Sunday, April 24, 2005

 

விட்டான்... கையான்... வீர விளையாட்டு!

எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, '‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’' என்று கேட்டதில், ‘'இங்கேதான் சென்னை-94-ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், 'உறவுகள்' என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்’' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.

இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் 'பனியும் பனையும்' என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.

எஸ்.பொ'வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.

தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.

கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்

இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.

எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும்

சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.

எஸ்.பொ'வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.

எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட memoir (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!

தனக்குள் முரண்பாடு இருக்கும் சொற்றொடர் - oxymoron.

இன்பமான வலி, அழகான ராட்சசி என்று ஏராளமாக சினிமா பாடல்களில் வருகின்றன. அன்றாட வாழ்க்கை யிலும் உதாரணங்கள் சொல்லலாம்.

'‘சரியா பத்தேகால் சுமாருக்கு வந்துர்றேனுங்க!’'

‘'செத்துப் பிழைச்சுட்டாருங்க!’'

‘'இயற்கையா நடிச்சார்!’'

இன்னும், 'மத நல்லிணக்கம்', ‘அரசாங்க வேலை', ‘ஊழலில்லாத அரசியல்’ என்று எத்தனையோ சொல்லலாம்.

நீங்கள் அனுப்பும் ஆக்ஸி மோரான்களில் டாப் டென்னை பிரசுரிக்கிறேன். (தொப்புள் காட்டாத நடிகை, செல்லில்லாத மாணவி போன்ற தெரிந்த ஆக்ஸிமோரான்களுக்கு வாய்ப்பு இல்லை.)

ஸ்ரீநகரிலிருந்து எல்.ஒ.சி.வரை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் பாரா மிலிட்டரியை நிறுத்தி வைத்து, பயந்து நடுங்கி பூட்டிவைக்கப்பட்ட பயணி களை போலீஸ்காரர்களே டிக்கெட் எடுத்து முஸாஃபரபாத் அழைத்துச் செல்வதில் என்ன சாதிக்கிறோம் என்று எனக்குப் புரியவே இல்லை. காஷ்மீரை விட்டுக் கொடுத்து இந்திய அரசாங்கம் வாழ முடியாது. பாகிஸ்தானும் அவ்வண்ணமே!

ஓர் அழகான பெண்ணை இரண்டு பேர் மணக்க விரும்பு கிறார்கள். 'மாட் டேன்' என்று சொன் னால் பலி விழும். அணு ஆயுதம், போர் விமானம் என்று காத்திருக் கிறார்கள். பாலிவுட் சினிமாவாக இருந் தால், ஒருவனுக்கு மாலையிட்டுவிட்டு, மற்றவனுக்கு ராக்கி கட்டிவிடலாம். கண்ணைத் துடைத் துக்கொண்டு போய் விடலாம். அந்தப் பெண்ணுக்குத் தனியாக ஏதாவது ஆசை உள்ளதா என்று கேட்டால், அவள் மேல் படிப்பு படித்து அமெரிக்கா போக விரும்புவாள் என்று இரண்டு பேருக்கும் பயம். சொந்த மாப்பிள்ளையிடம் காசில்லை. எனக்கென்னவோ, அந்தப் பெண் சீர்குலைந்து வயசாகிப்போய் லொக்... லொக்... என்று இருமும் வரை சண்டை போடுவார்கள் என்று தோன்றுகிறது. அதன்பின், மற்றொரு போட்டி எழும். ‘எனக்கு வேண்டாம். நீ வைத்துக் கொள்’ என்ற போட்டி!

2010-ல் இதைப் பற்றி மறுபடி எழுதுகிறேன்.

சவுரவ் கங்குலிக்கு ஓர் இரங்கற்பா நிச்சயம் தேவைப்படுகிறது. தூர்தர்ஷனின் நாலாவது அம்பயர் நிகழ்ச்சியில், ஆறு வயதுக் குழந்தை ஒன்று ஸ்ரீகாந்துக்கு போன் செய்து, 'அங்கிள்... இந்த கங்குலியை ஏன் கேப்டனாக வைத் திருக்கிறோம்? போகச் சொல்லுங்கள்' என்று சொல்கிறது. இந்தச் சூழ்நிலையில், யாராவது கங்குலிக்கு ஆதரவாகச் சொல்ல வேண்டுமே என்று நவகாளமேகனுக்கு போன் பேசினேன். அவர், ‘'பேப்பர் இருக்கிறதா? எழுதிக் கொள்ளும் ஓர் இரங்கற்பா'’ என்று போனிலேயே ஒரு வெண்பா சொன்னார்.

எங்கெல்லாம் போனாலும் யாரைத்தான் கேட்டாலும்
'கங்குலி நீ விலகு’ என்பதால் - உங்கள்
அடுத்த விளையாட்டில் பத்து ரன் னாவ
தெடுத்தால் எமக்குப்போ தும்!

‘‘இன்னொரு வெண்பா வேண்டுமா?'’ என்றார். '‘ஆளை விடும் சாமி! குறைந்தபட்சம் நான்கு வாரத்துக்கு உம்மைத் தொந்தரவு செய்ய மாட்டேன்!’' என்றேன்.

பாலாஜி சக்திவேல் 'காதல்' படத்தின் திரைக் கதையைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு அணிந்துரை கேட்டிருந்தார். ஒவ்வொரு காட்சியையும், பின்னணி சத்தங்களையும் கூட நுணுக்கமாக விவரித்து, கண் தெரியாதவருக்குக் கூடப் படத்தைப் புரியவைக்க முயல்வது

போன்று அத்தனை விவரமாக எழுதப்பட்ட திரைக்கதை. இது நிச்சயம் படம் வெளிவந்த பின் எழுதப்பட்டது. இதே அளவு நுட்ப லாவண்யங்களுடன் படம் வெளிவருவதற்கு முன் எழுதியிருந்தால், அது ஒரு உண்மையான ஸ்டோரி போர்டாகிறது. ‘‘அடுத்த படத்தில் இதைச் செய்து உங்களிடம் காட்டுகிறேன்’’ என்று பாலாஜி சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்!

எல்லா டைரக்டர்களுக்கும் ஒரு பெரிய வெற்றிக்குப் பின் பரபரப்பும், அடுத்த படம் என்ன ஆகிறது பார்ப்போம் என்கிற மற்றவரின் பொறாமையும் தொடரும். இதை வெல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அடுத்த படத்தையும் முதல் படம் போலவே யோசித்து எழுதுவது. சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டிக்கொண்டு (சில சமயம் பிளந்துகொண்டு) வர, இரண்டு மூன்று புரொட்யூசர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ரூம் போட்டு, மடியில் தலையணையை வைத்துக் கொண்டு கதை என்கிற வஸ்துவைத் தேடாமல், மீண்டும் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து சம்பவங்களையும், மனிதர்களையும், கதைக்கேற்ற நடிகர்களையும் தேடி, தேவைப்பட்ட மிகையும், இசையும், யதார்த்தமும் கலந்து, ஓரிரு டீ ஸ்பூன்கள் பாட்டு, நடனம் சேர்த்து எடுத்து, எடிட்டிங் ரூமில் ராப்பலாக உட்கார்ந்து மெனக்கெடவேண்டும்.

எனக்குத் தெரிந்து, முதல் படத்தில் தோற்றுப் போன டைரக்டர்கள் பலர், பிற்காலத்தில் பெரிய அளவுக்குச் சிறந்திருக்கிறார்கள். பெரியதொரு வெற்றிக் குப் பின், அவசரத்தால் கவிழ்ந்த இளம் டைரக்டர்களும் இருக்கிறார்கள். பாலாஜி எந்த ரகம் என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்!

எ.பி.க.

இரு உலகங்களின்
ரகசியத்தையும் அறிந்தவன்
அது, இரண்டிலும் காதல்தான்
என்பதை அறிவான்! -

- அத்தர் (1169-1230) ஸ§ஃபி கவிஞர்

Sunday, April 17, 2005

 

ஸ்கையாட்டிக்கா வாரம்..?!

இந்தப் புது வருஷத்துக்கு ‘பார்த்திப’ என்று பெயராம்.

"வருஷப் பிறப்புக்கு உங்களை ஒரு மணி நேரம் விரிவான பேட்டி எடுக்க வேண்டும்" என்று மலேஷியாவில் இருந்து, ஒரு ரேடியோ நிலையத்துக்காகக் கேட்டார்கள்.

‘‘சரிங்க, என்ன கேக்கப்போறீங்க?’’ என்றேன்.

‘‘உங்களுக்குப் பிடிச்சஒவ்வொரு சினிமா பாட்டா சொல்லுங்க! அடுத்தடுத்து அனைத்தையும் ஒலிபரப்பறோம். இடையிடையில ஏதாவது பேசுங்க. இலக்கியம், சினிமா, லொட்டு, லொசுக்கு... இப்படிக் கொஞ்சம் பேசலாம். எப்ப வெச்சுக்கலாம் ரிக்கார்டிங்?" என்றார் அந்தப் பெண்மணி.

"அடுத்த வருஷப் பிறப்புக்கு வெச்சுக்கலாம். இந்தத் தடவை என்னை விட்டுருங்க!" என்றேன்.

"உங்ககிட்ட டைரக்டர் ஷங்கர் போன் நம்பர் இருக்குமா?" என்றார்.

‘‘இருக்குங்க’’ என்று சென்ட்ரல் ஸ்டேஷன் என்கொயரி நம்பரைக் கொடுத்தேன். அவருக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ... 2006 ஏப்ரலில் அவர் என்னை மறுபடி அணுகலாம். அல்லது அவர் வேலை மாறலாம். கல்யாணம் ஆகலாம். ஏதோ... இப்போதைக்கு ஆளைவிட்டால் சரி!

அதேபோல், வெற்றி நடிகரின் பெயர்கொண்ட டி.வி-யிலிருந்து ஒருவர், ‘‘ 'வாக் தி டாக்' மாதிரி ஒரு இன்டர்வியூ செய்யலாங்க வருஷப் பிறப்புக்கு. எப்ப வெச்சுக்கலாம்? கேமராவுக்கு ஏற்பாடு செய்யணும். சொல்லுங்க!" என்றார்.

டி.வி. என்பதால் பொம்மை தெரியுமே என்ற அல்ப ஆசையுடன், ‘‘நான் திங்கள் கிழமை கேளம்பாக்கம் போறேன். அதனால, செவ்வாய்க் கிழமை உங்க சாமக்கிரியைகளை எடுத்துக் கொண்டு ஸிஜி ரோடுக்கு வாங்க!’’ என்றேன்.

"இல்லை சார், திங்கள் கிழமைனா தான் டெட்லைனை மீட் பண்ண முடி யும். திங்கள் கிழமையே வந்துர்றமே?"

"கேளம்பாக்கம் இங்கிருந்து முப்பத்தாறு கிலோ மீட்டருங்க!"

‘‘பரவாயில்லைங்க. வந்துருவோம்! நீங்க என்ன பண்றீங்க... ஒரு நல்ல ஷர்ட்டா போட்டுக்கிட்டு..."

"உங்களுக்கு டெட்லைன் முக்கியமா, பேட்டி முக்கியமா?"

‘‘ஏங்க?’’

‘‘டெட்லைன்கறது உங்க ப்ராப்ளம்! அதுக்காக என்னை ஏன் பிசையறீங்க?" என்றேன்.

அவரும் அதன் பின் பேட்டி காண வரவில்லை.

எனவே, சித்திரை வருஷப் பிறப் பன்று அன்பர்கள் எனக்குப் பிடித்த கானங்களைக் கேட்கவோ, என் உருவத் தைப் பார்க்கவோ முடியாது. உங்கள் சந்தோஷ ஆரவாரம் கேட்கிறது.

ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் மாதம் சித்திரை. நாங்கள் வசித்த சித்திரை வீதி வழியாகத் தேர் செல்லும். ஒரு வருஷம் தகரத்துக்குள் காத் திருந்துவிட்டு, புதுப் பொலிவும் அலங்காரக் குஞ்சலங்களும் அணியும். தேர் முட்டி கொஞ்ச நாளைக்கு கிழக்கு ரங்கா எலிமென்ட்டரி பள்ளிக்கூடம் வேஷத்திலிருந்து மாறி, வெள்ளையடிக்கப்படும்.

சித்திரைத் தேர் ரொம்பப் பெரிய தேர். எங்களைப் போன்ற நோஞ்சான் இளைஞர்களால் அதை இழுக்க முடியாது. தேர் வடமே காலில் பட்டால், சிராய்த்துவிடும். சித்திரைத் தேருக்காக ‘கோவிந்தா கூட்டம்’ என்று பக்கத்துக் கிராமங்களில் இருந்து முதல் நாளே வருவார்கள். பெரும் பாலும் விவசாயிகள். பலசாலிகள்!

குழந்தைகளும் பெண்களும்கூட மொட்டை யடித்து, சந்தனம் தடவி, ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று சொல்லிக்கொண்டே சாரி சாரியாக வந்து சேர்வார்கள். அவர்களை ஒருவிதமான அன்பு கலந்த பயத்துடன்தான் வரவேற்போம். அன்று இரவு எங்கள் திண்ணைகளில் இடம் கொடுப்போம். அவர் கள் தாராளமாகத் தூங்கலாம். வீட்டிலிருந்து மோர், சோறு, குடிக்கத் தண்ணீர் போன்றவை கொடுப்போம்.

அவர்கள் அரங்கனுக்குத் தங்கள் எளிய காணிக்கைகளாக விளைச்சலிலிருந்து நெல்லும், வாழைக்காய் தார்களும் சக்திக்கேற்ப கொண்டுவந்து கொடுப்பார்கள். கன்றுக்குட்டி களை ஓட்டிவந்து கோயிலுக்குக் கொடுப் பார்கள். அதிகாலையில் எழுந்து காவிரியில் அல்லது கொள்ளிடத்தில் குளித்துவிட்டு, ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று ஆரவாரம் செய்துகொண்டே, தேர் இழுக்கத் தயாராக நிற்பார்கள். பெருமாள் தேரில் வந்து வீற்றிருந்து, பின் சக்கரத்தில் முதல் நெம்பலில் புறப்பாடு ஆன நாற்பத்தைந்தாவது நிமிஷம், தேர் நிலைக்கு வந்துவிடும். அத்தனை பேர்... அத்தனை உற்சாகம்!

அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான ‘கோயில் ஒழுகு’ புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன் (முகர்சிங் வித்வான் ஸ்ரீரங்கம் கண்ணன் அன்பளித்தது). ஒழுகு என்பது கோயிலின் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ந்து குறிப்பிடும் ஒரு நீண்ட, மிக நீண்ட டைரிக் குறிப்பு. எவ்வளவு நீண்டது? ராமானுஜர் காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை... பலர் குறிப்பிட்ட கதைகளும், புராணங் களும், சரித்திரச் செய்திகளும், கார்யக்கிரமங் களும் கொண்ட ஒரு Potpourri.

'அத் திருவீதியில் சந்த்ரதபுஷ்கரணிக்குக் கிழக்கு சோளேந்திரஸிம்ஹன் கைங்கர்யமான திருமண்டபம்' என்கிற வகையில், மணிப்பிரவாளமான தமிழ் நடை. அதில், இந்த கோவிந்தா கூட்டத்தைப் பற்றியும், அவர்கள் வருடாவருடம் கிராமங்களிலிருந்து காணிக்கை கொண்டுவருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘கோயில் ஒழுகு’ நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங் கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக் கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல் களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட்டிருக்கிறார்.

நிச்சயம் இருக்கலாம். நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.

யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத் தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.

என்னுடைய 'ஸ்கையாட்டிக்' நரம்பு, சென்ற வாரம் கலகம் பண்ணியது. இடுப்பிலிருந்து கால் வரை செல்லும் ஒரு மகா நரம்பு அது. முதுகுத்தண்டில் தொட்டாலோ, அழுத்தினாலோ அதற்கு மகா கோபம் வந்து, அதனால் ஏற்படும் வலி ரிக்டர் ஸ்கேல் ஒன்பதைத் தொடும். ராத் தூக்கம் போய்விடும்.

சென்ற வாரம், எனக்கு ஸ்கையாட்டிக்கா வாரம்!

உடனே, டாக்டர் அழகப் பனிடம் சென்று, தேவைப்பட்ட சிகிச்சை எடுத்துக்கொண் டாலும், ஒரு வாரம் படுத்தி விட்டுத்தான் போவேன் என்கிறது. எப்படிப் படுத்தாலும் தூக்கம் வராத தருணங்களில், பேசாமல் எழுந்து ஹாலுக்குப் போய் விளக்கைப் போட்டுக் கொண்டு, மிக மிக எளிதான புத்தகங்களைப் படிப்பேன். ஜோக்ஸ் படிப்பேன். மனதை வேறு திசையில் அலையவிட்டு, வலியை மறக்கச் செய்யும் சாகசம்! கொஞ்ச நேரம் கழித்து, வலி ‘இப்போதைக்கு விடை பெறுகிறேன். மீண்டும் நாளை ராத்திரி சந்திப்போம்’ என்று புறப்பட்டுவிட, குருவிகள் கூப்பிடும் அதிகாலையில்தான் தூக்கம்!

ஸ்கையாட்டிக்காவைச் சற்று நிமிஷம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ... ஒன்று, டென்த் மாணவி அந்தரா, பரீட்சை நன்றாக எழுதி முடித்த சந்தோஷத்தில் மெயில் அனுப்பியது.

மனைவி கிணற்றை எட்டிப் பார்த்துக் காசு போட்டாள். அருகே கணவன், ‘‘அதில் காசு போட்டால் என்ன ஆகும்?’’ என்று கேட்டான்.

‘‘மனசில் ஒன்றை நினைத்துக்கொண்டு இந்தக் கிணற்றில் காசு போட்டால் பலிக்கிறதாம்!’’.

‘‘அப்படியா!’’ என்று கணவன் பையில் காசு துழாவு முன், எட்டிப் பார்த்தான். கால் தடுக்கி ‘தொப்’ என்று கிணற்றில் விழுந்துவிட்டான்.

"பரவாயில்லையே... உடனே பலிக்கிறதே!" என்றாள் மனைவி.

அடுத்து இந்த ஜோக்... 'நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹ§யூம’ரிலிருந்து தட்டியது.

புயல் வந்து கப்பல் மூழ்கி, ஒரே ஒருவன் மட்டும் உயிர் தப்பி, தன் நாய் ஃபெர்டினாண்டுடன் ஒரு தனித் தீவில் தள்ளப்பட்டான். சுற்றும்முற்றும் பார்த்தான். தனித் தீவு. மனித நடமாட்டமே இல்லை. நிறைய காய், கனிகள் தின்னக் கிடைத்தன. உயிர் வாழப் பிரச்னை இல்லை. நாய்க்கும், பொந்துகளில் எலி, அணில் போன்ற பிராணிகள் அகப்பட்டன.

நாளடைவில் அவனுக்கு ரொம்பப் போர் அடித்தது. தேடிப் பார்த்தான். தீவு முழுக்க ஆடுகள்தான் இருந்தன. அவற்றில் எதை அணுகினாலும், நாய் உடனே கோபம் கொண்டு, குரைத்து உறுமி, அவனைக் கடிக்க வந்தது. தினம் இதே கதிதான். அதனால், முயற்சியைக் கைவிட்டான்.

ஒரு நாள், கடற்கரையில் திரியும்போது திடுக்கிட்டான். ஓர் அழகான பெண், நனைந்த உடை களில் மயக்கமாகக் கிடந்தாள். உடனே அவளுக்கு முதலுதவி செய்து, தண்ணீரை எல்லாம் உறிஞ்சி, செயற்கை சுவாசம் தந்து, தட்டிக்கொட்டி எப்படியோ பிழைக்க வைத்து விட்டான்.

விழித்தெழுந்த அந்த அழகான பெண் நிலைமையை அறிந்ததும், அவனைக் காதலுடன் பார்த்து, ‘‘என் உயிரைக் காப்பாற்றியதற்குக் கைம்மாறாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாள்.

‘‘ஒரே ஒரு காரியம் செய்தால் போதும்’’ என்றான்.

‘‘என்ன?’’

‘‘ஃபெர்டினாண்டை அரை மணி நேரம் பார்த்துக்கொள்வீர்களா?"


எ.பி.க.

கொட்டாவி விட்டபடி ஜன்னலோரம் பாத்தாக்க
குட்டை குளமெல்லாம் கொட்டாவி - கிட்ட(க்) கிட்ட
மீனெல்லாம் வாய்பிளந்து பார்த்திருக்க மொக்கு மொக்குத்
தாமரைகொட் டாவி விடும்.

-- சேஷாசலம் (ஆகாசம்பட்டு, மணிவாசகர் பதிப்பகம்)

Sunday, April 10, 2005

 

‘‘இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியம்!’’ -டி.எம்.எஸ்.


மெரீனாவில் மாலை நடந்து செல்லும்போது, சென்னையின் பல பெரிய மனிதர்கள் எதிரில் செல் வார்கள். பீட்டர் அல்போன்ஸ், ஏவி.எம்.குமரன், ஆர்.எம். வீரப்பன்... இப்படிப் பலர் கடக்கும்போது, ஒரு புன்னகையோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. விளம்பரம் போல ஒரு 'ஹம் ஹை நா' கையசைப்போ பரிமாறிக் கொள்வோம்.

போன வாரம் டி.எம்.எஸ்., சந்தன கலர் சபாரி சூட்டுடன், சென்ட் வாசனையுடன் பக்கத் தில் வந்து உட்கார்ந்தபோது, பேச வேண்டும் என்று தோன்றியதன் காரணம் - இளம் வயதில் அவரு டைய பல பாடல்கள் என்னைக் கவர்ந்திருக் கின்றன.

இப்போதுகூட 'அவளுக்கென்ன'வோ, 'வந்த நாள் முத'லோ, 'அதோ அந்தப் பறவை போல'வோ, ‘அந்த நாள் ஞாபக’மோ, ‘நான் ஆணையிட்டா’லோ டி.வி-யில் வரும்போது, விரல் சேனல் தாவத் தயங்குகிறது.

"எத்தனை பாட்டு பாடியிருப்பீங்க? எல்லாப் பாட்டும் நினைவிருக்கா?"

"கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்ம பாரதிக் குப் பாடினதுதான் முதல் பாட்டு. அதிலிருந்து நான் பாடின பாட்டெல் லாம் நோட்புக்கில் வரிசையா பாடின தேதி, அதற்குப் பெற்ற தொகை எல்லாத்தையும் எழுதி வெச்சிருக் கேன். ஆயிரக் கணக்கில் இருக்கும்!’’

‘‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

‘‘மூணு விளக்கம் இருக்கு. 'டி'ங்கறது எங்க சௌராஷ்டிர கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கும் பத்திய உணவு சார்ந்த ஊர்ப் பெயர் - தொகுளுவா (Thoguluva), 'எம்'ங்கறது மீனாட்சி ஐயங்கார்(!), ‘எஸ்’ - சௌந்தர்ராஜன்.

இன்னொரு விளக்கம் - தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் இந்த மும்மூர்த்திகளு டைய இனிஷியலும் எனக்குக் கிடைச்சது ஒரு பாக்கியம்.

மூணாவது - ட்ரான்ஸென்ட்டல் மெடிட்டேஷன் சர்வீஸ், என் பாட்டுகள் மூலம் கொடுக்கறது!

'பாடும் குயிலின் இசைப் பயணம்'னு என் வாழ்க்கையை நானூறு பக்கம் புத்தகமா போட்டிருக்காங்க, மணிவாசகர் பதிப்பகத்துல! படிச்சுப் பாருங்க!"

‘‘உடல்நிலை எப்படி இருக்கு?’’

"டயபடீஸ் தொல்லை கொடுக்குது. கால் வீங்கிக்குது. இப்பக் கொஞ்சம் காது கேட்கலை. அதனால, மத்த பேரோடு பேசும் போது இரைச்சலா பேச வேண்டியிருக்குனு ஹியரிங் எய்டு வெச்சிருக்கேன். நிறையப் பாடிட்டேன். இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியமா இருக்குது!" என்றவர், சின்ன மூன்றறைப் பெட்டியைக் காட்டி, "பாருங்க... தனித்தனியா காலை, மத்தியானம், இரவுனு ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மாத்திரை சாப்பிடறேன்!" என்றார்.

"நானும்தான்!" என்றேன்.

"பெரிய பெரிய நடிகர்களெல்லாம் என் குரலைப் பயன்படுத்தி, சினிமாவிலேயும் அரசியல்லேயும் உச்சத்துக்கு உயர்ந்தாங்க!’’

‘‘அவங்க உங்களுக்கு நன்றி சொன்னாங்களா?"

உதட்டைப் பிதுக்கி, "ம்ஹ§ம்..! ஆனா, அவங்க எல்லாம் இறந்து போயிட்டாங்க. குரல் மட்டும் உசுரோட இருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்க பாராட்டு போதும்! இப்பக்கூட சிங்கப்பூர்ல ஒரு பாராட்டு விழாவுக்கு அழைச்சிருக்காங்க. ஏப்ரல்ல போறேன்!"

"டயபடீஸைப் பார்த்துக்குங்க. இருநூறுக்கு மேல போஸ்ட்பிரண்டியலைத் தாவ விடாதீங்க. தினம் நடங்க. பாட்டை விட்டுராதீங்க!" என்றேன்.

"வரேங்க..." என்று கற்பகவல்லியின் ஆனந்த பைரவியைக் கோடி காட்டிவிட்டு, எழுந்து சென்றார் டி.எம்.எஸ்.

'அரியக்குடி
பிறந்தது அய்யங்கார் குடி
அறுபது ஆண்டுகளுக்கு மேல்
பறந்தது அவர் கொடி!'

- இவ்வகையில், மறைந்த நூறு மாமனிதர்களைப் பற்றிய 'இவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்' என்கிற கவிஞர் வாலியின் டிரேட் மார்க் சந்தப் புதுக்கவிதாஞ்சலியை, மணியம் செல்வன் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் ‘வானதி’ வெளியிட்டிருக்கிறார்கள்.

வாரியாருக்கு எதிரே எம்பாரும், எம்பாருக்கு எதிரே பாரதியாரும் வரும் சின்ன குழப்பங்களைத் தவிர, மற்றபடி அவரவர் புகழ்க் கவிதைக்கு எதிரே அவரவர் உயிர்ச் சித்திரங்கள் மிகச் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் உள்ள நூறு பேரில் மாரியப்ப சாமிகள், மேயர் ராதாகிருஷ்ணப் பிள்ளை, கா.மா.வேங்கடராமையா போன்ற ஒரு சிலரைத்தான் நான் அறிந்ததில்லை. மற்றவரைப் பற்றிப் படிக்கும்போது, எனக்குத் தெரிந்த விவரங்களுடன் சரிபார்த்துக் கொள்ள முடிந்தது.

படங்களுக்கே 575 ரூபாய் கொடுக்கலாம். கவிதைக்குத்தான் விலை இல்லையே!

'யார் இந்த நவகாளமேகன்? நீங்களேதானா?' என்று சிலர் கேட்டு எழுதியிருக் கிறார்கள். இல்லை. அவரது இயற்பெயர் ஆர்.சாரங்கபாணி.

வங்கியில் வேலை பார்த்துவிட்டு, வாலன்ட்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டு, பெசன்ட் நகரில் ஃப்ளாட் வைத்துக் கொண்டு, பால்கனியில் பூச்செடிகளும், எல்லா அறையிலும் புத்தகங் களுமாக அவ்வப்போது சரவணா, ப்ளானெட் யம் போன்ற இடங்களில் பெரும்பாலும் காபியிலேயே உயிர் வாழ்பவர் (மனைவி இறந்துவிட்டார்.).

முன்னறிவிப்போ, தொலைபேச்சோ ஏதும் இல்லாமல் சந்திக்க வருவார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அதே சடுதி யில் காணாமல் போய் விடுவார். ஆசுகவி. எந்த சப்ஜெக்ட் கொடுத்தாலும், ஒரு பேப்பரை எடுத்து மடி மேல் வைத்துக் கொண்டு, வெண்பாவோ... ஏன், கட்டளைக் கலித்துறை கூட நிமிஷமாய் எழுதிவிடுவார்.

நிறைய சயின்ஸ் படித்தவர். திருமறைகளும், சித்தர் பாடல்களும் அத்துபடி! 'ஆழ்வார் பாடல்கள் அவ்வளவு பரிச்சயமில்லை. எனக்குத் திருவாசகம் போதும்' என்பார்.

காளமேகப் புலவர் பற்றிய ஒரு தீஸிஸ் எழுதுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். அவரிடம் டி.எம்.எஸ்-ஸைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன்.

"டி.எம்.எஸ். போல தன் இனிஷியலுக்காகப் பெருமைப்படும் மற்றொருவர் தெரியுமா?" என்று கேட்டார். என் பதிலுக்குக் காத்திராமல், "அவர் ஒரு நாத்திகர். டக்ளஸ் ஆடம்ஸ். சயின்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளர்!" என்றார்.

"படித்திருக்கிறேன். The Hitchhikers Guide to the Galaxy!”

"அவரது இனிஷியல் DNA. ஆடம்ஸ், சித்தர்கள் போல அக்னாஸ்டிக் அல்ல. அசல் நாத்திகர். உலகில் உயிர் தோன்றியது கடவுளால் அல்ல... கடற்பாசியால்! சிருஷ்டி 'டாப் டவுன்' அல்ல... 'பாட்டம் அப்' என்கிறார் அவர்.

மனித சரித்திரத்தில் கற்காலம், வெண்கல யுகம், இரும்பு யுகம் என்பது போல், நவீன அறிவியலின் சரித்திரத்தில் நான்கு 'மணல் யுகங்கள்' சொல்கிறார்.

முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ் செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி துவங்கியது.

இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.

மூன்றாவது மணல் யுகம், சிலிக்கன் சில்லு. அதை வைத்துக்கொண்டு கம்ப்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.

நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைகளின் மூலம் இன்டர்நெட் செய்தித் தகவல் வெள்ளம், அதனால் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள்!"

"அற்புதமான கருத்து!" என்றேன்.

நவகாளமேகன் ஒரு வெள்ளைத் தாள் கேட்டார். "சீக்கிரம், சீக்கிரம்!" என்றார். பேனாவைத் திறந்தார். ஒரு உதறு உதறினார்.

'மண்ணில் பிறந்தபின் மண்ணுக்குச் செல்லுமுன்
கண்ணாடி கண்டு பிடித்திட்டோம் - விண்ணில்
தடவித் துளாவியும் தேடியும் பார்த்தும்
கடவுள் அகப்படவில் லை’

"தளை சரியா? இல்லைன்னா, திருத்திக்கும்! உமக்குத்தான் அரைகுறையா தெரியுமே!" என்று காகிதத்தை என்பால் ஃபேக்கிவிட்டு, சி.பி.ஆர்ட் சென்ட்டரில் ஒரு செராமிக் எக்ஸிபிஷனுக்குப் புறப்பட்டார்.

கிரிக்கெட் வந்தாலும் வந்தது... விளம்பரக்காரர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. இன்ஸ§மாமும் கங்குலியும் வைக்கிங் வீரர்களாம்... பேட்டால் கத்திச்சண்டை போடுகிறார்களாம்!

அதாவது பரவாயில்லை... அலமாரியில் ஃபெவிகால் டப்பாவைப் பார்த்த எருமை மாடுகள் பால் சுரப்பதை நிறுத்திவிடுகின்றனவாம். த்ரீ மச்!

வரவர இம்மாதிரியான மறைமுக விளம்பரங்கள் அதிகம் வரத் துவங்கிவிட்டன. இதன் ஆதாரத் தத்துவத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்!

பிராண்டு மிகமிகத் தெரிந்ததாக இருக்க வேண்டும். ஐ.பி.எம்., ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், இன்டெல் பெண்டியம் போன்றவர்களுக்குத்தான் மறைமுக விளம்பரம் மூலம் அவ்வப்போது நினைவுபடுத்தினால் போதும்... பதிலாக, மிளகாய்த் தூளுக்கும் உருக்குக் கம்பிக்கும் மறைமுக விளம்பரம் செய்தால் எரிச்சல்தான் வரும்!

இதைவிட எரிச்சல் தருவது, தூர்தர்ஷன் அடிக்கும் கூத்து. ஸ்டம்ப் எகிறி, பத்தடி உருண்டு, பேட்ஸ்மேன் அவுட் ஆகித் திரும்பிப் பார்ப்ப தற்குள், என்ன ஆச்சு... யார் போட்டார்கள் என்று காட்டாமல், உடனுக்கு உடனே நாற்பதாவது முறையாக ராஜகுமாரி புறா பறக்கவிட்டு, 'சந்தேஷ் பேஜ்னேகே தரீக்கா அனேக்' (செய்தி அனுப்பப் பல முறைகள் உள்ளன!) என்று பி.எஸ்.என்.எல். மேல் வெறுப்பு வரும் விளம்பரம்.

அடுத்த பால் போட விடாமல், பஸ் ஸ்டாண்ட் பூஜாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிடுகிறது. கொஞ்சம் விட்டால், பேட்ஸ்மேன் வருவதற்குள் பிள்ளை பெற்று விடுவாள்!

எ.பி.க-

'எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களை விடவும்
நீ அதைப் புரிந்துகொண்டதற்கு!'

- மனுஷ்யபுத்திரன்

This page is powered by Blogger. Isn't yours?