Sunday, March 20, 2005

 

மணியார்டர் ஃபாரம் வேண்டாம்... அஞ்சல் அட்டையே போதும்!


ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு, ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி, அனாமிகாவின் 'தேவதைக் கிறுக்கல்கள்' புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார்.

தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ, பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண், பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது, இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு premonition அதாவது, நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது ('எப்பொழுது இறப்போம், மறுபடியும் பிறப்போமா?').

தந்தையின் பாசத்துடனும், தாயின் இலக்கிய ஆர்வத்துடனும், தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள், கனவுகள், வியப்புகள், சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற 'தேவதைக் கிறுக்கல்கள்’ ஆகின்றன.

மழை பெய்யும்பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்துகொண்டு
மழையைப் பார்த்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.
நான் சாப்பிடுவதை
அழகு பார்க்கும் அம்மா
தொலைபேசியில்
'சொல்லுடா' என
மெல்லக் கிள்ளிவிடும்
அப்பா.

அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன், அவள் விடைபெற்றுவிட்டாள். இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது? அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க, அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும், படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன்.

(தேவதைக் கிறுக்கல்கள், ஏஞ்சல் அனாமிகா, பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை. விலை இல்லை. balasugumar@yahoo.com-க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.)

சென்ற வாரம் 'டாப் 10' பொய் களைத் தொடர்ந்து, 'சொன்னதும்... சொல்லியிருக்க வேண்டியதும்' என்கிற பட்டியல் இதோ...

சந்தர்ப்பம் என்ன என்பதை, க.பெ. பக்கத்துக்கு விரைந்து செல்லும் (குறிப்பாகத் தொப்புள்களைத் தவிர்த்து) வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

கீழ்க்காணும் வாக்கியங்களில்... 1.சொன்னது 2.சொல்லியிருக்க வேண்டியது. ரெடி?

அ) 1.ராத்திரி நல்லாவே இருந்துச்சு மல்லிகா.
2.ராத்திரி சாப்பாடு நல்லாவே இருந்துச்சு மீனாட்சி. (மனைவி)

ஆ)1.ஆக்ஸிடென்ட் ஆயிருச்சோ, என்னவோ!
2.டிராஃபிக் ஜாஸ்திங்க... வந்துருவார்!

இ) 1.'நைலான் கயிறு' படிச்சிட்டு இருக்கேங்க.
2.‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ படிச்சிட்டு இருக்கேங்க.

ஈ) 1. எனக்கா? நாப்பத்தஞ்சுங்க!
2. இந்தக் கேள்வி நீங்க கேட்கக் கூடாது.

உ) 1. அப்பா யாரு?
2. ரொம்ப சந்தோஷங்க. எப்ப பிரசவம்?

ஊ) 1.ராணி, கல்கண்டு படிப்பேன். கன்னித் தீவு நிச்சயம் பார்ப்பேன்.
2.காலச்சுவடு, கணையாழி, அப்புறம் காஃப்கா கட்டாயப் பாடம்.

எ) 1. பையன் கைல ஒரு வாட்ச் கட்டியிருந்தேனே, காணமே!
2. என் பேரனை முழுகிப் போகாமக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி, ஐயா!

ஏ) 1. யார் இந்தக் கிழ போல்டு?
2. உங்கப்பாவும் இளமையா தான் இருக்கார்.

வாசகர்கள் அனுப்புவதில் சிறந்தவற்றைப் பிரசுரிக்கலாம்.

ஷெர்லாக் ஹோம்ஸ் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர். அவரது கூட்டணி டாக்டர் வாட்ஸனுக்குப் புத்திக் கூர்மை அத்தனை இல்லை.

ஹோம்ஸ் ஒரு துப்புத் துலக்கியதும், 'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்று வியந்து கேட்பார் வாட்ஸன். 'எலிமென்டரி மை டியர் வாட்ஸன்' என்றுதான் முடிப்பார் ஹோம்ஸ்.

ஒரு முறை வாட்ஸன், ஒரு கேஸ் விஷயமாக ஷெர்லாக் ஹோம்ஸைப் பார்க்கச் சென்றார். வீட்டில் இருந்த பெண்மணி, "மாடியில் இருக்கிறார். ‘ஒன்பது மணி வரை யாரையும் அனுமதிக்காதே’ என்றார்’' என்றாள்.

வாட்ஸன், "பரவாயில்லை. ஒன்பது மணி வரை காத்திருக்கிறேன்!" என்று அங்கு போய் உட்கார்ந்தார். சற்று நேரத்தில் மாடியிலிருந்து ஒரு பெண்ணின் கீச்சுக் குரலும், சிரிப்பும் உடன் ஹோம்ஸின் கட்டைக் குரலும் கேட்டது.

வாட்ஸனுக்குப் புரியவில்லை. 'என்ன கேஸ் இது!' என்று வியந்தார். ஒன்பது மணிக்கு ஹோம்ஸ் தலை கலைந்து, டை தளர்ந்து இறங்கி வந்தார். கூட, ஒரு பள்ளி மாணவியும் வந்தாள் - கார்டிகன், ப்ளீட் வைத்த ஸ்கர்ட் அணிந்து!

கோபத்துடன் வாட்ஸன், "நானும்தான் கேக்கறேன், ஹோம்ஸ்... அதென்ன மாதிரி ஸ்கூல் பொண்ணு?" என்றார்.

"எலிமென்டரி மை டியர் வாட்ஸன்!" என்றார் ஹோம்ஸ்.

(நன்றி: The Book of New American Humor)

எ.பி.க.-

என் மாடுகள் செத்திருக்கலாம்!

அவிழ்த்துக் கொடுக்கும்போது
இரவலுக்கென்றோ
குளிப்பாட்டவென்றோ
ஏதேனும் வேலைக்கென்றோ
எண்ணிக்கொண்டு
போயிருக்கும்.

அந்தக் கண்கள்
அந்த நடை
அந்தக் கொம்புகள்
அந்தச் செல்லப் பாய்ச்சல்
குனிந்து தவிடு கிளர்கையில்
பாறை நாக்கால் கன்னத்தில்
நக்கி வைக்கும் குறும்பு
இனி எனக்கில்லை.

ஒரேயரு சென்னைப்
பயணத்துக்காக
ஓட்டிக்கொண்டு
போய்விட்டான்
நான் துரோகம் செய்து
விட்டேன்.

- இலக்குமிகுமாரன்
ஞானதிரவியம்

(நிலாப் பேச்சு, அனன்யா, பி.ஏ.வி. நகர், குழந்தை இயேசு கோயில் அருகில், தஞ்சாவூர்-613006.)

<< Home

This page is powered by Blogger. Isn't yours?