க் கடிகாரம் மற்ற யாருக்கும் அன்பளிக்க முடியாதபடி ‘குருகுலம்’ என்று முகத்தில் அச்சிட்டது கொடுக்கப்பட்டது. பூர்ணம் விசுவ நாதன் வந்திருந்தது சிறப்பாக இருந்தது. நாடகங்கள் மக்களுக்குப் புரிய வேண்டும் என்று இ.பா. சொன்னது எனக்கு மனநிறைவாக இருந்தது. அந்த அரங்கம் நிரம்பியிருந்தது.

சினிமா நடனங்கள், மெட்டி ஒலி, செல்விகளின் மத்தியில் இந்த 2005-லும் நாடகத்துக்கு வாடிக்கை இருப்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது. ‘குரு குலம்’ மூர்த்திக்கும், அவர் நண்பர்கள் ரமேஷ், கௌரிஷங்கர் போன்றவர் களுக்கும் உள்ள அசாத்தியமான நாடக நம்பிக்கை பாராட்டப்பட வேண்டியதே!

பூர்ணம் அவர்களுக்காக நான் எழுதிய ஒன்பது நாடகங்கள், நூற்றுக் கணக்கான முறை நடிக்கப்பட்ட, எல்லோருக்கும் புரிந்த நாடகங்கள். கொல்கத்தாவிலிருந்து கலிஃபோர்னியா வரை ‘கடவுள் வந்திருந்தார்’க்கு இன்றும் பர்மிஷன் கேட்டு எழுதுகிறார்கள். இதைவிடப் பெரிய அவார்ட் எனக்குத் தெரியவில்லை. தேவையில்லை.

Sunday, March 20, 2005

 

மணியார்டர் ஃபாரம் வேண்டாம்... அஞ்சல் அட்டையே போதும்!


ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு, ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி, அனாமிகாவின் 'தேவதைக் கிறுக்கல்கள்' புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார்.

தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ, பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண், பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது, இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு premonition அதாவது, நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது ('எப்பொழுது இறப்போம், மறுபடியும் பிறப்போமா?').

தந்தையின் பாசத்துடனும், தாயின் இலக்கிய ஆர்வத்துடனும், தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள், கனவுகள், வியப்புகள், சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற 'தேவதைக் கிறுக்கல்கள்’ ஆகின்றன.

மழை பெய்யும்பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்துகொண்டு
மழையைப் பார்த்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.
நான் சாப்பிடுவதை
அழகு பார்க்கும் அம்மா
தொலைபேசியில்
'சொல்லுடா' என
மெல்லக் கிள்ளிவிடும்
அப்பா.

அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன், அவள் விடைபெற்றுவிட்டாள். இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது? அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க, அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும், படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன்.

(தேவதைக் கிறுக்கல்கள், ஏஞ்சல் அனாமிகா, பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை. விலை இல்லை. balasugumar@yahoo.com-க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.)

சென்ற வாரம் 'டாப் 10' பொய் களைத் தொடர்ந்து, 'சொன்னதும்... சொல்லியிருக்க வேண்டியதும்' என்கிற பட்டியல் இதோ...

சந்தர்ப்பம் என்ன என்பதை, க.பெ. பக்கத்துக்கு விரைந்து செல்லும் (குறிப்பாகத் தொப்புள்களைத் தவிர்த்து) வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

கீழ்க்காணும் வாக்கியங்களில்... 1.சொன்னது 2.சொல்லியிருக்க வேண்டியது. ரெடி?

அ) 1.ராத்திரி நல்லாவே இருந்துச்சு மல்லிகா.
2.ராத்திரி சாப்பாடு நல்லாவே இருந்துச்சு மீனாட்சி. (மனைவி)

ஆ)1.ஆக்ஸிடென்ட் ஆயிருச்சோ, என்னவோ!
2.டிராஃபிக் ஜாஸ்திங்க... வந்துருவார்!

இ) 1.'நைலான் கயிறு' படிச்சிட்டு இருக்கேங்க.
2.‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ படிச்சிட்டு இருக்கேங்க.

ஈ) 1. எனக்கா? நாப்பத்தஞ்சுங்க!
2. இந்தக் கேள்வி நீங்க கேட்கக் கூடாது.

உ) 1. அப்பா யாரு?
2. ரொம்ப சந்தோஷங்க. எப்ப பிரசவம்?

ஊ) 1.ராணி, கல்கண்டு படிப்பேன். கன்னித் தீவு நிச்சயம் பார்ப்பேன்.
2.காலச்சுவடு, கணையாழி, அப்புறம் காஃப்கா கட்டாயப் பாடம்.

எ) 1. பையன் கைல ஒரு வாட்ச் கட்டியிருந்தேனே, காணமே!
2. என் பேரனை முழுகிப் போகாமக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி, ஐயா!

ஏ) 1. யார் இந்தக் கிழ போல்டு?
2. உங்கப்பாவும் இளமையா தான் இருக்கார்.

வாசகர்கள் அனுப்புவதில் சிறந்தவற்றைப் பிரசுரிக்கலாம்.

ஷெர்லாக் ஹோம்ஸ் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர். அவரது கூட்டணி டாக்டர் வாட்ஸனுக்குப் புத்திக் கூர்மை அத்தனை இல்லை.

ஹோம்ஸ் ஒரு துப்புத் துலக்கியதும், 'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்று வியந்து கேட்பார் வாட்ஸன். 'எலிமென்டரி மை டியர் வாட்ஸன்' என்றுதான் முடிப்பார் ஹோம்ஸ்.

ஒரு முறை வாட்ஸன், ஒரு கேஸ் விஷயமாக ஷெர்லாக் ஹோம்ஸைப் பார்க்கச் சென்றார். வீட்டில் இருந்த பெண்மணி, "மாடியில் இருக்கிறார். ‘ஒன்பது மணி வரை யாரையும் அனுமதிக்காதே’ என்றார்’' என்றாள்.

வாட்ஸன், "பரவாயில்லை. ஒன்பது மணி வரை காத்திருக்கிறேன்!" என்று அங்கு போய் உட்கார்ந்தார். சற்று நேரத்தில் மாடியிலிருந்து ஒரு பெண்ணின் கீச்சுக் குரலும், சிரிப்பும் உடன் ஹோம்ஸின் கட்டைக் குரலும் கேட்டது.

வாட்ஸனுக்குப் புரியவில்லை. 'என்ன கேஸ் இது!' என்று வியந்தார். ஒன்பது மணிக்கு ஹோம்ஸ் தலை கலைந்து, டை தளர்ந்து இறங்கி வந்தார். கூட, ஒரு பள்ளி மாணவியும் வந்தாள் - கார்டிகன், ப்ளீட் வைத்த ஸ்கர்ட் அணிந்து!

கோபத்துடன் வாட்ஸன், "நானும்தான் கேக்கறேன், ஹோம்ஸ்... அதென்ன மாதிரி ஸ்கூல் பொண்ணு?" என்றார்.

"எலிமென்டரி மை டியர் வாட்ஸன்!" என்றார் ஹோம்ஸ்.

(நன்றி: The Book of New American Humor)

எ.பி.க.-

என் மாடுகள் செத்திருக்கலாம்!

அவிழ்த்துக் கொடுக்கும்போது
இரவலுக்கென்றோ
குளிப்பாட்டவென்றோ
ஏதேனும் வேலைக்கென்றோ
எண்ணிக்கொண்டு
போயிருக்கும்.

அந்தக் கண்கள்
அந்த நடை
அந்தக் கொம்புகள்
அந்தச் செல்லப் பாய்ச்சல்
குனிந்து தவிடு கிளர்கையில்
பாறை நாக்கால் கன்னத்தில்
நக்கி வைக்கும் குறும்பு
இனி எனக்கில்லை.

ஒரேயரு சென்னைப்
பயணத்துக்காக
ஓட்டிக்கொண்டு
போய்விட்டான்
நான் துரோகம் செய்து
விட்டேன்.

- இலக்குமிகுமாரன்
ஞானதிரவியம்

(நிலாப் பேச்சு, அனன்யா, பி.ஏ.வி. நகர், குழந்தை இயேசு கோயில் அருகில், தஞ்சாவூர்-613006.)Sunday, March 13, 2005

 

உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!


மாலை, தினம் போல் மெரீனாவில் நடந்துவிட்டு, சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, முகத்தில் கடற்காற்று விளையாட, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் இன்கம் டாக்ஸையும் யோசித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் வீற்றிருந்தவர் என்னை அறியாமல் என் செல்போனைக் கவர்ந்துகொண்டு, 'சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்' என்று சொல்ல ஆகும் நேரத்தில் காணாமல் போனார்!

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அடுத்து ஆகவேண்டியதைத்தான் யோசிப்பேன். முதலில் செல் கம்பெனிக்குத் தகவல் சொல்லி, சிம் கார்டை எந்த விதக் குற்ற நோக்கத்துக்கும் பயன்படாமல் செயலறச் செய்ய வேண்டும். அதன்பின், மறு செல் பற்றி யோசிக்க வேண்டும்.

இடையே, செல்லில்லாத வாழ்க்கையை யோசித்தேன். முகம் தெரியாத பெண்கள், எனக்கு வங்கிக் கடன்கள் கொடுப்பதாக வற்புறுத்தமாட்டார்கள். சங்கராச்சாரியார் கைதிலிருந்து global warming வரை எனக்கு எஸ்.எம்.எஸ். வராது!

ரிங்டோனை 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு'வுக்கு மாற்ற முடியாது. 'பிரகாஷ்? க்யா யார்... அபிதக் மால் நை பேஜா?' என்கிற நடு ராத்திரி தப்பு நம்பர் அதட்டல்கள் நின்றுபோகும். யோசித்துப் பார்த்ததில், 'செல்லற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அன்வர் அக்காவியின் (Anwar Accawi) 'டெலிபோன்' என்னும் கட்டுரை (Best American Essays, 1998) நினைவுக்கு வந்தது. லெபனானில் மக்தலோனா என்ற அவரது கிராமத்தில் முதன் முதலாக டெலிபோன் வந்தது பற்றிய அருமையான கட்டுரை அது.

கிராமத்தின் கலாசாரமே, அடையாளமே ஒரு டெலிபோன் வருகையால் மாறிப் போகிறது. நகரம் போன் மூலம் வேலைக்கு அழைக்கிறது. குடும்பங்கள்இடம் பெயர்கின்றன. கிராமம் தன் அடை யாளங்கள் சிலவற் றைத் திரும்பப் பெற முடியாமல் இழக்கிறது. To get something, you have to give something. எதையாவது பெற, எதையாவது இழக்க வேண்டும்! செல்போனுக்கு நாம் இழந்தது, நம் அந்தரங்கத்தை! என் மனைவி, ‘'அப்பவே சொன்னேனே... உங்க ஞாபக மறதிக்கு செல்போன் உதவாது. கழுத்துல கயிறு கட்டிண்டு தொங்க விட்டுக்குங்கோ இனிமேல்!’' என்றாள். 'அந்தத் தாலி வேண்டுமா?' என யோசிக்கிறேன்.

'பக்கப் பாதைகள்' (Sideways) என்னும் திரைப்படம், இந்த வருடம் தங்க பூகோள அவார்டு வாங்கியிருக்கிறது. ஆஸ்கருக்கும் சிறந்த படமாகப் பரிந்துரைக் கப்பட்டு இருக்கிறது. இரண்டு நண்பர் கள். ஒருவன் எழுத் தாளன். மற்றவன் டி.வி. நடிகன். பின்னவனுடைய திருமணத்துக்குக் காரில் செல்கிறார்கள். கலிபோர்னியாவின் திராட்சைத் தோட்டங்களைச் சார்ந்த ஒயின் தயாரிக்கும் சிறுசிறு நகரங்களின் ஊடே பயணம்.

தன் நாவல் பிரசுரமாகுமா என்ற எழுத்தாளனின் கவலை. ஒயின் தயாரிப்பதைப் பற்றிய அவனது நுட்பமான அறிவு. முதல் திருமணம் முறிந்து போனவன். நடிகன், அடுத்த வார திருமணத்துக்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு பெண்களை யாவது 'கரெக்ட்' பண்ணிவிட்டு, நல்ல பையனாக வேண்டும் என்னும் அவசரத்தில் உள்ளவன்.

இவர்களின் ஒரு வாரப் பயணத்தில், அமெரிக்க மண வாழ்க்கையில் உள்ள நிலையாமையையும், உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டு சந்தோஷம் தேடும் வினோதத்தையும் ‘அலெக்ஸாண்டர் பெய்ன்’ திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

'ஏவியேட்டர்' உடன் போட்டி போட முடியாதெனினும், ஒரு விருதாவது கிடைக்கும்!


யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

1.அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
2.இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
3.இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
4.நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
5.ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
6.ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7.இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
8.உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
9.நான் பொய் சொல்லவே மாட்டேன்.
10.ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப் போனகீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

1.எத்தனைனு ஞாபகமில்லை.
2.விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3.வழுக்கையை மறைக்கிறதால...
4.நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5.அபஸ்வரமா!
6.நாலாவது தடவையும்.
7.எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
8.உங்க நம்பர் என்ன?
9.மௌன விரதத்தின்போது!
10.எப்பனு சொல்ல மாட்டேன்.

Sunday, March 06, 2005

 

"எல்லோருமே ஏய்ப்பவர்கள் அல்ல...!"


ஷக்தி குழு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஒரு கச்சேரி வைப்பார்கள். ஜாகிர் ஹ§சேன், செல்வ கணபதி, விநாயக்ராம், கணேஷ், குமரேஷ் போன்றவர்கள் வாசிப்பார்கள்... கேட்கலாம் என்று இந்த ஆண்டும் டிக்கெட் வாங்கப் போனேன். "பால்கனியில் மாடியில், கோடியில் இரண்டு ஸீட்தான் பாக்கியிருக்கிறது. மற்ற ஸீட்டுகளை எல்லாம் சேட்டுகள் வாங்கிப் போய்விட்டார்கள். ஸாரி சார்!” என்று ஸாரி அணிந்த அந்தப் பெண்மணி சொன்னார்.

"உங்களைப் பார்த்தால் வயசான மாதிரி தெரிகிறது. கீழே வேண்டுமானால் வழிநடையில், பிளாஸ்டிக் நாற்காலி போட்டு உட்கார வைக்கிறோம். அவ்வப்போது முழங்காலை மட்டும் மடித்து, பிறர் கடந்து போக இடம் கொடுக்க வேண்டும். பரவாயில்லையா?" என்று அந்தப் பெண்மணி கேட்டார்.

"பரவா உண்டு! அத்தனை பெரிசல்ல, என் சங்கீத ஆர்வம். அடுத்த வருஷம், இன்ஷா அல்லா பிழைத்துக் கிடந்தால் வருகிறேன்" என்று நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனந்த விகடன் 20.2.2005 இதழ் 'கற்றதும்... பெற்றதும்...' பகுதியில், 'ஐன்ஸ்டைனுடன் கடிதத் தொடர்புகொண்டு, ஓர் ஆராய்ச்சியில் அவருக்குச் சமமாகப் பெயர் எடுத்த இந்திய விஞ்ஞானியின் முழுப் பெயர் என்ன?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘சத்யேந்திரநாத் போஸ்’ என்று சரியான விடையை மெயிலிலும் ரயிலிலும் அனுப்பிய அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சரியான விடையை அனுப்பியவர்களில் முதல் பத்துப் பேருக்கு ‘கற்றதும்... பெற்றதும்...’ புத்தகப் பரிசு உண்டு. அவர்கள் பெயர்கள் தனிப் பெட்டியில்!

தமிழ்நாடு எப்போதும் என்னை வியக்க வைக்கிறது. 72 வயசுக்காரர் ஒருவர் இராக் டென்ட் 'ஏ' ஜோக்கை ரசித்து, ஒருவேளை எனக்குப் புரியவில்லையோ என்று விரிவான விளக்கம் எழுதுகிறார். மாணவியான உத்ரா அனந்த கிருஷ்ணன், ஐன்ஸ்டைன் கேள்விக்குச் சரியான பதில் அனுப்புகிறார். எங்கே ஏற்பட்டது இந்தக் குட்டிக்கரணம் என்று ஆச்சர்யப்படுகிறேன்.

சில மாணவர்கள் ஸ்ட்ரிங் தியரி, டென்சார் அனலிசிஸ் எல்லாம் பயன்படுத்தி, பூச்சி பூச்சியாகக் கணக்குப் போட்டு, கிராவிடேஷனையும் க்வாண்டம் எலக்ட்ரோ டைனமிக்ஸை யும் (QED) இணைத்திருந்தார்கள். நல்ல முயற்சிகள். ஒப்புக் கொள்ளப்பட்டால் நோபல் நிச்சயம். ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் இதையேதான் மன்றாடிக்கொண்டு இருக்கிறார். இதெல்லாம் முன்னாலயே முயற்சி
பண்ணியாச்சு பிரதர்..!

சத்யேந்திரநாத் போஸ், க்வாண்டம் துகள்கள் இயங்கும் ஸ்டாடிஸ்டிக்கல் முறையைப் பற்றி ஐன்ஸ்டைனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார். அதை ஐன்ஸ்டைன் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வைத்தார். அந்த முறைக்குத் தன் பெயருடன் போஸ் பெயரையும் ஆசை யாகச் சேர்த்து ‘போஸ் - ஐன்ஸ்டைன் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ என்று பெயர் வைத்தார். அதன் பின், அணுவின் உட்கருவில் உள்ள ஒரு வகைத் துகள்களுக்கு ‘போஸான்’ என்ற பெயரும் கொடுத்தார்கள். சத்யேந்திரநாத் போஸை டாக்கா பல்கலைக்கழகத்தில் புரொபஸராக எடுத்துக் கொள்ள, ஐன்ஸ்டைன் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். ‘இவருக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு?' என்று அதில் கேட்டிருந்தார். அதன் பின், அதிகாரிகள் விழித்துக்கொண்டு சத்யேந்திரநாத்துக்கு டாக்டர் பட்டம் அளித்தனர்.

பலர் சரியாகச் சொல்லியிருந்தாலும், சிலர் ஜே.சி.போஸ் என்றும், சிலர் சந்திர சேகர் என்றும், சிலர் சர்.சி.வி.ராமன் என்றும், இன்னும் சிலர் அப்துல் கலாம் என்று கூட விடையளித்திருந்தனர். ஸாரி!

இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் மாதாந்திரச் சொற்பொழிவுக்கு என்னை அழைத்திருந்தார்கள்.

'இ கவர்னன்ஸ்’, ‘வருமான வரியும் உங்கள் மருமானும்' போன்ற தலைப்புகளில் பேசினேன். மேலதிகாரிகள் வடக் கத்திக்காரர்களாக இருந்ததால், ஆங்கிலத்தில் பேசினேன் (ராமதாஸ், திருமாவளவன் மன்னிப்பார்களாக!).

இன்கம் டாக்ஸிலிருந்து பொதுத் தொடர்பு அதிகாரி ராஜ்மோகன் கூப்பிடுகிறார் என்றதும் என் மனைவி பதற்றத் துடன், ‘‘ஏன்... இன்னும் ஏதாவது கட்டாம விட்டுட்டீங்களா? ராத்திரி பத்திரமா வந்துருவீங்களா?’' என்றாள். காரணம், அப்போதுதான் டிபார்ட்மென்ட்டிலிருந்து ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர், என் போன ஆண்டு ஸ்டேட்மென்ட்டை ஒப்புக் கொள்ளாமல் பெரிசாக ஒரு தீட்டு தீட்டியிருந்தார். பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் ரேஞ்சுக்கு வந்துவிட்டேன்.

இன்கம் டாக்ஸ்காரர்கள் வேறு எந்த அவருமானக் காரணத்துக்கும் அழைப்பார்கள் என்று மக்கள் சுலபமாக நம்புவதில்லை. அதனால்தான் மனைவியின் சந்தேகம். "அதுபாட்டுக்கு அது! அவர்கள் கடமையைச் செய்கிறார்கள்" என்று சொல்லிவிட்டு, முகம் இறுகிய புன்னகையுடன் அந்தக் கூட்டத்துக்குச் செல்ல ஒப்புக்கொண்டேன்.

இன்கம் டாக்ஸ் இலாகாவின் அணுகுமுறையில் மாறுதல் தேவை. மக்கள் அதை இன்கம் டாக்ஸ் ரெய்டு இலாகா வாகத்தான் பார்க்கிறார்கள். ஒரு தனி நபர் இன்கம் டாக்ஸ் ஸ்டேட்மென்ட் தயாரிக்க முடியாது. அதை நிரப்ப ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் திறமை வேண்டும். அல்லது, ஆடிட்டரை நாட வேண்டும். சட்டப் புத்தகமே ஒரு அடி உயரம் உள்ளது. என் போல் ஆசாமிகள் தூக்கி, காலில் விழுந்தால், கறுரத்தம் கட்டிக் கொள்கிறது. மேலும், அதனுள் 2+3-4+(8-10) என்றெல்லாம் ஷரத்துகள் உள்ளன. கணக்கிடுவதற்குள் தலை சுற்றி ஸ்டூஜிரான் போட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இன்கம் டாக்ஸ் சீஃப் கமிஷனர் பிநோய் குப்தா அதை எளிமைப்படுத்தி ஓர் அழகான புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ஆடிட்டர்கள் பல்வேறு விதங்களில் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறார்கள். அதிகாரிகள் அவர்களைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். கட்டின வரியையே ரிட்டர்ன் போட்டுவிட்டு, பிற்பாடு கணக்கு சரியில்லை என்று சொல்லி, ரெட்டிப்பு வட்டி விகிதத்தில் கட்டுமாறு பெனால்ட்டி வாங்குகிறார்கள். கொஞ்சம் என் போன்ற ரிட்டயர்டு அப்பிராணிகள் கொடுக்கும் கணக்குகளை அனுதாபித்து நம்பலாம். எல்லோரையும் பீகார் டெக்காய்ட் போலவோ, முகமூடிக் கொள்ளைக் காரர்கள் போலவோ கருத வேண்டாம்.

என் குடும்பத்தில் இன்கம் டாக்ஸ§டன் சம்பந்தப்பட்ட வர்கள் அநேகர். காலம் சென்ற சித்தப்பா சடகோபாச்சாரியார் ட்ரிப்யூனல் பிரசிடென்ட் டாக இருந்து ஓய்வு பெற்ற வர். 'கட்டித் தொலைச்சுருடா! எப்ப வேணா அவங்க பழைய கணக்கை நோண்ட லாம்' என்பார். எழுத் தாளர்களுக்கு 'ஆக்ட்’டில் எந்தவிதச் சலுகையும் எனக்குத் தெரிந்தவரை இல்லை. சேமிப்பதில் அற்ப வட்டிதான் வருகிறது. யஷ்வந்த் சின்ஹா தன் குறை பட்ஜெட்டில் ஒரு முறை எழுத்தாளர்களுக்குச் சலுகைகள் அறிவித்ததாக ஞாபகம். அது இன்னும் உயிருடன் உள்ளதா, தெரிய வில்லை.

1799-ல் நெப்போலிய னுடன் சண்டை போட, வில்லியம் பிட் என்னும் பிரிட்டிஷ் நிதி மந்திரியால் கொண்டுவரப்பட்டது இன்கம் டாக்ஸ். போர் முடிந்து வெற்றி கிடைத்ததும் வரி ரத்து செய்யப்படும் என்றார். ஆனால், இருநூறு ஆண்டுகளாகியும் நம்மை விட்டுப் போகவில்லை. இன்று அதிலிருந்து தப்பிக்கக் கூடியவர், மெரீனா பிச்சைக்காரர் ஒருவர்தான்.

நம் ஜனாதிபதியிலிருந்து ராணி எலிசபெத் வரை இன்கம் டாக்ஸ் கட்டுகிறார்கள். எக்ஸைஸ், கஸ்டம்ஸ் (கலால், சுங்க) வரி போன்றவற்றுடன் ஒப்பிட்டால் இன்கம் டாக்ஸினால் அரசுக்கு வருமானம் குறைவுதான். சில அரபு தேசங்களைப் போல அதை முழுவதும் ரத்து செய்துவிட்டாலும், அப்படியன்றும் பெரிய நஷ்டமில்லை. ஆனால், இன்கம் டாக்ஸ் இருப்பது வேறு காரணத்துக்காக. ஏழை, பணக்கார வித்தியாசங்களைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் இன்றைய நோக்கம்.

என் கருத்தில், இன்கம் டாக்ஸ் இலாகாவின் முகம் சற்று இறுக்கம் நீங்க வேண்டும். இன்கம் டாக்ஸ் ஃபாரம் என்பது ஒரு மணியார்டர் ஃபாரம் அளவுக்குதான் இருக்க வேண்டும். டி.டி.எஸ்.(TDS) போன்ற விவரங்கள் அவர்கள் கம்ப்யூட்டரிலேயே இருக்கின்றன. இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் உத்தரவாதம் கேட்கிறார்கள், ஸ்டாம்பு பத்திரத்தில் தாசில்தார் கையெழுத்துடன்! எல்லாமே சந்தேக அடிப்படையில் இயங்குகிறது. அமெரிக்காவில் வாய் வார்த்தை கூட அனுமதிக்கப்படுகிறது.

வரி நிரப்பலையும் வசூலையும் எளிமைப் படுத்தினால், கொஞ்சம் மக்களை நம்பினால் வரி ஏய்ப்பு குறையும்... மகசூல் அதிகமாகும் என்கிற எளிய உண்மையை அரசு உணர வேண்டும். சிதம்பரம், போன ஜென்மத்தில் வி.டி.ஐ.எஸ். திட்டத்தை அறிவித்தபோது, உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் 300 கோடி இருப்பதாக ஒப்புக் கொண்டராம். இத்தனைக்கும் அவர் இன்கம் டாக்ஸ் செலுத்துபவர் பட்டியலி லேயே இல்லையாம். இதை என்னிடம் ஓய்வு பெற்ற சி.வி.சி.விட்டல் சொன்னார்!

டி.டி.கிருஷ்ணமாச்சாரி காலத்திய பழக்கம் இதுவரை மாறவில்லை. வரி கட்டுபவர்கள் அனைவரும் ஏய்ப்பவர்கள் என்று நம்புவ தால்தான், இவ்வகையிலான விபரீதங்கள் நிகழ்கின்றன.

இது என் ஆதங்கம் அல்ல. அவர்கள் கேட்டதை, கட்டின பசு போல் சாதுவாகக் கட்டி விட்டேன்.

அந்தக் கூட்டத்தில் சொல்வதில் அதிகம் பயனில்லை என்று தெரிந்தும் சொன்னேன். கூட்டத்திலிருந்த இளம் அதிகாரி யாராவது பிற்பாடு டெல்லி போய் மாற்றங்கள் கொண்டு வரலாம் என்கிற நம்பிக்கை. இந்த பட்ஜெட்டில், சிதம்பரம் என் போன்ற சீ.சி\க்களுக்கு ஏதாவது சலுகை தருகிறாரா, பார்க்கலாம்! இல்லையென் றால், இருக்கவே இருக்கிறது பெஞ்சு, நாற்காலி!

எ.பி.க.

உயிர் பிரிந்து ஊர்ந்தோடி
நீர் தேடிக்
கொணர்ந்தது வேர்
பாராட்டும் கண்களில்
பூ மட்டும்
-ஆதவன்

This page is powered by Blogger. Isn't yours?